Monday 12 October 2020

பாரிஜாத மர வரலாறு | விஷ்ணு பர்வம் பகுதி – 125 – 069

(பாரிஜாதஹரணே க்ருஷ்ணப்ரதிஜ்ஞா)

The history of the Parijata tree the coloquy between Krishna and Narada | Vishnu-Parva-Chapter-125-069 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பாரிஜாத மரத்தை வேண்டி இந்திரனிடம் செல்லுமாறு நாரதரிடம் சொன்ன கிருஷ்ணன்; பாரிஜாத மரத்தின் வரலாற்றைச் சொன்ன நாரதர்...

Narada Satyabhama and Krishna


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "எல்லாம்வல்லவனும், அளவில்லா சக்திகளைக் கொண்டவனுமான விஷ்ணு {கிருஷ்ணர்}, நாரதர் புறப்பட விரும்புவதைக் கண்டு அவரிடம் இவ்வாறு பேசினான்.(1) {கிருஷ்ணன்}, "ஓ! பாவமற்றவரே, பெரும் முனிவரே, அறங்கள் அனைத்தின் உண்மை அறிந்தவரே, நீர் சொர்க்கத்திற்குச் சென்று, திரிபுரனை அழித்த நுண்ணறிவுமிக்கவனின் {சிவனின்} சபையினரிடம் பேசி,(2) பாகசாசனனிடம் {இந்திரனிடம்} நீர் அறிந்த வகையில் எங்களுக்கிடையில் இருந்த பழங்காலத்து சகோதர அன்பை நினைவூட்டி, அவனிடம் என் ஆணையாக இல்லாமல் வேண்டுகோளாக {பின்வருவனவற்றைத் தெரிவிப்பீராக},(3) முனிவர்களில் முதன்மையானவரும், அறம்சார்ந்தவரும், சிறப்புமிக்கவருமான கசியபரால் பழங்காலத்தில் அதிதியின் மகிழ்ச்சிக்காகப் படைக்கப்பட்ட அந்தப் பாரிஜாத மரத்தை,(4) அறத்தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அளவற்ற செழிப்பையும் அருளும் அந்தச் சிறந்த மரத்தை, அறத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான தங்கள் நோன்புகளை நிறைவேற்றுவதற்காக அறம்சார்ந்த தேவியராலேயே உமக்குக் கொடையாக அளிக்கப்பட்ட அந்த மரத்தைக்(5) கொடையளித்த கதைகளைக் கேட்ட என் மனைவியரும் கூட, ஓ! தலைவா, அறத்தையும், சிறப்பான செயல்களின் விளைவால் நேரும் அறத்தகுதிகளையும் {புண்ணியங்களையும்} ஈட்டுவதற்காகவும், என் நிறைவுக்காகவும் கொடையளிக்க விரும்புவதாக {இந்திரனிடம்} சொல்வீராக.(6) மரங்கள் அனைத்திலும் சிறந்த பாரிஜாதத்தைத் துவாராவதிக்கு அனுப்புமாறு அவனிடம் கேட்பீராக; கொடைவிழா நிறைவடைந்ததும் அது சொர்க்கத்திற்கு மீளட்டும். பலனை {பலாசுரனைக்} கொன்றவனும், எல்லாம் வல்லவனுமான அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இவ்வாறே நீர் பேச வேண்டும்.(7,8) ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, தேவர்களின் தலைவன் பாரிஜாதமெனும் அந்தச் சிறந்த மரத்தைக் கொடுக்கும் வகையில் நீர் முன் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.(9) ஓ! தவமெனும் செல்வத்தைக் கொண்டவரே, தூதராகச் செயல்படும் உமது திறன்களையும் அது {அம்முயற்சிகள்} புகழ்பெறச் செய்யும்; உமது செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பதால் இது சாத்தியப்படும் என்பதை நான் அறிவேன்" என்றான் {கிருஷ்ணன்}.(10)

நாராயணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், எல்லாம் வல்லவரும், தவத்தகுதியைக் கொண்ட பெரும் முனிவருமான நாரதர், கேசியைக் கொன்றவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்.(11) {நாரதர்}, "நல்லது. ஓ! யதுக்களில் முதன்மையானவனே, தேவர்களின் தலைவனிடம் நான் இவ்வாறே பேசுவேன். இருப்பினும் அவன் நிச்சயம் ஒருபோதும் பாரிஜாத மரத்தைப் பிரியமாட்டான்.(12) தானவர்களும், தேவர்களும், மந்தர மலையைப் பெருங்கடலின் நீரில் தள்ளி அதை {அந்த பாரிஜாத மரத்தை} அடைந்தனர்[1].(13) ஓ! ஜனார்த்தனா, அந்தக் காலத்தில் உலகங்களின் படைப்பாளன் {சிவன்}, மலைகளில் சிறந்த மந்தர மலையுடன் சேர்த்து பாரிஜாத மரத்தையும் எடுத்துக் கொள்ள விரும்பினான்.(14)

[1] "இது நிச்சயம் தேவர்களாலும், அசுரர்களாலும் பெருங்கடல் கடையப்பட்டதைக் குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அப்போது சக்ரன் தனிப்பட்ட முறையில் சங்கரனிடம் சென்று, அவனிடம், "இதுவே சசி {இந்திராணி} விளையாடுவதற்கான மரம், எனவே இஃது அவளது நந்தவனத்தில் இருக்கட்டும்" என்று கேட்டான். இவ்வாறே அவன் சங்கரனிடம் மன்றாடிக் கேட்டான்.(15) ஓ! பாவமற்றவனே, அந்த மஹாதேவன், "அப்படியே ஆகட்டும்" என்ற வரத்தை அவனுக்கு அருளி, அழகிய குகையால் அலங்கரிக்கப்பட்ட மந்தர மலைக்கு அந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு வராமல் இருந்தான்.(16) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவ்வாறே கடந்த காலத்தில், சசிதேவி விளையாடுவதற்கான மரம் என்ற சாக்கைச் சொல்லி, அந்தப் பாரிஜாதத்தை மஹாதேவனின் பிடியில் இருந்து இந்திரன் காத்தான்.(17) அதன்பிறகு அந்த ஹரன் {சிவன்}, தன் மனைவியான உமையை நிறைவடையச் செய்வதற்காக மந்தர மலையின் பள்ளத்தாக்குகளில் நான்கு மைல்கள் {நூறு கல்பூதி / 2 குரோசம்} பரப்பில் முழுமையாகப் பாரிஜாத மரங்களாலான ஒரு காட்டைப் படைத்தான்.(18)

ஓ! கிருஷ்ணா, அந்தச் சிறந்த காட்டில், சூரியனின் கதிர்களோ, சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றைகளோ, காற்றின் மூச்சோ கூட ஊடுருவிச் செல்ல முடியாது.(19) மஹாதேவனுடைய சக்தியின் மூலம் அந்தக் காடு தன்னொளி பெற்றதாகவும், மலைமகளின் (துர்க்கையின்) விருப்பத்திற்கேற்ற வெப்பமும், குளிரும் அமையப் பெற்றதாகவும் இருந்தது.(20) ஓ! யதுக்களை மகிழச் செய்பவனே, அந்த வலிமைமிக்கத் தேவனையும், தேவியையும், அவர்களின் தொண்டர்களையும் {பூதகணங்களையும்}, என்னையும் தவிர வேறு எவராலும், எத்தருணத்திலும் அந்த அழகிய அடவிக்குள் {காட்டுக்குள்} நுழைய முடியாது.(21) ஓ! விருஷ்ணிகளின் வழித்தோன்றலே, அங்கே உள்ள பாரிஜாத மரங்கள் மனத்தால் நினைத்தமாத்திரத்திலேயே அனைத்து வகை ரத்தினங்களையும் அனைத்துப் பக்கங்களிலும் பொழியும் தன்மை கொண்டவையாகும்.(22)

ஓ! கேசவா, உலகங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் இறைவனான சிவனின் அனுமதியுடன், அவனது சிறப்புமிக்கப் பணியாள் துருப்பினர் {பூத கணங்கள்} அந்த அழகிய அடவியை அனுபவிக்கின்றனர்.(23) அந்தப் பாரிஜாத மரக்காடும், அங்குள்ள கனிகளும், அவற்றின் ஒளியும், குணங்களும், சொர்க்கத்தில் உள்ள பாரிஜாதங்களைவிடப் பன்மடங்கில் சிறந்தவை.(24) ஓ! கேசவா, புனிதக் காளையைச் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவன், உமையுடனும், தன் தொண்டர்களுடனும் {பூத கணங்களுடனும்} அம்மரங்களுக்கு மத்தியில் செல்லும்போது, அவை மனித வடிவை ஏற்று அவனை அணுகி வழிபடுகின்றன.(25) ருத்திர சக்தி கலந்தவையும், தீய ஆதிக்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவையும், செழிப்பனைத்தையும் கொண்டவையுமான மந்தரத்தில் {மந்தர மலையில்} உள்ள அந்த மரங்கள், மலை மகளின் பேரன்புக்குரியவையாகும்.(26)

ஒருகாலத்தில், வலிமைமிக்கவனும், பயங்கரம் நிறைந்தவனும், கொடும் நோக்கங்களைக் கொண்டவனுமான அந்தகன் என்ற பெயரைக் கொண்ட தைத்தியன் ஒருவன், தன்னால் பெறப்பட்ட வரங்களின் மூலம் திமிர் பெருகியவனாக அந்தக் காட்டுக்குள் அத்துமீறி நுழையத் துணிந்தான்.(27) அவன் விருத்திரனைவிடப் பத்து மடங்கு பலம்நிறைந்தவனாகவும், படைக்கப்பட்ட எந்த உயிரினத்தினாலும் கொல்லப்படமுடியாதவனாகவும் இருந்தாலும், பகைவரைக் கொல்பவனும், தேவர்களில் முதன்மையானவனுமான ஹரனால் கொல்லப்பட்டான்.(28) ஓ! தாமரைக் கண் தேவா, நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், ஆயிரங்கண் தேவனான இந்திரன் பெருஞ்சிரமத்துடன் அடைந்த அந்தப் பாரிஜாத மரத்தை ஒருபோதும் உனக்குத் தர மாட்டான்.(29) ஓ! கிருஷ்ணா, அந்தச் சிறந்த மரம் எப்போதும் சசிதேவியின் விருப்பங்களையும், பெருஞ்சக்திவாய்ந்த இந்திரனின் விருப்பங்களையும் நிறைவேற்றி வருகிறது" என்றார் {நாரதர்}.(30)

அந்த மங்கலத் தேவன் {ஸ்ரீபகவான்}, "ஓ! முனிவரே, வலிமைமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனுமான மஹாதேவன், சசியைக் கருத்தில் கொண்டு அந்தப் பாரிஜாத மரத்தை எடுத்துச் செல்லாமல் இருந்தது அவனுக்குத் தகுந்ததே.(31) தவறிழைக்காதவனும், உலகங்களின் பிறப்பிடமும், மிக உயர்ந்தவனும், மிகப் பழைமையான படைப்பாளனுமான அவனுடைய {சிவனின்} உயர்ந்த மதிப்புக்கு இது மிகப் பெருத்தமானதே என நான் நினைக்கிறேன்.(32) ஆனால், ஓ! சிறப்புமிக்க முனிவரே, ஓ! பக்திமானே, பலனை {பலாசுரனைக்} கொன்றவனை விட நான் இளையவன் {நான் இந்திரனுக்குத் தம்பி} என்பதால் (அவனுடைய மகனான) ஜயந்தனைப் போல நான் அவனால் பேணி வளர்க்கப்பட வேண்டியவன் {சீராட்டத் தக்கவன்}.(33) ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, அனைத்து வகையிலும் எங்களுக்கிடையில் (எனக்கும் இந்திரனுக்கும் இடையில்) இணக்கமான உறவுகளைப் பேண வேண்டியது உமது கடமையாகும்; உம்மால் அவ்வாறு செய்ய இயலும் என்பதை நானறிந்ததாலேயே அவ்வாறே செய்யுமாறு உம்மைக் கேட்கிறேன்.(34)

ஓ! முனிவரே, ஓ! தலைவா, சத்யபாமாவின் புண்யக நோன்பை நிறைவேற்றுவதற்காக நான் சொர்க்கத்தில் இருந்து பாரிஜாத மரத்தைக் கொண்டு வருவேன் என உறுதியளித்திருக்கிறேன்.(35) ஓ! முனிவரே, ஓ! பாவமற்றவரே, ஓ! இருபிறப்பாளரே, நான் ஒருபோதும் பொய் பேசியவனில்லை என்பதால் என்னால் எவ்வாறு என் உறுதிமொழியை உடைக்க முடியும்?(36) ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அறத்தையும், மக்களின் நற்குணங்களையும் பாதுகாப்பதைக் கடமையாகக் கொண்ட நானே என் உறுதிமொழியை உடைத்தால் உலகங்கள் தங்கள் முடிவை {அழிவைச்} சந்திக்கும்[2]. அனைவரும் எவனைச் சார்ந்திருக்கின்றனரோ அவனே எவ்வாறு பொய் பேச முடியும்? {அனைவரும் என்னையே சார்ந்திருக்கின்றனர்; அவ்வாறான நான் எவ்வாறு பொய் பேச முடியும்?}(37)

[2] "அப்போது அனைவரும் பொய் பேசுவார்கள் என்பதால் பூமியின் பரப்பில் இருந்து வாய்மை மறைந்துவிடும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, யக்ஷர்களாலோ, பன்னகர்களாலோ என் உறுதிமொழியைக் குலைக்க முடியாது; இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன், ஓ! முனிவரே, உமக்கு நற்பேறு கிட்டட்டும்.(38) தேவர்களின் தலைவன் {இந்திரன்} உமது வேண்டுகோளின் பேரில் பாரிஜாத மரத்தைக் கொடுக்கவில்லை என்றால், மணமிக்கக் களிம்புகளைக் கொண்டு சசியால் {இந்திராணியால்} பூசப்படும் அவனது {இந்திரனின்} மார்பில் நான் என் கதாயுதத்தை வீசுவேன்.(39) இவ்வாறு இணக்கமான முறையில் கோரப்படும்போதும் அவன் பாரிஜாத மரத்தைவிட்டுப் பிரிய மறுத்தால் அங்கே என் வரவைக் குறித்த உறுதியடைந்து அவன் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் நீர் அவனுக்குச் சொல்ல வேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}".(40)

விஷ்ணு பர்வம் பகுதி – 125 – 069ல் உள்ள சுலோகங்கள் : 40
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English