Wednesday, 1 July 2020

கேசியின் அழிவு | விஷ்ணு பர்வம் பகுதி – 79 – 024

(கேசிவதம்)

The destruction of Keshi | Vishnu-Parva-Chapter-79-024 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கேசியைக் கொன்ற கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் பேசிய நாரதர்...

Krishna and Keshi

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்தகனின் சொற்களைக் கேட்ட கம்ஸனின் கண்கள் கோபத்தால் சிவந்தன. அவன் ஒற்றைச் சொல்லுக்கும் வழிகொடுக்காமல் தன் வீட்டிற்குள் நுழைந்தான்.(1) ஸ்ருதிகளை நன்கறிந்தவர்களான யாதவர்கள், இவ்வாறு தங்கள் தீர்மானம் தவிடுபொடியானதும், கம்ஸனின் தீய ஒழுக்கம் குறித்துப் பேசிக் கொண்டே தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.(2)

அக்ரூரனும், தனக்கு வழங்கப்பட்ட ஆணையின்படியும், கிருஷ்ணனைக் காணும் விருப்பத்தின் பேரிலும் மனம் போன்ற வேகம் கொண்ட சிறந்த தேரொன்றில் மதுராவை விட்டுப் புறப்பட்டான்.(3) தந்தையைப் போன்ற ஓர் உறவினருடன் சேரப்போவதை முன்கூட்டிய தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணனின் அங்கங்களில் நல்ல பல அறிகுறிகள் {நிமித்தங்கள்} தோன்றின.(4) அக்ரூரன் புறப்படுவதற்கு முன்பு, உக்ரஸேனனின் மகனான மன்னன் கம்ஸன், கிருஷ்ணனைக் கொல்வதற்காகக் கேசியிடம் ஒரு தூதனை அனுப்பினான்.(5) அடக்கப்பட முடியாதவனும், எப்போதும் மக்களை ஒடுக்குபவனுமான கேசி, தூதனின் சொற்களைக் கேட்ட உடனே பிருந்தாவனத்திற்குச் சென்று கோபர்களைக் கொடுமை செய்யத் தொடங்கினான்.(6) பயங்கரம் நிறைந்தவனும், தீயவனும், குதிரையின் வடிவில் இருந்தவனுமான அந்தத் தைத்தியன் {கேசி}, கோபத்தில் மனித ஊனுண்டு அனைவரையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான்.(7) அடக்கப்பட முடியாதவனான அந்தத் தானவன் {கேசி}, பசுக்களையும், ஆயர்களையும் கொன்று, தன் விருப்பப்படி பசு இறைச்சியை உண்ணத் தொடங்கினான்.(8)

தீய ஆன்மாவைக் கொண்ட தானவனான கேசி வாழ்ந்த காடானது, மனித சடலங்கள் நிறைந்த ஒரு சுடலையைப் போலத் தெரிந்தது.(9) அவன் தன் குளம்புகளால் நிலத்தைத் தேய்த்தும், வேகத்தால் மரங்களைப் பலவீனப்படுத்தியும் வானத்தில் குதித்து, தன் கனைப்பொலியால் காற்றை அற்பமாகச் செய்தான் {கனைப்பால் காற்றுடன் போட்டியிட்டான்}.(10) பெருஞ்செருக்குமிக்கவனும், மூடனும், தீயவனுமான அந்த அசுரன், ஒரு குதிரையின் வடிவை ஏற்று, தன் பிடரி மயிரை அசைத்து, காட்டில் உலவியபடியே அங்கே கம்ஸன் விரும்பியவாறு செயல்படத் தொடங்கினான்.(11) தீய செயல்களைச் செய்யும் அந்த அசுரக் குதிரையானவன், கோபர்களை அழித்து அந்தக் காட்டை வெறுமையாகச் செய்தான்.(12) காடுகளின் மூலம் தங்கள் வாழ்வாதாரங்களை அடைந்து வந்த கோபர்களும், பசுக்களும் அந்தக் காட்டை விட்டுச் செல்லும் அளவுக்கு அந்தத் தீயவன் அதைச் சீர்குலைத்தான்.(13) செருக்கடைந்த மனத்துடன் கூடிய அவன், காட்டுவழிகளில் விலங்குகள் செல்லாத வகையில் தொடர்ந்து மனித ஊனுண்டு வந்தான்.(14)

அந்தத் தைத்தியன் {கேசி}, ஒருமுறை பகல்வேளையில், விதியால் உந்தப்பட்டவனைப் போலக் கோபத்துடன் மனிதர்களின் ஒலியைப் பின்தொடர்ந்து சென்று ஆயர்களின் குடியேற்றத்தை வந்தடைந்தான்.(15) குழந்தைகளுடன் கூடிய கோபியரும், கோபிகளும் அவனைக் கண்ட உடனேயே கூக்குரலிட்டு, அண்டத்தின் தலைவனான தங்கள் நாயகன் கிருஷ்ணனிடம் தப்பி ஓடினர்.(16) கிருஷ்ணன், கோபர்கள் மற்றும் அவர்களுடைய மகளிரின் கூக்குரலைக் கேட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து விட்டு, கேசியைச் சந்திக்கச் சென்றான்.(17) வேகமாக ஓடும் கேசியும், தன் கண்களையும், பற்களையும் விரித்து, தன் கழுத்தை உயர்த்தி, பேரொலியுடன் கிருஷ்ணனை நோக்கி ஓடினான்.(18) கோவிந்தன், அசுரக் குதிரையான கேசி தன் மீது பாய்வைதைக் கண்டு சந்திரனை அணுகும் மேகத்தைப் போல அவனை எதிர்த்தான்.(19)

மனிதப் புத்தியுடன் கூடிய கோபர்கள், அந்நேரத்தில் கேசியை அணுகும் கிருஷ்ணனைக் கண்டு, அவனது நலத்திற்காக அவனிடம்,(20) "ஓ! குழந்தாய், கிருஷ்ணா, நீயோ சிறுவன், தீய வழிகளைக் கொண்ட அவனோ அனைவரின் சக்திக்கும் அப்பாற்பட்டவன், எனவே இந்தத் தீய குதிரையை நீ நெருங்காதே.(21) பெருஞ்சக்தி வாய்ந்தவனும், போரில் ஒப்பற்றவனுமான இந்தத் தானவன் {கேசி} வெளியே திரிந்து கொண்டிருந்தாலும், இவன் கம்ஸனுடன் பிறந்த அவனது உயிராவான் {கம்ஸனின் சகோதரனும், உயிரும், புத்தியுமாவான்}.(22) குதிரைகளிலும், படைவீரர்களிலும் அச்சத்தை ஏற்படுத்துபவனான இவன், எந்த விலங்காலும், முதன்மையான பாவியாலும் கொல்லப்பட முடியாதவன்" என்றனர்.(23)

பகைவரைக் கொல்பவனான மதுசூதனன் {கிருஷ்ணன்}, கோபர்களால் சொல்லப்பட்ட இந்தச் சொற்களைக் கேட்டுக் கேசியுடன் போரிட விரும்பினான்.(24) அதன் பிறகு அந்த அசுரக் குதிரையானவன், கோபத்துடன் தெற்குத் திசையில் திரும்பி, தன்னிரு கால்களாலும் மரங்களை முறிக்கத் தொடங்கினான்.(25) அப்போது கோபத்தில் பிறந்த வியர்வைத் துளிகள் அவனது நீண்ட வாயில் இருந்தும், கழுத்தின் அடர்த்தியான பிடரியிலிருந்தும், நெற்றியில் இருந்தும் நீரோடைகளைப் போல வழியத் தொடங்கின.(26) குளிர்காலத்தில் வானத்தில் இருந்து பனியைப் பொழியும் சந்திரனைப் போலக் கடிவாள வாரின் அழுத்தத்தால் உண்டான நுரைகள் அவனது வாயில் இருந்து வெளிவந்தன.(27) ஓ! பாரதா, கனைக்கும் அவனது வாயில் இருந்து வெளி வந்த நுரைகளால் அவன் மாதவனுக்கு நீர் தெளிப்பதை போல இருந்தது.(28) அவனுடைய குளம்புகள் உயர்த்தப்பட்ட போது எழுந்த (அடகவித்தாலான) மதுகப் பொடிக்கு ஒப்பான மஞ்சள் புழுதியால் மறைக்கப்பட்ட கிருஷ்ணனின் குழல்கள் {தலைமயிர்} பழுப்பு நிறத்தை அடைந்தன.(29) நடந்தும், குதித்தும் பூமியைப் பிளந்த கேசி, தன் பற்களைக் கடித்துக் கொண்டே கிருஷ்ணனை நோக்கி ஓடினான்.(30) குதிரைகளில் முதன்மையானவனும், சக்திவாய்ந்தவனுமான தானவன் கேசி, கிருஷ்ணனுடன் போரிட்டபோது, தன் முன்னங்கால்களால் அவனது மார்பைத் தாக்கி, அசைக்க முடியாத வலிமை கொண்ட தன் குளம்புகளால் மீண்டும் மீண்டும் அவனைக் காயப்படுத்தினான்.(31,32) அதன்பிறகு அவன், தன் பயங்கர வாயில் ஆயுதங்களாக அமைந்திருக்கும் தன் கூரிய பற்களால் வாஸுதேவனின் {கிருஷ்ணனின்} கரங்களின் மேற்பகுதியைக் கடித்தான்.(33) நீண்ட பிடரியைக் கொண்ட கேசி கிருஷ்ணனுடன் போரிட்ட அந்நேரத்தில், மேகங்களுடன் வானத்தில் கூடியிருக்கும் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(34)

கோபத்தால் இரட்டிப்பான பலம் கொண்டவனும், பெரும் வேகம் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கக் குதிரையானவன், கிருஷ்ணனின் மார்பைத் தாக்க முயன்றான்.(35) அப்போது, பேராற்றல் வாய்ந்தவனான கிருஷ்ணன் கோபத்துடன் தன் கரங்களை நீட்டி அந்த அசுரனின் வாயைப் பிடித்தான்.(36) இதனால் அவனது கரங்களைக் கடிக்கவோ, நொறுக்கவோ கேசியால் முடியவில்லை. மறுபுறம் அவன் தனது பற்கள் பிடுங்கப்பட்டும், நொறுக்கப்பட்டும், நுரையுடன் கூடிய குருதியைக் கக்கத் தொடங்கினான்.(37) அவனது உதடுகள் சிதறின, அவனது தாடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, அவனது கண்கள் சிதைக்கப்பட்டன. அவை அனைத்தும் பிதுங்கி வெளியே வந்தன.(38) அவனது தாடைகள் உடைந்தன, அவனது கண்கள் குருதியால் நிறைந்திருந்தன. அவன், கோபத்தில் தனது கால்களை உயர்த்தி, கலங்கிய மனத்துடன் பல வகையில் முயற்சித்தான்.(39) அவன் தன் கால்களைக் கொண்டு மீண்டும் மீண்டும் குதித்து, மலத்தையும், சிறுநீரையும் வெளியேற்றினான், அவனது மயிர் வியர்வையில் ஊறியிருந்தது, கால்கள் அசைவற்றவையாகின.(40) அப்போது கேசியின் தலையைச் சுற்றியிருந்த கிருஷ்ணனின் கரம், மழைக்காலத்திற்குப் பிறகு, அர்த்தச்சந்திர கதிர்களால் பீடிக்கப்பட்ட ஒரு மேகத்தைப் போல ஒளிர்ந்தது.(41) கிருஷ்ணனுடன் போரிடுகையில் களைப்படைந்த அங்கங்களுடன் கூடிய கேசியும், விடியலில் மேரு மலையில் களைத்து இறங்கும் சந்திரனைப் போலத் தோன்றினான்.(42) கிருஷ்ணனின் கரங்களால் பிடுங்கப்பட்ட அவனது பற்கள், நீரற்ற கூதிர்கால வெண்மேகங்களைப் போல அவனது வாயில் இருந்து விழுந்தன.(43)

கேசி களைப்பால் பெரிதும் சோர்ந்து போன போது, கிருஷ்ணன் தன் கரங்களை நன்கு நீட்டி அவனை இரண்டாகப் பிளந்தான்.(44) இவ்வாறு கிருஷ்ணனால் நொறுக்கப்பட்ட தானவன் கேசியினுடைய முகம் சிதைந்தது, அவன் அவலமிக்கவனாகக் கதறத் தொடங்கினான்.(45) அவனது அங்கங்கள் அனைத்தும் நடுங்கின, சிதைந்தன, அவனது வாயில் இருந்து குருதி வெளிப்பட்டது. அவன் பாதித் துண்டிக்கப்பட்ட மலையைப் போலச் சிதைந்தவனாக அங்கே காணப்பட்டான்.(46) பயங்கரம் நிறைந்தவனான அந்த அசுரன் இவ்வாறு கிருஷ்ணனின் கைகளால் அழுத்தப்பட்டு, வாய் பிளக்கப்பட்டு, இரண்டாகப் பிளக்கப்பட்ட யானையைப் போலக் கீழே விழுந்தான்.(47) கிருஷ்ணனின் கரங்களால் சிதைக்கப்பட்ட கேசியின் பயங்கரத் தோற்றம், திரிசூல பாணியான ருத்திரனால் கொல்லப்பட்ட விலங்கைப் போலத் தெரிந்தது.(48) இரண்டாகப் பிளக்கப்பட்ட அவனது உடலின் ஒவ்வொரு பகுதியும் இரண்டு கால்களையும், முதுகின் பாதியையும், வாலின் பாதியையும், ஒரு கண்ணையும், ஒரு மூக்கையும் கொண்டதாகப் பூமியில் கிடந்தது.(49) கேசியின் பற்களால் காயமடைந்த கிருஷ்ணனின் கைகளும், யானையின் தந்தங்களால் தேய்க்கப்பட்டவையும், காட்டில் வளர்பவையுமான பனை மரங்களைப் போல ஒளிர்ந்தன.(50) தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், போர்க்களத்தில் இவ்வகையில் கேசியைக் கொன்று, அவனது உடலை இரண்டாகப் பிளந்து, சிரித்தபடியே அங்கே நின்றிருந்தான்.(51) கேசி கொல்லப்பட்டதைக் கண்ட கோபர்களும், கோபியரும், தங்கள் தொல்லைகள் அனைத்தும், களைப்பனைத்தும் அகன்றவர்களாகப் பெரும் மகிழ்ச்சியை அடைந்தனர்.(52) அழகிய தாமோதரனை வரவேற்ற அவர்கள், தங்கள் தகுநிலைக்கும், வயதுக்கும் ஏற்ப இனிய சொற்களால் மீண்டும் மீண்டும் அவனைக் கௌரவித்தனர்.(53)

அந்தக் கோபர்கள் {ஆயர்கள்}, "ஓ! குழந்தாய், ஓ! கிருஷ்ணா, குதிரையின் வடிவையேற்று, மக்களின் முள்ளாகப் பூமியில் திரிந்து வந்த தைத்தியனைக் கொன்று எளிதில் செய்ய முடியாத பணியை நீ செய்திருக்கிறாய்.(54) இந்தத் தீய குதிரை உன்னால் கொல்லப்பட்டதால், பிருந்தாவனத்தில் இப்போது மங்கலத்தன்மை நிறைந்திருக்கிறது, மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும் சுகமாக இருக்கின்றன.(55) இந்தத் தீய மனம் கொண்டவன், நம் ஆயர்கள் பலரையும், கன்றுகளை விரும்பும் பசுக்களையும், கிராமங்களையும் அழித்திருக்கிறான்.(56) இந்தப் பாவி (அசுரன்) சுகமாகத் திரிவதற்காக மனிதர்களின் உலகங்களை ஒன்றுமில்லாமல் {உலகத்தை மனிதர்கள் இல்லாமல்} ஆக்கி, அண்ட அழிவையே ஏற்படுத்த இருந்தான்.(57) ஓ! கிருஷ்ணா, தேவர்களுக்கு மத்தியிலும் வாழ விரும்பும் ஒருவனால் அவனுக்கு முன்னால் நிற்க முடியாது எனும்போது, அழிவைக் கொண்ட மனிதர்களைக் குறித்துச் சொல்வானேன்" என்றனர்.(58)

பிராமணரான நாரதர், அப்போது காட்சியில் இருந்து மறைந்தவராக வானத்தில் இருந்து, "ஓ! விஷ்ணு, ஓ! தேவா, ஓ! கிருஷ்ணா, நான் நிறைவடைந்தேன்.(59) கேசியை அழித்ததன் மூலம் நீ செய்த செயற்கரிய பணி உன்னாலும், தேவர்களில் முக்கண் தேவனாலும் (சிவனாலும்) மட்டுமே முடியும்.(60) ஓ! குழந்தாய், என் மனம் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது, எனவே, மனிதனுக்கும், குதிரைக்கும் இடையில் நடக்கும் இந்த மோதலைக் காண விரும்பியே நான் தேவலோகத்தில் இருந்து இங்கே வந்தேன்.(61) ஓ! கோவிந்தா, பூதனை முதலியோரை அழித்த உன் செயல்களையும், தற்போதைய உன் அருஞ்செயலையும் கண்டு நான் பெரிதும் நிறைவடைந்தேன்.(62) தீய மனம் கொண்ட அசுரக்குதிரையான இந்தக் கேசி, தன்னுடலைப் பெருக்கும்போது, பலனை {பலாசுரனைக்} கொன்ற மஹேந்திரனும் அச்சத்தால் பீடிக்கப்படுவான்.(63) உன் கைகளை நீட்டி நீ அவனைப் பிளந்தாய். அண்டத்தின் வேரான பிரம்மனால் இந்த மரணமே அவனுக்கு விதிக்கப்பட்டிருந்தது.(64) ஓ! விஷ்ணு, இப்போது நான் அறிவிக்கப் போவதைக் கேட்பாயாக. நீ கேசியைக் கொன்றதால் இவ்வுலகில் கேசவன் என்ற பெயரால் அழைக்கப்படுவாய்.(65) ஓ! கேசவா, உனக்கு நன்மை நேரட்டும், நான் விரைவில் செல்ல வேண்டும். இன்னும் நிறைவேற்ற வேண்டிய பல பணிகள் உனக்கு இருக்கின்றன, நீயே அவற்றைச் செய்ய வல்லவன். எனவே, அவற்றைத் தாமதமேதும் இல்லாமல் செய்வாயாக.(66)

ஓ! தேவா, நீ மற்றொரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, உன் சக்தியைச் சார்ந்திருக்கும் தேவர்கள் பிறர், உன் அருஞ்செயல்களை நடித்துக் காட்டும் மனிதர்களைப் போல விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.(67) தேவலோகம் செல்ல வேண்டிய மன்னர்களுக்கிடையே மூளப்போகும் பாரதப் போர்ப் பெருங்கடலுக்கான {பாரத யுத்த ஸமுத்ரத்துக்கான} நேரம் நெருங்கிவிட்டது.(68) மன்னர்கள் சக்ரலோகத்துக்குச் செல்வார்களென்பதால், அவர்களுக்கான வீடுகள் அங்கே கட்டப்படுகின்றன, வானவீதிகள் ஒழுங்கு செய்யப் படுகின்றன, தேர்கள் பதக்கங்களுடன் பளபளப்பாக்கப்படுகின்றன.(69) ஓ! கேசவா, உக்ரஸேனன் மகன் {கம்ஸன்} உன்னால் கொல்லப்பட்டு நீ உன் நிலையை அடையும்போது, பயங்கரமானதும், அனைத்தையும் அழிப்பதுமான மன்னர்களின் போர் தொடங்கும்.(70) ஓ! மாதவா, உன் செயல்கள் ஒப்பற்றவை; எனவே போருக்கான நேரத்தில் பாண்டவர்கள் உன் புகலிடத்தை நாடுவார்கள், நீயும் அவர்களின் காரணத்தை ஆதரிப்பாய்.(71) நீ அரச அரியணையில் இருக்கும்போது, மங்கலமானதும், மிகச் சிறந்ததுமான செழிப்பை மன்னர்கள் நிச்சயம் துறப்பார்கள்.(72) ஓ! கிருஷ்ணா, ஓ! அண்டத்தின் தலைவா, தேவலோகத்திலும், அண்டத்திலும் வாழும் தேவர்களின் ஆய்வை இவ்வாறு நான் உனக்குச் சொன்னேன். ஸ்ருதிகளில் இது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த வரலாறு உலகில் புகழ்பெறும்.(73) ஓ! தலைவா, நான் உன்னையும், உன் செயல்களையும் கண்டேன். இப்போது செல்கிறேன், கம்ஸன் கொல்லப்பட்டதும் மீண்டும் திரும்புவேன்" என்றார் {நாரதர்}.(74)

நாரதர் இதைச் சொல்லிவிட்டு வான வழியில் சென்றார். தெய்வீக இசையில் திறம்பெற்றவரான நாரதரின் சொற்களைக் கேட்ட கோபர்களும் {ஆயர்களும்}, கிருஷ்ணனுடன் சேர்ந்து விரஜத்திற்கு {பிருந்தாவனத்தின் ஆயர்பாடிக்குச்} சென்றனர்" என்றார் {வைசம்பாயனர்}.(75,76)

விஷ்ணு பர்வம் பகுதி – 79 – 024ல் உள்ள சுலோகங்கள் : 76
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English