Thursday, 4 June 2020

கம்ஸனிடம் அவனது மரணத்தை அறிவித்த நாரதர் | விஷ்ணு பர்வம் பகுதி – 56 – 001

(நாரதாகமனம்)

Kansa is informed of his death by Narada | Vishnu-Parva-Chapter-56-001 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : மதுரா நகரத்திற்குச் சென்ற நாரதர்; கம்ஸனின் அழிவுக்காக விஷ்ணு பிறக்கப் போவதைச் சொல்லி அவனுக்கு அச்சத்தை ஊட்டியது; அசுரர்களுக்குக் கம்ஸன் இட்ட ஆணை...

Kansa and Narada

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தெய்வீக முனிவரான நாரதர், விஷ்ணுவும், மற்ற தேவர்களின் கூறுகளும் {அம்சங்களும் பூமியில்} இறங்க {அவதரிக்கப்} போவதை அறிந்து, கம்ஸனுக்கு நேரப்போகும் மரணத்தைச் சொல்ல மதுரா நகருக்குச் சென்றார்.(1) முனிவர்களில் முதன்மையான அவர், தேவலோகத்தில் இருந்து இறங்கி, மதுராவின் நந்தவனத்தை {உபவனத்தை / புறநகரை} அடைந்து, உக்ரசேனனின் மகனான கம்ஸனிடம் ஒரு தூதனை அனுப்பினார்.(2) அவன் {அந்தத் தூதன்} நந்தவனத்தில் முனிவர் {நாரதர்} வந்திருப்பதை {கம்ஸனிடம்} தெரிவித்தான். தாமரை போன்ற கண்களைக் கொண்ட அந்த அசுரன், நாரதர் வந்திருப்பதைக் கேட்டு, தன் நகரை விட்டு விரைந்து சென்றான்.(3) அவன் {கம்ஸன்}, புகழ்பெற்ற பிராமண முனிவரும், பாவங்கள் அனைத்தையும் களைந்தவரும், தன் விருந்தினருமான நாரதர், சூரியனைப் போன்ற சக்தியுடனும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும் அங்கே இருப்பதைக் கண்டான். அவரை வணங்கி முறையாக வழிபட்ட அவன், நெருப்பைப் போல ஒளிரும் ஒரு பொன் இருக்கையை அவருக்காகக் கொண்டு வந்தான். சக்ரனின் {இந்திரனின்} நண்பரான அந்த முனிவர் {நாரதர்}, அந்த இருக்கையில் அமர்ந்தார்.(4-6)

பிறகு அவர் {நாரதர்}, பெருங்கோபம் கொண்டவனும், உக்ரசேனனின் மகனுமான அவனிடம் {கம்ஸனிடம்}, "ஓ! வீரா, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட பணிகளால் நீ என்னை முறையாக வழிபட்டாய். இப்போது நான் சொல்லப் போவதைக் கேட்டு ஏற்பாயாக.(7) ஓ! மகனே, பிரம்ம லோகம் மற்றும் தேவலோகங்களில் உள்ள நந்தனம் மற்றும் சைத்ரரதத் தோட்டங்களில் திரிந்து, சூரியனின் நண்பனும், பெரும் மலையுமான ஸுமேருவை அடைந்தேன்.(8,9) தேவர்களும் என்னைப் பின்தொடர்ந்து வந்தனர். புனித ஆறுகள் அனைத்தின் புனித நீரிலும் நீராடிவிட்டு, நினைத்த மாத்திரத்தில் பாவங்கள் அனைத்தையும் அழியச் செய்பவளும், மூவழிகளில் ஓடையாகச் செல்லக்கூடியவளுமான தெய்வீக கங்கையைக் கண்டேன்.(10) அங்கேயுள்ள புண்ணியத்தலங்கள் அனைத்திலும் முறையாக நீராடிய பிறகு, பிராமண முனிவர்களால் நாடப்படுவதும், தேவ, கந்தர்வ மற்றும் அப்சரஸ்களின் இசையால் நிரம்பியதுமான பிரம்மனின் அரண்மனையை {சபையைக்} கண்டேன்.(11-12)

ஒரு காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஸுமேரு மலையின் உச்சியில் தேவர்களின் கூட்டத்தை நடத்தினார். நானும் என் வீணையை எடுத்துக் கொண்டு, பிரம்மனின் கூட்டத்திற்குச் சென்று, பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, வெண் தலைப்பாகைகளாலும், பல்வேறு ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களும், தெய்வீக இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களுமான தேவர்களும் ஆலோசனை செய்து கொண்டிருப்பதைக் கண்டேன்.(13,14) ஓ! பெரும் மன்னா {கம்ஸா}, அவர்களும், அவர்களது தொண்டர்களும் உன் அழிவுக்காகப் பயங்கரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அங்கே நான் கேள்விப்பட்டேன்.(15) மதுராவில் வாழும் உன் தமக்கை {அக்காளான} தேவகியின் எட்டாவது கருவில் வரும் குழந்தை உனக்கு மரணமாக {மிருத்யுவாக} இருப்பான்.(16) ஓ! வீரா, சொர்க்கத்தில் இருப்பவனும், தேவர்களின் பெரும்புதிரும், அனைத்திலும் அடையாளம் காணப்படுபவனுமான சுயம்புவால் (விஷ்ணுவால்) உனக்கு மரணம் நேரும் என்று ஆராய்ந்து அறியப்பட்டிருக்கிறது. ஓ! கம்ஸா, தேவர்களின் தேவனான அவனது கைகளில் மரணத்தைச் சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது உனக்குப் பெருமை சேர்க்கும் காரியமாகும்[1]. எனவே, இப்போதே அவனை நினைவுகூர்வாயாக. தேவகியின் கருவை அழிக்கவும், உன் செல்வத்தையும், இன்ப நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கவும் முயல்வாயாக. நான் உன்னிடம் பேரன்பு கொண்டிருப்பதால், ஸுமேரு மலையின் உச்சியில் நடந்தவற்றை இங்கே வந்து சொன்னேன். நான் இனி உன்னிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். நீ நலமாக இருப்பாயாக" என்றார் {நாரதர்}".(17-20)

[1] {தேசிராஜு ஹனுமந்த ராவ் ஹரிவம்சத்தின் முதல் பர்வத்தை மொழிபெயர்த்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பர்வங்களை மொழிபெயர்த்த} புருஷோத்தம், ஹரிந்திரநாத் ஆகியோரின் பதிப்பில், "தேவர்களின் பாதுகாவலனாகவும், தெய்வீகமானவற்றின் உறைவிடமாகவும் அவனே இருப்பான். தேவர்களின் பரம புதிரான அவனே உன் மரணத்திற்குக் காரணமாக இருப்பான். தேவர்களின் விடுதலை மற்றும் இன்பத்திற்கான பொருள் அவனே. தேவர்களின் ஸ்வயம்பு அவனே. தெய்வீகப் பேருண்மை அவனே என அதனால்தான் நான் சொல்கிறேன். கம்ஸா, மதிப்புக்குறிய இவனே கடந்த காலத்திலும் உன் மரணத்திற்குக் காரணமாக இருந்தான். அவனை நினைவுகூர்ந்து, தேவகியின் கருவை அழிப்பாயாக" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "தேவர்களுக்கு அனைத்துமானவன் அவனே. சொர்க்கத்தின் புகலிடம் அவனே. உன் மரணத்திற்குக் காரணனும் அவனே என்பது தேவர்களின் பரம ரகசியமாகும். உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் அவனே. ஸ்வயம்பூ அவனே. பெரியவனும், தெய்வீகமானவனுமான அவனே இப்போது பிறக்கப் போகிறான். அதை நான் சொல்லவும் வல்லனல்லேன். கடந்த காலத்தில் ஏற்கனவே உன் மரணத்திற்குக் காரணமாக அமைந்ததில் அவன் செருக்குடன் இருக்கிறான். ஓ! கம்ஸா, அதை நினைவில் கொள்வாயாக. நீ முயற்சி செய்தால் அவனது பிறப்பைத் தடுக்கலாம்" என்றிருக்கிறது. மஹாபாரதத்தைத் தமிழில் பதிப்பித்த மணலூர் வீரவல்லி ராமானுஜாச்சாரியர் அவர்களின் மருமகனான உ.வே.எஸ்.ராமானுஜய்யங்காரின் பதிப்பில், "அவன் அத்தேவர்களுக்குப் பரமும், அபரமும், (மோக்ஷமும், ஸ்வர்க்கமும்). அவனே தேவலோகவாஸிகளுக்கு ஸ்வயம்பூ எனும் ப்ரஹ்மாவும் ஆவான். ஆதலால், அது திவ்யமானது; மிகப்பெரியது; அதை உனக்குச் சொல்கிறேன். கம்ஸ! முன்னமேயே எல்லோருக்கும் ம்ருத்யுவாய் இருந்து கொண்டிருக்கும் அவனே உனக்கு இப்பொழுது ஷ்வாக்யம்ருத்யுவாக வரப்போகிறான் என்று நினைத்துக் கொள். தேவகியின் கர்ப்பத்தை அழிப்பதில் முயற்சியும் செய்யப்படட்டும்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாரதர் இதைச் சொல்லிவிட்டுச் சென்ற பிறகு, அவரது சொற்களில் தியானம் செய்த கம்ஸன் உதடுகள் திறந்து உரக்க நகைக்கத் தொடங்கினான். அதன் பிறகு அவன், தனக்கு முன்பிருந்த தன் பணியாட்களிடம் சிரித்தவாறே, "உண்மையில் தேவர்கள் நாரதரிடம் கேலி பேசியிருக்கின்றனர், காரியங்களில் அவருக்கு அறிவேதும் இல்லை.(21,22) நான் என் அரியணையில் இருக்கும்போதும், உறங்கும்போதும், பித்தடைந்தோ, மதி மயங்கியோ இருக்கும்போதும்கூட வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களால் கிஞ்சிற்றும் என்னை அச்சுறுத்த முடியாது.(23) மனிதர்களின் நிலத்தில் {இவ்வுலகத்தில்} என்னைச் சினங்கொள்ளச் செய்யும் துணிவு கொண்டவன் எவன்? என்னுடைய இந்தப் பெருங்கரங்கள் இரண்டைக் கொண்டு என்னால் இந்தப் பூமியையே கலங்கடிக்க இயலும்.(24) தேவர்களைப் பின்பற்றும் மனிதர்களையும், விலங்குகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்தையும் இன்று முதல் நான் பெரிதும் ஒடுக்கப் போகிறேன்.(25) குதிரையின் வடிவில் இருக்கும் கேசியிடமும், பிரலம்பன், தேனுகன், காளையின் வடிவில் இருக்கும் அரிஷ்டன், பூதனை, காளியன் மற்றும் பிற அசுரர்களிடமும் இந்த ஆணையைக் கொண்டு சேர்ப்பீராக.(26) நீங்கள் பல்வேறு வடிவங்களை ஏற்று உலகம் முழுவதும் திரிந்து, எனக்கு எதிரானவர்களைக் கண்டு அவர்களைக் கொல்வீராக.(27) கருவில் இருந்தே நமக்கு அச்சம் நேரப் போகிறதென நாரதர் சொன்னதால், பெண்களால் கருவில் கொள்ளப்பட்ட அனைவரின் நடமாட்டங்களையும் எப்போதும் நீங்கள் அறிந்திருப்பீராக[2].(28) நான் உங்கள் தலைவனாக இருக்கும்போது தற்செயலான எந்தப் பேரழிவைக் குறித்தும் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. எனவே, கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, உங்களுக்கு இன்பந்தரும் பொருட்களை உங்கள் விருப்பப்படி அனுபவிப்பீராக.(29) நாரதர் சச்சரவுகளைப் பெரிதும் விரும்புபவரும், கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும் நோக்கம் கொண்டவருமாவார். நிதான மனம் கொண்ட அந்தப் பிராமணர், உலகங்கள் அனைத்திலும் பயணித்து, ஒருவரையொருவர் எதிர்ப்பதற்காக, மிக அமைதியான மனோபாவம் கொண்ட மனிதர்களுக்கு மத்தியிலும் கருத்து வேறுபாடுகளை உண்டாக்குகிறார், பல்வேறு வழிமுறைகளின் மூலம் மன்னர்களுக்கு மத்தியில் பகைமையை உண்டாக்குகிறார்" என்றான் {கம்ஸன்}.(30,31)

[2] புருஷோத்தம், ஹரிந்திரநாத் ஆகியோரின் பதிப்பில், "கருவுற்றவர்களின் நிலையைக் கண்டறிவீராக. கருவில் இருந்தே நமக்கு அச்சமேற்படும் என்று நாரதர் சொன்னார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பூமியில் பிரசவத்தை எதிர்பார்திருக்கும் அனைவரின் நிலையையும் கண்டறிவீராக. கருவின் காரணமாக நமக்குப் பேரச்சம் ஏற்படும் என நாரதர் சொன்னார்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜய்யங்காரின் பதிப்பில், "கர்ப்பத்திலிருக்கும் ப்ராணிகளின் போக்குங்கூட அறியத்தகுந்தது. நாரதரால், கர்ப்பங்களிலிருந்து தானே நமக்குப் பயம் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.

வீண் பகட்டுடன் அவ்வாறு தற்புகழ்ச்சி செய்த கம்ஸன், தன் அரண்மனைக்குள் நுழைந்தாலும், அவனது இதயம் கோபத்தீயில் எரிந்து கொண்டிருந்தது" என்றார் {வைசம்பாயனர்}.(32)

விஷ்ணு பர்வம் பகுதி – 56 – 001ல் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English