Thursday 8 October 2020

சத்யபாமாவின் சினமும் கேசவனின் ஆறுதலும் | விஷ்ணு பர்வம் பகுதி – 123 – 067

(கிருஷ்ணேன பாமாக்ரோதகாரணப்ரஷ்னம்)

Satyabhama's resentment and Keshava's consolation to her | Vishnu-Parva-Chapter-123-067 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சத்யபாமாவின் மாளிகைக்குச் சென்ற கிருஷ்ணன்; பொறாமையில் வெந்து கொண்டிருந்த சத்யபாமாவைத் தேற்றும் வகையில் பேசியது; தபம் செய்ய அனுமதி கேட்ட சத்யபாமா...

Sathyabama and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அனைத்துக் காரியங்களையும் அறிந்தவனான கேசவன் {கிருஷ்ணன்}, அந்த முனிவர் {நாரதர்}, ருக்மிணியின் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டு, ஏதோ காரியத்துக்காக (சத்யபாமாவின் மாளிகைக்குப்) புறப்பட்டுச் சென்றான்.(1) இனிமை நிறைந்த ரைவத மலையில் விஷ்வகர்மனால் கட்டப்பட்ட சத்யபாமாவின் பெரிய மாளிகையை நோக்கி அவன் விரைந்து சென்றான்.(2) விஷ்ணு {கிருஷ்ணன்}, தன் அன்புக்குரியவளும், உயிருக்கும் மேலானவளும், சத்ராஜித்தின் மகளுமானவள் {சத்யபாமா} பொறாமையுடன் கூடிய கோபத்தில் இருப்பதை அறிந்து (அந்த மாளிகைக்குள்) மெதுவாக நுழைந்தான்.(3) மதுசூதனன், பொறாமையில் இருக்கும் தன் அன்புக்குரியவளை பாசத்துடன் நினைத்து, அச்சத்துடன் மெல்லடிகளை எடுத்து வைத்து மெதுவாகச் சென்றான்.(4) நாரதருக்கு மகிழ்ச்சியூட்டி அவரைக் கவனித்துக் கொள்வதில் பிரத்யும்னனை ஈடுபடுத்திவிட்டு வந்த அவன், தன் பணியாளான {தேரோட்டியான} தாருகனிடம், "வாயிலில் காத்திருப்பாயாக" என்று சொல்லிவிட்டு சத்யபாமாவின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(5)

அங்கே தன் அன்புக்குரிய மனைவி {சத்யபாமா}, பொறாமையுடன் கூடிய சினத்தில் வெப்பப் பெருமூச்சை அடிக்கடி விட்டுக் கொண்டு, பணிப்பெண்களுக்கு மத்தியில் கோப அறைக்குள் {கோபக்ரஹத்திற்குள்}[1] கிடப்பதைத் தொலைவிலிருந்தே கண்டான்.(6) அவள், தாமரை போன்ற தன் முகத்தின் அருகே ஒரு தாமரையைக் கொண்டு வந்து தன் நகங்களால் அதைக் கிள்ளி ஏளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள் (அதை அவன் கண்டான்).(7) சில வேளைகளில் அவள், தன் காலின் கட்டைவிரலைச் சற்றே வளைத்து பூமியைக் கீறிக் கொண்டிருந்தாள், (சில வேளைகளில்) தன் முகத்தைப் பின்னே திருப்பிப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.(8) எழில்மிகு வடிவத்தையும், தாமரைக் கண்களையும் கொண்ட தன் ராணி, சில வேளைகளில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவளாகத் தாமரை போன்ற தன் முகத்தை இடது உள்ளங்கையில் தாங்கிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான்.(9) குற்றங்குறையற்றவளான தன் மனைவி, சிலவேளைகளில் பணிப்பெண்களின் கையிலிருந்த சந்தனத்தைப் பறித்துத் தன் மார்பில் பூசிக் கொண்டு, இரக்கமற்றவளாக அதை வீசி எறிந்தாள்.(10) அவள் தன் படுக்கையில் இருந்து எழுந்து மீண்டும் மீண்டும் அதில் விழுவதையும் அவன் கண்டான். இவற்றையும், (சினத்தின் ஆழத்தை எடுத்துக் காட்டும்) தன் அன்புக்குரிய மனைவியின் பிற செயல்பாடுகளையும் ஹரி அங்கே கண்டான்.(11)

[1] "பழங்காலத்து ராணிகள், தங்கள் கணவர்களின் செயல்பாட்டில் தாங்கள் கொள்ளும் விருப்பமின்மையையோ, கோபத்தையோ குறிப்பால் உணர்த்த தங்கள் அரண்மனைகளில் பயன்படுத்தும் தனி அறையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

சத்ராஜித்தின் மகள் {சத்யபாமா} தலையணையில் முகம்புதைத்த போது, "(அவளது அறைக்குள் நுழைய) இதுவே எனக்குத் தக்க தருணம்" என்று ஜனார்த்தனன் நினைத்தான்.(12) பிறகு அவன், தன் இருப்பை அறிவிக்க வேண்டாமெனக் குறிப்புகள் மூலம் {சமிக்ஞையால்} பணிப்பெண்களுக்கு ஆணையிட்டுவிட்டுத் தயங்கிய நடையுடன் சத்யபாமாவை அணுகினான்.(13) அவன், விசிறியை எடுத்து, அவளது பின்பக்கமாக நின்று கொண்டு, மெதுவாக விசிறியபடியே மெல்லப் புன்னகைத்தான்.(14) பாரிஜாத மலருடைய தொடர்பின் விளைவால் மணம் நிறைந்திருந்த அந்தச் சிறப்புமிக்கவன் (ஹரி), தெய்வீகமானதும், மீமானிடத் தன்மையைக் கொண்டதும், அரிதானதுமான நறுமணத்தை அங்கே பரப்பிக் கொண்டிருந்தான்.(15) சத்யா {சத்யபாமா}, அற்புதமான அந்த மணத்தை நுகர்ந்ததும், ஆச்சரியமடைந்தவளாகத் தன் முகத்தைத் திறந்து, "என்ன இது?" என்று கேட்டாள்.(16) தூய மென் புன்னகையுடன் கூடிய அவள், தன் படுக்கையில் இருந்து எழுந்து, தேவனைப் போன்ற தன் கணவனின் மீது பார்வையைச் செலுத்தாமல், நறுமணத்தின் காரணம் குறித்துத் தன் பணிப்பெண்களிடம் கேட்கத் தொடங்கினாள்.(17) ஆனால் இவ்வாறு கேட்கப்பட்ட பணிப்பெண்கள், ஏதும் சொல்ல முடியாமல், பூமியை நோக்கும் முகங்களுடன் தங்கள் கரங்களைக் கூப்பித் தரையில் மண்டியிட்டு (பணிவுடன்) காத்திருந்தனர்.(18) 

அற்புதம் நிறைந்த நறுமணத்தின் பிறப்பிடத்தைச் சத்யபாமாவால் காண முடியாத போது, அவள் தனக்குள்ளே, "பூமியானவள் பல்வேறு வகை மணங்களை வெளியிடுகிறாள்; இந்த மணம் அவளுடைய சிறப்புமிக்க வெளிப்பாடுகளில் ஒன்றாயிருக்குமோ?" என்று நினைத்தாள்.(19) இஃது என்னவாக இருக்கக்கூடும் என்று அவள் சிந்தித்துக் கொண்டே அனைத்துப் பக்கங்களிலும் பார்த்தபோது அவளுடைய பார்வையானது உலகங்களின் படைப்பாளனான கேசவன் மீது தீடீரெனத் தன் ஒளியைச் சிந்தியது.(20) "ஆ! சரிதான்" என்று அவள் சொன்ன போது, மேலும் பொறாமையுடன் கூடிய கோபத்தில் அவளை நிறைத்த செறிவான அன்பில் உண்டான கண்ணீர் அவளது கண்களை மங்கச் செய்தது.(21) கருங்கண்களைக் கொண்ட அந்த அழகிய மங்கை, மென்மையான உதடுகள் துடிக்க, பெருமூச்சு விட்டுக் கொண்டு தன் முகத்தை மற்றொரு புறத்தில் {வேறுபக்கம்} திருப்பிக் கொண்டாள்.(22) பிறகு ஏற்கமுடியாத கோபத்துடன் புருவங்களைச் சுருக்கிய அவள், தன் உள்ளங்கைகளில் தன் முகத்தை வைத்துக் கொண்டு, கண்களை உயர்த்தி, "அழகாக இருக்கிறீர்" என்று ஹரியிடம் சொன்னாள்.(23) தாமரை இதழ்கள் இரண்டில் இருந்து விழும் பனித்துளிகளைப் போல அவளது கண்களில் இருந்து பொறாமையுணர்வுடன் கூடிய கண்ணீர் வழியத் தொடங்கியது.(24)

தாமரைக் கண் கிருஷ்ணன், தாமரை போன்ற முகத்தைக் கொண்ட தன் மனைவியின் முகத்தில் வழியும் கண்ணீரைக் கண்டு விரைவாக அவளிடம் சென்று அவற்றை {அந்தக் கண்ணீரைத்} தன் கைகளில் ஏந்தினான்.(25) ஸ்ரீவத்சமெனும் அடையாளத்தை {மச்சத்தைத்} தாங்கியவனும், தாமரைக் கண்ணனுமான அந்த விஷ்ணு, அவளது மார்பில் வழியும் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துப் பின்வருமாறு அவளிடம் பேசினான், (26) {கிருஷ்ணன்}, "ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே {நீலாயதாக்ஷி}, ஓ! மிகச் சிறந்த அழகிய பெண்ணே, தாமரைகள் இரண்டிலிருந்து விழும் பனித்துளைகளைப் போல உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதற்கான காரணம் யாது?(27) ஓ! கண்ணைக் கவரும் பெண்ணே, ஏன் உன்னுடைய முகமும், உன் உடலும், காலை வானில் முழு நிலவைப் போலவோ, நடுப்பகலில் முற்றாக மலரும் தாமரையைப் போலவோ வடிவங்கொள்கின்றன (தோன்றுகின்றன)?[2](28) 

[2] "காலையில் நிலவு தேயும், நடுப்பகலில் தாமரை வாடும். அந்தப் பெண்ணின் வெளிறிய, அமைதியான தோற்றத்தைக் குறித்துக் கேட்கும் வகையில் இங்கே கிருஷ்ணன் சுற்றி வளைத்துப் பேசுகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! சிற்றிடையாளே, செந்தூரம் தெளிக்கப்பட்டு, தங்கச் சரிகையுடன் கூடிய ஆடைகளை உடுத்தாமல் வெறுமையான வெள்ளை நிற ஆடைகளை இன்று நீ தேர்ந்தெடுத்தது ஏன்?(29) செந்தூரத்தாலும், சரிகையாலும் அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் உன் விருப்பத்திற்குரியவை என்றாலும், தேவர்களை வழிபடும் காலத்தில் மட்டுமே பெண்கள் அணிய விரும்பும் வெள்ளை ஆடையை நீ உடுத்தியிருப்பது ஏன்?(30) ஓ! அழகிய அங்கங்களைக் கொண்டவளே, உன் அங்கங்கள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படாதது ஏன்? ஓ! மிகச் சிறந்த பெண்ணே, சித்திரகத் துணிக்கான {கடித ஓலைக்கான} இடம் கண்ணீரால் நனைந்திருப்பது ஏன்?(31) ஓ! அழகிய வடிவங்கொண்டவளே, உன் அழகிய நெற்றியை (செஞ்சந்தனமல்லாமல்) வெண்சந்தனமும், (மஞ்சள் அல்லது நீலப் பட்டல்லாமல்) வெண்பட்டுத் துணியும் மறைத்திருப்பது ஏன்?(32) ஓ! என் இதயத்திற்கு இனியவளே, ஓ! அகன்ற விழிகளைக் கொண்டவளே, ஓ! அன்புக்குரியவளே, உன் முகப் பிரகாசத்தை இவ்வாறு குறைத்து என் மனத்தில் பெரும் வேதனையை உண்டாக்கியிருக்கிறாய்.(33) உன் நெற்றியை மிகவும் விரும்பும் பசைபோன்ற குளிர்ச்சியான சந்தனம், கடித ஓலைக்கான அந்த இடத்தில் {பத்திரலேகையில்} இருப்பது அழகாகத் தெரியவில்லை[3].(34)

[3] "அந்தப் பெண் கடித ஓலை எழுதும் இருக்கையில் தலைசாய்த்துக் கிடந்ததால் அவளது நெற்றிச் சந்தனம் அங்கே பூசப்பட்டதாகத் தெரிகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "ஓ அன்பே, உன் கன்னத்தில் உள்ள சந்தனக் குழம்பு வெறுமனே பத்திரலேகைக்குப் போட்டியாகத் தெரிகிறது. இது சற்றும் ஒளிரவில்லை" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "சித்தரிக்கப்பட வேண்டிய உனது கன்னங்கள் சந்தனப் பூச்சால் ப்ரகாசிக்கவில்லையே" என்றிருக்கிறது.

கோள்களும், நட்சத்திரங்களும், வெள்ளி போன்ற சந்திரனின் ஒளிக் கற்றைகளும் இல்லாத கூதிர் கால வானைப் போலவே ஆபரணங்களற்ற உன் கழுத்து அழகாகத் தெரியவில்லை.(35) முழுநிலவின் எழிலோடு போட்டியிடுவதும், தாமரை மணத்தை மூச்சாக இழுத்துப் புன்னகை ததும்புவதுமான உன் முகம் {வாய்} புகழும் மொழியால் இன்று நீ என்னை வரவேற்காதது ஏன்?(36) பாதி மூடிய விழிகளால் ஏன் இன்று என்னைப் பாராதிருக்கிறாய்? ஆழப்பெருமூச்சு விட்டபடியே கண்ணீர் சிந்தி, உன் அஞ்சன மை விழிகளின் அழகை ஏன் நீ கெடுத்துக் கொள்கிறாய்?(37) ஓ! நீலத் தாமரை {கருநெய்தல்} போன்ற காந்தியுடையவளே, ஓ! நுண்ணறிவுமிக்கப் பெண்ணே, இனியும் அழாதே. உன்னுடைய ஒப்பற்ற முக எழிலுக்கு ஓரவஞ்சனை செய்யும் வகையில் விழிகளின் அஞ்சனமை கறைந்துருகக் கண்ணீர் சிந்தாதே.(38) ஓ! தெய்வீக அழகுடையவளே, நான் உன் பணியாளென்றே உலகில் அறியப்படுகிறேன்; அவ்வாறிருக்கையில், ஓ! மிகச் சிறந்த பெண்ணே, முன்பு போல் ஏன் எனக்கு ஆணையிடாமல் இருக்கிறாய்?(39) 

ஓ! அழகிய ராணி, உனக்கு வெறுப்பூட்டும் செயலெதனை நான் செய்தேன்? ஓ! அன்பானவளே, எதன் காரணமாக நீ இவ்வளவு வேதனையடைகிறாய்?(40) எண்ணத்தாலோ, செயலாலோ, சொற்களாலோ ஒருபோதும் நான் உன்னைப் புறக்கணித்ததில்லை; ஓ! நேர்த்தியான அங்கங்களைக் கொண்டவளே {சர்வாங்கசுந்தரி}, இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(41) ஓ! அழகிய பெண்ணே, என் மனைவிகள் பிறரையும் நான் மகிழ்விப்பது உண்மையென்றாலும் உன்னில் மட்டுமே என் மதிப்பும், அன்பும் எல்லையற்றவையாக இருக்கின்றன.(42) ஓ! தேவர்களின் மகளுக்கு ஒப்பானவளே, என் உயிரே போனாலும் உன் மீது நான் கொண்ட அன்பு {வேட்கை} தேயாது; என் உறுதியான நம்பிக்கை இஃது என்பதை அறிவாயாக.(43) ஓ! தாமரை மொட்டின் காந்தியைக் கொண்டவளே, பூமியின் நிலையான குணமான பொறுமை, வெளியின் நிலையான குணமான ஒலி ஆகியவற்றைப் போலவே நான் உன்னிடம் கொண்ட அன்பும் நிலையானதே.(44) நெருப்பில் தழல் {அக்னி ஜ்வாலை}, சூரியனின் தெய்வீக ஒளி, நிலவின் மங்காத எழில் ஆகியவற்றைப் போலவே உன்னிடம் நான் கொண்ட அன்பும் நிலையானது, உன்னில் மட்டுமே அது நிலைத்திருக்கிறது" என்றான் {கிருஷ்ணன்}.(45)

இவ்வாறு ஜனார்த்தனன் தன் நியாயத்தைச் சொன்ன போது, அருள்நிறைந்த சத்தியபாமா, தன் விழிகளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெதுவாகப் பின்வரும் முறையில் அவனிடம் பேசினாள்.(46) {சத்யபாமா}, "ஓ! தலைவா, இதற்கு முன்பு நீர் என்னுடையவர் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இன்றோ என் மீது நீர் கொண்ட அன்பு சாதாரணமானதை விட அதிகமானது இல்லை என்றும், பொதுவானது என்றும் உணர்கிறேன்.(47) காலப்போக்கு நிலையற்றது என்பதை நான் முன்பே அறிந்தேனில்லை. ஆனால் இன்றோ உலகப்போக்கு நிலையற்றது என்பதை அறிந்து கொண்டேன்.(48) நான் வாழும் வரை நீரே எனது இரண்டாம் சுயம் என்றும், நானும் உமக்கு அவ்வாறே {இரண்டாம் சுயம்} என்றும் நம்பிக்கையை வளர்த்து வந்தேன். ஓ! தவறு செய்யாதவரே, அதிகம் பேசுவதால் பயனென்ன; நான் உமது இதயத்தை அறிவேன்.(49) நீர் பேச்சில் மட்டுமே மோகத்தைப் பயன்படுத்துகிறீர், நீர் என்னிடம் கொண்ட அன்பும் போலியானது என்று காண்கிறேன்; அதே வேளையில் உமது பிற மனைவிகளைப் பொறுத்தவரையில் {அந்த அன்பு} உண்மையாக இருக்கிறது.(50) 

ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, நான் எளியவள் என்றும், உம்மிடம் அன்பு கொண்டவள் என்றும் அறிந்து கொண்டு கொடூரமானதும், தந்திரமானதுமான உமது நடத்தையின் மூலம் என்னைப் புறக்கணிக்கிறீர்.(51) இது நிச்சயம் போதுமானது. காணத்தகுந்ததைக் கண்டேன், கேட்கத் தகுந்ததைக் கேட்டேன். நீர் என்னிடம் கொண்டுள்ள அன்பிற்கான பலனை நான் உணர்கிறேன்.(52) எது எப்படியிருப்பினும், கடுந்தவங்களில் என்னை அர்ப்பணித்துக் கொள்ள மனத்தை ஆயத்தம் செய்திருக்கிறேன், என்னிடம் உமக்கு அன்பேதும் இருந்தால் அவ்வாறு செய்ய என்னை அனுமதிப்பீராக; பெண்கள் என்ன நோன்புகளை, என்ன விரதங்களை மேற்கொண்டாலும் அவை தங்கள் கணவர்களின் அனுமதியுடன் செய்யப்பட வேண்டும். ஏனெனில், கணவர்களின் சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்படுபவை நிச்சயம் பலனற்றவையே" என்றாள் {சத்யபாமா}.(53,54)

கற்புடையவளும், அழகியுமான அவள் இவ்வாறு பேசிவிட்டு, தன் கண்களில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்; பிறகு இனிய புன்னகையைக் கொண்ட அவள், ஹரியின் மஞ்சள் ஆடையின் {பீதாம்பரத்தின்} நுனியைப் பிடித்து, அதைக் கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்" என்றார் {வைசம்பாயனர்}.(55)

விஷ்ணு பர்வம் பகுதி – 123 – 067ல் உள்ள சுலோகங்கள் : 55
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English