Wednesday 12 January 2022

ஏகலவ்யனின் படை | பவிஷ்ய பர்வம் பகுதி – 73

(ஏலலவ்யஸைந்யவதம்)

The troops of Ekalavya | Bhavishya-Parva-Chapter-73 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: ஏகலவ்யனுக்கும் பலராமனுக்கும் இடையில் நடந்த போர்; பலராமனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான நிஷாதர்கள்...


Balarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதேவேளையில் வேடர்களின் மன்னனான {நிஷாதிபதியான} ஏகலவ்யன், தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கோபத்துடன் பலபத்ரனை {பலராமனை} எதிர்த்து வந்தான்.(1) அவன் பத்துக் கணைகளால் பலராமனைத் தாக்கிவிட்டு, க்ஷத்திரியர்கள் பிறர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மேலும் பத்துக் கணைகளால் அவனது வில்லையும் முறித்தான்.(2) அதற்குப் பதிலடியாக அந்த ஜகத்பதி {பலராமன்} ஏவிய பத்துக் கணைகள், ஏகலவ்யனின் தேரோட்டியைக் காயப்படுத்தியது. அடுத்ததாக அவன் ஏவிய முப்பது கணைகள் அந்தத் தேரின் பெரும்பகுதியை நொறுக்கியது.(3)

வலிமைமிக்க ஏகலவ்யன் பெரும் வில் ஒன்றை எடுத்துக் கொண்டு, பகைவரை அழிக்கும் வலிமைமிக்கக் கணையொன்றை அதன் நாண்கயிற்றில் பொருத்தினான். ஒப்பற்ற வலிமை கொண்ட பலராமன் இதைக் கண்டு மிதிபட்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே பாம்புக் கணைகள் பத்தை விரைவாக ஏவி தன் பகைவனின் {ஏகலவ்யனின்} வில்லை முறித்தான்.(4-6) வில்லை இழந்த ஏகலவ்யன், ஒரு பயங்கர வாளை விரைவாக எடுத்துக் கொண்டு பலராமனை நோக்கி விரைந்து ஓடினான்.(7) பிரதாபவனும், போர்க்கலைத் திறன் கொண்டவர்களில் முதன்மையானவனுமான பலராமன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஐந்து கணைகளை ஏவி ஏகலவ்யனின் வாளை எள்ளளவு துண்டுகளாக நொறுக்கினான்.(8)

நிஷாதனின் {வேடன் ஹிரண்யதனுசின்} மகனான ஏகலவ்யன், இரும்பாலான மற்றொரு வாளை எடுத்துச் சுழற்றி பலராமனின் தேரோட்டி மீது வீசினான்.(9) எனினும் ஒப்பற்ற யதுகுல வழித்தோன்றல் {பலராமன்}, அந்த வாள் தன் தேரோட்டியை அடையும் முன்பே பத்துக் கணைகளால் அதைத் துண்டுகளாக்கினான்.(10)

அப்போது ஏகலவ்யன் சிறிய கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சக்தி ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, பலராமன் மீது ஏவி சிங்கத்தைப் போல முழங்கினான்.(11) பலராமன், அந்தச் சக்தி ஆயுதம் தன்னை நெருங்கும்போதே அதைப் பற்றி, உடனே தன் பகைவனுடைய மார்பின் மீது அதை வீசித் தாக்கினான். உயிரற்றவனைப் போல ஏகலவ்யன் தரையில் மயங்கி விழும் அளவுக்கு அதன் தாக்குதல் வலிமைமிக்கதாக இருந்தது.(12-15)

மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் படையில் நிஷாதர்கள் என்று அறியப்படும் வேடர்கள் எண்பத்தெட்டாயிரம் பேர் படைவீரர்களாக இருந்தனர்.(16) மன்னா, அவர்கள் நெருப்பை நோக்கிப் பாயும் விட்டில் பூச்சிகளைப் போலத் தங்கள் கதாயுதங்களையும், வாள்களையும், சூலங்களையும், விற்களையும், பரிகங்களையும், பராசங்களையும், தோமரங்களையும், கோடரிகளையும், ஈட்டிகளையும் எடுத்துக் கொண்டு, இரண்டாம் ராமச்சந்திரனைப் போலத் தெரிபவனும், யாதவர்களுக்கு மத்தியில் நிற்பவனுமான பலராமனை நோக்கி விரைந்து சென்றனர். அந்த நிஷாதர்கள் பலராமனை அணுகும்போதே அவன் மீது கணைமாரியைப் பொழிந்தபடி சென்றனர்.(17-20)

நெய்யூட்டப்பட்ட நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த பலராமனைச் சிலர் தங்கள் கோடரிகளால் தாக்கினர், சிலர் தங்கள் கதாயுதங்களால் அடித்தனர், வேறு சிலர் தங்கள் ஈட்டிகளை அவன் மீது ஏவினர். இவ்வாறு அந்த நிஷாதர்கள் அனைவரும் தங்கள் பகைவனை {பலராமனை} அடுத்தடுத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது சீற்றமடைந்த பலராமன், தன் கலப்பையைப் பயன்படுத்தித் தன்னை நோக்கி நிஷாதர்களை இழுத்துத் தன் முசலத்தால் அவர்களைத் தாக்கினான்.

மன்னா, மலைப்பகுதிகளில் வசிப்பவர்களான அந்த ஆயிரக்கணக்கான நிஷாதர்களும் பலராமனின் முசலத்தால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் மாண்டு விழுந்தனர். பலராமன், அந்த நிஷாதர்கள் அனைவரையும் ஒரே கணத்தில் கொன்றுவிட்டு, சிங்கத்தைப் போல உரக்க கர்ஜித்தான்.

பிணந்தின்னும் பிசாசுகள் எண்ணற்றவை அவ்விரவில் போர்க்களத்தில் வந்து சடலங்களை உண்டன. அவை, இறந்து போன போர்வீரர்களின் மார்பில் இருந்து குருதியைப் பருகி, உண்பதற்காக அவர்களின் உடல்களைத் துண்டுகளாக அறுத்தன" {என்றார் வைசம்பாயனர்}.(21-25)

பவிஷ்ய பர்வம் பகுதி – 73ல் உள்ள சுலோகங்கள் : 25

மூலம் - Source