Sunday 16 August 2020

பகைவனைச் சந்தித்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 99 – 043

(ஜராஸந்தபராபவம்)

Krishna meets his enemy | Vishnu-Parva-Chapter-99-043 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தெய்வீக ஆயுத ஞானத்தை மீண்டும் மீண்டும் அடைந்த கிருஷ்ணனும், பலராமனும்; உக்கிரமடைந்த கோமந்த மலை போர் தொடக்கம்; தரதனைக் கொன்ற பலராமன்; ஜராசந்தனை வீழ்த்தியது; தமகோஷன் கிருஷ்ணன் உரையாடல்...

Gomanta mount war

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மலையில் இருந்து இறங்கி வந்த வசுதேவனின் மகன்கள் {பலராமன், கிருஷ்ணன்} இருவரையும் கண்ட மன்னர்களின் படைவீரர்கள் பீதியடைந்தனர், விலங்குகள் கலக்கமடைந்தன.(1) அவர்களின் கரங்களில் ஆயுதங்களேதும் இல்லாவிட்டாலும், கடலைக் கலங்கடிக்கும் மகரங்கள் இரண்டைப் போல அவர்கள் கோபத்தில் அங்கே திரிந்து கொண்டிருந்தனர்.(2) அவ்வாறு அவர்கள் போரிட விரும்பி அங்கே திரிந்து கொண்டிருந்தபோது, ஆயுதங்களைக் கையாள்வது தொடர்பான புராதன நுண்ணறிவு அவர்களுக்குள் எழுந்தது.(3) மதுராவில் நடந்த போரின்போது அவர்கள் ஏற்கனவே அடைந்திருந்த ஆயுதங்கள், கூடியிருந்த மன்னர்களின் கண்களுக்கு முன்பாகவே தழலென எரிந்து கொண்டு வானில் இருந்து இறங்கின. பேருடல் படைத்தவையும், மனிதர்களின் தசைகளை உண்ணும் விருப்பத்துடன் கூடியவையும், அந்த இரு யாதவர்களால் அடையப்பட்டவையுமான அந்த ஆயுதங்கள் தாகம் நிறைந்தவையாக வானில் இருந்து பாய்ந்து வந்தன. அவை தெய்வீக மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், காந்தியால் பத்து திக்கிற்கும் ஒளியூட்டிக் கொண்டும், வானுலாவிகளை {பறவைகளை} அச்சுறுத்திக் கொண்டும் இருந்தன. அரச இறைச்சியை உண்ணும் நோக்கில் இரை தேடும் விலங்குகளும் பின்தொடர்ந்து வந்தன.(4-8)

கலப்பையான ஸம்வர்த்தகம் {ஸம்வத்ஸரம்}, உலக்கையான ஸௌநந்தம், சக்கரமான சுதர்சனம், கதாயுதமான கௌமோதகீ எனும் விஷ்ணுவின் சக்திவாய்ந்த ஆயுதங்கள் நான்கும் அவ்விரு யாதவர்களின் பொருட்டுப் பெரும்போரில் இறங்கியபோது, சாத்வதர்களில் முதன்மையானவனும், பலம்வாய்ந்தவனுமான ராமன் {பலராமன்}, தெய்வீக மாலைகளுடன் பளபளப்பதும், பாம்பைப் போல வளைந்து செல்வதுமான கலப்பையை {ஸம்வர்த்தகத்தை} முதலில் தன் இடக்கையில் ஏந்தினான், {பிறகு} பகைவரிடம் மனச்சோர்வை ஏற்படுத்துவதும், உலக்கைகளில் சிறந்ததுமான ஸௌநந்தத்தை {தன் வலக்கையில்} ஏந்தினான்.(9-12) கேசவன் {கிருஷ்ணன்}, உலகங்கள் அனைத்தாலும் காணத்தகுந்ததும், சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதுமான சுதர்சனத்தை மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டான்.(13) அந்த வீரன் (கிருஷ்ணன்) உலகங்களில் புகழ்பெற்றதும், கண்களைக் கவரவல்லதும், மழைமேகங்களின் இடியொலியை உண்டாக்க வல்லதும், சாரங்கம் என்ற பெயரைக் கொண்டதுமான வில்லை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டான்.[1](14) எவனுடைய பிறப்புக்கான அவசியத்தைத் தேவர்கள் அறிந்திருந்தார்களோ அந்தக் கிருஷ்ணனின் மறுகரத்தை கௌமோதகீ எனும் பெயரைக் கொண்ட கதாயுதம் அலங்கரித்தது.(15)

[1] இங்கே ஒரு ஸ்லோகம் விடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே இங்கே காணப்படும் 14ம் ஸ்லோகத்தில் சித்திரசாலை பதிப்பில் காணக்கிடைப்பது மொழிபெயர்த்துத் தரப்பட்டிருக்கிறது. உ.வே.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "வீரன் கிருஷ்ணன் உலகத்தாரால் காணத்தக்க அழகுமிக்க ஸார்ங்கமெனும் பெயர் பெற்ற மேகசப்தமுடைய வில்லை ப்ரீதியுடன் எடுத்துக் கொண்டான்" என்றிருக்கிறது. இந்த ஸ்லோகத்துடன் சேர்த்து இந்த அத்தியாயம் 98 ஸ்லோகங்களைக் கொண்டதாகிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த ஸ்லோகம் விடுபட்டிருப்பதால் இந்த அத்தியாயத்தில் 97 ஸ்லோகங்களே இருக்கின்றன.

இவ்வாறு ஆயுதம் தரித்த வீரன் ராமனும் {பலராமனும்}, விஷ்ணுவின் அவதாரமான கோவிந்தனும் {கிருஷ்ணனும்} போரில் பகைவருக்கு எதிராக நிற்கத் தொடங்கினர்.(16) வஸுதேவனின் வீரமகன்களும், ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்களும், ஒரே விஷ்ணுவாக இருப்பினும் அண்ணனும் தம்பியுமாகப் பிரிந்து இருந்தவர்களும், ராமன், கோவிந்தன் என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான அவ்விருவரும், தேவர்களைப் போலத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டு, போர்க்களத்தில் பகைவரை எதிர்த்தவாறு திரியத் தொடங்கினர்.(17,18) வீரனான ராமன் {பலராமன்}, காக்கையின் வயிற்றுக்கு ஒப்பான தன் கலப்பையைக் கோபத்தில் உயர்த்தி, பகைவருக்குக் காலனைப் போலப் போர்க்களத்தில் திரியத் தொடங்கினான். அவன், பெரும்பலம்வாய்ந்த க்ஷத்திரியர்களின் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் இழுத்து வீசி தன் கோபத்தைத் தணித்துக் கொள்ளத் தொடங்கினான்.(19,20) மலை போன்ற யானைகளைத் தன் கலப்பையின் முனையால் தூக்கி வீசி தன் உலக்கையின் வீச்சுகளால் அவற்றைக் கடைவதைப் போல அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.(21)

ராமனால் கொல்லப்படும் தருவாயில் இருந்த முன்னணி க்ஷத்திரியர்கள், அச்சத்தால் தங்கள் தேர்களை விட்டுவிட்டு ஜராசந்தனிடம் திரும்பிச் சென்றனர். க்ஷத்திரியக் கடமைகளை எப்போதும் நோற்பவனான மன்னன் ஜராசந்தன் அவர்களிடம், "போரில் களைத்து வந்த உங்கள் க்ஷத்திரிய ஒழுக்கத்திற்கு ஐயோ.(22,23) பலம்வாய்ந்தவர்களாக இருப்பினும், தேர்களை விட்டும், போர்க்களத்தை விட்டும் தப்பி ஓடுபவர்கள், கருவை அழிக்கும் கொடும்பாவத்தை இழைத்தவர்களெனத் தவசிகள் சொல்கிறார்கள். இதை நீங்கள் அறிவீர்களா?(24) உங்கள் க்ஷத்திரிய ஒழுக்கத்திற்கு ஐயோ. காலாளாகப் போரிடும் பலவீன இடையன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அச்சத்தால் நீங்கள் ஏன் ஓடுகிறீர்கள்?(25) என் ஆணையின் பேரில் நீங்கள் விரைவில் திரும்புவீராக. அல்லது போரிடாமல் பார்வையாளராகப் போர்க்களத்தில் காத்திருப்பீராக. அந்த இடையர்கள் இருவரையும் நானே யமனுலகுக்கு அனுப்பப் போகிறேன்" என்றான் {ஜராசந்தன்}.(26)

இவ்வாறு ஜராசந்தனால் தூண்டப்பட்ட க்ஷத்திரியர்கள் மீண்டும் மகிழ்ச்சிமிக்கவர்களாக அணிவகுத்து கணைமழையைப் பொழிந்து மீண்டும் போரில் ஈடுபட்டனர்.(27) கவசங்கள், நிஸ்திரிங்ஷங்கள், ஆயுதங்கள், அம்பறாதூணிகள், கணைகள், விற்கள், நாண் திரள்கள், பொன்சேணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், சந்திரன் போன்ற காந்திமிக்கத் தேர்கள், மேகங்களுக்கு ஒப்பானவையும், மஹாமாத்ரர்களால் {மாவுத்தர்களால்} செலுத்தப்படுபவையுமான யானைகள் ஆகியவற்றுடன் அவர்கள் மீண்டும் போர்க்களத்திற்குப் புறப்பட்டனர்.(28,29) உயர்த்தப்பட்ட குடைகளால் மறைக்கப்பட்டவர்களும், அழகிய சாமரங்களால் வீசப்பட்டவர்ளுமாகத் தேர்களில் இருந்த மன்னர்கள் போர்க்களத்தில் பேரெழிலுடன் ஒளிர்ந்தனர்[2].(30)

[2] ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 35:54-80ல் உள்ள செய்திகள் சில பல மாறுபாடுகளுடன் இங்கே 43:1-30ல் மீண்டும் உரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு ஸ்லோகத்திலும் சிற்சில மாறுபாடுகள் இருக்கின்றன.

போர்வீரர்களில் முதன்மையானவர்களும், வசுதேவனின் வீர மகன்களுமான ராமன், கேசவன் ஆகிய இருவரும் போரிடும் விருப்பத்துடன் போர்க்களத்திற்குள் நுழைந்து திரிந்து கொண்டிருந்தனர்.(31) அப்போது அங்கே ஏவப்பட்ட ஏராளமான கணைகளுடனும், கதாயுத வீச்சுகளுடனும் அவர்களுக்கும், அந்த மன்னர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடைபெற்றது.(32) யது குலத்தின் வழித்தோன்றல்களான அவ்விரு வீரர்களும், மழையால் நனைக்கப்பட்ட மலைகள் இரண்டைப் போல மன்னர்களால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளைத் தாங்கிக் கொண்டனர். கனமான உலக்கைகளாலும், கதாயுதங்களாலும் தாக்கப்பட்டாலும் அவர்கள் நடுங்காதிருந்தனர்.(33,34) அப்போது பெரும்பலம்வாய்ந்தவனும், மேகத்துக்கு ஒப்பானவனுமான கிருஷ்ணன், தன் கரத்தில் சங்கு, சக்கரம், கதாயுதங்களை ஏந்தியபடி, காற்றோடு கூடிய மேகத்தைப் போலத் தன் உடல் அளவைக் பெருக்கினான். அவன், சூரியனைப் போன்ற பிரகாசமிக்கத் தன்னுடைய சக்கரத்தைக் கொண்டு மனிதர்களையும், குதிரைகளையும், யானைகளையும், வலிமைமிக்கப் போர்வீரர்களையும் வெட்டி வீழ்த்தத் தொடங்கினான்.(35,36) மறுபுறம் ராமனும் தன்னுடைய கலப்பைக் கொண்டு மன்னர்களை இழுத்து அவர்கள் நினைவிழக்கும் அளவுக்கும், போர்க்களத்தில் அவர்களால் நிற்க முடியாத அளவுக்கும் தன் உலக்கையால் அவர்களைத் தாக்கினான்.(37) பலவண்ணங்களிலான மன்னர்களின் தேர்கள் தடுக்கப்பட்டு அவர்களால் மேற்கொண்டு போர்க்களத்திற்குச் செல்ல முடியாத அளவுக்கு அவற்றின் சக்கரங்கள் நொறுக்கப்பட்டன.(38) உலக்கை வீச்சுகளால் தந்தங்களொடிந்த ஹஸ்திஹானய யானைகள் {குஞ்சராஹ ஷஷ்டிஹாயனா}[3] கூதிர்கால மேகங்களைப் போலப் பேரொலியுடன் பிளிறிக் கொண்டே போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடத் தொடங்கின.(39)

[3] "இது யானைகளின் ஒரு வகையைச் சேர்ந்தது. போர்க்களத்தில் விலைமதிப்பற்ற சிறந்த இனத்தைச் சார்ந்தது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உலக்கை வீச்சால் பங்கமடைந்த அறுபது வயது யானைகள், உடைந்த கொம்புடன் மழைவடிவில் மேகம் போல் விட்டன" என்றிருக்கிறது.

{கிருஷ்ணனின்} சக்கரம் வெளியிட்ட நெருப்பின் தழல்களால் தாக்கப்பட்ட குதிரைப் படையினரும், காலாட்படையினரும், இடியால் வீழ்த்தப்பட்டவர்களைப் போலத் தங்கள் இறுதி மூச்சை சுவாசிக்கத் தொடங்கினர்.(40) {பலராமனின்} கலப்பையால் தாக்கிக் கலங்கடிக்கப்பட்ட அரச படை முழுமையும், அண்ட அழிவின் போதுள்ள உயிரினங்களைப் போலத் தோன்றின.(41) அவதரித்திருக்கும் விஷ்ணுவின் தெய்வீக ஆயுதங்களுடைய விளையாட்டுக் களமான போர்க்களத்தை மன்னர்களால் பார்க்கவும் முடியவில்லை எனும்போது அவர்கள் போரிட்டதைக் குறித்து என்ன சொல்ல முடியும்?(42) சில தேர்கள் முழுமையாக நொறுக்கப்பட்டன, சில தேர்களில் மன்னர்கள் கொல்லப்பட்டனர், சில தேர்கள் ஒரு சக்கரம் நொறுங்கி பூமியின் பரப்பில் விழுந்து கிடந்தன.(43) சக்கரமும், கலப்பையும் ஈடுபட்ட அந்தப் பயங்கரப் போரில் ஆபத்தான ராட்சசர்கள் காணப்பட்டனர்.(44) குடைசாய்ந்த தேர்கள், தாக்கப்பட்டதும் வெளிப்படையாகக் கதறிக் கொண்டிருந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும், வீழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கையும் பெருங்கவனத்துடன் கணக்கிட்டாலும் எண்ணமுடியாதவையாக இருந்தன.(45) மன்னர்களின் காயங்களில் இருந்து பெருகிய குருதியின் அடர்த்தியால் அந்தப் போர்க்களமானது சந்தனம் பூசிய பாவை ஒருத்தியைப் போலத் தோன்றியது.(46) அந்தப் போர்க்களமானது, குதிரைகள், யானைகள், மனிதர்களின் மயிர், எலும்புகள், கொழுப்பு, உள்ளுறுப்புகள், குருதி ஆகியவற்றால் மறைக்கப்பட்டிருந்தது.(47) மன்னர்களின் ஆட்களுக்கும், விலங்குகளுக்கும் அழிவைத் தந்ததும், மங்கலமற்ற கதறல்களாலும், நரிகளின் ஊளைகளாலும், குருதித் தடாகங்களாலும் நிறைந்திருந்ததுமான அந்தப் போர்க்களமானது, காலனின் விளையாட்டுக் களத்தைப் போல யானைகளின் எலும்புகள், போர்வீரர்களின் வெட்டப்பட்ட கரங்கள், காயமடைந்த குதிரைகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டும், கழுகுகள், ஓநாய்களின் கதறல்களை எதிரொலித்துக் கொண்டும் இருந்தது.(48-50)

கொல்லப்பட்ட மன்னர்களையும், மரணத்தைப் பொதுவாகவும் கொண்டிருந்த அந்தப் போர்க்களத்தில் பகைவர்களைக் கொன்று திரிந்த கிருஷ்ணன் காலனைப் போலத் தெரிந்தான்.(51) கேசவன், அண்ட அழிவின் போது உண்டாகும் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட சக்கரத்தையும், இரும்பாலான கதாயுதத்தையும் எடுத்துக் கொண்டு படைக்கு மத்தியில் நின்றவாறு,(52) "உறுதியான தீர்மானங்களைக் கொண்டவர்களும், ஆயுதப் பயன்பாட்டில் நுண்ணறிவுமிக்கவர்களுமான வீரர்களே, நான் என் அண்ணனுடன் {பலராமனுடன்} சேர்ந்து காலாளாகத் தான் நிற்கிறேன், நீங்கள் ஏன் ஓடிச் செல்கிறீர்கள்?(53) கெட்டவிதி கொண்டவனும், போர்க்களத்தில் உங்களைக் காப்பவனுமான மன்னன் ஜராசந்தன் ஏன் எங்கள் முன் வராமல் இருக்கிறான்?" என்று கேட்டான்.(54)

அவன் இவ்வாறு சொன்னதும், பலம்வாய்ந்த மன்னன் தரதன், தாமிரக் கண்களுடனும், கையில் கலப்பையுடனும் படைக்கு மத்தியில் இருந்த ராமனை நோக்கி ஓடி, ஒரு காளையை அழைக்கும் உழவனைப் போல, "ஓ! ராமா, ஓ! பகைவரைக் கொல்பவனே, என்னோடு போர்புரிவாயாக" என்றான்.(55,56)

அப்போது, ராமனுக்கும் {பலராமனுக்கும்}, மனிதர்களில் முதன்மையான தரதனுக்கும், இரு பலம்வாய்ந்த யானைகளுக்கிடையில் நடப்பதைப் போன்ற போர் தொடங்கியது.(57) பலம்வாய்ந்தவர்களில் முதன்மையான பலதேவன், தரதனின் தோளில் தன் கலப்பையை வைத்து {இழுத்து}, உலக்கையால் அவனைத் தாக்கினான்.(58) மன்னன் தரதன், அந்த உலக்கையால் தாக்கப்பட்டு இரண்டாகப் பிளக்கும் மலையைப் போலத் தலை வெட்டுண்டவானாகப் பூமியில் விழுந்தான்.(59) மன்னர்களில் முதன்மையான தரதன் ராமனால் கொல்லப்பட்ட போது, விருத்திரனுக்கும், மஹேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைந்ததைப் போல மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்த கூடிய வகையில் ஜராசந்தனுக்கும், ராமனுக்கும் {பலராமனுக்கும்} இடையில் பயங்கரப் போர் நடந்தது. இரண்டு மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்த அந்த வீரர்கள் இருவரும் தங்கள் கதாயுதங்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் எதிர்த்து பெருஞ்சீற்றத்துடன் பூமி நடுங்க விரைந்தனர்.(60-62) கதாயுதப் போரில் திறன்மிக்கவர்களென உலகத்தால் கொண்டாடப்படும் பெரும் பலம்வாய்ந்த வீரர்களான அவர்கள், மதங்கொண்ட யானைகள் இரண்டைப் போல ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த போது, அனைவரும் {போரிடுவதை நிறுத்திப்} போர்க்களத்தில் இருந்து விலகி அவர்களிடம் வந்தனர்.(63,64) கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், அப்சரஸ்கள், தேவர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கே வந்தனர்.(65) ஓ! மன்னா, கந்தர்வர்களாலும், பெரும் முனிவர்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஆகாயமானது, ஒளிக்கோள்கள் பதிக்கப்பட்டதைப் போலப் பேரெழிலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(66)

கதாயுதப் போரில் திறம்பெற்றவர்களான அவ்விரு வீரர்களில், ஒரு யானை தன்னை எதிர்க்கும் மற்றொரு யானையைத் தன் தந்தங்களிரண்டினாலும் தாக்குவதைப் போன்று மன்னன் ஜராசந்தன் கிழக்குப் பக்கத்தையும், ராமன் {பலராமன்} தெற்குப் பக்கத்தையும் அடைந்து, தங்கள் சிங்க முழக்கங்களால் பத்து திக்கையும் நிறைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(67,68) அந்த மோதலில் பலதேவனுடைய கதாயுதத்தின் வீச்சொலி இடியைப் போன்றதாகவும், ஜராசந்தனுடைய கதாயுதத்தின் வீச்சொலி பிளக்கும் மலையைப் போன்றதாகவும் கேட்டன.(69) காற்றால் விந்திய மலையைக் கலங்கடிக்க இயலாததைப் போலவே ஜராசந்தனின் கைகளில் இருந்த கதாயுதமானது, கதாயுதம் தரிப்பவர்களில் முதன்மையானவனை {பலராமனை} அசைக்க முடியாமல் நழுவியது.(70) மகத மன்னன் ஜராசந்தன், ராமனுடைய கதாயுதத்தின் வேகத்தைத் தன் கல்வியினாலும் {பயிற்சியினாலும்}, பொறுமையினாலும் தாங்கிக் கொண்டு அவற்றைக் கலங்கடித்தான்.(71) அப்போது உலகின் சாட்சியாக விளங்கும் ஓர் இனிய குரல் {அசரீரி} வானத்தில் இருந்து, "ஓ! ராமா, ஓ! கௌரவங்களை அளிப்பவனே {பலராமா}, மேலும் மேலும் முயற்சிப்பதால் பயனேதும் ஏற்படப் போவதில்லை. மகத மன்னன் {ஜராசந்தன்} உன்னால் கொல்லத்தக்கவனல்ல. என்னால் விதிக்கப்பட்டது போல மகத மன்னன் {ஜராசந்தன்} விரைவில் தன் மரணத்தைச் சந்திப்பான்" என்றது.(72,73) இதைக் கேட்ட ஜராசந்தன் இதயமுடைந்தான், அதனால் பலதேவனும் அவனைத் தாக்காதிருந்தான். பிறகு விருஷ்ணிகளும், பிற மன்னர்களும் போர்க்களத்தில் இருந்து விலகிச் சென்றனர்.(74) ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, இவ்வாறு அவர்கள் நீண்ட நேரம் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தபோது, ஜராசந்தன் இவ்வாறு வீழ்த்தப்பட்டு ஓடிச் சென்ற போது, பெரும் தேர்வீரர்களான பிறரும் ஓடிச் சென்ற போது, அங்கே இருந்த படையானது படைவீரர்களை இழந்திருந்தது.(75) அப்போது அந்த மன்னர்கள் அனைவரும், புலியால் விரட்டப்படும் மான் கூட்டத்தைப் போலத் தங்கள் யானைகள், குதிரைகள், தேர்களுடனும், அச்சத்துடனும் தப்பி ஓடினர்[4].(76) அந்தப் பயங்கரப் போர்க்களமானது, செருக்கறுந்த {கர்வபங்கமடைந்த} அரசத் தேர்வீரர்களால் கைவிடப்பட்டபோது, இரைதேடும் விலங்குகளால் நிறைந்து மிகப் பயங்கரமான தோற்றத்தை அடைந்தது.(77)

[4] ஹரிவம்ச விஷ்ணு பர்வம் 36:6,13-32ல் உள்ள செய்திகள் சில பல மாறுபாடுகளுடன் இங்கே 43:64-76ல் மீண்டும் உரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு ஸ்லோகத்திலும் சிற்சில மாறுபாடுகள் இருக்கின்றன.

ஓ! பாவமற்றவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் தப்பிச் சென்ற பிறகு, பெரும்பிரகாசம் கொண்டவனான சேதி மன்னன் {சிசுபாலனின் தந்தையான தமகோஷன்}, யாதவர்களுடன் தன் உறவுமுறையை நினைவுகூர்ந்து, காரூஷ, சேதி படைகள் சூழ கிருஷ்ணனை அணுகி,(78,79) "ஓ! தலைவா, ஓ! யதுவின் வழித்தோன்றலே நான் உன் தந்தையுடைய தங்கையின் {உன் அத்தையான சுருதசிரவையின்} கணவனாவேன் {தமகோஷனாவேன்}[5]. நீ என் அன்புக்குப் பாத்திரனாகையால் நான் என் படையுடன் உன்னிடம் வந்திருக்கிறேன்.(80) ஓ! கிருஷ்ணா, மந்த புத்தி கொண்ட மன்னன் ஜராசந்தனிடம், "ஓ! தீய புத்தி கொண்டவனே, கிருஷ்ணனுடன் சச்சரவு செய்யாதே, போரில் இருந்து விலகுவாயாக" என நான் சொன்னேன்.(81) எனினும் ஜராசந்தன் என் சொற்களை அலட்சியம் செய்தான். எனவே, அவன் {ஜராசந்தன்} போர்க்களத்தில் வெல்ல முடியாமல் தன் தொண்டர்களுடன் தப்பிச் செல்கிறான். நானும் இன்று அவனை விட்டுவிட்டேன். அந்த மன்னன் பகை மறந்து தன் நகரத்திற்குத் திரும்ப மாட்டான். அந்தப் பாவி மீண்டும் தாக்குதல் நடத்தி உன்னைத் தொந்தரவு செய்வான்.(82,83) எனவே, ஓ! மாதவா, மனிதர்களின் சடலங்கள் பரவி கிடப்பதும், இரைதேடும் விலங்குகள் நிறைந்திருப்பதும், பூதகணங்கள் அடிக்கடி வந்து போவதுமான இந்த இடத்தை விட்டு விரைவில் செல்வாயாக.(84) நாம் நமது படைகளுடனும், தொண்டர்களுடனும் கரவீர நகரத்திற்குச் சென்று மன்னன் வாசுதேவ சிருகாலனைச் சந்திப்போம்.(85) குத்துவாள்கள், சக்கரங்கள், கோடரிகள், தடிகள் ஆகியவற்றைக் கொண்டவையும், வேகமான குதிரைகளால் இழுக்கப்படுபவையுமான இவ்விரு தேர்களை உங்களுக்காகக் கொண்டு வந்தேன்.(86) ஓ! கிருஷ்ணா, உனக்கு நன்மை விளையட்டும்; விரைந்து இவற்றில் ஏறுங்கள்; நாம் கரவீரத்தின் மன்னனைச் சந்திக்கச் செல்வோம்" என்றான் {தமகோஷன்}.(87)

[5] உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில் "நான் உன் அத்தையின் பிள்ளை" என்றிருக்கிறது. இதன்படி இங்கே பேசிக் கொண்டிருப்பவன் சிசுபாலன் என்றாகிறது. ஆனால் சித்திரசாலை பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இவன் கிருஷ்ணனுடைய தந்தையின் தங்கையுடைய {அத்தையின்} கணவன் {அதாவது மாமன்} என்றே இருக்கிறது. இங்கே ஜராசந்தனுடன் வந்த சேதி மன்னன் சிசுபாலனின் தந்தையான தமகோஷனாகவே இருக்க வேண்டும்.

Krishna to Gomanta mount map


உலகத்தின் ஆசானான {லோக குருவான} கிருஷ்ணன், தன் தந்தையுடைய தங்கையின் கணவனான சேதி மன்னனின் {தமகோஷனின்} சொற்களைக் கேட்டு, மகிழ்ச்சிமிக்க மனத்துடன்,(88) "ஐயோ, போரெனும் நெருப்பால் நாங்கள் தாக்கப்பட்டோம். ஆனால் ஒரு நண்பனுக்குத் தகுந்த வகையிலும், இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்ற வகையிலும் உமது சொற்களெனும் நீரை எங்கள் மீது நீர் தெளித்திருக்கிறீர்.(89) ஓ! சேதிகளில் முதன்மையானவரே {தமகோஷரே}, காலத்துக்கும், இடத்திற்கும் தகுந்தவையும், நற்பொருளைக் கொண்டவையுமான இனிய சொற்களைச் சொல்லும் மனிதன் இவ்வுலகில் அரிதானவனே.(90) ஓ! சேதி மன்னரே, இப்போது உம்மைக் கண்டதும், ஒரு தலைவன் கிடைத்ததாக நாங்கள் நினைக்கிறோம். உம்மைப் போன்ற மன்னர் ஒருவர் எங்கள் நண்பராக இருப்பதால் எங்களால் அடைய முடியாதது ஏதுமில்லை.(91) ஓ! சேதி குலத்தைத் தழைக்கச் செய்பவரே, உங்கள் துணை எங்களுக்கு இருக்கும்போது, ஜராசந்தனையும், அவனைப் போன்ற பிற மன்னர்களையும் எங்களால் கொல்ல முடியும்.(92) ஓ! சேதியின் தலைவரே, மன்னர்களுக்கு மத்தியில் நீரே யதுக்களின் முதல் நண்பராக இருப்பதால், இனிமேல் நடக்க இருக்கும் பிற போர்கள் அனைத்தையும் நீரே கண்காணிப்பீராக.(93) நம்மோடு உயிர் பிழைத்திருப்பவர்களும், போர்த்தொழில் செய்பவர்களுமான மன்னர்களின் மத்தியில் கோமந்த மலையில் மன்னர்கள் அடைந்த வீழ்ச்சியையும் சக்கரம், உலக்கையாலான இந்தப் போரையும் சொல்பவர்கள் தேவலோகத்துக்குச் செல்வார்கள். இது குறித்து நினைப்பவர்களும் கூட அவ்வாறே செல்வார்கள்.(94,95) ஓ! சேதியின் மன்னரே, எங்கள் நன்மைக்காக உம்மால் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் நாம் கரவீர நகரத்திற்குச் செல்வோம்" என்றான் {கிருஷ்ணன்}.(96)

அதன்பிறகு, காற்றைப் போன்ற வேகம் கொண்ட குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் ஏறிய அவர்கள், அவதாரம் செய்திருக்கும் மூன்று நெருப்புகளைப் போலத் தொலைதூரத்தைக் கடந்து சென்றனர்.(97) தேவர்களைப் போன்றவர்களான அந்த மூன்று வீரர்களும் வழியில் மூன்று நாட்களைக் கழித்து, நகரங்களில் முதன்மையான கரவீரத்தை நான்காம் நாளில் அடைந்து, அந்த மங்கலமான இடத்திற்குள் தங்கள் நன்மைக்காக நுழைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(98)

விஷ்ணு பர்வம் பகுதி – 99 – 043ல் உள்ள சுலோகங்கள் : 98
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English