Friday 12 March 2021

பாணனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 185 – 129

(கார்திகேயாபயாநம் பாணபாஹுச்சேதநம் பாணஸ்ய ஹராத்வரளாபாதிகீர்தநம் ச)

The battle between Vana and krishna | Vishnu-Parva-Chapter-185-129 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மயிலை ஒடுக்கிய கருடன்; பாணனுக்கு உதவிய சிவன்; சக்கர ஆயுதத்தால் கைகள் துண்டிக்கப்பட்ட பாணன்; சிவனிடம் ஐந்து வரங்களைப் பெற்ற பாணன்...


Battle between Krishna and Vanasura

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{பின்பு பாணன், இசைக்கருவிகளின் ஒலி, பேரிகைகளின் பெரு முழுக்கம், அசுரர்களின் சிங்க முழக்கம் ஆகியவற்றுடன் போர்க்களத்தில் கிருஷ்ணனை எதிர்த்துச் சென்றான்}.(36) பாணன் புறப்பட்டு வந்து நிற்பதைக் கண்டு கிருஷ்ணனும் கருடன் மீதேறி பாணனை எதிர்த்துச் சென்றான்.(37) யது மன்னனும் ஒப்பற்ற ஆற்றல் படைத்தவனும், கருடவாகனனுமான கிருஷ்ணன் அணுகி வந்து நிற்பதைக் கண்ட பாணன் கோபத்தால் நிறைந்தவனாக வாசுதேவனிடம்,(38,39) "நில்! காத்திருப்பாயாக. இன்று என்னிடம் இருந்து நீ உயிருடன் தப்பப் போவதில்லை. உயிருடன் துவாரகை சென்று உன் நண்பர்களைக் காணப் போவதில்லை.(40) ஓ! மாதவா, நீ காலனால் தூண்டப்பட்டவனாக இருக்கிறாய். எனவே, போரில் என்னிடம் வீழ்ந்து, உன் மரணத் தருணத்தில் மரங்களின் பொன் இலைகளை நீ காண்பாய்.(41) ஓ! கருடத்வஜா, எட்டுக் கைகளைக் கொண்ட உன்னால், ஆயிரங்கைகளைக் கொண்டு என்னுடன் எவ்வாறு போரிட இயலும்?(42) இன்று நீயும், உன் நண்பர்களும் இந்தச் சோணித நகரத்தில் என்னால் கொல்லப்படுவீர்கள், நீ துவாரகையை நினைப்பாய்.(43) பல்வேறு ஆயுதங்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட என்னுடைய ஆயிரம் கைகளும் கோடிகளாகப் பெருகுவதை நீ இன்று காண்பாய்" என்றான்.(44)

பாணன் இவ்வாறு முழங்கிக் கொண்டிருந்த போது, அவனுடைய சொற்கள், காற்றால் எழும்பும் பெருங்கடலின் பயங்கர அலைகளைப் போல எங்கும் பயணித்தன.(45) பெருஞ்சக்திவாய்ந்த அந்த அசுரனின் கண்கள் உலகத்தை எரிக்க விரும்புவதைப் போலக் கோபத்தால் நிறைந்து ஆகாயத்தில் எழும் இரு சூரியர்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.(46) பாணனின் இந்தச் செருக்குமிக்கச் சொற்களைக் கேட்ட நாரதர், வானமே பிளந்துவிட்டதைப் போல உரக்கச் சிரித்தார்.(47) யோகாசனத்தில் அமர்ந்திருந்த அந்த முனிவர், போரைக் காணும் ஆவலில் நிறைந்தவராக அனைத்துப் பக்கங்களிலும் திரிந்தார்.(48)

கிருஷ்ணன், "ஓ! பாணா, மூடத்தனத்தால் ஏன் இவ்வாறு நீ முழங்குகிறாய்? வீரர்கள் இவ்வாறு வீராப்பு பேசுவதில்லை. வீராப்பினால் பயனென்ன? வா, போர்க்களத்தில் என்னுடன் போரிடுவாயாக.(49) ஓ! திதியின் மகனே, தொடர்பற்ற சொற்கள் பலவற்றை நீ {அபத்தமாகப்} பேசினாய். போரில் சொற்களால் வெல்ல முடியுமெனில், நீயே வெற்றியாளன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.(50) வா, ஓ! பாணா, என்னை வெல், அல்லது என்னால் வெல்லப்பட்டுப் பூமியில் குப்புற விழுந்து கிடப்பாயாக" என்றான்.(51)

கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு, முக்கியப் பகுதிகளைப் பிளக்கும் கணைகளால் பாணனைத் தாக்கினான்.(52) அந்தப் பயங்கரப் போரில், முக்கியப் பகுதிகளைப் பிளக்கும் கணைகளைக் கொண்டு கிருஷ்ணனால் இவ்வாறு சிதைக்கப்பட்ட பாணன், {சிரித்துக் கொண்டே} பெருங்கவனத்துடன் எரியும் கணைகளால் கிருஷ்ணனை மறைத்தான்.(53) பரிகங்கள், நிஸ்த்ரிம்ஸங்கள், கதாயுதங்கள், தோமரங்கள், சக்திகள், முசலங்கள், பட்டிசங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவன் முற்றாகக் கேசவனை மறைத்தான்.(54) செருக்குமிக்கவனும், ஆயிரங்கைகளைக் கொண்டவனுமான பாணன், இரு கைகளைக் கொண்ட கேசவனுடன் போர்க்களத்தில் {விளையாடுபவனைப் போல} எளிதாகப் போரிட்டான்.(55) சங்கு, சக்கர, கதாதாரியான கேசவன், எட்டுக் கைகளைக் கொண்டவனாக இருந்தாலும், அந்தப் போரில் ஆயிரங்கைகளைக் கொண்ட பாணனுடன் {இரண்டு கைகளுடன்} போரிட்டுக் கொண்டிருந்தான். கிருஷ்ணனின் மேன்மையான பயிற்சியைக் கண்ட பலியின் மகன் {பாணன்}, பெரிதும் கோபமடைந்தான்.(56) முற்காலத்தில், பிரம்மனின் தவச் சக்திகளின் மூலம் ஹிரண்யகசிபுவுக்காக உண்டாக்கப்பட்டதும், பகைவர் அனைவரையும் அழிப்பதுமான தெய்வீகப் பேராயுதம் ஒன்றை அவன் ஏவினான்.(57) அவ்வாயுதம் ஏவப்பட்டபோது, திக்குகள் அனைத்தும் இருளில் மூழ்கின, அனைத்துப் பக்கங்களிலும் பயங்கரமான சகுனங்கள் தென்பட்டன.(58) உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கியபோது, அனைத்தும் பார்வைக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன.(59) தானவர்கள், "நன்று, நன்றாகச் செய்தாய்" என்று பாணனை மெச்சினர், "ஐயோ" என்ற தேவர்களின் கூச்சல்களும் கேட்கப்பட்டன.(60) அவ்வாயுதத்தின் ஆற்றலாலும், சக்தியாலும் பயங்கரமானதும், எரிந்து கொண்டிருப்பதுமான கணைமாரி உண்டானது.(61) பாணனால் அவ்வாயுதம் ஏவப்பட்டுக் கேசவன் எரிந்து கொண்டிருந்தபோது, காற்று வீசவில்லை, மேகங்களும் அசையவில்லை.(62) தெய்வீகனான மதுசூதனன், அந்தப் போர்க்களத்தில் தவிர்க்க இயலாத காலனைப் போன்ற இந்திரனின் ஆயுதத்தை {பார்ஜன்ய ஆயுதத்தை} எடுத்தபோது,(63) உலகங்கள் அனைத்திலும் இருள் விலகியது, {பாணன் ஏவிய ஆயுதத்தில் இருந்து வந்த} அந்த நெருப்பு அணைந்தது, தானவர்கள் முற்றாக இதயம் தளர்ந்தனர்.(64) இந்திரனின் ஆயுதம் எடுக்கப்பட்டவுடன் அந்தத் தானவ ஆயுதம் முறியடிக்கப்பட்டதைக் கண்ட தேவர்கள் சிரிக்கத் தொடங்கிச் சிங்க முழக்கம் செய்தனர்.(65)

திதியின் மகனான பாணன், தன் ஆயுதம் இவ்வாறு முறியடிக்கப்பட்டதைக் கண்டு, குழப்பமும், சினமுமடைந்து, கருடன் மீதேறி வந்த கேசவனிடம் கடுஞ்சொற்கள் பேசி,(66) முசலங்களாலும், பட்டிசங்களாலும் அவனை மறைத்தான். எனினும், பகைவரைக் கொல்பவனான கேசவன் புன்னகைத்தவாறே தன் ஆயுதத்தை உயர்த்தி அவற்றை முறியடித்தான்.(67) கேசவன், தன் சாரங்க வில்லில் இருந்து ஏவப்பட்ட வஜ்ரம் போன்ற கணைகளால் அந்தப் பெரும்போரில் குதிரைகளுடனும், கொடிமரங்களுடனும் கூடிய பாணனின் தேரைத் துண்டுதுண்டுகளாகப் பிளந்தான்.(68,69) பெருஞ்சக்திவாய்ந்த கேசவன், அடுத்தக் கணமே பாணனின் மேனியில் இருந்து ஒளிமிக்க மகுடத்தையும், கவசத்தையும், வில், கேடயம் ஆகியவற்றைப் பிரித்தான்.(70) பிறகு அவன் புன்னகைத்தவாறே, சிறகு படைத்த கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான். முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டவனான பாணன், தன்னினைவை இழந்து, மயக்கமடைந்தான்.(71)

அரண்மனையின் உச்சியில் அமர்ந்திருந்த நாரதர், பாணன் இவ்வாறு தாக்கப்பட்டு, மயக்கமடைந்ததைக் கண்டு,(72) {தோள்தட்டி, நகங்களைத் தேய்த்து} கை தட்டியவாறே, "ஓ! பெரும் நற்பேறு கிடைத்தது, பெரும் நற்பேறு பெற்றேன்,(73) தாமோதரனின் இந்த அற்புத ஆற்றலை இன்று நான் கண்டதால் என் பிறவியும், வாழ்வும் அருளப்பட்டன.(74) ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களால் துதிக்கப்படுபவனே, நீ எதற்காக அவதரித்தாயோ அதை நிறைவேற்றுவாயாக. திதியின் மகனான பாணனை விரைவில் அழிப்பாயாக" என்றார்.(75) இவ்வாறு தலைவனைத் துதித்தவாறே நாரதர், போர்க்களத்தில் இங்கேயும் அங்கேயும் பாய்ந்து, வானில் ஒளிர்ந்த கொண்டிருந்த கூரிய கணைகளுக்கு மத்தியில் திரிந்து கொண்டிருந்தார்.(76)

அந்தப் போரில் அவர்களது கொடிமரங்களும் ஒன்றோடொன்று போரிட்டன; தேவ தானவர்களின் குதிரைகளும் அவ்வாறே செய்தன.(77) கருடனும், மயிலும் போரிட்டபோது, சிறகுகளாலும், அலகுகளாலும், உகிர்களாலும் கோபத்துடன் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன.(78) பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகன் {கருடன்}, கோபத்தில் குதித்தெழுந்து தன் அலகுகளால் அந்த மயிலின் தலையைப் பிடித்தான். கருடன், தன் சிறகுகளாலும், உகிர்களாலும் அதனைத் தாக்கினான்.(79,80) இவ்வாறு மீண்டும் மீண்டும் பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகனால் இழுக்கப்பட்ட அந்த மயில், வானில் இருந்து விழும் சூரியனைப் போல நனவிழந்து விழுந்தது.(81)

பெருஞ்சக்திவாய்ந்த மயிலானது தரையில் விழுந்த போது, பாணன் பெருங்கவலையில் பீடிக்கப்பட்டவனாக,(82) "பலத்தில் கொண்ட செருக்கால் தூண்டப்பட்டவனாக என் நண்பர்களின் சொற்களை நான் அலட்சியம் செய்தேன். எனவே, தேவர்கள், தைத்தியர்களின் கண்களுக்கு முன்பாகவே தோல்வியைச் சந்திக்கிறேன்" என்று நினைத்தான்.(83)

தலைவன் ருத்ரன், பாணன் இவ்வாறு தளர்ந்து மனம் சோர்ந்தபோது அவனைப் பாதுகாப்பதில் பெருங்கவலை கொண்டான். அப்போது அந்த மஹாதேவன், நந்தியிடம் ஆழ்ந்த குரலில்,(84,85) "ஓ! பாவமற்ற நந்திகேசா, போர்க்களத்தில் பாணன் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று, சிங்கங்களால் இழுக்கப்படும் இந்தத் தெய்வீகத் தேரை அவனுக்குக் கொடுப்பாயாக.(86) நான் போரிட விரும்பவில்லை. நான் இங்கே பிரமதர்களின் மத்தியில் நிற்கிறேன். நீ சென்று பாணனைப் பாதுகாப்பதே தகும், செல்வாயாக" என்றான் {சிவன்}.(87)

தேர்வீரர்களில் முதன்மையானவனான நந்தி, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி தேருடன் பாணனிடம் சென்று அவனிடம் மெதுவாக {தாழ்ந்த குரலில்},(88) "ஓ! பெருஞ்சக்திவாய்ந்த தைத்தியா, இந்தத் தேரில் விரைந்து ஏறுவாயாக; ஓ! வீரா, நான் உன் சாரதியாக இருப்பேன். தாமதிக்காதே; இந்தத் தேரில் ஏறுவாயாக" என்றான்.(89)

பெருஞ்சக்திவாய்ந்த பாணன், பிரம்மனால் அமைக்கப்பட்டதும், ஒப்பற்ற ஆற்றவாய்ந்த பவனுக்குச் சொந்தமானதுமான அந்தத் தேரில் ஏறி,(90) கோபத்துடன் கூடியவனாக, அனைத்து ஆயுதங்களை அழிக்கவல்லதும், எரியும் மஹாரௌத்ர பிரம்மசிரஸ் ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான்.(91) தாமரை மலரில் உதித்தவன் (பிரம்மன்), உலகங்களின் நன்மைக்காகவே அவ்வாயுதத்தைப் படைத்தாலும், அது சுடர்விட்டபோது அவை {உலகங்கள்} அனைத்தும் கலக்கமடைந்தன.

கிருஷ்ணன், அதைக் கண்டும், அதைத் தன் சக்கரத்தால் அழித்துவிட்டும் போரில் ஒப்பற்றவனும், உலகில் சிறப்புவாய்ந்தவனுமான பாணனிடம்,(92-94) "ஓ! பாணா, இப்போது உன் வீராப்பு எங்கே போனது? போருக்காக இதோ நான் நிற்கிறேன்; போரிட்டு உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.(95) முற்காலத்தில், கார்த்தவீரியன் என்ற பெயரில் ஆயிரங்கைகளைக் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். போரில் ராமரால் {பரசுராமரால்} அவனுடைய கைகள் இரண்டாகக் குறைக்கப்பட்டன.(96) உன் கைகளின் பலத்தால் உண்டான செருக்கும், அதே விதியை அடையும். நான் விரைவில் போர்க்களத்தில் உன் செருக்கை அழிப்பேன். இன்னும் ஒரு கணம் நீ தாமதித்தால், உனக்கு அகந்தையை ஊட்டும் உன் கைகளைத் நான் துண்டிப்பேன். {என் கைகளால் உன் செருக்கை நான் ஒடுக்கும் வரை போர்க்கத்தில் இருப்பாயாக}. இன்று நான் உன்னை விடமாட்டேன்" என்றான்.(97,98)

தேவாசுரப் போரைப் போன்று பயங்கரமிக்க அந்தப் போரைக் கண்ட நாரதர், மகிழ்ச்சியாக ஆடத் தொடங்கினார். உயரான்மப் பிரத்யும்னனால் வீழ்த்தப்பட்ட கணங்கள் போர்க்களத்தைவிட்டு அகன்று சங்கரனிடம் சென்றனர்.(99) மழைக்கால மேகங்களுக்கு ஒப்பாக முழங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன், போர்க்களத்தில் தைத்தியர்களுக்கு அழிவை உண்டாக்கும் ஆயிரம் ஆரங்களைக் கொண்ட தன் சக்கரத்தை உடனே எடுத்தான்.(100) அந்தச் சக்கரத்தில், ஒளிக்கோள்கள், இடி {வஜ்ரம்{, மின்னல் ஆகியவற்றின் சக்திகளும், தேவர்களின் மன்னனுடைய சக்தியும் ஒன்றிணைந்து இருந்தது.(101) மூவகை நெருப்புகளின் சக்தி, பிரம்ம நெருப்பின் சக்தி, ரிஷிகளின் தவச் சக்தி ஆகியவையும் அதனுள் இருந்தன.(102) கற்புடைய பெண்களின் சக்தி, பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் சக்தி, சக்கரபாணியின் சக்தி ஆகியவையும் அதனுள் இருந்தன.(103) நாகர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், தெய்வீகப் பெண்கள் {அப்சரஸ்கள்} ஆகியோரின் சக்தியும் அதனுள் இருந்தது. அதனுள், மூவுலகங்களிலும் வாழும் உயிரினங்கள் அனைத்தின் சக்திகளும் அடங்கியிருந்தன.(104) சூரியனைப் போன்று பிரகாசிப்பதும், பெருஞ்சக்திவாய்ந்ததுமான அந்தச் சக்கரத்தைக் கொண்ட தலைவன் {கிருஷ்ணன்}, பாணனின் முன்பு நின்று அவனது சக்தியை அபகரித்தான்.(105)

சிவன், போர்க்களத்தில் உயர்த்தப்பட்ட சக்கரத்துடன் இருக்கும் தலைவனைக் கண்டும், பெருஞ்சக்திவாய்ந்த அந்தச் சக்கரம் ஒப்பற்றது, முறியடிக்கப்பட முடியாதது என்று அறிந்தும் கிரிஜையிடம் {பார்வதியிடம்},(106) "ஓ! தேவி, கேசவன் எடுத்திருக்கும் சக்கரம் மூவுலகங்களிலும் வெல்லப்படாததாகும். கேசவன் இந்தச் சக்கரத்தை ஏவும் முன்னர்ப் பாணனைக் காப்பாயாக" என்றான்[1].(107)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் சிவன், பார்வதியிடம் பேசுவது போல் இருக்கும் இந்த வாக்கியம், சித்திரசாலை பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் பார்வதி சிவனிடம் பேசுவது போல் அமைந்திருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பத்தியே இல்லை. கோடவி தானாக வருவது போல அமைக்கப்பட்டிருக்கிறது.

முக்கண் தேவனின் இந்தச் சொற்களைக் கேட்ட தேவி, லம்பையிடம், "ஓ! லம்பை, விரைந்து சென்று பாணனைப் பாதுகாப்பாயாக" என்றாள்.(108) இமயத்தின் மகள் {பார்வதி}, இதைச் சொல்லிவிட்டு யோக சக்தியின் மூலம் காட்சியில் இருந்து மறைந்தாள்; கிருஷ்ணனிடம் சென்று தன் உண்மை வடிவை வெளிப்படுத்தினாள்.(109) மறுபுறம், போர்க்களத்தில் உயர்த்தப்பட்ட சக்கரத்துடன் நின்று கொண்டிருந்த தலைவனைக் கண்டு லம்பை காட்சியில் இருந்து மறைந்து {எவருக்கும் புலப்படாதவளா நின்று}, தன் உடைகளைக் களைந்தாள்.(110) கோடவி தேவி, பாணனைக் காப்பதற்காக வாசுதேவனின் முன்பு நிர்வாணமாகத் தோன்றினாள்.(111) அவள் ருத்ரனின் ஆணையின் பேரில் {அந்த லம்பை இரண்டாவது முறையாக} மீண்டும் வந்து, தன் முன் தோன்றியதைக் கண்ட கிருஷ்ணன்,(112) "ஓ! செங்கண்களைக் கொண்டவளே, பாணனைக் காப்பதற்காக நீ மீண்டும் போர்க்களத்திற்கு நிர்வாணமாக வந்திருக்கிறாய். நான் நிச்சயம் பாணனைக் கொல்வேன்" என்றான்.(113)

இவ்வாறு கிருஷ்ணனால் சொல்லப்பட்டதும், லம்பை, "ஓ! தேவா, பெரும் புருஷோத்தமனும், நித்யமானவனும், சிதைவற்றவனும், தாமரை உந்தி படைத்தவனும், உலகைப் படைத்தவனுமான ரிஷிகேசனே அண்டத்தின் தலைமைக் காரணன் என்பதை நான் அறிவேன்.(114,115) ஓ! கேசவா, போர்க்களத்தில் ஒப்பற்றவனான பாணனை நீ கொல்லக்கூடாது. பாணனின் பாதுகாப்பை உறுதி செய்வாயாக. என் மகன் உயிருடன் இருப்பதை நான் காண வேண்டும்.(116) ஓ! மாதவா, நான் பாதுகாப்பேனென நான் அவனுக்கு வரமளித்திருக்கிறேன். என் சொற்களை நீ பொய்யாக்கலாகாது" என்றாள்.(117)

தேவியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பகை நகரங்களை வெல்பவனான கிருஷ்ணன், கோபத்துடன், "ஓ! அழகிய பெண்ணே, உண்மையைக் கேட்பாயாக.(118) போர்க்களத்தில் பாணன் செருக்கில் மிதந்தவாறு முழங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணமான அவனது ஆயிரங்கைகளை உண்மையில் நான் இன்று துண்டிக்கப் போகிறேன்.(119) உன் மகன் பாணன் இரண்டு கைகளை உடையவனாக இருந்தாலும் உயிருடன் இருப்பான் {இரண்டு கரங்களைக் கொண்ட பாணனுடன், வாழ்ந்து கொண்டிருக்கும் [உயிரோடிருக்கும்] மகனுடைய ஒருத்தியாக நீ இருப்பாய்}.) அசுரச் செருக்குடன் இனி எப்போதும் என்னை அணுக மாட்டான்" என்றான்.(120)

களைப்பில்லா செயல்களைக் கொண்ட கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்தத் தேவி, "ஓ! தேவர்களின் தேவா, பாணன் அவ்வாறே {தலைவனால் கொடுக்கப்பட்டவன்} ஆகட்டும்" என்றாள்.(121)

பெருஞ்சக்திவாய்ந்தவனும், பெருந்தோள்களைக் கொண்டவனும், பேசுபவர்களிலும், தாக்குபவர்களிலும் முதன்மையானவனுமான கிருஷ்ணன், கார்த்திகேயனின் அன்னையை வரவேற்று, பாணனிடம் கோபமாக,(122) "ஓ! பாணா, உன் ஆண்மைக்கு ஐயோ. நீ என்னுடன் போரில் ஈடுபடும்போதெல்லாம், உன்னைப் பலவீனனாகக் கருதும் கோடவி இங்கே வந்து போர்க்களத்தில் நிற்கிறாள்" என்றான்.(123)

தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு, பாணனை இலக்காக்கி தன் {[ஒரு பெண் நிர்வாணமாகத் தன் முன்பு இருப்பதன் காரணமாக] கண்களை மூடிக் கொண்டு} சக்கரத்தை ஏவினான்.(124) கோபத்தால் தூண்டப்பட்ட அந்தக் கதாதரன், அற்புதம் நிறைந்ததும், சூரியனைப் போன்று பிரகாசிப்பதுமான அந்தச் சக்கரத்தைப் பெருஞ்சக்தியுடன் எடுத்தான். எதை ஏவினால், அசைவன, அசையதன உள்ளிட்ட உலகங்கள் அனைத்தும் நனவற்றவை ஆகுமோ, ஊனுண்ணும் உயிரினங்கள் பெருமகிழ்ச்சிக் கொள்ளுமோ அந்தச் சக்கரத்தை ஏவி, பாணனின் கரங்களை அவன் அறுத்தான்.(125-127) ஆகாயத்தைப் போன்ற அந்தச் சக்கரம், அண்டத்தில் படர்ந்தூடுருவி இருக்கும் ஸ்ரீதரனால் ஏவப்பட்டபோது, அதன் உண்மை வடிவை எவராலும் காண முடியாதவாறு அது போர்க்களத்தில் நகர்ந்தது.(128,129) அந்தச் சுதர்சனச் சக்கரம், {அந்தப் போர்க்களத்தில்} பாணனின் கைகளை ஒவ்வொன்றாகத் துண்டித்து,(130) கிளைகள் வெட்டப்பட்ட மரத்தைப் போல அவனது இரண்டு கைகளை மட்டும் விட்டுவிட்டு கிருஷ்ணனின் கைகளுக்குத் திரும்பியது".(131)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தைத்தியர்களைக் கொல்லும் அந்தச் சக்கரம், வெற்றியுடன் கிருஷ்ணனின் கைகளுக்குத் திரும்பியபோது, பேருடல் படைத்தவனும், பெருகும் குருதியில் குளிப்பவனும், ஆயிரம் கைகளும் துண்டிக்கப்பட்டவனுமான அந்தப் பேரசுரன் பாணன், தன் குருதியின் மணத்தால் வெறிபிடித்தவனாக முழங்கும் மேகத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(132,133) பகைவரைக் கொல்பவனான கிருஷ்ணன், அவனது சிங்க முழக்கத்தைக் கேட்டு அவனைக் கொல்வதற்காக மீண்டும் தன் சக்கரத்தை ஏவ முற்பட்டான்.

அப்போது குமாரனுடன் அவனிடம் வந்த மஹாதேவன்,(134) "ஓ! கிருஷ்ணா, ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, நித்திய தேவனாகவும், புருஷோத்தமனாகவும், மது கைடபரை அழித்தவனாகவும் உன்னை நான் அறிவேன்.(135) அண்டத்தின் புகலிடம் நீயே, உன்னில் இருந்தே அண்டம் உண்டானது. தேவர்கள், அசுரர்கள், பன்னகர்கள் உள்ளிட்ட மொத்த உலகாலும் வெல்லப்படமுடியாதவன் நீயே.(136) எனவே, பகைவருக்குப் பயங்கரமானதும், தெய்வீகமானதும், தடுக்கப்பட முடியாததும், உயர்த்தப்பட்டிருப்பதுமான உன் சக்கரத்தை விலக்குவாயாக.(137) ஓ! கேசியைக் கொன்றவனே, நான் பாணனின் பாதுகாப்புக்கு உறுதியளித்திருப்பதால், விலகுமாறு உன்னை வேண்டுகிறேன்" என்றான்.(138)

கிருஷ்ணன், "ஓ! தேவா, நான் என் சக்கரத்தை விலக்குகிறேன். உன் வேண்டுகோளின் பேரில் பாணன் உயிருடன் வாழட்டும். தேவர்களாலும், அசுரர்களாலும் துதிக்கத்தகுந்த(139) உன்னை நான் வணங்குகிறேன். ஓ! மஹேஷ்வரா, பாணனை அழிக்கவே நான் இங்கு வந்திருந்தாலும் உன் வேண்டுகோளால் அதை நிறைவேற்றாமல் போகிறேன். இனி நான் திரும்பிச் செல்ல அனுமதிப்பாயாக" என்றான்.(140)

கிருஷ்ணன், மஹாதேவனிடம் இதைச் சொல்லிவிட்டு, அநிருத்தன் கணைகளால் கட்டப்பட்டுக் கிடந்த இடத்திற்குச் சென்றான். கிருஷ்ணன் சென்ற பிறகு, நந்தி பின்வரும் நற்பொருள் பொதிந்த சொற்களில் பாணனிடம், "ஓ! பாணா, இந்தக் காயங்களுடன் தேவதேவன் முன்பு தோன்றுவாயாக" என்றான்.

நந்தியின் சொற்களைக் கேட்ட பாணனும் விரைந்து செல்லவே விரும்பினான். பெருஞ்சக்திவாய்ந்த நந்தி, கைகளற்றிருக்கும் பாணனைக் கண்டு, ரிஷபவாகனன் (சிவன்) இருக்குமிடத்திற்கு அவனைத் தன் தேரில் அழைத்துச் சென்றான்.

அவன் மீண்டும் பாணனிடம் நற்பொருள் பொதிந்த சொற்களில், "ஓ! பாணா, தேவதேவன் உன்னிடம் தணிவடைந்திருக்கிறார். அவர் முன்னிலையில் நடனமாடினால் நன்மையை நீ அடைவாய்" என்றான்.

நந்தியின் சொற்களில் குழப்பமடைந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்ட தானவ பாணன், வாழும் விருப்பத்துடன் குருதியில் குளித்த உடலுடன் சங்கரன் முன்னிலையில் நடனமாடத் தொடங்கினான்.

பக்தர்களிடம் எப்போதும் அன்பு கொண்டவனான மஹாதேவன், நந்தியின் சொற்களால் அச்சத்தால் பீடிக்கப்பட்டு மீண்டும் நடனமாடும் பாணனைக் கண்டு, இரக்கம் கொண்டு,(148) "நான் உன்னிடம் நிறைவடைந்தேன். நீ வரம் வேண்டுவதற்கான வேளை வந்தது. எனவே, உன் இதயத்தில் பேணி வளர்க்கும் வரம் ஒன்றை வேண்டுவாயாக" என்று சொன்னான்.(149)

பாணன், "ஓ! தலைவா, ஓ! தேவா, நீ எனக்கு வரமளிக்க விரும்பினால் இறப்பற்றவனாகவும், {மூப்பு என்ற} பிணியற்றவனாகவும் இருக்க வரமொன்றை அருள்வாயாக" என்றான்.(150)

மஹாதேவன், "ஓ! பாணா, நீ இப்போது தேவர்களைப் போன்றவன். உனக்கு இறப்பில்லை. மேலும், நான் எப்போதும் உன்னிடம் அன்புடன் இருக்கிறேன். மற்றொரு வரத்தை வேண்டுவாயாக" என்று கேட்டான்.(151)

பாணன், "ஓ! பவா, காயங்களால் பீடிக்கப்பட்டுக் குருதியில் நனைந்து, நான் நடனம் அடியதைப் போல ஆடும் உன் பக்தர்கள் மகன்களைப் பெறட்டும் {மக்கட்பேற்றைப் பெறட்டும்}" என்றான்.(152)

தலைவன், "உணவைத் தவிர்த்து, பொறுமையுடன், வாய்மை நிறைந்தவர்களாக, நேர்மையானவர்களாக இருக்கும் என் பக்தர்கள், இவ்வாறு நடனம் ஆடினால் மகன்களைப் பெறுவார்கள்.(153) ஓ! என் மகனே பாணா, உன் விருப்பம் பயன் தரட்டும். மூன்றாவது வரத்தையும் கேட்பாயாக. நான் அதை அருள்வேன்" என்றான்.(154)

பாணன், "ஓ! பவா, சக்கரத்தால் உண்டான காயங்களில் பீடிக்கப்பட்டிருக்கும் என் உடல், மூன்றாவது வரத்தால் உய்வைக் காணட்டும் {வலியில் இருந்து விடுபட்டு சுகமடையும்}" என்று கேட்டான்.(155)

ருத்ரன், "அவ்வாறே ஆகும். உன் உடல் துன்பத்தில் இருந்து விடுபடும். முன்பைப் போலவே உன் உடல் நலத்துடனும், தீங்குறாததாகவும் {சுகமாகவும்} இருக்கும்.(156) உன்னை நான் ஒருபோதும் வெறுத்ததில்லை, குறிப்பாக நான் உன்னிடம் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். விரும்பினால் நீ நான்காம் வரமும் வேண்டலாம்" என்றான்.(157)

பாணன், "ஓ! தலைவா, பிரமதர்களின் குலத்தில் {பிரமதகணங்களில்} நானே முதல்வனாகி, மஹாகாலன் என்ற பெயரில் எப்போதும் நான் புகழ்பெற்றிருக்க வேண்டும்" என்று கேட்டான்".(158)

வைசம்பாயனர், "பேரொளி படைத்த தலைவன் சங்கரன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, மீண்டும், "என் பாதுகாப்பின் கீழ் இருப்பதன் மூலம் தெய்வீக வடிவை அடைந்து, தீங்குறாத உடலுடன் பிணிகளில் இருந்து விடுபட்டிருப்பாய்.(159) எப்போதும் என் அருகில் வாழ்வதன் மூலம் உனக்கு அச்சமேதும் இல்லை. உன் பலத்திற்கும், ஆண்மைக்கும் நீ புகழ்பெற்றவனாக இருப்பாய். ஓ! பாணா, உனக்கு வேறு ஏதும் விருப்பம் இருந்தால் நான் ஐந்தாவது வரத்தையும் கொடுப்பேன்" என்றான்.(160)

பாணன், "ஓ! தலைவா, உன் ஆதரவால் என் உடல் உருகுலையாதிருக்க வேண்டும். இரு கைகளைக் கொண்டிருந்தாலும் நான் அழகற்றவனாகக் கூடாது" என்றான்.(161)

ஹரன், "ஓ! பேரசுரா, என் பக்தர்களுக்கு என்னால் கொடுக்க முடியாதது என்று ஏதுமில்லை. அதையுந்தவிர நீ என் பரமபக்தனாக இருக்கிறாய். நீ விரும்பியவை நிறைவேறும்" என்றான்.(162)

மஹாதேவன், மீண்டும் தன் அருகில் நின்ற பாணனிடம், "ஓ! பாணா, நீ சொன்னவை, அவ்வாறே ஆகும்" என்றான்.(163) கணங்களால் சூழப்பட்ட தலைவன், இதைச் சொல்லிவிட்டு, அனைத்து உயிரினங்களின் முன்னிலையிலும் மறைந்து போனான்" என்றார் {வைசம்பாயனர்}.(164)

விஷ்ணு பர்வம் பகுதி – 185 – 129ல் உள்ள சுலோகங்கள் : 129
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English