Friday 9 April 2021

ரிஷிமொழி கேட்பதன் பலன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 06

(ஏதத்க்ரந்தஷ்ரவணபலம்)

Janamejaya lives happily; Effect of the Rishi's words | Bhavishya-Parva-Chapter-06 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : மகிழ்ச்சியாக நாட்டை ஆண்ட ஜனமேஜயன்; ஹரிவம்சம் படிப்பது, கேட்பது, உரைப்பது ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன சௌதி...


Vyasa and Vishampayana in Janamejaya's sacrice

சௌதி {சௌனகரிடம்}, "விஸ்வாவசுவால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பயனற்ற கவலையால் நிறைந்த மனத்தைக் கொண்டவனுமான ஜனமேஜயன் வபுஷ்டமையிடம் தணிவடைந்து, பாவத்தை விலக்குவதற்காக ஓர் அறச்சடங்கைச் செய்தான்.(1) பக்திமானான ஜனமேஜயன், தன் மன உளைச்சலை விரட்டி, புகழை அடைய விரும்பி, வபுஷ்டமையை மகிழ்வித்துத் தன் நாட்டை ஆண்டான்.(2) அவன், பிராமணர்களை வழிபடுவது, வேள்விகளைச் செய்வது, கொடைகளை அளிப்பது ஆகியவற்றைத் தவிர்க்காமல், வபுஷ்டமாவை வசைபாடாமல் தன் நாட்டைக் கவனித்துக் கொண்டான்.(3) மன்னன் ஜனமேஜயன், பெருந்தவங்களைச் செய்த ரிஷிகள், "விதியின் இயக்கத்தை வெல்ல இயலாது" என்று சொன்னதை உறுதியான இதயத்துடன் தொடர்ந்து தியானித்துத் தன் கோபத்தைக் கைவிட்டான்.(4)

மஹாரிஷியின் {வியாசரின்} இந்தப் பெருஞ்சொற்களைப் படிப்பவன், மனிதர்களால் புகழத்தக்கவனாகி போதுமான அளவுக்கு நீண்ட காலம் வாழ்ந்து, (பிறருக்கு) அடைதற்கரிதான பயன்களை அடைகிறான்.(5) பாவத்தை அழிக்கும் இந்தச் சொற்களைப் படிக்கும் மனிதன், பாவங்களில் இருந்து விடுபட்டு, நூறு வேள்விகளைச் செய்த பலனையும், விருப்பத்திற்குரியவை பலவற்றையும் அடைந்து, நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.(6) 

மலர்களில் இருந்து உண்டாகும் கனிகளை விளைவித்து, அந்தக் கனிகளில் இருந்தே மீண்டும் உதிக்கும் மரத்தைப் போலவே அந்த மஹாரிஷியிடம் இருந்து வெளிப்பட்ட சொற்கள் அவனை {மகாரிஷியின் சொற்களைப் படிப்பவனை} செழிப்படையச் செய்யும்.(7) மகனற்ற மனிதன், வலிமைமிக்க மகன்களையும், உலகில் நிலையிழந்த மனிதன், மீண்டும் தன் நிலையையும் இந்தச் சொற்களின் மூலம் அடைகிறான். பிணிகளில் இருந்தும், தளைகளில் இருந்தும் அவன் விடுபடுகிறான். அவன், சாதனைகளையும், பல மங்கலப்பணிகளையும் செய்வான்.(8)

ரிஷியின் இந்த மங்கலச் சொற்களைக் கேட்பதன் மூலம், கன்னிகையர் தங்கள் இதயம் விரும்பும் கணவர்களை அடைந்து, வலிமைமிக்கவர்களும், சாதனைகளைச் செய்யக்கூடியவர்களும், பகைவரைக் கலங்கடிக்கக் கூடியவர்களுமான மகன்களைப் பெறுவார்கள்.(9) இந்தச் சொற்களைக் கேட்கும் க்ஷத்திரியர்கள் உலகையும், தங்கள் பகைவரையும் வென்று, ஏராளமான செல்வத்தை அடைவார்கள்; வைசியர்கள் போதுமான உடைமைகளை அடைவார்கள்; சூத்திரர்கள் சிறந்த நிலையை அடைவார்கள்.(10)

உமக்குச் சொல்லப்படும் இந்த அத்தியாயத்தைப் பிராமணர்களின் வட்டத்தில் நீர் நினைவுகூர்ந்தால், பொறுமையையும், அமைதியையும் நாடி உலகில் மகிழ்ச்சியாகத் திரிவீர்.(11) இவ்வாறே நான், அற்புதச் செயல்களைச் செய்யும் பெரும் முனிவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் மீண்டும் சொன்னேன். இன்னும் நீர் கேட்கவிரும்புவதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. அதை நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்" என்றார் {சௌதி}[1].(12,13)

[1] பிபேக்திப்ராயின் பதிப்பில் இத்துடன் பவிஷ்யபர்வமும், அதன் காரணமாக ஹரிவம்சம் முழுமையும் முற்றாக நிறைவடைகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இன்னும் 42 அத்யாயங்களும், சித்திரசாலை பதிப்பில் இன்னும் 129 அத்யாயங்களும் இருக்கின்றன. சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு அடுத்த அத்யாயம் வரையும், பிறகு 33ம் அத்யாயத்தில் தொடங்கி 53ம் அத்யாயம் வரையும் நிறைவடைந்து இருக்கிறது. இடையில் 7 முதல் 32 வரையும், 54 முதல் 135ம் அத்யாயம் வரையும் உள்ள பகுதிகள் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பு விஷ்ணு பர்வத்தை மட்டுமே கொண்டதாகும். நாம் மன்மதநாததத்தரின் பதிப்பைப் பின்பற்றுவதால் இன்னும் 43 அத்யாயங்களுடன் பவிஷ்ய பர்வமும், மொத்த ஹரிவம்சமும் நிறைவடையும். எனவே, இதற்கு மேல் அடிக்குறிப்புகளைக் காண்பது அரிதாகவே இருக்கும். ஒரு வேளை 33ம் அத்யாயத்திற்கு மேல் சில பல விளக்கங்களின் நிமித்தம் சித்திரசாலை பதிப்பில் இருந்து அடிக்குறிப்புகளுக்கான செய்திகள் கிடைக்கக்கூடும்.

பவிஷ்ய பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 13

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English