Thursday, 18 June 2020

பிரலம்பாசுரனின் அழிவு | விஷ்ணு பர்வம் பகுதி – 69 – 014

(பிரலம்பவதம்)

The destruction of demon Pralamva | Vishnu-Parva-Chapter-69-014 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய பச்சைக் குதிரை விளையாட்டு; பிரலம்பாசுரனைக் கொன்ற பலராமன்; தேவர்களிடமிருந்து பலதேவன் என்ற பட்டத்தைப் பெற்ற பலராமன்...

Pralamva and Valarama

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு வஸுதேவனின் மகன்கள் இருவரும் {பலராமனும், கிருஷ்ணனும்} அந்தப் பனங்காட்டைவிட்டு அகன்று மீண்டும் பாண்டீர மரத்திற்கு வந்தனர்.(1) பகைவரை அடக்குபவர்களான அந்த அழகர்கள் இருவரும், செழிப்புமிக்கக் காட்டு நிலத்தில் பயணித்து, எப்போதும் பெருகிக் கொண்டிருக்கும் பசுமந்தையை மேய்த்துக் கொண்டே தங்கள் கரங்களைத் தட்டவும், பாடவும் தொடங்கினர். அவர்கள் சில வேளைகளில் மரங்களை {பசுக்களுக்கான தழைகளைத்} திரட்டிக் கொண்டும், கன்றுகளுடன் கூடிய பசுக்களைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டும் இருந்தனர்.(2,3) அவர்களின் தோள்களில் கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன, அவர்களின் மார்புகள் மங்கலக் காட்டு மலர் {திருத்துழாய்} மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் புதிதாய் கொம்பு முளைத்த இரண்டு காளைகளைப் போலத் தெரிந்தனர்.(4) தங்கம் மற்றும் மைப்பொடிகள் போன்ற வண்ணத்துடனும், அதே நிறத்திலான உடைகளைத் தங்கள் மேனியில் அணிந்து கொண்டும் இருந்த அந்தச் சிறுவர்கள் இருவரும், வானவில்லுடன்[1] கூடிய வெள்ளை மற்றும் கருப்பு மேகங்களைப் போலத் தெரிந்தனர்.(5)

[1] "இங்கே உண்மையில் இருக்கும் சொல் இந்திரவில் என்பதாகும். இந்து தொன்மவியலின்படி வானவில் என்பது மழைப் பொழிவிற்குத் தலைமை தாங்கும் தேவனான இந்திரனின் வில்லாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

குசப் புல்லின் நுனி அல்லது மலர்களைக் கொண்டு அழகிய காதுவளையங்களை அமைத்தும், காட்டுடைகளை அணிந்து கொண்டும் தோழர்களுடன் காட்டுவழிகளில் திரிந்த அவர்கள் சில வேளைகளில் கோவர்த்தன மலையிலும், சில வேளைகளில் காட்டிலும், சில வேளைகளில் மேட்டுச்சமவெளிகளிலும் விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.(6,7) தேவர்களாலும் வழிபடத்தகுந்தவர்களான அவர்கள், இவ்வாறு மனித நடத்தையைப் பின்பற்றியும், ஆயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டும் காட்டில் திரியத் தொடங்கினர்.(8)

இவ்வாறு விளையாடிக் கொண்டே அவர்கள், வளர்ந்தவையும், மிகச் சிறந்தவையுமான கிளைகளால் மறைக்கப்பட்ட பாண்டீரகமெனும் ஆலமரத்தைக் குறுகிய காலத்திற்குள் அடைந்தனர்.(9) போரில் திறம்பெற்றவர்களான அவர்கள், ஊஞ்சல்கள், வலைகள் மற்றும் கற்களுடன் அங்கே விளையாடத் தொடங்கினர்.(10) சிங்கங்களைப் போன்ற சக்திவாய்ந்த அந்த இரண்டு வீரர்களும், தங்களுடன் இருந்த ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து தங்கள் விருப்பப்படி தற்காப்பு தொடர்பான பல அருஞ்செயல்களை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தத் தொடங்கினர்.(11) இவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பன் என்ற பெயரைக் கொண்ட அசுரர்களில் முதன்மையானவன் அவர்களைக் கொல்லும் நோக்கில் அங்கே வந்து, அவர்களது பலவீனங்களைக் காணத் தொடங்கினான்.(12) அந்த அசுரன், காட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கோபனின் வடிவை ஏற்றுத் தன் விளையாட்டாலும், புன்சிரிப்புகளாலும் அந்தச் சகோதரர்கள் இருவரையும் மயக்கத் தொடங்கினான்.(13) தானவர்களில் முதன்மையான அவன், மனித குலத்தில் பிறக்காதவன் எனினும் மனித வடிவை ஏற்று அச்சமில்லாமல் {ஐயத்திற்கு இடமில்லாமல்} அவர்களுடன் சேர்ந்தான்.(14)

Harinakridana - play of leaping in pairs
கோபனின் வடிவில் அங்கே வந்தவனைத் தங்கள் நண்பனாகக் கருதிய அந்தக் ஆயர்கள், தேவர்களின் பகைவனான அவனுடன் விளையாடத் தொடங்கினர்.(15) கோபனின் வடிவை ஏற்ற பிரலம்பனும், கிருஷ்ணன் மற்றும் ரோஹிணி மகனின் {பலராமனின்} பலவீனங்களைத் தேடி அவர்களின் மீது தன் பயங்கரப் பார்வையைச் செலுத்தினான்.(16) அற்புத ஆற்றலைக் கொண்ட கிருஷ்ணனைத் தடுக்கப்பட முடியாதவனாகக் கருதி அவனைக் {கிருஷ்ணனைக்} கைவிட்டு பலதேவனை அழிப்பதில் தன் மனத்தைச் செலுத்தினான்.(17) ஓ! பாவமற்றவனே, அந்நேரத்தில் தலைவன் {கிருஷ்ணன்}, ஈரிருவராகக் குதிக்கும் {பச்சைக்குதிரை என்ற} ஒரு புதிய விளையாட்டை அறிமுகப்படுத்தினான்[2].(18) ஓ! பாவமற்றவனே, கிருஷ்ணன் ஸ்ரீதாமன் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு ஆயர்குலச் சிறுவனுடனும், ஸங்கர்ஷணன் பிரலம்பனுடனும் குதித்து விளையாடினர்.(19) பலம் குறைந்த மற்ற கோபாலச் சிறுவர்களும் தங்கள் தோழர்களின் துணையுடன் பெரும்பலத்துடன் குதிக்கத் தொடங்கினர்.(20)

[2] சித்திரசாலை பதிப்பில், "மாடு மேய்க்கும் சிறுவர்கள் அனைவரும், இருவர் இருவராக விளையாடும் "குதிக்கும் மான்" என்றழைக்கப்படும் விளையாட்டை ஆடத் தீர்மானித்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஹரிணாக்ரீடனம் என்றழைக்கப்படும் ஒரு விளையாட்டு இருக்கிறது. அவர்கள் அனைவரும் இருவர் இருவராக இந்த விளையாட்டில் ஈடுபட்டனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இது மான் போல விளையாடுதல் என்ற பொருளைக் கொண்டதாகும். ஒருவன் மற்றொருவனின் முதுகைத் தவளை போன்று தாண்டும் ஒரு விளையாட்டாகும். இதில் வீழ்த்தப்பட்ட சிறுவன், வெற்றி பெற்ற சிறுவனைச் சுமக்க வேண்டும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஹரிணாக்ரீடனம் (கை கால்களை ஊன்றி மான் போலத் துள்ளியோடி, தோற்றவன், ஜயித்தவனைச் சுமந்து ஒரு தூரம் போதல்) என்கிற குழந்தை விளையாட்டை ஆடுகிற அவர்கள் எல்லோரும் இரண்டு இரண்டு பேராகச் சேர்ந்து ஒரே சமயத்தில் கிளம்பினார்கள்" என்றிருக்கிறது. இந்த விளையாட்டுத் தமிழகத்தில் பச்சைக் குதிரை தாண்டல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணன் ஸ்ரீதாமனையும், ரோஹிணியின் மகன் {பலராமன்} பிரலம்பனையும் வீழ்த்தினர், கிருஷ்ணன் தரப்பைச் சேர்ந்தவர்கள் பிற சிறுவர்களை வீழ்த்தினர்.(21) அதன் பிறகு, {அந்த விளையாட்டில்} வீழ்ந்தவர்கள் வெற்றிபெற்றவர்களைத் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு மகிழ்ச்சியாகப் பாண்டீரக மரத்தின் அடியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை விரைந்து அடைந்தனர். தானவர்களில் முதன்மையான பிரலம்பன், தன் தோள்களில் பலதேவனைச் சுமந்து கொண்டு, சந்திரனுடன் கூடிய மேகத்தைப் போல எதிர் திசையில் ஓடத் தொடங்கினான்.(22,23) பேருடல் படைத்த (தானவனான) அவன் {பிரலம்பன்}, ரோஹிணியின் புத்திசாலி மகனுடைய கனத்தைச் சுமக்க இயலாமல், சக்ரனால் {இந்திரனால்} தாக்கப்படும் மேகத்தைப் போல (தன் உடலை) பெருக்கினான்.(24) அப்போது தானவர்களில் முதன்மையான அந்தப் பிரலம்பன், பாண்டீரக ஆலமரத்தைப் போன்றதும், காய்ச்சிய மையினாலான ஒரு மலையைப் போலப் பிரகாசமானதுமான தன் பேருடலை வெளிப்படுத்தினான்.(25)

பெரிய முகத்தையும், பெருங்கழுத்தையும், தேர்ச்சக்கரங்களைப் போன்ற கண்களையும், ஐந்து அடுக்குகளைக் கொண்டதும், சூரியனைப் போன்றதுமான மகுடத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தலையையும் கொண்ட அந்தப் பயங்கரத் தைத்தியன், சூரியனால் தாக்கப்படும் மேகத்தைப் போல அப்போது ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவனது பாதத்தின் கனத்தால் பூமி மூழ்கினாள்.(26,27) பெருங்கடலின் அலைகளில் மூழ்கும் மனிதர்களைச் சுமந்து செல்லும் யமனைப் போலவே பேரசுரனும், வீரர்களில் முதன்மையானவனும், நீண்ட மாலைகளாலும், பிற ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனும், நீண்ட உடையை உடுத்தியவனுமான பிரலம்பனும், நீருண்ட மேகம் போன்ற ரோஹிணியின் மகனை {பலராமனை}, விரைவாகவும், மறைவாகவும் தூக்கிச் சென்றான். இவ்வாறு அவனால் தூக்கிச் செல்லப்பட்டபோது, வானத்தில் இருக்கும் சந்திரன் பயங்கர மேகங்களால் சுமந்து செல்லப்படுவதைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(28-30)

அந்தப் பயங்கரத் தைத்தியனின் தோள்களில் தன்னைக் கண்ட ஸங்கர்ஷணன் {பலராமன்}, தன் மனத்தில் ஐயங்கொள்ளத் தொடங்கி, கிருஷ்ணனிடம்,(31) "ஓ! கிருஷ்ணா, மலைபோன்று பெரியவனும், கவசம் தரித்தவனும், பெரும் மாயை வெளிப்படுத்தி மனித வடிவை ஏற்றவனுமான இந்தத் தைத்தியன் என்னை அபகரித்துச் செல்கிறான்.(32) தீய மனம் கொண்ட இந்தப் பிரலம்பன் செருக்கில் வளர்ந்து தன் சக்தியை இரட்டிப்பாக்கியிருக்கிறான். நான் எவ்வாறு இவனை வீழ்த்துவது?" என்று கேட்டான்.(33)

ரோஹிணி மகனின் {பலராமனின்} பலத்தையும் குணத்தையும் கிருஷ்ணன் நன்கறிந்தவன் என்பதால் புன்னகைத்தவாறே அவனிடம் மகிழ்ச்சியான சொற்களில் அமைதியாக,(34) "ஓ! தேவா, நீர் அண்டத்துடன் அடையாளங்காணப் படுபவரும், நுட்பத்திலும் நுட்பமானவரும் ஆவீர். நீர் வெறுமனே மனிதனின் நடத்தையையே வெளிப்படுத்துகிறீர்.(35) அண்ட அழிவில் நீர் ஏற்கும் நாராயண வடிவை தியானிப்பீராக. நீர் இப்போது உமது உண்மை வடிவையும், திறன்களின் காரணமாக சக்திவாய்ந்தவர்களான பண்டைய ரிஷிகள், பெருங்கடல்கள், பிரம்மன் மற்றும் நீரின் ஒன்றுபட்ட (நேரத்தில் வெளிப்பட்ட வடிவமான உமது) உடலையும் இப்போது அறிவீராக.(36,37) வானமே உமது தலை, தண்ணீர் உமது வடிவம், பூமி உமது பொறுமை, நெருப்பு உமது வாய், உலகங்கள் அனைத்தின் உயிரும் உமது மூச்சு, காற்றே உமது வசிப்பிடம், அனைத்தையும் படைப்பது உமது மனமே.(38) நீர் ஆயிரம் முகங்களையும், ஆயிரம் அங்கங்களையும், ஆயிரம் கால்களையும், ஆயிரம் கண்களையும், ஆயிரம் தாமரை உந்திகளையும், ஆயிரங்கதிர்களையும் கொண்டவராகவும், உமது பகைவரைக் கொல்பவராகவும் இருக்கிறீர்.(39)

நீர் ஏற்கனவே வெளிப்படுத்தியதையே தேவர்கள் காண்கின்றனர். முன்பு உம்மால் சொல்லப்படாத எதையும் ஒருவராலும் காணமுடியாது.(40) இவ்வுலகில் அறியத்தக்க எதையும் அவர்கள் அனைவரையும் நீர் அறியச் செய்தீர். நீர் மட்டுமே அறிந்த எதையும் தேவர்கள் எவரும் அறியமாட்டார்கள்.(41) தேவர்கள் இயற்கையான உமது ஆகாய வடிவைக் கண்டு, உம்மில் தோன்றிய (பொற்காலத்தில் {கிருதயுகத்தில்} நீர் ஏற்ற) அந்தச் செயற்கை வடிவை வழிபடுகிறார்கள்.(42) தேவர்களால் உமது எல்லையைக் காண இயலாததால் நீர் அனந்தன்[3] என்ற பட்டப்பெயரைப் பெற்றீர். நுட்பமானவரும், நுட்பமானவற்றுக்கு {புலன்களுக்கு} அப்பாற்பட்டவரும் நீரே.(43) ஓ! தேவா, இந்த அண்டத்தைத் தாங்குபவர் நீரே. உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்திற்கும் ஆதாரமானதும், உம்மில் நிலைநிறுத்தப்பட்டதுமான இவ்வுலகம், அனைத்துப் பகுதிகளையும் நிலைநிறுத்துகிறது.(44) என் உடல் நான்கு கடல்களிலும்[4] பரவியிருக்கிறது, நீரோ நான்கு வர்ணங்களின்[5] பிரிவை ஏற்படுத்தினீர். நான்கு யுகங்களின்[6] தலைவனும், நான்கு ஹோத்ரங்களின் பலன்களை[7] உண்பவரும் நீரே.(45)

[3] "இதன் பொருள் எல்லையற்றவன் என்பதாகும். கடவுள் தொடக்கமும் முடிவுமற்றவன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[4] "இந்து தொன்மவியலின்படி இந்த உலகம் நான்கு பக்கங்களிலும் நான்கு பெருங்கடல்களால் சூழப்பட்டிருக்கிறது. இது கடவுளின் உலகளாவிய வடிவை அடையாளப்பூர்வமாகக் குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] "பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எனும் நான்கு அடிப்படை சாதிகள் அல்லது வர்ணங்கள் இவை. பிராமணர்கள் பிரம்மனின் வாயிலிருந்து உதித்த புனிதமான வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. க்ஷத்திரியர்கள் அல்லது படை சாதியினர், அவனது கரங்களில் இருந்து உதித்தவர்களாகச் சொல்லப்படுகின்றனர். வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம் அவனது தொடைகளில் இருந்தும், சூத்திரர்கள் அல்லது அடிமை வர்க்கத்தினர் அவனது கால்களில் இருந்தும் உதித்தவர்கள். சாதியின் தோற்றம் குறித்த தொடக்கக் குறிப்பு புருஷ சூக்தம் என்றழைக்கப்படும் ரிக் வேதப் பாடலில் காணப்படுகிறது. இது தொடர்பாகப் பல்வேறு கதைகள் பல்வேறு புராணங்களில் காணப்படுகின்றன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[6] "யுகம் என்பது சத்யம், திரேதம், துவாபரம் மற்றும் கலி என்று நான்கு பெயர்களில் குறிப்பிடப்படும் உலகின் காலங்களாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[7] "இது நெருப்பில் காணிக்கையளிக்கப்படத் தகுந்தது என எண்ணப்படும் ஒரு பொருளாகும். இது நெருப்புடன் ஆகுதியில் எரிக்கப்படும் காணிக்கையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

நாமிருவரும் ஒருவராகவே இருப்பினும், அசைவன மற்றும் அசையாதனவற்றுடன் கூடிய அண்டத்தைப் பாதுகாப்பதற்காக இரு வெவ்வேறு வடிவங்களை ஏற்றோம். என்னைப் போலவே நீரும் அண்டத்தின் தலைவரே.(46) நான் நித்தியமான கிருஷ்ணன், நீரோ புராதன சேஷன்[8]. நீர் எப்போதும் இருப்பவரான உலகின் சேஷ தேவன். இரண்டாகப் பிரிந்திருக்கும் நம்மாலேயே இந்த உலகம் நிலைநிறுத்தப்படுகிறது.(47) உம்மோடு நான் அடையாளங்காணப்படுகிறேன், நீரும் நானும் ஒருவரே. நாமிருவரும் பெருஞ்சக்திபடைத்தவர்களும் ஒருவரும் ஆவோம்.(48) ஓ! தேவா, {அறியாமையில்} உணர்வற்றவரைப் போலக் காத்திருப்பதால் என்ன பயன்? வஜ்ரம் போன்ற உமது முஷ்டியால் தேவர்களின் பகைவனான இந்தத் தானவனின் தலையைப் பலமாகத் தாக்குவீராக" என்றான் {கிருஷ்ணன்}".(49)

[8] "இது பலதேவனின் மற்றொரு பெயராகும். மேலும் இது விஷ்ணுவின் படுக்கையும், மேற்கூரையுமாக இருப்பவனும், பாம்புகளின் மன்னனுமான ஆயிரந்தலை பாம்பின் பெயருமாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ரோஹிணியின் மகன் {பலராமன்}, கிருஷ்ணனின் அந்தச் சொற்களைக் கேட்டு, பழைய வரலாற்றை நினைவுகூர்ந்து, மூவுலகிலும் படர்ந்தூடுவியிருக்கும் தன் பலத்தால் நிறைந்தவனாக, வஜ்ரத்திற்கு ஒப்பானதும், நன்கு அமைந்ததுமான தனது முஷ்டியைக் கொண்டு தீயவனான பிரலம்பனின் தலையைத் தாக்கினான்.(50,51) முன்பகுதியை இழந்த அந்தத் தானவனின் தலை அவனுடைய உடலுக்குள் நுழைந்தது, உயிரை இழந்த அவனும் தன் கால்முட்டிகளால் தரையைத் தீண்டினான்[9].(52) அதன் பிறகு தரையில் நீண்டு கிடந்த அவனது உடலானது, வானத்தில் சிதறிக் கிடக்கும் மேகத்தைப் போலத் தெரிந்தது.(53) பல்வேறு தாதுக்கள் நிறைந்த நீரோடைகள் மலைச்சிகரத்தைவிட்டு வெளிவருவதைப் போலவே தலையில்லாத அவனது உடலில் இருந்து குருதி வெளியேறியது.(54)

[9] சித்திரசாலை பதிப்பில், "பலமிக்கக் கரங்களைக் கொண்ட பலராமன், வஜ்ரம் போன்று வலுவான தன் முடிஷ்டியை மடக்கி தீயவனான பிரலன்பனின் தலையைத் தாக்கினான். அவனது மண்டையோடு நொறுங்கி அவனது தலை உடலுக்குள் தள்ளப்பட்டது. அந்தத் தானவன் கால்முட்டிகளால் தாக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வலிமைமிக்கக் கரங்களையும், துணிச்சலையும் கொண்ட அவன், வஜ்ரத்தின் வலுவைக் கொண்ட தன் முஷ்டியைக் கொண்டு, தீயவனான பிரலம்பனை பெரும்பலத்துடன் தலையில் தாக்கினான். அவனது மண்டையோடு நசுங்கி அவனுது உடலுக்குள் புகுந்தது. தலை இல்லாமலும், உயிர் இல்லாமலும் அவன் தன் கால்முட்டியை மடக்கித் தரையில் விழுந்தான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மிக்கப் புஜபலம் பெற்ற பலராமன் வஜ்ராயுதத்துக்கு ஸமமாகப் பிடிக்கப்பட்ட முஷ்டியால் இந்த அயோக்யன் ப்ரலம்பனை நன்கு கொன்றான். அஸுரனின் தலை, தன் உடலில் மண்டையோடு வரை மூழ்கியது. பலராமனின் முழங்கால்களால் அடிக்கப்பட்டு அந்த அஸுரமஹான் உயிர் நீங்கி கீழே விழுந்து கிடந்தான்" என்றிருக்கிறது.

பலமிக்கவனான ரோஹணியின் மகன் {பலராமன்} இவ்வாறு பிரலம்பனைக் கொன்று தன் பலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு கிருஷ்ணனைத் தழுவிக் கொண்டான்.(55) அதன் பிறகு கிருஷ்ணனும், வானத்தில் நின்ற தேவர்களும், ஆயர்களும், பெரும் பலம் மிக்கப் பலதேவனின் வெற்றியைச் சொல்லும் வகையில் வாழ்த்துப் பாடல்களுடன் அவனது மகிமைகளைப் பாடத் தொடங்கினர்.(56) புலப்படாமல் வானத்தில் இருந்த தேவ குரலொன்று, "இந்தத் தைத்தியன் சோர்வற்ற செயல்பாடுகளைக் கொண்ட ஒரு சிறுவனின் சக்தியால் கொல்லப்பட்டான்" என்றது.(57) தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவனான அந்தத் தைத்தியன் இவ்வாறு கொல்லப்பட்டதும், தேவலோகத்தில் நின்றிருந்த தேவர்கள் அவனது {பலராமனின்} செயல்பாட்டுக்காகப் பலதேவன் என்ற பெயரை அவனுக்குக் கொடுத்தனர். எனவே, உலகங்கள் அனைத்தும் பலதேவன் என்ற பெயரால் அவனை அழைத்தன" என்றார் {வைசம்பாயனர்}.(58,59)

விஷ்ணு பர்வம் பகுதி – 69 – 014ல் உள்ள சுலோகங்கள் : 59
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English