Friday 2 July 2021

வராஹபுராணம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 36

(இந்த்ரதீநாம் மோசநம் தேஷாமாதிபத்யலாபஷ்ச)

Release of the celestials | Bhavishya-Parva-Chapter-36 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவர்கள் தங்கள் நிலைகளை அடைந்தது; ஹரியின் ஆணை; வராஹ புராண மகிமை...

Varaha avatar of Lord Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{புருஷோத்தமனான} ஹரி, இவ்வாறு அசுரர்கள் அனைவரையும் போரில் முறியடித்து, புரந்தரனையும், தேவர்கள் அனைவரையும் விடுவித்தான்.(1) தேவர்கள் அனைவரும் தங்கள் இயல்பான மனநிலையை மீண்டும் அடைந்து, புரந்தரனை முன்னிட்டுக் கொண்டு நாராயணனை அணுகினர்.(2)

தேவர்கள், "ஓ! தலைவா, {ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே,  விருப்பத்தையும், உன் கரங்களின் பலத்தையும் கொண்ட} உன் தயவால் நாங்கள் காலனின் வாயில் இருந்து விடுபட்டோம்.(3) அதிதியின் மகன்களான நாங்கள் உனக்காக என்ன செய்ய வேண்டும்? நாங்கள் உன் பாதங்களுக்குத் தொண்டாற்ற விரும்புகிறோம்" என்றனர்.(4)

தாமரைக் கண்களைக் கொண்டவனும், தேவர்களின் பகைவரைக் கொன்றவனுமான அந்தத் தலைவன் {ஹரி}, அவர்களின் இந்தச் சொற்களைக் கேட்டு பெரும் நிறைவடைந்து,(5) "நீங்கள் யாவரும் என்னால் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறங்கள் பலவற்றைப் பாதுகாப்பீராக.(6) வேள்விக் காணிக்கைகளில் உங்களுக்கு உரிமையுள்ளதால் என்னால் முன்பு நிறுவப்பட்டிருந்த விதிகளைக் கடைப்பிடிப்பீராக" என்றான் {பகவான்}.(7)

துந்துபி போன்ற குரலைக் கொண்ட அந்தத் தலைவன், தேவர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் சகர்னிடம் {இந்திரனிடம்}, "நல்லோரிடமும், தீயோரிடமும் பாகுபாடற்ற முறையில் நீ நடந்து கொள்ள வேண்டும். {நல்லோருக்குத் தகுந்த சரியான வழியில் நீ உன் கடமையைச் செய்ய வேண்டும்}.(8) ஓ! தேவர்களின் மன்னா, விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வழங்கும் உன் உலகுக்குள் தவசிகள் நுழைய நீ எப்போதும் அனுமதிக்க வேண்டும்.(9) {வேள்விகள் செய்யும் எந்தப் பிராமணனும், க்ஷத்திரியனும், வைசியனும், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்கத்தைப் போன்ற அற்புதம் நிறைந்த உலகங்களை அடையட்டும்}. தேவர்களை வேள்விகளால் அமைதியடையச் செய்பவர்கள், அதற்குரிய பலன்களை அடையட்டும்.(10) நல்லோரும், அறவோரும் செழித்திருக்கட்டும், பாவிகள் அழிவடையட்டும். பல்வேறு நிலைகளில் {பல்வேறு ஆசிரமங்களைக் கடைப்பிடித்துத்} தொண்டாற்றும் அறம்சார்ந்த மக்கள் சொர்க்கத்தை வெல்லட்டும்.(11) வாய்மை நிறைந்தவர்களும், எளிமையானவர்களும், வீரர்களும், பொறாமையற்றவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்தின் பலன்களை அனுபவிக்கட்டும்.(12) அவதூறு செய்பவர்களும், காமாந்தகர்களும், பேராசைக்காரர்களும், தீயோரும், {பிராமணர்களுக்குத் தீங்கிழைப்போரும்}, நாத்திகர்களும் நரகம் செல்லட்டும்.(13) ஓ! தேவர்களின் மன்னா, நான் சொன்னவற்றை நீ பின்பற்றினால், நான் இருக்கும் வரை உன்னுடைய பகைவர்களால் உனக்குத் தீங்கிழைக்க முடியாது" என்றான்.(14)

சங்கு, சக்கர, கதாதாரியான அவன் இதைச் சொல்லிவிட்டு மறைந்தான். தேவர்கள் அனைவரும் பேராச்சரியத்தில் நிறைந்தனர்.(15) அவர்கள், வராஹனின் அற்புதமிக்கச் செயல்களைக் கண்டு, அந்த வராஹனை வணங்கிவிட்டுத் தேவலோகம் சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}[1].(16)

[1] முன் சென்ற அத்தியாயங்களில் சொன்னது போல { } என்ற அடிப்புக்குறிக்குள் இருப்பவை சித்திரசாலை பதிப்பில் கண்டவையாகும். மன்மதநாதத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயம் இத்துடன் நிறைவடைகிறது. ஆனால், சித்திரசாலை பதிப்பில் இன்னும் 12 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அவற்றில் உள்ள செய்திகள் பின்வருமாறு.

{வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு தேவர்கள் தங்கள் தங்கள் உலகங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றி வாசவனை உலகங்கள் அனைத்தின் தலைவனாக நிறுவினர்.(17) தானவர்களிடம் இருந்து விடுபட்ட பூமாதேவி மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்தாள். பூமியின் உறுதியற்ற தன்மைக்குப் பொறுப்பானவை மலைகளே என்பதை அறிந்த புரந்தரன், அந்த மலைகளை அதனதனுக்குரிய இடங்களில் நிறுவி, நூறு கூர்முனைகளைக் கொண்ட தன்னுடைய வஜ்ராயுதத்தால் அவற்றின் சிறகுகளை அறுத்தான்.(18,19) புத்தியுள்ள சக்ரன், (மேனையின் மூலம் இமயத்துக்குப் பிறந்த மகனான) மைநாகத்தைத் தவிர மற்ற மலைகள் அனைத்தின் சிறகுகளையும் அறுத்தான். தேவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டால் மைநாகமலைக்கு மட்டுமே சிறகுகள் எஞ்சியிருந்தன.(20)

இது புராதன வரலாறுகளில் {புராணங்களில்} விப்ரேந்திரனால் புகழப்படும் பரமாத்மாவான நாராயணனின் வராஹ அவதார விளக்கமாகும்.(21) இதையும், தொடக்கத்தில் இருந்து கேட்கப்பட்டுவருவதும், கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்டதுமான புனித ஞானத்தையும், தூய்மையற்றவர்கள், நன்றியற்றவர்கள், கொடூரர்கள் ஆகியோரிடம் சொல்லக்கூடாது.(22) ஓ! மன்னா, இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், ஆசானை வெறுப்பவர்கள், சீடர்களாக இல்லாதவர்கள், நன்றி மறந்தவர்கள் ஆகியோரிடமும் இதைச் சொல்லக்கூடாது.(23) நீண்ட வாழ்நாள், புகழ், நிலம் ஆகியவற்றை விரும்புகிறவர்களும், வெற்றியை விரும்புகிறவர்களும் தேவர்களின் வெற்றியைச் சொல்லும் இதை {வராஹ புராணத்தைக்} கேட்க வேண்டும்.(24)

புராதன வரலாற்றையும், வேதங்களையும் குறித்த இந்தக் கதை {கேட்போருக்கு} மங்கலமும், செழிப்பும் உண்டாவதை உறுதி செய்யும். உயிரினங்கள் அனைத்திற்கும் புனிதமான இந்தக் கதை வெற்றியையும் உறுதி செய்யும்.(25) ஓ! குரு குலத்தவனே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வாறே நான் பரமாத்மாவின் வராஹ அவதாரத்தைக் கோட்பாட்டளவிலும் தொடர்ச்சியாகவும் உனக்குச் சொன்னேன்.(26) தேவர்களுக்காகவும், பித்ருக்களுக்காகவும் புனித வேள்விகளைச் செய்பவர்கள், ஆத்மாவின் ஆத்மாவும், நித்யனுமான விஷ்ணுவுக்காகவே அந்தந்த வேள்விகளைச் செய்கிறார்கள்.(27) ஓ! மன்னா, உலகின் புகலிடமும், தேவர்களின் புகலிடமும், சுயம்புவான பிரம்மனின் புகலிடமும், பிரம்மமேயான வேதங்களின் புகலிடமும், நாராயணனின் நல்லாத்மாவுமான வராஹ அவதாரத்தை வணங்குவோம்" என்றார் வைசம்பாயனர்}[2].(28)

[2] 17 முதல் 28ம் ஸ்லோகம் வரை { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் மேற்கண்ட பகுதி மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இவை சித்திரசாலை பதிப்பில் உள்ளவை.


பவிஷ்ய பர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 28

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English