Sunday 23 May 2021

மனத்தில் நிலைத்த சிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 18

(மநோதாரணவிசாரம்)

The creation of Gandharvas etc | Bhavishya-Parva-Chapter-18 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அப்சரஸ்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சரஸ்வதி தேவியும் மற்றும் பல உயிரினங்களும் படைக்கப்பட்டது; மெய் அறிவியல்களான பிரம்ம யோகம், சாங்கிய யோகம்...


Brahma and Saraswati

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, "பெரும்பாட்டன் {பிரம்மன்}, தூய புத்தியின் வடிவை ஏற்றுத் தன் மனத்திறன்களின் மூலம் மொத்த படைப்பையும் கருதிப்பார்த்து, புறப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தன் உள் ஆன்மாவை விலக்கி பிரம்மத்தை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுகிறான். மனக்குவிப்பில் ஈடுபட்டும், பிரம்மத்துடன் ஐக்கியமடைந்தும் அவன் தன் மனத்தால் சந்ததியைப் படைத்தான்.{1,2} எல்லாம் வல்லவனான பிரம்மன் தன் கண்களின் மூலம் அழகிய அப்சரஸ்களையும், தன் மூக்கின் நுனியில் இருந்து தும்புருவையும், பலவண்ண ஆடைகளை உடுத்தியவர்களும், வேதங்களை ஓதுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும் திறன் படைத்தவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், ஆயிரக்கணக்கானவர்களுமான கந்தர்வர்கள் பிறரையும் படைத்தான்.{3,4}

எல்லாம் வல்லவனும், சுயம்புவுமான அந்தத் தேவன் {பிரம்மன்}, தன் யோகத்தின் மூலம் தன் எழிலின் அவதாரமாக விளங்குபவளும், மாசற்றவளுமான வேதவாணி {சரஸ்வதி} தேவியைத் தன் மனத்தில் படைத்தான்.{5} அவள் அழகிய கண்களையும், கேசத்தையும், புருவங்களையும், அழகிய முகத்தையும் கொண்டவளாக இருந்தாள். இனிய சொற்களையுடையவளான அந்தத் தேவி, நூறு இதழ்களைக் கொண்ட அழகிய தாமரையில் அமர்ந்தாள்.{6} ஓ! மன்னா, பூதங்களின் ஆன்மாவாகத் திகழும் பிரம்மன், அழகிய அப்சரஸ்களைத் தன் கண்களில் இருந்தும், இசைக்கருவிகளை இசைப்பதில் திறன்மிக்கவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களுமான கந்தர்வர்களைத் தன் மூக்கில் இருந்தும் படைத்துவிட்டு, பாடும் கலையை முன்வைத்து, பிற பிராமணர்களுக்கான சாமத்தை {சாம வேதத்தைப்} படைத்தான்.{7-9}(1-9)

அவனுடைய இரு கால்களில் இருந்து அசைவனவும், அசையாதனவும், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், உரகர்கள், யானைகள், சிங்கங்கள், புலிகள் ஆகியவையும், நூற்றுக்கணக்கான பிற விலங்குகளும், புற்களும், நான்கு கால் விலங்குகளும் படைக்கப்பட்டன.{10,11} பணிகளுடன் {படைப்பு வேலைகளுடன்} சேர்த்துத் தங்கள் கைகளால் உணவை உட்கொள்பவர்களைத் தன் கைகளில் இருந்து அவன் படைத்தான். அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியை நாடிய அந்தப் படைப்பாளன், உயிர் காற்றுகளின் மூலம் சுவாசத்தின் பல்வேறு இயக்கங்களைப் படைத்தான். பிறகு அவன், ஐம்புலன்களையும் தடுத்துப் பேரின்பம் நிறைந்த பரமாத்மாவில் தன் மனத்தை நிலைநிறுத்தி அங்கேயே இருந்தான்.{12,13} அவன் தன் இதயத்தில் இருந்து பசுக்களையும், தன் கைகளில் இருந்து பறவைகளையும் படைத்தான்; அதன் பிறகு அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்ட நீர்வாழ் உயிரினங்களைப் படைத்தான்.{14}.(10-14)

யோகத் தலைவனும், தெய்வீகனுமான அந்தப் பெரும்பாட்டன், ஒளியில் எரிபவரும், ஆறு புலன்களை ஒடுக்குவதால் உண்டாகும் உண்மை ஞானத்துடன் கூடியவரும், தெய்வீக முனிவருமான அங்கீரஸைத் தன்னிரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் இருந்து தன் யோக சக்தியின் மூலம் படைத்தான். மேலும் அவன், உயர்ந்த பக்திமானும், தெய்வீக முனிவருமான பிருகுவைத் தன் நெற்றியில் இருந்து படைத்தான்.{15,16} பெரும் யோகியான பிரம்மன், சச்சரவுகள் செய்பவரான நாரதரையும், சனத்குமாரரையும் தன் தலையில் இருந்து படைத்தான்.{17}(15-17)

பெரும்பாட்டன், இருபிறப்பாளர்களின் நித்திய மன்னனும், இரவுலாவியுமான சோமனைத் தன் வாரிசாக {யுவராஜனாக} நியமித்தபோது, பெரும்பூதங்களால் பெறப்பட்ட சக்தியுடன் கூடிய சந்திரனும்,{18} விண்மீன்களும், பல்வேறு உயிரினங்களால் {கிரகங்கள் பலவற்றுடனும்} வானத்தை நிறைத்து அங்கே உலவத் தொடங்கின.{19} பிரம்மன், யோகத்தின் மூலமும், மனப்பண்பின் மூலமும் ஆன்ம சக்திகளை அடைந்து, தன் உடலில் இருந்து அசையும் உயிரினங்களையும், அசையாத உயிரினங்களையும் படைத்தான்.{20} பிரம்மன், சூரியன் முதலிய பல்வேறு உலகங்களைப் படைத்து, இரவு பகலை உண்டாக்க பலரையும் நியமித்தான்.{21}

முன்பு சொன்னவை பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும். எனவே, பிரம்ம யோகமும், சாங்கிய யோகமும், அறிவியலறிஞர்களின் மெய் அறிவியலாக இருக்கின்றன. இது சார்வாகர்களாலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. {22} இஃது ஒருமைப்படுத்தலுக்கும், பலவகைப்படுத்தலுக்கும் வழிவகுக்கிறது. இது பிறப்பையும், மரணத்தையும் உண்டாக்குகிறது. இதுவே பகுத்துணரும் ஞானமாக அறியப்பட வேண்டும்" என்றார் {வைசம்பாயனர்}.{23}(18-23)

பவிஷ்ய பர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 23

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English