Sunday, 5 July 2020

அக்ரூரன் உரையாடல் | விஷ்ணு பர்வம் பகுதி – 81 – 026

(அக்ரூரதர்ஷனம்)

Akrura describes to him the miseries of his parents | Vishnu-Parva-Chapter-81-026 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கோகுலத்தின் ஆயர்களை மதுராவுக்கு அழைத்த அக்ரூரன்; கிருஷ்ண பலராமனுடன் மதுராவுக்குப் புறப்பட்டது; காளியன் மடுவில் அக்ரூரன் கண்ட விஸ்வரூபம்...

Akrura sees Lord Vishnu under water

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தாராளமாகக் கொடையளிக்கும் அவன் {தானபதி / அக்ரூரன்}, நந்தனின் வீட்டிற்குள் கேசவனுடன் நுழைந்து, முதிய ஆயர்கள் அனைவரையும் திரட்டி கிருஷ்ணனிடமும், ரோஹிணியின் மகனிடமும் {பலராமனிடமும்} மகிழ்ச்சியாக, "ஓ! என் மக்களே {மகன்களே}, நாளை அதிகாலையில் நாம் அனைவரும் மதுராவுக்குச் செல்வோம்.(1,2) விரஜவாசிகளான கோபர்கள், கம்ஸனின் ஆணையின் பேரில், தங்கள் குடும்பத்துடனும், ஆண்டுக் கப்பத்துடனும் அங்கே செல்ல வேண்டும்.(3) அங்கே கம்ஸன் செழுமையான வில் வேள்வியொன்றைக் கொண்டாட இருக்கிறான். நீங்கள் அனைவரும் அதைக் கண்டு உங்கள் உற்றார் உறவினருடன் வந்து சேர்வீர்களாக.(4) ஓ! என் மக்களே, உங்கள் தந்தை வஸுதேவர் தம் மகன்களுடைய அழிவின் விளைவால் கவலையில் மூழ்கியிருக்கிறார். நீங்கள் அங்கே அவருடன் வந்து சேர்வீர்களாக.(5) ஓ! கிருஷ்ணா, அவர் வயது முதிர்ந்துவிட்டார், முதுமையின் காரணமாக அவரது அங்கங்கள் அனைத்தும் மெலிந்துவிட்டன. மேலும் அவர் பாவ அடைவு கொண்ட கம்ஸனால் எப்போதும் ஒடுக்கப்படுகிறார்.(6) கம்ஸன் மீது கொண்ட அச்சத்தினாலும், நீ இல்லாததாலும் அவரது மனம் எப்போதும் கவலையில் எரிந்து வருகிறது.(7)

ஓ! கோவிந்தா, கவலை நிறைந்த தேவகி தேவியை நீ காண்பாயாக. மகன்களால் முலை உண்ணப்படாத அவள், தன் மகன்களை நினைத்து வருந்தி துன்பத்தால் மெலிந்தவளாக உன்னைக் காணும் ஆவலில் இருக்கிறாள். பிரிவின் கவலையால் பீடிக்கப்பட்டிருக்கும் அவள் கன்றில்லாத பசுவைப் போல அங்கே இருக்கிறாள்[1].(8,9) ராகுவால் பீடிக்கப்பட்ட சந்திரனைப் போல அவளது கண்கள் தங்கள் குழிக்குள் சென்றுவிட்டன, மேலும் அவள் அழுக்காடை உடுத்தி தன் நாட்களை அவல நிலையில் கடத்தி வருகிறாள்.(10) ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண் தவசி {தேவகி}, உன்னைக் குறித்த கவலையால் களைத்தவளாகவும், உன்னைக் காணும் ஆவலுடனும் இருக்கிறாள். நீ திரும்பி வருவாய் என்ற ஆசையே அவளது மனத்தில் உயர்ந்த ஆட்சி செய்கிறது {உன் வரவை எதிர்பார்த்து அவள் காத்திருக்கிறாள்}.(11) ஓ! தலைவா, குழந்தைப் பருவத்திலேயே உன்னைப் பிரிந்ததால் அவள் உன் மழலைச் சொற்களைக் கேட்கவும் இல்லை, சந்திரன் போன்ற உன் முகத்தின் அழகைக் காணவும் இல்லை.(12) உன்னைப் பெற்றதால் தேவகி இவ்வாறு மனம் வருந்த வேண்டுமெனில் அவளுக்கு மகனால் என்ன தேவை இருக்கிறது? {அவளுக்கு மகன்தான் எதற்கு? அவள் ஏன் உன்னைப் பெற வேண்டும்?} வாரிசேதும் பெறாமல் இருப்பதே அவளுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும்.(13) பிள்ளை ஏதும் இல்லாத பெண்களுக்குக் கவலை ஒன்றுதான், ஆனால் வாரிசைப் பெற்றதால் அவர்கள் எல்லையில்லாத துன்பங்களை அடைந்து, தங்கள் நோக்கங்கள் நிறைவேறாமல் இருந்தால் அத்தகைய மகன்களுக்கு, ஐயோ! {நிந்தனைக்குரியவர்கள்}.(14)

[1] சித்திரசாலை பதிப்பில், "மகன்களால் முலை உண்ணப்படாதவளும், உன் தாயுமான தேவகியையும் நீ காணலாம். தேவியின் காந்தியைக் கொண்டவளாக இருந்தாலும் அவள் காந்தியை இழந்தவளாகத் துன்பங்களில் அல்லலுறுகிறாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மகன்களைத் தன் மார்புறத் தழுவிக் கொள்ளாதவளான தேவகியையும் நீ காணலாம். தேவியைப் போன்றவளாக இருப்பினும் அவன் தன் ஒளியிழந்தவளாகத் துன்புற்று வருகிறாள்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "பெற்ற குழந்தைகளால் பால் உண்ணப்படாத ஸ்தனங்களையுடையவள்; தேவர்களுக்கு ஒப்பானவள்; ஒளிமங்கியவள்; புத்ர சோகத்தால் உலர்ந்தவள்" என்றிருக்கிறது.

ஓ! மாதவா {கிருஷ்ணா}, பகைவரையும் மீட்பவன் நீ, இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவன் நீ, ஒப்பற்ற அருஞ்செயல்களைச் செய்தவன் நீ. உன்னை மகனாகப் பெற்றவள் இத்தகைய துன்பத்தை அடையக்கூடாது.(15) உன்னைப் பெற்றோர் முதிர்ந்தவர்களாக இருந்தாலும், மற்றொரு மனிதனுக்குத் தொண்டாற்றும் நிலையில் இருக்கின்றனர், பாவம் நிறைந்த மனத்தைக் கொண்ட கம்ஸன் உன் நிமித்தமாக அவர்களை இப்போது அவமதித்து வருகிறான்.(16) உன்னைத் தாங்கும் பூமியைப் போலத் தேவகி உன்னால் மதிக்கத்தகுந்தவளெனில் கவலையெனும் நீரில் மூழ்கியிருக்கும் அந்தத் தேவியைக் காப்பதே உனக்குத் தகும்.(17) ஓ! கிருஷ்ணா, எப்போதும் தம் மகனை விரும்புகிறவரும், ஆடம்பரங்களுக்குப் பழக்கப்பட்டவருமான வஸுதேவரைத் தமது மகன்களுடைய பிரிவின் விளைவால் கவலையில் ஆழ்த்துவதில் நீ என்ன அறத்தகுதியை {புண்ணியத்தை} ஈட்டப்போகிறாய்?(18)

ஓ! மாதவா, தீயவனான நாகன் காளியனை யமுனை மடுவில் நீ வீழ்த்தியதைப் போலவே, பசுக்களின் நன்மைக்காகக் கோவர்த்தன மலையை நீ பெயர்த்ததைப் போலவே, செருக்கில் நிறைந்தவனான பலம்வாய்ந்த அரிஷ்டனை நீ அழித்ததைப் போலவே, எப்போதும் பிறரைக் கொல்லும் நோக்கில் இருந்தவனும், தீய மனம் கொண்டவனுமான கேசியை நீ கொன்றதைப் போலவே, இப்போது துயரில் மூழ்கியிருக்கும் வயதான உன் பெற்றோரைக் காக்க பெருங்கவனத்துடன் நீ முயற்சி செய்தால் பெரும் புண்ணியத்தை அடைவாய்.(19-21) கம்ஸனின் அவையில் உன் தந்தை {வஸுதேவர்} அவமதிக்கப்பட்டதைக் கண்டோர் அனைவரும் கவலை நிறைந்தவர்களாகத் தொடர்ந்து கண்ணீர் சிந்துகிறார்கள்.(22) கம்ஸனின் கட்டுப்பாட்டில் இருக்கும் உன் அன்னை தன் மகன்களின் அழிவு போன்ற பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறாள்.(23) ஒரு மகன், தன்னைப் பெற்றவர்களுக்கெனச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடன்கள் அனைத்தையும் அடைக்க வேண்டும்.(24) ஓ! பாவமற்ற கிருஷ்ணா, உன்னைப் பெற்றோருக்கு நீ இந்தத் தயவை காட்டினால் அவர்கள் தங்கள் கவலையைக் கைவிடுவார்கள், நீயும் உன் கடமையை நிறைவேற்றியவனாவாய்" என்றான் {அக்ரூரன்}".(25)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன் அனைத்தையும் அறிந்திருந்ததால் தயாளனான அந்த இளவரசனின் {அக்ரூரனின்} சொற்களுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னான்[2].(26) நந்தனின் தலைமையிலான கோபர்கள் அனைவரும் அக்ரூரனின் சொற்களைக் கேட்டு கம்ஸனின் ஆணைகளைப் பின்பற்ற விரும்பினர்.(27) விரஜவாசிகளில் முதிய கோபர்கள் மதுராவுக்குச் செல்லத் தீர்மானித்து {தங்கள் உடுப்புகளை} உடுத்திக் கொண்டனர். அவர்கள் அனைவரும், தங்கள் காணிக்கைகளை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.(28) பல்வேறு கோபக் குடிகளின் தலைவர்கள், கம்ஸனுக்குக் கப்பமளிக்கும் விருப்பத்தில் தங்கள் கூட்டத்திற்கும், தரத்திற்கும் தக்கபடி எருமைகள், காளைகள், தயிர், பால் மற்றும் தெளிந்த நெய் ஆகியவற்றை ஏற்பாடு செய்தனர். அவர்கள் அனைவரும் இந்தக் கப்பங்கள் அனைத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.(29,30)

[2] சித்திரசாலை பதிப்பில், "கிருஷ்ணன் காரியத்தைப் புரிந்து கொண்டான், மகிமை பொருந்தியவனான கிருஷ்ணன் கோபமடையவில்லை. வீரமிக்க அக்ரூரனிடம் ஒப்புக் கொண்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அளவற்ற தாராளவாதியான அவன் {அக்ரூரன்} என்ன சொல்கிறான் என்பதைக் கிருஷ்ணன் அறிந்திருந்தான். ஆற்றல்மிக்கவனான கேசவன் கோபப்படாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "செய்ய வேண்டியன நன்கு அறிந்த தேஜஸ்வி கிருஷ்ணன் அளவற்ற பராக்ரமமுடைய அக்ரூரரை நோக்கி "பாடம்" (அப்படியே") என்று ஒப்புக் கொண்டான்" என்றிருக்கிறது.

அக்ரூரன், கிருஷ்ணனுடனும், ரோஹிணியின் மகனுடனும் {பலராமனுடனும்} உரையாடியபடியே அந்த இரவை உறங்காமல் கழித்தான்.(31) அந்த இரவு கடந்ததும், பறவைகளின் இனிய ஒலிகளை எதிரொலிக்கும் விடியலில் நிலவின் கதிர்கள் அனைத்தும் மறைந்தன.(32) சூரியனின் கதிர்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்தில் விண்மீன்கள் அனைத்தும் மறைந்தன. காலைத் தென்றலில் இழுத்து வரப்பட்ட பனித்துளிகளால் பூமி நனைந்திருந்தது.(33) மங்கும் நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்து, வானமெனும் படுக்கையில் உறங்கின. இவ்வாறே இரவு மறைந்து சூரியன் எழுந்தான்.(34) குளிர்ந்த கதிர்களைக் கொண்ட சந்திரன், உடல் பெருகும் சூரியனைக் கண்டு வெட்கமடைந்தவனைப் போலத் தன் வடிவை மறைத்துக் கொண்டான்.(35) அப்போது, விரஜத்தின் புறநகர்ப் பகுதிகள் பசுக்களால் நிறைந்திருந்தன, தயிர் கடையப்படும் பாத்திரங்கள் ஒலியெழுப்பின,(36) கன்றுகள் கயிறுகளில் கட்டப்பட்டன, விரஜத்தின் அகலமான வீதிகள் கோபர்களால் {ஆயர்களால்} நிறைந்திருந்தன.(37) அந்த நேரத்தில் கோபர்கள் பல்வேறு பொருட்களுடன் நிறைந்திருந்த பாத்திரங்களை வண்டியில் ஏற்றி, தாங்களும் அவற்றில் ஏறிக் கொண்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றனர்.(38)

அதன்பிறகு கிருஷ்ணன், ரோஹிணியின் மகன் {பலராமன்}, மற்றும் கொடைகளைத் தாரளமாக வழங்கும் அக்ரூரன் ஆகியோர் குடிமுதல்வர்கள் மூவரைப் போலத் தேர்களில் சென்றனர்.(39) அவர்கள் யமுனைக் கரையை அடைந்தபோது, அக்ரூரன் கிருஷ்ணனிடம், "வண்டியை இங்கே நிறுத்தி குதிரைகளைக் கவனித்துக் கொள்வாயாக.(40) தேரில் இருக்கும் பாத்திரத்தை எடுத்துக் குதிரைகளுக்குத் தீவனம் கொடுத்து, எனக்காக ஒருக்கணம் காத்திருப்பாயாக.(41) பாம்புகளின் மன்னனும், உலகங்கள் அனைத்தின் பாதுகாவலனுமான அனந்தனே அண்டத்தின் தலைவன் ஆவான். எனவே, யமுனை ஆற்றுக்குச் சென்று தெய்வீக மந்திரங்களைச் சொல்லி அவனை வழிபடப் போகிறேன்.(42) நீல உடை உடுத்தியவனும், மங்கல மகுடம் கொண்டவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனுமான மாயத் தலைவன் அனந்தனை நான் வணங்கும்போதும், அந்தத் தேவனின் வாயில் இருந்து வரப்போகும் அமுதத்திற்கு நிகரான நஞ்சை, அமுதத்தைப் பருகும் தேவர்களைப் போலப் பருகுவேன்.(43,44) பாம்புகளின் அமைதிக்காகச் சேஷன் ஒரு கூட்டத்தைக் கூட்டி செழிப்புமிக்கப் பாம்புகளின் மன்னனான தன்னையும், அந்த மங்கல வசிப்பிடத்தையும் என்னைக் காணச் செய்வான்.(45) பாம்புகளின் மன்னனுடைய மடுவில் இருந்து நான் திரும்பி வரும் வரை நீங்கள் இருவரும் எனக்காக இங்கே காத்திருப்பீராக" என்றான் {அக்ரூரன்}.(46)

இதைக் கேட்டு நிறைவடைந்த கிருஷ்ணன், "தாமதிக்காமல் செல்வீராக; தாங்கள் இல்லாமல் இங்கே எங்களால் {தனித்திருக்க} காத்திருக்க இயலாது" என்றான்.(47)

அதன்பிறகு, தயாளனான அந்த இளவரசன் {அக்ரூரன்}, யமுனையின் மடுவுக்குள் மூழ்கி இவ்வுலகத்தைப் போலவே ரஸாதலத்திலுள்ள நாகலோத்தைக் கண்டான்.(48) ஆயிரந்தலை கொண்ட தேவன் அனந்தன், தன் அடையாளமாக ஒரு தங்கப் பந்தைக் கொண்டிருப்பதை அவன் அங்கே கண்டான். அவனது {அனந்தனின்} கையில் கலப்பையும், வயிற்றின் அருகில் ஒரு கதாயுதமும் இருந்தன.(49) அவன் மஞ்சள் நிறம் கொண்டவனாகவும், மஞ்சள் இருக்கையில் அமர்ந்திருப்பவனாகவும் இருந்தான். அவன் அடர்நீல உடுப்பை உடுத்தியிருந்தான், அவனது காதுகளில் தாமரை மொட்டுகளுக்கு ஒப்பாகக் குண்டலங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. தாமரை போன்ற அவனது கண்ணிமைகள் மூடி இருந்தன.(50) அந்தப் பாம்பானவன் இரண்டு ஸ்வஸ்திகங்களுடன்[3] ஒளிர்ந்து கொண்டிருந்தான். தன்னுடலாலேயே அமைந்த வெண்மையான அழகிய இருக்கையில் அவன் சுகமாக அமர்ந்திருந்தான்.(51) அவனுடைய மார்பு பொற்தாமரை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனது தலை இடதுபுறம் சற்றே சாய்ந்திருந்த மணிமுடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(52) பகைவரைக் கொல்பவனான அந்தப் பாம்புகளின் மன்னனுடைய பெருங்கரம், வெண்மேகத்திற்கு ஒப்பானதாகவும், செஞ்சந்தனத்தால் பூசப்பட்டதாகவும், தாமரை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. நான்கு திசைகளும் (அவனது மேனியின்) ஒளியால் நிறைந்திருந்தது.(53)

[3] "இஃது ஒரு மாய வடிவமாகும். இஃது எவரின் மீதும், அல்லது எந்தப் பொருளின் மீதும் இருந்தாலும் பொதுவாக அந்த நபர் பேறுபெற்றவர் எனவும், அந்தப் பொருள் பேறுபெற்றது எனவும் கருதப்படுகிறது. நாகன் சேஷன் விஷ்ணுவின் படுக்கையாக இருப்பவன், அவனது {சேஷனின்} ஆயிரந்தலைகளிலேயே அவன் {விஷ்ணு} உறங்குகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

வாஸுகியும், பிற முன்னணி பாம்புகளும் தங்கள் ஒரே மன்னனும், பலம்வாய்ந்தவனும், எங்கும் பரந்த பெருங்கடலின் தலைவனுமான ஸேஷனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.(54) கம்பளன், அஷ்வதரன் என்ற பெயர்களைக் கொண்ட நாகர்கள் இருவர், அறமெனும் அரியணையில் {தர்மாஸனத்தில்} அமர்ந்திருந்த நாகர்களின் மன்னனுக்கு {அனந்தனுக்கு / சேஷனுக்கு} சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.(55) பாம்புகளான அமைச்சர்களால் சூழப்பட்டவனும், கார்க்கோடகன் தலைமையில் இருந்தவனுமான பன்னக மன்னன் வாஸுகி அவனது {சேஷனின்} அருகே ஒளிர்ந்திருந்தான்.(56) தாமரைகளால் மறைக்கப்பட்ட தெய்வீக பொற்குடுவைகளுடன் கூடிய மற்ற முன்னணி நாகர்கள், ஏற்கனவே நீரின் ஒரே பரப்பில் {கடலில்} நீராடியிருந்த அந்த மன்னன் {சேஷன்} மீது நீரைத் தெளித்தனர்.(57) மஞ்சளாடை உடுத்தியவனும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியைக் கொண்டவனும், அடர்நீல வண்ணனுமான விஷ்ணு, பாம்புகளின் மன்னனுடைய {சேஷனின்} மடியில் சுகமாக அமர்ந்திருப்பதை அங்கே அவன் {அக்ரூரன்} கண்டான்[4].(58) ஸங்கர்ஷணனுக்கு {பலராமனுக்கு} ஒப்பானவனும், சந்திரனின் அழகைக் கொடையாகக் கொண்டவனுமான மற்றொரு தெய்வீக வடிவமானவன் {அனந்தன் / சேஷன்} இருக்கையேதுமின்றி அங்கே அமர்ந்திருந்தான்.(59) அங்கே {விஷ்ணுவாக இருந்த} கிருஷ்ணனிடம் சில சொற்களைச் சொல்ல முற்பட்டாலும் கொடைகளை அளிப்பவனின் {அக்ரூரனின்} பேசும் சக்தியானது, அவனது (கிருஷ்ணனின்) ஆற்றலால் ஒடுக்கப்பட்டது.(60)

[4] "வைஷ்ணவ ஆசிரியர்கள் பல்வேறு வகைகளில் இந்நிகழ்வை விளக்கியுள்ளனர். {அது பின்வருமாறு} வஸுதேவன் கிருஷ்ணனைச் சுமந்து சென்ற போது அவன் அவனது கைகளில் இருந்து நழுவி தண்ணீரில் விழுந்தான். இருப்பினும் அவன் அந்தக் குழந்தையை உடனே எடுத்துக் கொண்டான். ஆனால் இந்நேரத்தில் கிருஷ்ணன் வெளிவராமல், கிருஷ்ணனின் வடிவில் விஷ்ணுவே வெளியே வந்தான். அக்ரூரர் யமுனையில் நீராடச் சென்றபோது, அந்தக் கிருஷ்ணன் வெளியே வந்து மதுராவுக்குச் சென்றான், அதே வேளையில் விஷ்ணு கோகுலத்தில் வாழ்ந்திருந்தான். {மேற்சொன்ன வைணவ எழுத்தாளர்கள் இங்கே பதியப்படாத நிகழ்வுகளாக இவற்றையே விளக்குகின்றனர்}" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

கொடைகளை அளிப்பவன் {தானபதி / அக்ரூரன்}, பாம்புகளிடம் இருக்கும் இத்தகைய நித்தியமான, தெய்வீகமான செழிப்பைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான். உடனே அவன் கரைக்குத் திரும்பி, அற்புத வடிவங்களைக் கொண்ட ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் தேரில் அமர்ந்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(61,62) அக்ரூரன் இதைக் கண்டதும், ஆவல் மிகுதியால் மீண்டும் மடுவுக்குள் மூழ்கினான். வெண்முகம் கொண்டவனும், நீல உடை உடுத்தியவனும், தேவர்களின் {பாம்புகளின்} மன்னனுமான அனந்தன் முன்பு போலவே வழிபடப்படுவதையும், பலம்வாய்ந்தவனான கிருஷ்ணனும் ஆயிரந்தலைகளைக் கொண்ட பாம்பு மன்னனின் {அனந்தனின்} மடியில் அமர்ந்திருப்பதையும், முன்பைப் போலவே வழிபடப்படுவதையும் அங்கே அவன் கண்டான்.(63,64) பிறகு உடனே வெளியே வந்து, மந்திரத்தை மனத்தில் உரைத்துக் கொண்டே தான் வந்த அதே வழியில் மீண்டும் தேரை நோக்கிச் சென்றான்.(65)

அப்போது மகிழ்ச்சியுடன் கூடிய கிருஷ்ணன் தன் முன் இருந்த அக்ரூரனிடம், "பாகவத மடுவுக்குள் அமைந்திருக்கும் நாகலோகத்தில் நீர் கண்டதென்ன? நீர் அந்த மடுவுக்குள் நீண்ட நேரம் இருந்ததால் அற்புதமான எதையோ கண்டிருக்கிறீர் என நான் நினைக்கிறேன். உமது மனமும் கலக்கத்தில் இருக்கிறது" என்றான்.(66,67)

கிருஷ்ணனின் சொற்களைக் கேட்ட அக்ரூரன், "ஓ! கிருஷ்ணா, அசைவனவும், அசையாதனவும் உள்ள மொத்த உலகத்திலும் நீயின்றி நிறைவேறும் அற்புதமேது? {உன்னையன்றி வேறு யாரால் அற்புதங்களைச் செய்ய இயலும்?}(68) நான் அங்கே கண்டது பூமியில் அரிதான அற்புதமெனினும், அதையே இங்கேயும் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறேன். ஓ! கிருஷ்ணா, உலகில் அவதரித்திருக்கும் அந்த அற்புதத்துடன் ஐக்கியமாயிருக்கும்போது, இதைவிட வேறேதும் பேரற்புதத்தை நான் காணமாட்டேன். ஓ! தலைவா, சூரியன் மறையும் முன்னர் மன்னன் கம்ஸனின் நகரத்திற்கு நாம் செல்வோமாக" என்று மறுமொழி கூறினான் {அக்ரூரன்}" என்றார் {வைசம்பாயனர்}.(69-71)

விஷ்ணு பர்வம் பகுதி – 81 – 026ல் உள்ள சுலோகங்கள் : 71
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English