Wednesday, 13 May 2020

தேவர் படை வியூஹம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 44

(தே³வ ஸேனா வர்ணனம்)

Arrangement of the celestial army | Harivamsha-Parva-Chapter-44 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : இந்திரன், யமன், வருணன், குபேரன் ஆகியோர் தேவர் படையின் நான்கு பக்கங்களையும் பாதுகாத்தது; சூரியன், சந்திரன், வாயு, மருத்துகள் மற்றும் பாம்புகள் முன்னணியில் இருந்தது; கருடனில் பவனி வந்த விஷ்ணு என அமைந்த தேவர்களின் படைவியூஹம்...

war of gods and demons
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குழந்தாய், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில் இவ்வாறு அமைந்த தைத்திய படையின் அணிவகுப்பைக் குறித்து நீ கேட்டாய். விஷ்ணுவின் படையில் இருந்த தேவர்களின் படை அணிவகுப்பைக் குறித்து இப்போது கேட்பாயாக.(1) ஆதித்யர்கள், வசுக்கள், ருத்திரர்கள், பெருஞ்சக்தி வாய்ந்த அஸ்வினி இரட்டையர் ஆகியோர் தங்கள் தங்களுக்குரிய படைவீரர்கள் மற்றும் தொண்டர்களுக்கான அதிகாரப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். மொத்த தேவர்களின் படைக்கான தளபதியான ஆயிரங்கண் குடிமுதல்வன் பாகஷானன் {இந்திரன்} தன் யானையான ஐராவதத்தின் மீது அமர்ந்து கொண்டு (அந்தப் படைக்கு) முன்பு இருந்தான். அவனுக்கு இடது புறத்தில், கருடனைப் போன்று வேகமாகச் செல்லவல்லதும், அழகிய சக்கரங்களைக் கொண்டதும், தங்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு தேர் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.(2-4) ஆயிரக்கணக்கான தேவர்கள், கந்தர்வர் மற்றும் யக்ஷர்கள் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். அவனது சபை உறுப்பினர்களும், பிரகாசமானவர்களுமான பிராமண முனிவர்கள் அவனது மகிமைகளைப் பாடத் தொடங்கினர்.(5)

அந்தத் தெய்வீக மகவான் {இந்திரன்}, ஆயுதங்களைச் சுமக்கும் பலாஹகங்களின் பாதுகாப்புடனும், வஜ்ரம் வீசும்போது உண்டாகும் மின்னலின் துணையுடனும், விரும்பியவாறு திரியும் மலைகளுக்கு ஒப்பாகவும் தன்னுடைய யானையில் முன்னேறத் தொடங்கினான். சோம வேள்வயில் ஹவிஸ் வைக்கப்படும் இடத்தில் வாழும் விப்ரர்கள், அவனது மகிமைகளைப் பாடத் தொடங்கினர்.(6,7) தேவர்களின் மன்னன் தேவலோகத்திற்குச் சென்ற போது தேவதூரியங்கள் {ஊதுகுழல்கள்} முழங்கின. ஆயிரக்கணக்கான அப்சரஸ்கள் அவனுக்கு முன்பு ஆடத் தொடங்கினர்.(8) சூரியன், தன் குடும்பத்தில் பிறந்த கேதுவால் பாதுகாக்கப்பட்டு ஒளிர்வதைப் போலவே அந்தத் தேரும் மாதலியால்[1] பாதுகாக்கப்பட்டு அழகாகத் தெரிந்தது. ஓராயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்ட அந்தத் தேர், மனம் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்டதாகத் தெரிந்தது. சூரியனின் கதிர்களில் மூழ்கிய மேரு மலை போல அது தெரிந்தது[2].(9,10)

[1] "இந்திரனின் சாரதி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.


[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த நான்கு அடிகளை {அஃதாவது 9, 10 ஆகிய இரண்டு ஸ்லோகங்களை} 5ம் ஸ்லோகத்திற்கு அடுத்துப் பொருத்தலாம். 2 முதல் 10 வரையுள்ள ஸ்லோகங்கள் ஏகான்வயமாகும்" என்றிருக்கிறது.


யமன், தன் தண்டத்தையும், கதாயுதத்தையும் உயர்த்தியபடியும், தைத்தியர்களை அச்சுறுத்தியவாறும், தேவர்களின் படைக்கு மத்தியில் நின்றிருந்தான்[3].(11) கையில் கதாயுதத்துடன் வருணனும், தேவர்களின் படைக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான். அவன் நான்கு கடல்களாலும், பன்னகர்களாலும் {பாம்புகளாலும்} சூழப்பட்டிருந்தான். அவனது மேனி நீர் நிறைந்ததாகவும், சங்குகள், ரத்தினங்கள் மற்றும் அங்கதங்களால்[4] அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது[5].(12) அவன் கையில் காலம் என்ற சுருக்குக்கயிற்றுடன் {காலபாசத்துடன்} எப்போதும் திரிபவன். சந்திரனின் கதிர்கள் மற்றும் காற்றால் கலங்கிய அலைகளோடு ஒப்பிடத்தக்க குதிரைகளுடன் அவன் ஆயிரம் வகைகளில் விளையாடுபவன்.(13) அவன் உடுத்திய உடை கரியதாகவும், அவன் அணிந்த அழகிய அங்கதங்கள் பவளங்களாலானவையாகவும் இருந்தன. அவனது மேனி நீலக்கல்லின் நிறம் கொண்டதாக இருந்தது, அவனது கழுத்தைச் சுற்றி ஓர் ஆரம் தொங்கிக் கொண்டிருந்தது. கரையில் இருந்து பெருங்கடல் பிரியும் போது கலக்கமடைவதைப் போலவே, அவன் போரை எதிர்பார்த்து அங்கே நின்று கொண்டிருந்தான்.(14,15)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தேவன் யமன், அபரிமித வ்யாதி பரிவாரத்துடன், அதாவது நோயெனும் எண்ணிலடங்காத படைவீரர்களுடன் போருக்கு வந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.


[4] "தோள்களில் அணியப்படும் ஒருவகை ஆபரணம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.


[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கிருந்து {13ம் ஸ்லோகத்திலிருந்து} 15ம் ஸ்லோகம் வரை ஏகான்வயமாகும்" என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பை [2]ம் அடிக்குறிப்போடு ஒப்பிட்டுப் பார்க்கவும்.


நீலக்கல்லைப் போன்று கருநீல உடல் கொண்டவனும், மனிதர்களால் சுமக்கப்படுபவனுமான குபேரன், அங்கே யக்ஷர்கள், ராட்சசர்கள் மற்றும் குஹ்யர்களுடன் காணப்பட்டான்.(16) மன்னர்களின் மன்னனான அந்த வளங்களின் தலைவன் {குபேரன்}, சங்கு, பத்மம்[6] மற்றும் ஒரு தண்டத்தை ஆயுதங்களாகக் கொண்டிருந்தான்.(17) அருள்நிறைந்தவனான அந்த வளங்களின் மன்னன்[7] {குபேரன்}, புஷ்பகமென்னும் தன் தேரில் நின்று கொண்டிருந்தான். மன்னர்களின் மன்னனும், சிவனின் நண்பனும், மனிதர்களால் சுமக்கப்படுபவனுமான அந்தத் தலைவன் {குபேரன்}, சிவனைப் போலவே போரில் அங்கே தோன்றினான்.(18) ஆயிரங்கண் இந்திரன், தேவர் படையின் கிழக்குப் பக்கத்தைப் பாதுகாத்தான், பித்ருக்களின் மன்னனான யமன், தெற்குப் பக்கத்தையும், வருணன் மேற்குப் பக்கத்தையும், குபேரன் வடக்குப் பக்கத்தையும் பாதுகாத்தனர்.(19) போரில் பயங்கரர்களான லோகபாலர்கள் நால்வரும், தேவர் படையின் நான்கு பக்கங்களையும் பாதுகாத்து, அவரவருக்குரிய பகுதிகளை விழிப்புடன் கண்காணித்தனர்.(20)

[6] "குபேரனின் கருவூலங்கள் அல்லது ரத்தினங்களில் ஒன்று" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.


[7] "உரையில் இருப்பது, குபேரனின் பெயரைக் குறிக்கும் நிதிபதி என்ற சொல்லாகும். நிதி என்பது, பத்மம், மஹாபத்மம், சங்கம், மகரம், கசபம், முகுந்தம், நந்தம், நிலம், கர்பம் எனப் பட்டியலிடப்படும் தெய்வீகமான ஒன்பது கருவூலங்களைக் கொண்டதாகும். இவற்றில் சில மதிப்புமிக்க ரத்தினங்களைப் போலத் தோன்றினாலும் அவற்றின் இயல்பு சரியாக விளக்கிச் சொல்லப்படவில்லை. அவை தாந்த்ரீக அமைப்பின் படி வடிவங்கொடுக்கப்பட்டு, அவை {அந்த வடிவங்கள்} குபேரனுக்கோ, செழிப்பின் தேவியான லக்ஷ்மிக்கோ தொண்டு செய்யும் சிறுதெய்வங்களாக வழிபடப்படுகின்றன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.


பிரகாசமிக்கத் தன் கதிர்களைக் கொண்டே எரிந்து ஒளிரும் சூரியன், ஆகாயத்தில் செல்லும் ஏழு குதிரைகளால் இழுக்கப்பட்ட தன் தேரில் இருந்தான்.(21) துவாதசாத்மாவான[8] அந்தக் கதிர்களின் தலைவன் {சூரியன்}, தன் ஆயிரங்கதிர்களின் பிரகாசத்தால் ஒளிர்ந்து, நித்திய உலகங்களுக்கு வெப்பத்தை அளித்தபடியே உதய மற்றும் அஸ்த மலைகளுக்கு எதில் செல்வானோ அந்தத் தேரில் ஏறி, தேவர்களுக்கு மத்தியில் திரியத் தொடங்கினான்.(22,23)

[8] "இது சூரியனின் பட்டப்பெயராகும். துவாதசம் என்றால் பனிரெண்டு, ஆத்மாரம் என்றால் அடையாளம்; ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் அடையாளங்காணப்படவும், குறிப்பிடப்படவும் கூடிய பனிரெண்டு ஆதித்யர்கள், அல்லது சூரியர்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.


குளிர்ந்த கதிர்களைக் கொண்ட சந்திரன், தன் குளுமையான மற்றும் நீர்மயமான கதிர்களால் அண்டத்தைத் திளைக்கச் செய்தபடியே, வெண்ணிறக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தன் தேரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(24) தானவர்கள், அந்தப் போர்க்களத்தில், குளிர்ந்த கதிர்களைக் கொண்டவனும், பிராமணர்களின் அதிதேவனும், விண்மீன்களால் சூழப்பட்டவனும், பூமியின் நிழலால் குறிக்கப்படும் உடலைக் கொண்டவனும், இரவிருளை அகற்றுபவனும், சாறுகள் அனைத்தின் பிறப்பிடமும், செடிகள் அனைத்தின் தலைவனும் பாதுகாவலனுமாக இருப்பவனும், அமுதத்தின் பிறப்பிடமும், உலகில் உணவுக்கான முதல் பிறப்பிடமும், மென்மையான, குளிர்ந்த சாறுகளுடன் அடையாளம் காணப்படுபவனும், பனியைப் பகிர்பவனுமான சோமனை {சந்திரனைக்} கண்டனர்.(25-27)

உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரளிக்கும் வாயு, தன் சக்தியால் ஊக்கமடைந்தவனாகவும், மேகத்துடன் சேர்ந்தவனாகவும், மாறுபட்ட திசைகளில் வீசவும், தைத்தியர்களைத் தாக்கவும் தொடங்கினான். உயிரினங்கள் அனைத்தின் உயிராக இருக்கும் அவன் மனிதனில் ஐந்து உயிர்க்காற்றுகளாக வாழ்கிறான்; ஏழாகப் பகுக்கப்பட்டு, அசையும் மற்றும் அசையாத படைப்புகள் அடங்கிய மூவுலகங்களையும் அவனே தாங்குகிறான். நெருப்பின் சாரதியென மக்கள் அவனை அழைக்கின்றனர். அவனே அனைத்தின் காரணனாகவும், தலைவனாகவும் இருக்கிறான். பாடுவதற்குப் பயன்படும் ஏழு இசையொலிகளே அவனது தோற்றத்தின் பிறப்பிடமாகும். அவன் மிகச் சிறந்த பூதமாகவும், உடலற்றவனாகவும் அழைக்கப்படுகிறான். அவன் வானத்தில் செல்கிறான், மிக வேகமாகச் செல்கிறான், ஒலியையே தன் பிறப்பிடமாகக் கொண்டிருக்கிறான்.(28-31) பாம்புகளைப் போன்ற வெண்ணிறமாக இருந்தவையும், உறையில் இருந்து உருவப்பட்டவையுமான வாள்களுடனும், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் வித்யாதரர்களின் துணையுடனும் மருத்துகள் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர்.(32) முன்னணி பாம்புகள், ஏதோ தேவர்களின் கணைகளைப் போலாகி, கோபத்தில் தங்கள் வாய்களைத் திறந்து கடும் நஞ்சைப் பொழிந்தபடியே, வானில் திரிந்து கொண்டிருந்தன.(33) மலைகள் அனைத்தும், பாறைகளாலான தங்கள் சிகரங்களைக் கொண்டும், நூற்றுக்கணக்கான கிளைகளுடன் கூடிய மரங்களைக் கொண்டும் தானவர்களைக் கலங்கடிப்பதற்காகத் தேவர்களின் முன்பு தோன்றின.(34)

பெருஞ்சிறப்புமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனும், சக்கரம் மற்றும் கதாயுததாரியும், மூன்று காலடிகளைக் கொண்ட தாமரை உந்தி ரிஷிகேசனும், அழிவுக்கால நெருப்பைப் போலப் பெரும்பிரகாசம் மிக்கவனும், அண்டத்தை ஆள்பவனும்,(35) மதுசூதனனும், பெருங்கடலில் பிறந்தவனும், ஹவ்யத்தை உண்பவனும், வேள்விகளால் கௌரவிக்கப்படுபவனும், நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றோடு அடையாளம் காணப்படுபவனும், பூதங்களோடு ஒன்று கலந்திருப்பவனும்,(36) அமைதி மற்றும் உள்ளச்சமநிலையை அளிப்பவனும், பகைவரை அழிப்பவனும், அண்டத்தின் பிறப்பிடமாக, வித்தாக இருப்பவனும், உலகின் ஆசானும், கொடியில் கருடச் சின்னம் கொண்டவனுமான தலைவன் ஹரி, தேவர்களின் படைக்கு மத்தியில், உதயச் சூரிய வட்டிலில் உதிக்கும் நெருப்பைப் போன்று பிரகாசிப்பதும், பகைவரைக் கொல்வதுமான தன் சக்கரத்தை எடுத்துக் கொண்டும், அசுரர்களைக் கொல்லும் பிருஹதி மற்றும் மஹதி என்ற கதாயுதங்களை எடுத்துக் கொண்டும், இடக்கரத்தில் சாரங்க வில்லை எடுத்துக் கொண்டும், எஞ்சிய மற்ற கரங்களில் எரிந்து கொண்டிருக்கும் பிற ஆயுதங்களையும் வைத்திருந்தான்.(37-39)

பேருடல் படைந்தவனும், அருணனின் தம்பியும், பறவைகளில் முதன்மையானவனும், பாம்புகளை உண்டு வாழும் இருபிறப்பாளர்களில் சிறந்தவனும், கசியபரின் மகனும், வேகத்தில் காற்றைவிட மேன்மையானவனும், வானைக் கலங்கடிப்பவனும், பெரும் பாம்புகள் தொங்கிக் கொண்டிருக்கும் வாயைக் கொண்டவனும்,(40,41) அமுதத்திற்காகக் கடல் கடையப்பட்ட பிறகு விடுதலை அடைந்த மந்தர மலையைப் போலப் பெரிதானவனும், தேவாசுரப் போர்களில் நூறுக்கணக்கான முறை தன் ஆற்றலை வெளிப்படுத்தியவனும்,(42) அமுதத்துக்காகத் தேவர்களின் மன்னனுடைய {இந்திரனின்} வஜ்ரத்தால் ஏற்பட்ட தழும்பை உடலில் கொண்டவனும், அவிழ்ந்த கூந்தலைக் கொண்டவனும், பளபளக்கும் காது குண்டலங்களைக் கொண்டவனும், பலவண்ண இறகுகளாலான உடுப்பைக் கொண்டவனும், உலோகங்களைக் கொண்ட மலையைப் போன்று பெரிதானவனும்,(43) பிரகாசமான ரத்தினங்களுடன் கூடியவையும், சந்திரன் போன்ற காந்தியைக் கொண்டவையுமான பாம்புகளைத் தன் பரந்த மார்பில் கொண்டவனுமான ஸுபர்ணனை {கருடனைத்} தலைவன் ஹரி செலுத்திக் கொண்டிருந்தான்.(44) அண்ட அழிவின் போது வானவில்லுடன் கூடிய இரு மேகங்களைப் போல அழகாக வரையப்பட்ட இரு சிறகுகளுடன் அவன் {கருடன்} வானில் சுகமாகப் பறந்து கொண்டிருந்தான்.(45) சிவப்பு, கருப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட பகைவரின் முகாமுக்கு அவன் பயங்கரனாக இருந்தான்.(46) போரில் அவனைத் தேவர்கள் பின்தொடர்ந்தனர். பெரும் முனிவர்கள், சிறந்த பாடல்களால் அந்தக் கதாதரனின் மகிமைகளைப் பாடிக் கொண்டிருந்தனர்.(47-48)

விவஸ்வானின் மகனான யமனின் தலைமையில், குபேரனின் துணையுடனும், நீரின் மன்னனான வருணனால் சூழப்பட்டும், தேவர்களின் மன்னனால் தலைமை தாங்கப்பட்டும், சந்திரனின் கதிர்களால் அழகூட்டப்பட்டும், போர் விரும்பும் தேவர்களால் வலுவூட்டப்பட்டும், காற்றொலிகளின் தன்மையுடனும், நெருப்பால் பிரகாசமடைந்தும், ஜிஷ்ணு, பஹிஷ்ணு, ப்ராஜிஜ்ணு மற்றும் விஷ்ணு சக்திகளால் சூழப்பட்டும் இருந்த அந்தத் தேவர்களின் படை, போருக்காகக் காத்திருந்தது அற்புதமாக இருந்தது.(49-51) தேவர்களின் நலத்திற்காக அங்கீரஸும், தைத்தியரின் நலத்திற்காக, அவர்களின் ஆசான் சுக்ரனும் வேண்டினர்" {என்றார் வைசம்பாயனர்}.(52)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 44ல் உள்ள சுலோகங்கள் : 52
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English