Saturday 19 September 2020

பலதேவன் மகிமை | விஷ்ணு பர்வம் பகுதி – 119 – 063

(பலதேவமாஹாத்ம்யம்)

Baladeva's glorious deeds described | Vishnu-Parva-Chapter-119-063 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தைக் கங்கையில் இழுத்த பலராமன் மகிமை; மற்போரில் பீமனை வீழ்த்தியது; துரியோதனனைச் சீடனாக ஏற்றது...

Balarama Bhima and Duryodhana

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! விப்ரரே, பூமியை நிலைநிறுத்துபவனும், சேஷனின் வடிவமும், நுண்ணறிவுமிக்கவனுமான பலதேவனின் மகிமைமிக்கச் செயல்களை நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்.(1) புராணங்களை நன்கறிந்த முனிவர்கள், மிக உன்னதனென்றும், பெருஞ்சக்திவாய்ந்த தலைமை தேவனான அனந்தனென்றும் பலதேவனைச் சொல்கிறார்கள். எனவே, ஓ! விப்ரரே, அவனது செயல்களைக் குறித்து நான் துல்லியமாகக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(2,3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திமிக்கவனும், பலம்வாய்ந்தவனுமான இந்தப் பலதேவனே, ஒளிச்சுரங்கமான நாக மன்னன் சேஷன் என்றும், பூமியை நிலைநிறுத்துபவனென்றும், புருஷர்களில் முதன்மையானவன் என்றும், யோகாசிரியன் என்றும், வேதங்களில் உள்ள மந்திரங்களை அறிந்தவர்களில் முதன்மையானவன் என்றும் புராணங்களில் விளக்கப்படுகிறான். கதாயுதப் போர் புரிந்து பல முறை ஜராசந்தனை வீழ்த்தியிருந்தாலும் அவன் அவனைக கொல்லவில்லை.(4,5) மகதப் பேரரசனைப் பின்தொடர்ந்தவர்களும், கொண்டாடப்பட்டவர்களுமான பிற மன்னர்களும் போரில் அவனால் வீழ்த்தப்பட்டனர்.(6)

ஓர் ஆயுத அளவு {பத்தாயிரம்} யானைகளின் பலத்தையும், பேராற்றலையும் கொண்ட பீமனே கூட மற்போரில் இவனால் {பலதேவனால்} வீழ்த்தப்பட்டான்.(7) துரியோதனனின் மகளான லக்ஷ்மணையை {கிருஷ்ணன் மற்றும்} ஜாம்பவதியின் மகனான சாம்பன் அபகரித்துச் சென்றதால் ஹஸ்தினாபுரத்தின் {நாகநகரத்தின்} இளவரசர்களால் அவன் அந்நகரத்தில் சிறைபிடிக்கப்பட்டான்.(8) பெருஞ்சக்திவாய்ந்த ராமன் {பலராமன்}, அவன் சிறையிலிடப்பட்டதைக் கேட்டு அவனை விடுவிப்பதற்காக அந்நகரத்திற்கும் சென்றும்(9) அவனை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் கோபமடைந்த அந்தப் பலம்வாய்ந்த வீரன், பின்வரும் அற்புதச் செயலைச் செய்தான்.(10) அவன், வெல்லப்படமுடியாததும், ஒப்பற்றதும், தெய்வீகமானதும், பிரம்மாயுதத்தைப் போன்றதுமான தன் கலப்பையை எடுத்துக் கொண்டு அந்நகரத்தின் மதிலில் {கோட்டையில்} பொருத்தி கௌரவர்களின் அந்நகரை கங்கைக்குள் இழுத்துப் போட நினைத்தான்.(11,12) மன்னன் துரியோதனன், தன் நகரம் இவ்வாறு சுழற்றப்படுவதைக் கண்டு, சாம்பனையும் அவனது மனைவியையும் பெருஞ்சக்திவாய்ந்த ராமனிடம் கொடுத்து,(13) தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டான். ராமனும் அந்தக் குரு மன்னனை {துரியோதனனை} கதாயுதப் போரில் தன் சீடனாக ஏற்றுக் கொண்டான்.(14) ஓ! மன்னா, இவ்வாறு சுழற்றப்பட்டது முதலே அந்நகரம் பெருங்கடலை {கங்கையை} நோக்கி இழுக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தைக் கொண்டது.(15)

ஓ! மன்னா, முன்னர்ப் பிருந்தாவனத்தில் சூரனின் மகனான இந்த ஹலாயுதன் {பலராமன்}, தன் முஷ்டியின் ஒரே அடியில் பிரலம்பனைக் கொன்றான். இதுவும் பூமியின் நன்கறியப்பட்ட இவனது செயல்களில் ஒன்றாகும்.(16) பேருடல் படைத்த தைத்தியனான தேணுகன், கழுதை வடிவில் வந்த போது அவனை மரத்தின் உச்சிக்குத் தூக்கி எறிந்தான். அவனும் பூமியின் பரப்பில் இறந்து விழுந்தான்.(17) இந்தக் கலப்பைதாரி {ஹலாயுதன் / பலராமன்}, யமனின் தங்கையும், வேகமாகப் பாய்பவளும், உப்பு நீர் கடலை நோக்கிச் செல்பவளுமான யமுனையின் போக்கை நகரம் நோக்கித் திருப்பினான். இதுவும் அவனது அற்புதச் செயல்களில் ஒன்றாகும்.(18)

ஓ! மன்னா, இவ்வாறே, ஒப்பற்ற பலம் கொண்டவனும், அனந்தன் என்ற பெயரைக் கொண்ட சேஷனின் வடிவமுமான பலதேவனின் பலம்வாய்ந்த செயல்களை உனக்கு விளக்கிச் சொன்னேன்.(19) நீ புராணங்களைக் கேட்கும்போது, புருஷர்களில் முதன்மையான இந்த ஹலாதரன் செய்தவையும், இன்று என்னால் விளக்கிச் சொல்லப்படாதவையுமான மிக அற்புதமான செயல்கள் பலவற்றைக் கேட்பாய்" என்றார் {வைசம்பாயனர்}.(20)

விஷ்ணு பர்வம் பகுதி – 119 – 063ல் உள்ள சுலோகங்கள் : 20
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English