Friday 18 December 2020

தேவலோகத்தை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன் | விஷ்ணு பர்வம் பகுதி – 153 – 97

(பிரத்யும்னதைத்யயுத்தம்)

Vajranabha wants to conquer the celestial region | Vishnu-Parva-Chapter-153-097 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : வஜ்ரநாபனை அறிவுறுத்திய கசியபர்; வஜ்ரநாபன் தன் மகள்களின் பிள்ளைகளைக் கொல்லச் சொன்னது; பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோர் அசுரர்களை அழித்தது...


Pradyumna and Ananta against Asuras

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒப்பற்றவரான கசியபரின் வேள்வி {ஸத்ரயாகம்} நிறைவடைந்ததும், தேவர்களும், அசுரர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(1) மூவுலகங்களை வெல்ல விரும்பிய வஜ்ரநாபன், அந்த வேள்வியின் முடிவில் கசியபரிடம் சென்றான். அவர் அவனிடம்,(2) "ஓ! வஜ்ரநாபா, கேட்பதற்குத் தகுந்தவையாக என் சொற்களை நீ நினைத்தால் நான் சொல்வதைக் கேட்பாயாக. {மகனே, மக்களால் சூழப்பட்டவனாக வஜ்ரபுரத்தில் வசிப்பாயாக}.(3) உங்கள் அனைவரிலும் சக்ரன் {இந்திரன்} மூத்தவனும், திறன்களில் முதன்மையானவனும் ஆவான்; அவன் பெருந்தவச் சக்திகளுடன் கூடியவனாகவும், இயல்பிலேயே பலவானாகவும், பிராமணர்களிடம் அர்ப்பணிப்புமிக்கவனாகவும்,(4) நன்றி நிறைந்தவனாகவும், மொத்த உலகின் மன்னனாகவும், நல்லோருக்கும், அறவோருக்கும் புகலிடமாகவும் திகழ்கிறான். {மூவுலகங்களின் மன்னனான அவனே அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான்}.(5) ஓ! வஜ்ரநாபா, உன்னால் அவனை {இந்திரனை} வெல்ல முடியாது, {இம்முயற்சியில்} நீயே கொல்லப்படுவாய். பாம்பின் கோபத்தைத் தூண்டியவன் தானே {பாம்பை மிதித்தவன்} அழிவடைவதைப் போல நீயும் உடனே அழிக்கப்படுவாய்" என்றார் {கசியபர்}.(6)

ஓ! பாரதா, காலபாசத்தில் கட்டப்பட்ட அங்கங்களைக் கொண்டவன் மரணத்தை விரும்பி மருந்தை உட்கொள்ளாததைப் போலவே வஜ்ரநாபனும் கசியபரின் சொற்களை அங்கீகரித்தானில்லை.(7) மிகத் தீயவனும், தடுக்கப்பட முடியாதவனுமான அவன், உலகின் பாதுகாவலரான கசியபரை வணங்கிவிட்டு, மூவுலகங்களையும் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.(8) ஓ! மன்னா, அவன் தன்னுடைய உற்றார், உறவினர், போர்வீரர்கள், நண்பர்கள் ஆகியோரைத் திரட்டினான். அவன் முதலில் தேவர்களின் உலகத்தைக் கைப்பற்ற புறப்பட்டுச் சென்றான்.(9)

அந்த நேரத்தில் பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களான இந்திரனும் உபேந்திரனும் வஜ்ரநாபனுக்கு அழிவைக் கொண்டு வருவதற்காக அன்னப்பறவைகளை அங்கே அனுப்பினர்.(10) உயரான்மாக்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான யதுக்கள் அந்த அன்னப்பறவைகளிடமிருந்து செய்தியைக் கேட்டு இவ்வாறு {பின்வருமாறு} ஆலோசித்துச் சிந்தினை செய்தனர்,(11) "இனி நிச்சயம் பிரத்யும்னனால் வஜ்ரநாபன் கொல்லப்படுவான். ஆனால், வஜ்ரநாபனின் மகளும், சுநாபனின் மகள்களும் அவர்களிடம் {பிரத்யும்னன், கதன், சாம்பன் ஆகியோரிடம்} அர்ப்பணிப்புக் கொண்ட மனைவியராக இருக்கின்றனர். {அவர்கள் எப்போதும் நம் நலத்தையே நாடுகிறார்கள்}.(12) அவர்கள் அனைவரும் கருவுற்றவர்களாகவும், மகப்பேறுகாலம் நெருங்கியவர்களாகவும் இருக்கின்றனர். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?" {என்று சிந்தித்தனர்}.(13)

இவ்வாறு சிந்தித்த {தங்களுக்குள் ஆலோசித்த} அவர்கள் {யாதவர்கள்}, சக்ரனிடமும், கேசவனிடமும் அனைத்து உண்மைகளையும் சொல்லுமாறு அன்னப்பறவைகளைக் கேட்டுக் கொண்டனர்,(14) அவையும் அவ்வாற அவ்விரு தேவர்களிடமும் சென்று தெரிவித்தன. அதற்கு அவர்கள் {இந்திரனும், கிருஷ்ணனும்} அந்த அன்னப்பறவைகளிடம், "{யாதவர்களே,} அஞ்சாதீர்;(15) அனைத்துத் திறன்களையும் கொண்ட காமனைப் போன்ற அழகிய மகன்களை நீங்கள் பெறுவீர்கள்; அவர்கள் கருவறையில் இருக்கும்போதே வேதங்கள் அனைத்திலும், அவற்றின் அங்கங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெறுவார்கள்.(16) உங்கள் மகன்கள் உடனே இளைஞர்களாகி வருங்காலத்திற்குத் தேவையான பல்வேறு சாத்திரங்களிலும் தேர்ச்சியடைவார்கள்" என்று சொல்லி அனுப்பினர்.(17)

ஓ! தலைவா, இவ்வாறு அன்னங்களிடம் சொல்லப்பட்டதும் அவை வஜ்ரபுரத்திற்குத் திரும்பி சக்ரனும், கேசவனும் சொன்னதைப் பைமர்களிடம் தெரிவித்தன.(18) அனைத்தையும் அறிந்தவனும், தன் தந்தையைப் போன்றே இளமை நிறைந்தவனுமான ஒரு மகனை பிரபாவதி ஈன்றாள்.(19) ஒரு மாதம் கழிந்ததும் இணையான இளமையையும், அனைத்தையும் அறியும் அறிவையும் கொண்டவனும், கதனை ஒத்திருந்தவனுமான மகன் சந்திரப்ரபனைச் சந்திரவதி ஈன்றாள்.(20) குணவதியும், குணவான் என்ற பெயரில் அதே போல இளமை நிறைந்தவனும், அனைத்தையும் அறிந்தவனுமான அழகிய மகனை ஈன்றெடுத்தாள்.(21) இந்த யதுகுலச் சிறுவர்கள் அனைத்து சாத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுக் கொண்டே இந்திரன், உபேந்திரன் ஆகியோரின் விருப்பத்தின் பேரில் தங்கள் தங்களுக்குரிய மாளிகைகளின் மாடிகளில் திரிந்து நல்ல குணங்களைப் பெற்றவர்களாக வளர்ந்து வந்தனர்.(22) இந்திரன், உபேந்திரன் ஆகியோரின் விருப்பங்களின் பேரிலேயே அவர்களால் (தைத்தியர்களால்) காணவும்பட்டனர்; இதை நிச்சயம் அறிந்து கொள்வாயாக.(23) வானத்தில் இருந்த தைத்தியர்கள் அவர்களைக் கண்டதும், தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பும் வஜ்ரநாபனிடம் மதிப்புடன் இதைத் தெரிவித்தனர்.(24) தடுக்கப்பட முடியாதவனான அசுரமன்னன் வஜ்ரநாபன் இதைக் கேட்டதும், "என் வீட்டிற்குள் வரம்பு கடந்தவர்களைச் சிறை பிடிப்பீராக"என்றான்.(25)

ஓ! குருவின் வழித்தோன்றலே, நுண்ணறிவுமிக்க அசுர மன்னனால் இவ்வாறு ஆணையிடப்பட்டதும் படைவீரர்கள் திசைகள் அனைத்தையும் காத்தனர்.(26) பகைவரை அழிப்பவனான அசுர மன்னனின் ஆணைப்படி, "அவர்களைப் பிடித்து விரைவாகக் கொல்வீராக" என்ற ஒலிகள் அனைத்துப் பக்கங்களிலும் எழுந்தன.(26,27)

இதைக் கேட்டதும் மகன்கள் மேல் அன்பு கொண்ட அன்னையர் அச்சத்தில் அழத் தொடங்கினர். பிரத்யும்னன் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிரித்துக் கொண்டே,(28) "நாங்கள் உயிரோடும், உறுதியோடும் இருக்கும் வரை நீங்கள் அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு நன்மை நேரட்டும். தைத்தியர்களால் எங்களை ஏதும் செய்ய முடியாது" என்றான்.(29)

பிறகு அவன் கலங்கியிருந்த பிரபாவதியிடம், "ஓ! பெண்ணே, உன்னுடைய தந்தை, சிற்றப்பன்மார், சகோதரர்கள், உற்றார், உறவினர் ஆகியோர் தங்கள் கைகளில் கதாயுதங்களுடன் காத்திருக்கின்றனர். உங்களின் நிமித்தமாக எங்களால் மதிக்கப்படவும், கௌரவிக்கப்படவும் தகுந்தவர்கள் அவர்கள்.(30,31) ஆனால் காலமோ படுபயங்கரமாக இருக்கிறது. அதைப் பொறுத்துக் கொண்டால் நாங்கள் இறந்து போவோம். போரிட்டால் வெற்றியடைவோம்.(32) எங்களைக் கொல்ல விரும்பும் தானவ மன்னன் எங்களுடன் போரிடப் போகிறான். நீ உன் தங்கைமாருடன் கலந்தாலோசித்து நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சொல்வாயாக. ஏனெனில் இப்போது நாங்கள் உன் அதிகாரத்தின் கீழ் இருக்கிறோம்" என்றான்.(33)

பிரபாவதி தன் நெற்றியில் கை மடித்து, பூமியில் முழங்காலில் விழுந்து அழுதபடியே,(34) "ஓ! யதுவின் வழித்தோன்றலே, ஓ! பகைவரைக் கொல்பவரே, உங்கள் ஆயுதங்களை ஏந்தி உங்களைப் பாதுகாத்துக் கொள்வீராக. பிழைத்திருந்தால் மட்டுமே உங்கள் மனைவியையும், மகன்களையும் நீ காண்பீர்.(35) மதிப்பிமிக்க வைதர்ப்பியையும் {ருக்மிணியையும்}, அநிருத்தனையும் நினைவில் கொண்டு இந்தப் பேராபத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீராக.(36) ஓ! உபேந்திரரின் மகனே, நான் எப்போதும் களங்கமற்ற வாழ்வை வாழ்வேன், ஒருபோதும் கைம்பெண்ணாகேன் {விதவையாகமாட்டேன்}, என் மகன்களும் எப்போதும் வாழ்வார்கள் என்று நுண்ணறிவுமிக்கவரான பெரும் ரிஷி {துர்வாசர்} எனக்கு வரமளித்திருக்கிறார். சூரியனையும், நெருப்பையும் போன்ற பிரகாசமிக்கவரான அந்த ரிஷியின் சொற்கள் பொய்யாகாது என நான் நம்புகிறேன்" என்றாள்.(37,38) பெண்களில் ரத்தினமும், நுண்ணறிவுமிக்கவளுமான பிரபாவதி இதைச் சொல்லிவிட்டுத் தன் வாயைக் கொப்பளித்துவிட்டு {அல்லது வாளைத் தூய்மை செய்து கொண்டு வந்து}, ருக்மிணியின் மகனிடம் ஒரு வாளைக் கொடுத்து, "வெற்றி அடைவீராக" எனும் வரத்தையும் அளித்தாள்.(39) அற ஆன்மா கொண்ட பிரத்யும்னன், தன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட மனைவி கொடுத்த வாளைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டான்.(40) சந்திரவதி கதனிடம் ஒரு நிஷ்திரிங்கத்தையும் {வாளையும்}, குணவதி பெருஞ்சக்திவாய்ந்த சாம்பனிடம் அதே போன்ற மற்றொரு ஆயுதத்தையும் {வாளையும்} மகிழ்ச்சியுடன் கொடுத்தனர்.(41)

பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன், தன்னை வணங்கிய {தேர் சாரதியான} ஹம்ஸகேதுவிடம், "ஓ! பகைவரைக் கொல்பவனே, சாம்பனுடன் இங்கேயே இருந்து தானவர்களை எதிர்த்துப் போரிடுவாயாக.(42) பகைவரைக் கொல்பவனுடன் சேர்ந்து அனைத்துத் திசைகளையும் பாதுகாத்தபடியே நான் வானத்தில் இருந்து போரிடப் போகிறேன்" என்றான். மாயைகளை அறிந்தோரில் முதன்மையான பிரத்யும்னன் மாயையைப் பயன்படுத்தி ஒரு தேரை உண்டாக்கினான்.(43) நாக வகையில் முதன்மையானவனும், ஆயிரந்தலைகளைக் கொண்டவனுமான நாகனான அனந்தனைத் தன் தேரோட்டியாக்கினான்.(44) அவன் பிரபாவதிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் அந்தச் சிறந்த தேரில் ஏறி புல்லில் திரியும் நெருப்பைப் போல அசுரப் படைக்கு மத்தியில் திரியத் தொடங்கினான்.(45) பாம்புகளைப் போன்று பயங்கரமானவையும், பிறை வடிவம் கொண்டவையுமான கணைகளில் {அர்த்தச்சந்திர பாணங்களில்} கூரிய தலைகளைக் கொண்ட சிலவற்றையும், மழுங்கிய தலை கொண்ட சிலவற்றையும் கொண்டு அவன் திதியின் மகன்களைத் தாக்கத் தொடங்கினான்.(46) உறுதிமிக்கவர்களும், போர் வெறி கொண்டவர்களுமான அசுரர்களும் கூட, கமலத்தலைவனின் மகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவனுமான அவனை {பிரத்யும்னனைப்} பல்வேறு ஆயுதங்களால் தாக்கினர்.(47) கிருஷ்ணனின் மகன், கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிலரின் கரங்களையும், பலரின் தலைகளையும் கொய்தான்.(48) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனின் வாளால் வெட்டப்பட்ட அசுரர்களின் தலைகளும், உடல்களும் பூமியின் பரப்பில் நிறைந்து கிடந்தன.(49) படைகளை வெல்பவனான தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தைத்தியர்களுக்கும், பைமர்களுக்கும் இடையில் நடக்கும் போரைத் தேவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கண்டான்.(50) கதனையும், சாம்பனையும் தொடர்ந்து விரைந்த தைத்தியர்கள், பெருங்கடலில் தெப்பம் செல்வது போல அழிவை அடைந்தனர்.(51)

தேவர்களின் தலைவனான ஹரி அப்போது அந்தப் பயங்கரப் போரைக் கண்டு, தன்னுடைய தேரை கதனிடம் அனுப்பி,(52) மாதலியின் மகனான ஸுவர்ச்சஸை அதன் சாரதியாகும்படி கேட்டுக் கொண்டான். தலைவன் இந்திரன் தன்னுடைய ஐராவதத்தைச் சாம்பனிடம் அனுப்பிப் பிரவரனை அதைச் செலுத்துவதில் ஈடுபடுத்தினான். மேலும் அவன் ருக்மிணியின் மகனுக்குத் துணையாக {தன் மகன்} ஜயந்தனை அனுப்பி வைத்தான்.(53,54) நற்பணிகள் அனைத்தின் வழிமுறைகளையும் நன்கறிந்த சக்ரன் {இந்திரன்}, உலகின் படைப்பாளனும், நற்பணிகள் அனைத்தின் வழிகாட்டியுமான பிரம்மனின் அனுமதியுடன் மாதலியின் மகனால் {ஸுவர்ச்சஸால்} செலுத்தப்படும் தேரையும், ஐராவதத்தையும், தெய்வீக இளைஞனான ஜயந்தனையும், இருபிறப்பாளர்களில் சிறந்த பிரவரனையும் அங்கே அனுப்பி வைத்தான்.(55,56)

"இவனுடைய தவத்தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து விட்டன, இந்தத் தீயவன் யாதவர்களால் கொல்லப்படப் போகிறான்" என்று நினைத்த பூதங்கள் {உயிரினங்கள்} தாங்கள் விரும்பிய வண்ணம் எங்கும் நுழைந்தன.(57) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனும், ஜயந்தனும் அசுரர்களின் மாளிகைகளுக்குள் படிப்படியாக நுழைந்து கணைவலையால் அவர்களை அழிக்கத் தொடங்கினர்.(58)

போரில் வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்}, தடுக்கப்பட முடியாத கதனிடம், "ஓ! உபேந்திரரின் தம்பியே, தேவர்களின் மன்னன் {இந்திரன்}, குதிரைகளுடன் கூடிய இந்தத் தேரை உமக்காக அனுப்பியிருக்கிறான்.(59) பெருஞ்சக்திவாய்ந்த மாதலியின் மகன் அதன் சாரதியாக இருக்கிறான். பிரவரனால் செலுத்தப்படும் ஐராவத யானை சாம்பனுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.(60) ஓ! அச்யுதரின் தம்பியே, இன்று துவாரகையில் ருத்ரப் பெரும்பூஜை நடைபெறுகிறது. நாளை அது நிறைவடைந்ததும், பெருஞ்சக்திவாய்ந்த ரிஷிகேசரே இங்கே வருவார்.(61) தேவர்களின் நகரைக் கைப்பற்றுவதாகச் சொல்லி செருக்கில் மிதக்கும் இந்தப் பாவம் நிறைந்த வஜ்ராநாபனை அவரது {கிருஷ்ணரின்} ஆணையின் பேரில் உற்றார் உறவினருடன் சேர்த்துக் கொல்வோம்.(62) நான் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப் போகிறேன். அவனால் {வஜ்ரநாபனால்} தனது பகைவனையும் {இந்திரனையும்} பகைவனின் மகனையும் கைப்பற்ற இயலாது. நாம் மிகக் கவனமான இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.(63) நுண்ணறிவுமிக்க மனிதர்கள், காலத்திற்கும் காக்கப்பட வேண்டியவர்களை அனைத்து வழிமுறைகளினாலும் காத்துக் கொள்வது முக்கியமாகும். காலத்திற்கும் காக்கப்பட வேண்டியவர்களுக்கு {மனைவி / மகன் / இடம் ஆகியவற்றுக்குத்} தீங்கு நேர்வது இவ்வுலகில் மரணத்தைவிடக் கொடியது[1]" என்றான்.(64)

[1] 63, 64 ஸ்லோகங்கள் மட்டும், குழப்பம் தவிர்ப்பதற்காக  மூன்று பதிப்புகளையும் ஒப்புநோக்கி பொதுவாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழிபெயர்த்தால், "நம்மையும், நம் மகன்களையும் அவன் கொல்ல முடியாத வகையில் நாம் மிகக் கவனமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன். தன் மரணத்தைவிடத் தன் மகன்களின் அழிவைக் காண்பது இவ்வுலகில் மிகக் கொடியது. எனவே கல்விமான்கள் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு தங்கள் மகன்களைப் பாதுகாக்க வேண்டும்" என்று இருக்கும். உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உபாயம் செய்வேன். இவன் புத்ரனுடன் கூடிய இந்திரனை ஜயிக்கப் போவதில்லை. ஜாக்ரதை செய்யத்தக்கது என்பது எனது அபிப்ராயம். அறிவாளியான மனிதரால் எல்லா உபாயங்களாலும் ரக்ஷிக்கப்பட வேண்டிய ஸ்தானம் காக்கத்தக்கது. உலகில் தன் க்ஷேத்ரத்தைக் கேவலப்படுத்துவது மரணத்தைக் காட்டிலும் கொடியது" என்றிருக்கிறது. இங்கே சொல்லப்படும் காலத்ரரக்ஷணம் என்பதற்குக் காலத்திற்கும் பாதுகாக்கப்பட வேண்டிய மனைவி என்றும், மகன் என்றும், இடம் என்றும் கூடப் பொருள் கொள்ளலாம்.

பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னன் இவ்வாறு கதனுக்கும், சாம்பனுக்கும் ஆணையிட்டுவிட்டு, தன் மாய சக்தியைப் பயன்படுத்தித் தன்னைப் போல் கோடி பேரை உண்டாக்கி {தன்னைப் போன்ற கோடி வடிவங்களை மாயையில் காட்டி} தைத்தியர்களால் உண்டாக்கப்பட்ட பயங்கர இருளை அகற்றினான். பகைவரைக் கொல்லும் அவனைக் கண்டு தேவர்களின் மன்னன் {இந்திரன்} பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(65,66) மனித ஆன்மாக்கள் அனைத்திலும் தெய்வீக ஆன்மா வாழ்வதைப் போலவே ஒவ்வொரு பகைவரிலும் கிருஷ்ணனின் மகனை {பிரத்யும்னனை} உயிரினங்கள் கண்டன.(67)

பெருஞ்சக்திவாய்ந்த ருக்மிணியின் மகன் இவ்வாறு போரிடுகையில் இரவும் கடந்தது, நான்கில் மூன்று பங்கு அசுரர்களும் கொல்லப்பட்டனர்.(68) ஜயந்தன், விஷ்ணுவின் பாதங்களில் இருந்து வெளிப்படும் கங்கைக்கு {விஷ்ணுபதிக்குத்} தன் மாலைநேர வழிபாட்டுக்காகச் சென்ற நேரத்தில் கிருஷ்ணனின் மகன் {பிரத்யும்னன்} தனியாகத் தைத்தியர்களுடன் போரிட்டான். அதன்பிறகு பிரத்யும்னன், ஆகாயக் கங்கையில் தன் மாலைநேர வழிபாட்டைச் செய்த போது, பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன் தனியாகத் தைத்தியர்களுடன் போரிட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.(69,70)

விஷ்ணு பர்வம் பகுதி – 153 – 097ல் உள்ள சுலோகங்கள் : 70
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English