Sunday 20 June 2021

மதுவைக் கொன்ற விஷ்ணு | பவிஷ்ய பர்வம் பகுதி – 25

(ஆத்மோபாஸநாதிகதநம்)

Vishnu kills Madhu | Bhavishya-Parva-Chapter-25 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : மலைகளைக் குறித்த வர்ணனை; ஆறுகளின் உற்பத்தி; மழைக்காலமும் வசந்த காலமும்; யோகம்; விஷ்ணு; மாயை; ஆத்மா...

Madhu Kaitabha and Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "புஷ்கரையில் மது வீழ்ந்ததைக் கண்ட அனைத்து உயிரினங்களும் அனைத்துப்புறங்களிலும் பாடியும், ஆடியும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தன.(1) மலைகளில் முதன்மையான சுபார்ஷ்வம் பல்வேறு தாதுப்பொருட்களால் மறைக்கப்பட்ட தன் தங்கச் சிகரங்களுடன் வானத்தைப் பிளப்பதைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(2) தாதுக்களால் எங்கும் மறைக்கப்பட்டிருந்த மலைகள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்ற உயர்ந்த சிகரங்களுடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(3) அவற்றின் சிகரங்கள் மண்ணாலும், காற்றில் எழுந்த சாம்பலாலும் மறைக்கப்பட்டருந்ததால் பெரும் மேகங்கள் பலவற்றைப் போல அவை தெரிந்தன.{4} மேகங்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், ஏராளமான தங்கத்தை விளைவிக்கும் தங்கள் சிறகுகளால் {தங்கள் மேலிருந்த} மரங்களைச் சிதறடித்தவையுமான மலைகள் ஆகாயத்தில் நிலைத்திருப்பவை போலத் தெரிந்தன.{5,6} பொன் தாதுக்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், சிறகுகள் படைத்தவையுமான மலைகள், காற்றால் மேலெழுந்து சென்று பறவைகள் அனைத்தையும் அச்சுறுத்தின. பளிங்கு {ஸ்படிகம்}, மரகதம் {சூரியகாந்தம்}, நீலமணி {சந்திரகாந்தம்} ஆகியவற்றால் அந்தப் பொன் மலைகள் மறைக்கப்பட்டிருந்தன.{7}

பெரும் மலையான இமயம், வெண்தாதுக்களால் மறைக்கப்பட்டிருந்தது. அதன் {இமய மலையின்} பொன் சிகரங்களும், சிறகுகளும் சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்ட போது, பல்வேறு வகைகளிலான ரத்தினங்களை அவை வெளிப்படுத்தின.{8,9} பளிங்கால் {ஸ்படிகத்தால்} நிறைந்ததும், வஜ்ரத்தால் கட்டப்பட்ட நுழைவாயில்கள் இரண்டைக் கொண்டதும், பெரும் மலையுமான மந்தரம், தேவலோகத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.{10} பல்வேறு தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதும், நுழைவாயில்களைப் போன்ற உயர்ந்த பல சிகரங்களைக் கொண்டதும், இசைக்கருவிகளை இசைக்கும் கந்தர்வர்கள், பாடும் கின்னரர்கள், பல்வேறு முகபாவங்களையும், உடலசைவுகளையும் செய்யும் தெய்வீக காரிகைகள் ஆகியோரால் மறைக்கப்பட்ட மரங்களுடன் கூடியதுமான கைலாச மலையோ விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.{11,12}

மதுவின் {மது அசுரனின்} பாடல், நடிப்பு, நடனம், விளையாட்டு ஆகியவற்றால் அந்தக் கைலாச மலை காமனைப் போல ஆசையைத் தூண்டிக் கொண்டிருந்தது.(13) சூரியக் கதிர்களால் பீடிக்கப்பட்ட மேகங்களைப் போன்ற சிகரங்களுடன் கூடிய நீல மலையான விந்தியத்தைப் போன்றவனும், பூமியின் வடிவத்தைக் கொண்டவனுமான விஷ்ணு, மேரு மலையில் நிலைத்திருந்து, மேகங்களின் மூலம் பூமியில் மழையைப் பொழிந்தான்.(14,15) எழுந்து வரும் மேகங்களுடன் கூடிய மலைகள் தூய நீரையும், பல்வேறு பாறைகளையும், தாது பொருட்களையும் வெளியிட்டன; ஊற்றுகளின் மூலம் அவை பளிங்கு போன்று தெளிந்த நீரை வெளியிட்டன. மழைக்காலம் முடிவடைந்ததும், மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்று மரங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. யானைகள் பல்வேறு பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மலர்ந்து தொங்கும் கொடிகள், பறவைகள் நிறைந்த மரங்களால் ஆதரிக்கப்பட்டு, காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. வசந்த காலத்தில், கரையை மோதும் அலைகளைப் போல வலுவான காற்றால் அசைக்கப்படும் கொடிகள், நீர்த்துளிகளைப் போல மலர்களைப் பொழிந்தன. பூமியானது, கனிகளால் மறைக்கப்பட்ட பெரும் மரங்கள் பலவற்றால் மறைக்கப்பட்டிருக்கிறது. தேனையும், பறவைகளையும் விரும்பும் மரங்கள், காமன் வருவதை முன்னறிவிப்பவைப் போலப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

மதுவை அழித்தவனும், தெய்வீகனுமான விஷ்ணு, ஓடைகளுடன் கூடிய ஆற்றைப் படைத்தான். ஓடையானவள், பல ஊற்றுகளையும், ஏராளமான நீரையும், அழகிய இடங்களையும் கொண்டிருந்தாள். அவளது கரையில் அமைந்திருக்கும் புனிதத்தலங்கள் {புஷ்கரங்கள்} அழகுடனும், வனப்புடனும் திகழ்ந்தன. தெளிந்த நீர் நிறைந்தவளாகவும், மலர்களின் நறுமணத்தையும் சுமப்பவளாகவும் அவள் இருந்தாள்.(16-23) "உன்னைத் தவிர வேறேதும் இல்லை" என்ற வேதச் சொற்களால் ஞானமடைந்த அவள் யோகியரின் இதயத்திற்குள் நுழைகிறாள். வேதச் சொற்களால் ஞானமடைந்தும், யோகத்தில் கபில வடிவை (அதாவது மூன்று குணங்களும் சமமாக இருக்கும் நிலையை) ஏற்றும் பாலைத் தருகிறாள் (ஆன்ம அறிவியலை வெளிப்படுத்துகிறாள்).(24,25)

புத்தி சார்ந்த புலங்கள் அனைத்தும் அழிவடையும்போது, தூய நனவு நிலை மட்டுமே எஞ்சுகிறது; அண்டந்தழுவிய மூன்று போக்குகள் (குணங்கள்) நுட்பமானதை {ஆத்மாவை} அறிந்து கொள்வதற்காக மட்டுமே உடலை ஏற்கின்றன. அதன்பிறகு, {ஒரு முகமான} குவிந்த மனத்துடன் கூடிய யோகி, மிக உயர்ந்ததும், அற்புதமானதும், நித்தியமானதும், தூய்மையானதுமான ஆத்மாவைத் துதிக்கிறான். தூய ஞானத்தின் வடிவிலான பிரம்மம், பாலைவனத்து நீரைப் போல நனவில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடந்து படைப்பு முழுவதிலும் படர்ந்தூடுவுகிறது. நன்கு அமைக்கப்பட்ட அழகிய மாயை அந்தத் தெய்வீக ஆத்மாவை {பிரம்மத்தை} மறைக்கிறது. அவித்யை எனும் அத்திரை விலகும்போதுதான் ஒருவனால் ஆத்மாவைக் காண முடியும். அகங்காரம் கொண்ட நனவுநிலையானது ஒரு மலையைப் போல வெல்லப்பட முடியாததாகும். அஃது அண்டந்தழுவிய மூன்று போக்குகளை, அல்லது குணங்களைச் சார்ந்தே இருக்கிறது. நித்தியமாக அது நிலைத்திருக்கிறது, சித்தர்களாலும் கூட அது தொண்டாற்றப்படுகிறது {சித்தர்களும் குணங்களின் வசப்பட்டவர்களாக இருக்கிறார்கள்}" என்றார் {வைசம்பாயனர்}[1].(26-29)

[1] சித்திர சாலை பதிப்பின் மூல ஸ்லோகங்கள் 29ல் முடியாமல் 48 வரை செல்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயம் 29லேயே முடிவடைகிறது. மேலும் சித்திரசாலை பதிப்பில் இதற்கடுத்து வரும் இரு அத்தியாயங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை.

பவிஷ்ய பர்வம் பகுதி – 25ல் உள்ள சுலோகங்கள் : 29

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English