Wednesday 17 June 2020

காளியனை அடக்கிய கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 67 – 012

(காளியதமனம்)

Krishna subdues Kalya | Vishnu-Parva-Chapter-67-012 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மடுவுக்குள் குதித்த கிருஷ்ணன்; காளியனின் கட்டுக்குள் அசைவில்லாமல் கிடந்த கிருஷ்ணன்; காளியனை அடக்கிப் பெருங்கடலுக்கு அனுப்பியது...

Krishna Kaliya

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணன் இவ்வாறு சிந்தித்து ஆற்றங்கரைக்குச் சென்றான். அவன், தன் உடையை {இடுப்புக்கச்சையை} உறுதியாகக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியுடன் அந்தக் கதம்ப மரத்தில் ஏறினான்.(1) மேக வண்ணனும், தாமரைக் கண்ணனுமான கிருஷ்ணன், அம்மரத்தின் உச்சிக்கு ஏறி, சிங்க முழக்கம் செய்து, தலைகீழாக மடுவுக்குள் பாய்ந்தான்.(2) அந்த யமுனை ஆற்று மடு, அவன் குதித்ததால் கலங்கியது. அதன்காரணமாகச் சிதறும் மேகங்களைப் போல நீர் (அனைத்துப் பக்கங்களிலும்) கரைபுரண்டது.(3) அந்தப் பாம்பின் (காளியனின்) பெரிய வசிப்பிடம் அவ்வொலியால் நடுங்கியது. கோபத்தால் கண்கள் சிவந்த பாம்புகள் நீரில் இருந்து எழுந்தன.(4) அதன் பிறகு மேக வண்ணம் கொண்டவனும், கடுஞ்சினத்தால் கண்கள் சிவந்தவனும், ஐந்து தலைகள், நெருப்பு போன்ற முகங்கள் {படங்கள்}, மற்றும் நாவுகளைக் கொண்டவனும், பாம்புகளின் மன்னனுமான காளியன் நெருப்பின் தழல்களைப் போன்று பிரகாசிப்பவனாகக் காணப்பட்டான்.(5,6)

தீ போலெரியும் அவனது தலைகள் மொத்த மடுவையே மறைத்தன, பெரியவையும், பயங்கரமானவையுமான ஐந்து முகங்கள் {படங்கள்} (நீருக்கு) மேலே காணப்பட்டன.(7) அந்தப் பாம்புகளின் மன்னன் தன் சக்தியாலும், கோபத்தாலும் எரிந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த நீர் கொதிப்பது போலத் தெரிந்தது, அச்சத்தால் பீடிக்கப்பட்ட யமுனை ஆறானவள், தன் நீரோட்டத்திற்கு எதிராகத் தப்பி ஓடினாள்.(8) மடுவுக்கு வந்து சிறுவனைப் போல விளையாடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணனைக் கண்ட அவனது {காளியனின்} கோப நெருப்பு நிறைந்த வாயில் இருந்து காற்றுப் பலமாக வீசியது.(9) பாம்புகளின் மன்னனான அவனுடைய {காளியனின்} வாயிலிருந்து புகையுடன் கூடிய தீப்பொறிகள் வெளிப்பட்டன. பாம்புகளின் மன்னனான அவனருகில் கரையில் வளர்ந்திருந்த பெரும் மரங்கள் அனைத்தும், யுக முடிவின் அவதாரத்திற்கே ஒப்பான[1] அவனிடம் வெளிப்பட்ட கோபநெருப்பால் உடனே எரிக்கப்பட்டன.(10) அதன் பிறகு அவனது மகன்களும், மனைவிகளும்[2], ஒப்பற்ற சக்தியைக் கொண்ட வேறு முன்னணி பாம்புகளான அவனது பணியாட்களும் நச்சுப்புகையுடன் கூடிய பயங்கர நெருப்பைக் கக்கியபடியே அங்கே வந்தனர்.(11,12)

[1] "ஒரு யுகம் முடியும்போது உலகில் உள்ள அனைத்தும் அழிவை அடையும். இந்தப் பாம்பின் பயங்கர நஞ்சின் மூலம் அனைத்தும் அழிக்கப்பட்டதால் இங்கே சொல்லப்பட்ட யுகமுடிவாகவே இந்தப் பாம்பு ஒப்பிடப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] இங்கே மன்மதநாததத்தரின் பதிப்பில், "அவனது மகன் தாரனும்" என்று இருக்கிறது. மற்ற பதிப்புகளில் தாரன் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக அந்தச் சொல் தாரங்கள் என்று மனைவிகளைக் குறிக்கும் சொல்லாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. சித்திரசாலை பதிப்பில், "பெருஞ்சக்தி கொண்ட பெரும்பாம்புகளான அவனது மகன்கள், மனைவிகள், பணியாட்கள் மற்றும் பிறர், நச்சுப்புகையுடன் கூடிய பயங்க நெருப்பைத் தங்கள் வாய்களில் இருந்து உமிழ்ந்தபடியே அங்கே வந்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவனது மகன்கள், மனைவிகள், பணியாட்கள் மற்றும் பிற பெரும்பாம்புகள் தங்கள் வாய்களில் இருந்து நச்சுப் புகையுடன் கூடிய பயங்கரத் தழல்களைக் கொப்புளித்தனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அவனுடைய அளவற்ற காந்தி கொண்ட, மனைவிகள், புத்ரர்கள் பணி செய்வோர் பருத்த நாகஷ்ரேஷ்டர்கள் ஆகிய அந்தப் பாம்புகள் பயங்கர விஷாக்னியை முகத்திலிருந்து கக்கிக் கொண்டு வெளிக்கிளம்பின" என்றிருக்கிறது. எனவே இங்கே இந்த மொழிபெயர்ப்பிலும், "மகன்கள் மற்றும் தாரங்கள்" என்று மற்ற பதிப்புகளில் காணப்படும் சொற்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதன்பிறகு அவர்கள், தங்கள் தலைகளால் அமைத்துக் கொண்ட வளையத்திற்குள் கிருஷ்ணனை நுழையச் செய்தனர். அவனது கைகளும், கால்களும் {கட்டப்பட்டு} எந்த முயற்சியிலும் ஈடுபட இயலாத நிலையில் அவன் ஒரு மலையைப் போல அங்கே அசையாமல் நின்றான்.(13) முன்னணி பாம்புகள், தங்கள் பற்களால் கெடுக்கப்பட்ட {நச்சு} நீரை கிருஷ்ணன் மீது தெளித்தன. எனினும் சக்திவாய்ந்தவனான கிருஷ்ணன் மாளாமல் இருந்தான்.(14) அதேவேளையில், அச்சத்தால் நிறைந்த ஆயர்குலச் சிறுவர்கள் அழுது கொண்டே விரஜத்திற்கு {பிருந்தாவனத்தில் புதிதாக அமைந்த கோகுலத்திற்குத்} திரும்பி, ஒடுங்கிய குரலில்,(15) "கிருஷ்ணன் தன் மூடத்தனத்தால் காளியன் மடுவில் மூழ்கினான். பாம்புகளின் மன்னன் அவனை விழுங்குகிறான். தாமதிக்காமல் அனைவரும் வருவீராக.(16) நந்தரிடமும், அவரது தொண்டர்களிடமும் விரைந்து சென்று, கிருஷ்ணன் பாம்பால் மடுவுக்குள் இழுக்கப்படுகிறான் என்பதை அவர்களிடம் சொல்வீராக" என்றனர்.(17)

இடியைப் போல விழுந்த அந்தச் சொற்களைக் கேட்ட நந்தகோபன் துன்புற்றுப் பெரும் இன்னலடைந்து, சிறப்புமிக்க அந்த மடுவுக்கு விரைந்து சென்றான்.(18) இளமையுடன் கூடிய ஸங்கர்ஷணன் {பலராமன்}, சிறுவர்கள், முதியவர்கள், இளம்பெண்கள் ஆகியோருடன் கூடிய விரஜவாசிகள் அனைவரும் அந்தப் பாம்புகளின் மன்னனுடைய நீர்நிலையை {காளியன்மடுவை} வந்தடைந்தனர்.(19) அந்த மடுவின் கரையை வந்தடைந்த நந்தனின் தலைமையிலான ஆயர்கள் அனைவரும், வெட்கம், ஆச்சரியம் மற்றும் கவலையால் பீடிக்கப்பட்டவர்களாகத் தங்கள் கண்கள் நிறைந்த கண்ணீருடன் அழுதுபுலம்பத் தொடங்கினர். சிலர் "ஓ! மகனே" என்றும்; வேறு சிலர், "ஐயோ நமக்குக் கேடு வந்தது" என்றும் கதறினர்.(20,21) அச்சத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டவர்களான இன்னும் சிலர், "ஐயோ! நாம் அனைவரும் கொல்லப்பட்டோம்" என்று சொல்லி அழுதனர்.

உரக்க அழுது கொண்டிருந்த பெண்கள், யசோதையிடம் சென்று, "ஐயோ, நாம் அனைவரும் கொல்லப்பட்டோம். பாம்புகளின் மன்னனுடைய ஆதிக்கத்தில் கட்டுப்பட்டிருக்கும் உன் மகனைப் பார். பாம்பின் தலையால் கடையப்படும் அமுதத்தைப் போல அங்கே அவன் நடுங்கிக் கொண்டிருக்கிறான்.(22,23) இந்த அவலநிலையில் உன் மகனைக் கண்டும் உன் இதயம் பிளக்காமல் இருப்பதால் உண்மையில் அது கல்லாலானது" {என்று யசோதையிடம் சொல்லிவிட்டு}.(24) {மடுவுக்குள் இறங்கும் யசோதையைக் கண்டு மீண்டும் தங்களுக்குள்} துன்பத்தால் நிறைந்து தன் மகனின் முகத்தில் தன் பார்வையை நிலைக்கச் செய்து, மயக்கமடைந்தவரைப் போல மடுவின் கரையில் நிற்கும் நந்தகோபரைப் பாருங்கள்.(25) மாறாக யசோதையைப் பின்தொடர்ந்து பாம்புகளின் வசிப்பிடமான இந்த மடுவுக்குள் நாமும் நுழைவோம். தாமோதரனில்லாமல் ஒருபோதும் நாம் விரஜத்திற்கு {ஆய்ப்பாடிக்குத்} திரும்புவதில்லை.(26) கிருஷ்ணன் இல்லாத விரஜம், சூரியனில்லாத பகலைப் போலவோ, சந்திரனில்லாத இரவைப் போலவோ, காளையிடம் இருந்த பிரிக்கப்பட்ட பசுவைப் போலவோ ஒருபோதும் அழகாகத் தோன்றாது. கன்றில்லாத பசுவைப் போலக் கிருஷ்ணனிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நாம் அங்கே செல்ல மாட்டோம்" என்றனர்.(27)

கிருஷ்ணனின் மனம், உடல், புத்தி ஆகியவற்றையே கொண்டிருந்தாலும், {கிருஷ்ணனில் இருந்து பிரிந்த} தனியான வேறு நபராகவும் இருந்த ஸங்கர்ஷணன் {பலராமன்}, ஆயர்கள், ஆய்ச்சியர்கள், நந்தன் ஆகியோரின் புலம்பல்களையும், யசோதையின் அழுகையையும் கேட்டுக் கோபமடைந்தவனாகக் கிருஷ்ணனிடம்,(28,29) "ஓ! கிருஷ்ணா, ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! ஆயர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, நஞ்சுமிக்க இந்தப் பாம்பு மன்னனை விரைவாக அழிப்பாயாக.(30) ஓ! தம்பி, ஓ! என் தலைவா, நம் உறவினர்களான இவர்கள் அனைவரும் மனித புத்தியையே கொண்டிருப்பதால், உன்னை மனிதனெனக் கருதி அழுது புலம்புகிறார்கள்" என்றான்.(31)

ரோஹிணி மகனின் {ரோஹிணேயனின் / பலராமனின்} இந்த ஞானச் சொற்களைக் கேட்ட கிருஷ்ணன், தன் கரங்களை விளையாட்டாக உயர்த்தி, பாம்புகளின் சுருள்களை நொடித்து எழுந்தான்.(32) அவன், நீருக்கு மேலிருந்த பாம்புமன்னனின் தலைகளில் தன் பாதங்களை வைத்து, அவனது தலையைத் தன் கைகளால் பிடித்தான்.(33) அப்போது அழகான அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டிருந்த கிருஷ்ணன், சக்தியுடன் அவனது {காளியனின்} நடுத்தலையில் ஏறி நடனம்புரியத் தொடங்கினான்.(34) இவ்வாறு கிருஷ்ணனால் நசுக்கப்பட்ட அந்தப் பாம்பு மன்னனின் தலைகள் வெளிறி, அவற்றில் இருந்து குருதி வெளியேறத் தொடங்கியது. அப்போது அவன் (காளியன்) அச்சம் நிறைந்த சொற்களில் அவனிடம் {கிருஷ்ணனிடம்},(35) "ஓ! அழகிய முகம் கொண்ட கிருஷ்ணா, அறியாமையால் நான் உன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் இப்போது உன்னால் வெல்லப்பட்டவனாக, அடக்கப்பட்டவனாக, என் நஞ்சு அழிக்கப்பட்டவனாக இருக்கிறேன். எனக்கு என் உயிரை அளித்து, என் மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்களுடன் நான் யாருக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதை எனக்கு ஆணையிடுவாயாக" என்றான் {காளியன்}.(36,37)

பாம்புகளின் பகைவனையே[3] தன் வாகனமாகக் கொண்ட தலைவன் கிருஷ்ணன், ஐந்து தலைகளைக் கொண்ட அந்தப் பாம்புமன்னனைக் கண்டும், துயர்மிக்க அவனது சொற்களைக் கேட்டும், கோபமேதுமற்றவனைப் போல,(38) "ஓ! பாம்பே, இந்த யமுனையின் நீரில் நீ வாழ நான் அனுமதிக்க விரும்பவில்லை. எனவே நீ உன் மனைவி மற்றும் உற்றாருடன் பெருங்கடலுக்குச் செல்வாயாக.(39) இதன் பிறகு உன் மகன்கள் மற்றும் பணியாட்களில் யாரேனும் இந்த மாகாணத்தின் நீரிலோ, நிலத்திலோ காணப்பட்டால் அவன் என்னால் கொல்லப்படுவான்.(40) ஓ! பாம்புகளின் மன்னா, இந்த நீர் அனைவருக்கும் நலந்தருவதாக அமையட்டும், நீ ஆழ்கடலுக்குச் செல்வாயாக. இதன் பிறகும் நீ இங்கிருந்தால் உன் உயிருக்கு முடிவை ஏற்படுத்தும் பேரிடர் உனக்கு நேரும்.(41) பாம்புகளின் பகைவனான கருடன், உன் தலையில் என் பாதச்சுவடுகளைக் கண்டால் பெருங்கடலில் உன்னைக் கொல்லாதிருப்பான்" என்று மறுமொழி கூறினான் {கிருஷ்ணன்}.(42)

[3] "விஷ்ணுவின் வாகனமான கருடனை இது குறிக்கிறது. கருடன் பாம்புகளை விழுங்குபவன் என்பதால் அவற்றின் பகைவனாவான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

(தலைவனால் இவ்வாறு சொற்றப்பட்ட) பாம்புகளில் முதன்மையான காளியன், தன் தலையில் கிருஷ்ணனின் பாதச் சுவடுகளைச் சுமந்து கொண்டு, ஆயர்களின் முன்னிலையில் அந்த மடுவில் இருந்து அரவாரமின்றித் தப்பிச் சென்றான்.(43) இவ்வாறு பாம்புகளின் மன்னன் வீழ்த்தப்பட்டுத் தப்பிச் சென்ற பிறகு, அந்தத் தலைவன் {கிருஷ்ணன்} நீரில் இருந்து வெளியே வந்து, கரையில் நின்றான். ஆச்சரியத்தால் நிறைந்த ஆயர்கள் அவனது மகிமைகளைப் பாடி அவனை வலம் வந்தனர்.(44) அதன்பிறகு காட்டில் வாழ்பவர்களான அந்தக் கோபர்கள் நந்தனிடம் மகிழ்ச்சியாக, "உண்மையில் இத்தகைய {பலம்வாய்ந்த} மகனைப் பெற்ற நீர் பேறுபெற்றவரும், தேவர்களின் அன்புக்குரியவரும் ஆவீர்.(45) ஓ! பாவமற்றவரே, பலம் மிக்கவனும், நீண்ட விழிகளைக் கொண்டவனுமான கிருஷ்ணனே இன்று முதல் ஆபத்துகளில் ஆயர்களின் புகலிடமாகவும், தொழுவத்தில் பசுக்களின் பாதுகாவலனாகவும் இருப்பான்.(46) யமுனையின் நீர் எங்கும் இனிமை நிறைந்ததாகவும், நலந்தருவதுமாக இருக்கிறது. இன்றிலிருந்து நமது பசுக்கள் அனைத்தும் கரையில் இருக்கும் ஒவ்வொரு படியிலும் மகிழ்ச்சியாகத் திரியும்.(47) சாம்பலில் மறைந்த நெருப்பைப் போல விரஜத்தில் இருந்த கிருஷ்ணனை {கிருஷ்ணனின் மகிமையை} உண்மையாக அறியாததாலேயே நாங்கள் ஆயர்களாக இருக்கிறோம்" என்றனர்.(48)

அதன்பிறகு ஆச்சரியத்தால் நிறைந்த கோபர்கள் {ஆயர்கள்}, அழிவற்றவனான கிருஷ்ணனைத் துதித்து, சைத்திரரதத் தோட்டத்தில் நுழையும் தேவர்களைப் போலத் தங்கள் குடிலுக்குள் நுழைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(49)

விஷ்ணு பர்வம் பகுதி – 67 – 012ல் உள்ள சுலோகங்கள் : 49
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English