Saturday, 13 June 2020

கிருஷ்ணனின் குறும்புகள் | விஷ்ணு பர்வம் பகுதி – 62 – 007

(யமலார்ஜுனபங்கம்)

The childish freaks of Krishna | Vishnu-Parva-Chapter-62-007 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணன் மற்றும் பலராமனின் குறும்புகள்; உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன்; மருத மரங்களை முறித்தல்...

Arjuna trees and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "காலஞ் செல்லச் செல்ல கிருஷ்ணன் மற்றும் ஸங்கர்ஷணன் என்ற பெயர்களைக் கொண்ட அந்தச் சிறுவர்கள் இருவரும் தங்கள் கால்களில் தவழத் தொடங்கினர்.(1) உதயச் சூரியனுக்கு ஒப்பானவர்களும், ஒரே அச்சில் வார்க்கப்பட்ட ஈருடல்களில் ஒருவருமான அந்த அழகிய சிறுவர்கள் இருவரும்,(2) ஒரே வடிவத்தை ஏற்கவும், ஒரே படுக்கையில் கிடக்கவும், ஒரே உணவில் வாழவும், ஒரே உடைகளை உடுத்தவும் தொடங்கினர்.(3) உலகங்களின் சான்றுடன் அடையாளங்காணப்படும் அந்தப் பெருஞ்சக்திகள் இரண்டும், ஒரே உடலாக இருப்பினும், அசுரர்களின் அழிவுக்காகவும், வேள்விகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஒரே பெரும்பணியை நிறைவேற்றுவதற்காகவும் இரு மனித வடிவங்களை ஏற்றனர். அவர்களே மொத்த அண்டத்தின் பாதுகாவலர்களாக இருப்பினும், இந்தக் காரணத்திற்காக அவர்கள் கோபர்களாக {இடையர்களாகப்} பிறந்தனர்.(4,5) அங்கே அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, வானத்தில் தங்கள் கதிர்களால் ஒன்றையொன்று பீடிக்கும் சூரியனையும், சந்தினையும் போலத் தெரிந்தனர்.(6)

பாம்புகளைப் போன்ற கரங்களைக் கொண்ட அவர்கள் எங்கும் திரிபவர்களாக, புழுதியால் மறைக்கப்பட்ட செருக்குமிக்க யானைகள் இரண்டைப் போலத் தெரிந்தனர்.(7) சில சமயங்களில் சாம்பலும், பசுஞ்சாணப் பொடியும் பூசப்பட்டவர்களாக நெருப்பின் ஈரிளவரசர்களை {அக்னிகுமாரர்களைப்} போல ஒளிர்ந்தனர்.(8) சில சமயங்களில் முழங்கால்களில் நடந்து, பசுத்தொழுவங்களுக்குள் நுழைந்து, பசுஞ்சாணத்தால் மறைக்கப்பட்ட மேனிகளுடனும், மயிர்களுடனும் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர்.(9) சில சமயங்களில் அந்தச் சிறுவர்கள் இருவரும் விரஜத்தில் வசிப்போரிடம் {கோகுலவாசிகளிடம்} குறும்புகள் செய்து, சிரிப்பால் தங்கள் தந்தைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினர்.(10) சந்திரனைப் போன்ற முகங்களைக் கொண்ட அந்த அழகிய சிறுவர்கள் இருவரும், கண்களுக்குத் தொல்லை கொடுக்கும் தங்கள் கூந்தலுடன், அறிவார்வத்தால் நிறைந்தவர்களாக, மிக அழகானவர்களாகத் தெரிந்தார்கள்.(11) அதிக விளையாட்டுத்தனம், மற்றும் குறும்புத்தனத்துடன் வளர்ந்த அவர்கள் விரஜம் {கோகுலம் / ஆயர்பாடி} முழுவதும் திரிந்தனர். அவர்களை நந்தனால் (எந்த வழிமுறைகளினாலும்) தடுக்க முடியவில்லை.(12)

ஒரு நாள் கோபமடைந்த யசோதை, தாமரைக் கண்ணனான கிருஷ்ணனை வண்டியின் அருகே கொண்டு சென்றாள். ஒரு கயிற்றை அவனது இடுப்பைச் சுற்றிப்பூட்டி, அதை ஓர் உரலில் கட்டி மீண்டும் மீண்டும் அவனை அதட்டும் வகையில், "உன்னால் முடிந்தால் போ" என்று சொன்னாள். இதைச் சொல்லிவிட்டு அவள் தன் பணியில் ஈடுபட்டாள்.(13,14) யசோதை இவ்வாறு வீட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கிருஷ்ணன், விரஜத்தில் வசிப்போரை {கோகுலவாசிகளை} வியப்படையச் செய்யும் நோக்கில் முற்றத்தை விட்டு வெளியேறினான்.(15) அந்த உரலுடன் முற்றத்தை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணன், யமலம் மற்றும் அர்ஜுனம் என்ற பெரும் மரங்கள் இருந்த காட்டுக்குச் சென்றான்.(16) உரலை அந்த மரங்கள் இரண்டிற்கும் இடையில் வைத்து அவன் இழுக்கத் தொடங்கினான். அவன் இவ்வாறு உரலை இழுக்கும்போது மரங்களின் வேர்களில் அஃது உறுதியாக அகப்பட்டது.(17) அப்போது அவன் அர்ஜுனம் மற்றும் யமலம் என்ற அந்த மரங்களை இழுக்கத் தொடங்கினான். இவ்வாறு அவனால் பெருஞ்சக்தியுடன் இழுக்கப்பட்ட அந்த மருத மரங்கள் இரண்டும் தங்கள் கிளைகள் மற்றும் வேர்களுடன் முறிந்து விழுந்தன.(18)

தெய்வீக பலம் கொண்ட அந்தத் தலைவன் {கிருஷ்ணன்} ஆயர்களுக்கு இதைக் காட்டும் வகையில் அங்கே சிரிக்கத் தொடங்கினான். அந்தக் கயிறு அவனுடைய சக்தியால் வலுவடைந்தது.(19) அப்போது யமுனை ஆற்றங்கரைக்குச் சென்று கொண்டிருந்த கோபிகைகள் {ஆய்ச்சியர்}, அந்நிலையில் இருக்கும் குழந்தையைக் கண்டு அச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் அழுது கொண்டே யசோதையை அணுகினர்.(20) வருத்தமுடைய முகங்களுடன் கூடிய அந்தப் பெண்கள் அவளிடம் {யசோதையிடம்}, "ஓ! யசோதா, ஒரு கணமும் தாமதிக்காமல் எங்களுடன் விரைந்து வருவாயாக.(21) விருப்பப் பொருட்களை அருள்வதால் தேவர்களாக வழிபடப்படப்படும் பெரும் மரங்கள் இரண்டும் உன் மகனின் மீது வீழ்ந்தன.(22) (பசுவின்) மடியின் கீழ் உள்ள கன்றைப் போலக் கயிற்றால் கட்டப்பட்டிருந்த உன் பிள்ளை அந்த இரண்டு மரங்களுக்கு இடையில் சிரித்துக் கொண்டிருக்கிறான்.(23) ஓ! மூடப்பெண்ணே, எழுந்து வருவாயாக. உன்னை ஞானியாக நினைக்கிறாய் ஆனால் முட்டாளாக இருக்கிறாய். யமனின் வாயில் இருந்து விடுபட்டவனைப் போல உன் மகன் உயிரோடு இருக்கிறான்" என்றனர்.(24)

இதைக் கேட்டதும் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவள் {யசோதை} ஓலமிடத் தொடங்கினாள். பிறகு வேரோடு முறிந்து கிடக்கும் அந்த இரண்டு மரங்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.(25) அங்கே தன் பிள்ளை, தன் இடையைச் சுற்றிய கயிற்றுடன் உரலை இழுத்துக் கொண்டு இரு மரங்களுக்கிடையில் இருப்பதை அவள் கண்டாள்.(26) விரஜத்தை {கோகுலத்தைச்} சேர்ந்தவர்களும், முதியவர்களும், இளைஞர்களுமான ஆயர்கள், மற்றும் ஆய்ச்சியர்கள் அனைவரும் அந்த அற்புதக் காட்சியைக் காண்பதற்கு அங்கே விரைந்து சென்றனர்.(27)

காட்டில் திரிபவர்களான ஆயர்கள் தங்களுக்குப் பேசத் தொடங்கி, "நம் கிராமத்தின் அளவுள்ள இந்தப் பெரும் மரங்கள் இரண்டையும் வேரோடு முறித்தது யார்?(28) புயலோ, மழையோ, இடியோ, யானைகளின் குறும்போ இங்கே ஏதும் இல்லை. பிறகு இந்த மரங்கள் இரண்டும் திடீரென எவ்வாறு விழுந்தன?(29) ஐயோ, தரையில் விழுந்து கிடக்கும் இந்த மரங்கள் இரண்டும், நீரில்லாத மேகங்களைப் போலத் தங்கள் அழகை இழந்தன. ஓ! நந்தா, இந்த மருத மரங்கள் இரண்டும், உனக்குப் பெரிய அளவில் சாதக நிலையை ஏற்படுத்தியவையாகவும், உனக்கு நன்மை செய்பவையாகவும் இருந்திருக்கின்றன. இவை பெரியவையாக இருந்தாலும், உன் பிள்ளையின் உடலில் சிறு காயத்தையும் ஏற்படுத்தாமல் காக்கும் வகையில் விழுந்திருக்கின்றன.(30,31) இதற்கு முன்பு பூதனை கொல்லப்பட்டாள், வண்டி நொறுகியது. மரங்கள் முறிந்த இந்நிகழ்வு விரஜத்தில் {ஆய்ப்பாடியில் / கோகுலத்தில்} மூன்றாவது நிமித்தமாகும்.(32) இந்நிமித்தங்கள் நன்மையைத் தெரிவிக்கவில்லை என்பதால் இனியும் கோபர்கள் {ஆயர்கள்} இந்தக் கிராமத்தில் வாழ்வது நல்லதல்ல" என்றனர்.(33)

அதன்பிறகு நந்தன், தாமரைக் கண்ணனான கிருஷ்ணனை உரலில் இருந்து விடுவித்து, தன் மடியில் அமர்த்தி, இறந்தோரின் நாட்டில் இருந்து திரும்பிவந்தவனைப் பார்ப்பது போல மீண்டும் மீண்டும் அவனைப் பார்த்தும், மகிழ்ச்சியை அடையாதிருந்தான். பிறகு அவன், யசோதையை அதட்டிவிட்டு, ஆயர்கள் அனைவரும் பின்தொடர விரஜத்திற்கு {ஆய்ப்பாடிக்கு / கோகுலத்திற்குத்} திரும்பினான்.(34,35) கிருஷ்ணன் கயிற்றால் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அந்தக் கிராமத்தின் ஆயர்கள் அனைவராலும் அந்த நாள் முதல் தாமோதரன் என அழைக்கப்பட்டான்.(36) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஆயர்களுக்கு மத்தியில் வெறும் சிறுவனாக அவன் வாழ்ந்து வந்தாலும், இந்த அற்புதச் செயல்கள்[1] அனைத்தையும் செய்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(37)

[1] "கிருஷ்ணனின் தொடக்கக் கால வாழ்க்கையில் நேரும் இந்த அற்புதங்கள் அனைத்தும் வைஷ்ணவப் படைப்புகள் அனைத்திலும் மிகப் பெரியதான ஸ்ரீமத்பாகவதத்திலும் விளக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணனின் மீமானிட சக்தியைக் காட்டும் நோக்கில் அவை பதிவு செய்யப்படுகின்றன. இந்துக்கள் அவனை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதுகின்றனர், அவன் தெய்வமாக இல்லாவிட்டால் இந்த அற்புதச் செயல்களை அவனால் செய்திருக்க முடியாது என்பதைக் காட்டுவதற்காக இவை சொல்லப்படுகின்றன. தங்கள் நாயகனின் மீமானிட சக்தியையும், பிறப்பையும் நிரூபிக்கும் அற்புதச் செயல்களைப் பதிவு செய்வதில் தொடக்கக் கால எழுத்தாளர்கள் சிறப்புக் கவனத்தைச் செலுத்தியிருக்கின்றனர். இது தொடக்கக் கால இந்து ஆசிரியர்களால் மட்டுமே செய்யப்பட்டதல்ல, மேற்கத்திய எழுத்தாளர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். பைபிள் பழைய ஏற்பாட்டின் அற்புதங்கள் இந்த வாதத்திற்கு வலுசேர்ப்பனவாகும். {புதிய ஏற்பாட்டிலும் பல அற்புதங்கள் உண்டு} கிருஷ்ணனின் தொடக்கக் கால வாழ்வில் அவர் செய்த இந்த அற்புதங்கள், விஷ்ணுபுராணம், பாகவதபுராணம், ஹரிவம்சம் ஆகிய முக்கியமான மூன்று படைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விஷ்ணு பர்வம் பகுதி – 62 – 007ல் உள்ள சுலோகங்கள் : 37
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English