Monday, 27 April 2020

குரோஷ்டுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 36

(க்ரோஷ்டு வம்ச வர்ணனம்)

Kroushthu's Family | Harivamsa-Parva-Chapter-36 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குரோஷ்டுவின் சந்ததி; விதர்ப்பர்கள், மது குலத்தவர்; சாத்வத குலத்தவர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சிறப்பு வாய்ந்த விருஜினீவான் குரோஷ்டுவின் மகனாவான்[1]. அவனுடைய {விருஜினீவானின்} மகன் யாகங்களைச் செய்பவர்களில் முதன்மையான ஸ்வாஹி ஆவான்.(1) ஸ்வாஹியின் மகன் பேசுபவர்களில் முதன்மையானவனான மன்னன் உஷத்கு {ருஷத்கு} ஆவான். மிகச் சிறந்த மகனை விரும்பிய அவன் {உஷத்கு}, அபரிமிதமான கொடைகளுடன் கூடிய மகத்தான வேள்விகளைப் பலவற்றைச் செய்து தேவர்களைத் தணித்தான். பல்வேறு அற விழாக்களைச் செய்ததன் மூலம் அவன் சித்ரரதன் என்ற பெயரில் ஒரு மகனை அடைந்தான்.(2,3) அவனுடைய {சித்ரரதனின்} மகன் அபரிமிதமான கொடைகளை அளிப்பவனும், முறையாக யாகங்களைச் செய்பவனும், வீரனுமான அரசமுனி சசபிந்து ஆவான்.(4)



[1] குரோஷ்டுவுக்கு இரண்டு மனைவிகள் என்பதை 34:1ல் கண்டோம். இந்த விருஜினீவான் அவர்களில் யாருக்குப் பிறந்தவன் என்ற குறிப்பு, மன்மதநாததத்தர், தேசிராஜு ஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராய் ஆகிய மூவரின் பதிப்புகளிலும் இல்லை.

பெருஞ்சிறப்புவாய்ந்த மன்னன் பிருதுசிரவன், சசபிந்துவின் மகனாவான். புராணங்களை நன்கறிந்த முனிவர்கள், பிருதுசிரவனின் மகனாக ஆந்தரனை {உத்தரனை} நியமித்தனர். அவனுடைய {உத்தரனின்} மகன் ஸுயஜ்ஞனும், அவனுடைய {ஸுயஜ்ஞனின்} மகன் உசதனும் ஆவர். அவரவர் வகைக்குப் பரிந்துரைத்தபடியே வேள்விகளைச் செய்ய விரும்பும் மனிதர்கள் அனைவரிலும் அவன் {உசதன்} முதன்மையானவனாக இருந்தான்.(5,6) பகைவரை ஒடுக்குபவனான சினேயு, உசதனின் மகனாவான். அரசமுனியான மருத்தன், சினேயுவின் மகனாவான்.(7) மருத்தன், கம்பலபர்ஹிஷனைத் தன் மூத்த மகனாக அடைந்தான்.அவன் கோபத்துடன், மறுமையில் சிறந்த பலன்களை அடையவற்கு அறச் சடங்குகள் பலவற்றைச் செய்தான்.(8)

கம்பலபர்ஹிஷன், ஸுதப்ரஸூதியைத் தன் மகனாகவும், அவன் {ஸூதப்ரஸுதி}, ருக்மகவசனைத் தன் மகனாகவும் பெற்றனர்.(9) ஸூதப்ரஸுதி, நூறு கவசங்களை அணிந்த ஒரு புத்திசாலி போர்வீரனைக் கூரிய கணைகளால் போரில் கொன்று பெருஞ்செழிப்பை அடைந்தான்[2].(10) பகைவீரர்களைக் கொல்பவனான பராஜித், ருக்மகவசனுக்குப் பிறந்தான். ருக்மேஷு, பிருதுருக்மன், ஜியாமோகன், பாலிதன் மற்றும் ஹரி என்ற பெருஞ்சக்திவாய்ந்த ஐந்து மகன்களைப் பராஜித் பெற்றான். அவர்களின் தந்தை பாலிதனையும், ஹரியையும், விதேஹ மன்னனுக்குக் கொடுத்தான்.(11,12)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "கம்பலபர்ஹிஷன், ஒவ்வொரு பிரசவத்தின் போதும் மகனையே விரும்பினான் என்பதால், அவன் நூறு மகன்களுக்கும் பிறகு பெற்ற மகன் ஸூதப்ரஸுதி என்ற பெயிரில் அழைக்கப்பட்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "கம்பலபர்ஹிஷன் நூறு மகன்களை விரும்பினான். அந்த நூறு மகன்களுக்குப் பிறகு அவன் ருக்மகவசனை ஒரு மகனாக அடைந்தான்" என்றிருக்கிறது.

ருக்மேஷு, பிருதுருக்மனின் துணையுடன் மன்னனானான். ஜியாமோகன் அவர்கள் இருவராலும் நாடு கடத்தப்பட்டு ஓர் ஆசிரமத்தில் வாழ்ந்தான்.(13) காட்டில் வாழ்ந்து வந்த அவன் {ஜியாமோகன்}, உள்ளச்சமநிலையை அடைந்ததும், பிராமணர்களால் கற்பிக்கப்பட்டான். அதன்பேரில் அந்தத் தேர்வீரன் வெளிநாடுகளைக் கைப்பற்றி, நர்மதை ஆற்றின் கரையில் அமைந்திருந்த மிருத்திகாவதி நகரத்தில் தனியாக வாழ்ந்து வந்தான். பிறகு அவன் {ஜியாமோகன்}, ருக்ஷவத மலையைக் கைப்பற்றி, சுக்திமதி நகரில் வாழ்ந்தான்.(14,15) ஜியாமோகனின் மனைவியான சைப்யை உறுதிமிக்கவளாகவும், கற்பிற்சிறந்தவளாகவும் இருந்தாள். அந்த மன்னனுக்குச் சந்ததி இல்லையென்றாலும், அவன் மற்றொரு மனைவியைக் கொண்டானில்லை.(16)

அவன் {ஜியாமோகன்} ஒரு குறிப்பிட்ட போரில் வெற்றியடைந்து அங்கே ஒரு மகளைப் பெற்றான். அப்போது அந்த மன்னன் வெகு சிக்கிரமாகத் தன் மனைவியிடம் {சைப்யையிடம்}, "இவள் உன் மருமகளாவாள்" என்றான். இதைக் கேட்ட அந்த ராணி, "இவள் யாருடைய மருமகளாவாள்?" என்று கேட்டாள். அதற்கு மன்னர்களில் முதன்மையானவனான அந்த ஜியாமோகன், "இந்த உபதானவி, உனக்குப் பிறக்கப் போகும் மகனின் {விதர்ப்பனின்} மனைவி ஆவாள்" என்றான். அந்தப் பெண் {உபதானவி} கடுந்தவங்களைச் செய்த காரணத்தால், நற்பேற்றைப் பெற்ற சைப்யை, தன் முதிய வயதில், விதர்ப்பன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள்.(17-19) விதர்ப்பன் அந்தப் பெண்ணிடம் {உபதானவியிடம்}, வீரர்களும், கல்விமான்களும், போர்க்கலையின் பல்வேறு வழிமுறைகளை அறிந்தவர்களும், கிராதன் {கிரதன்} மற்றும் கைசிகன் {கௌசிகன்} என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான மகன்களைப் பெற்றான்.(20)

அவனுடைய {விதர்ப்பனின்} மூன்றாவது மகன் பெரும்பக்திமானான லோம்பாதன் ஆவான். அவனுடைய {லோம்பாதனின்} மகன் பப்ருவும், அவனுடைய {பப்ருவின்} மகன் ஆஹ்விருதியும் {ஆஹ்வதியும்} ஆவர். கைசிகன் {கௌசிகன்} என்ற அவருடைய மகன், கல்விமானாகவும், பெரும்பக்திமானாகவும் இருந்தான். அவனுடைய {கௌசிகனின்} மகன் சேதியின் பெயரையே சைத்ய குல மன்னர்களும் பெற்றனர்.(21,22) விதர்ப்பனின் மகன் பீமனும், அவனுடைய {பீமனின்} மகன் குந்தியும் ஆவர். அவன் {குந்தி}, திருஷ்டன் மற்றும் பலமிக்க ஆனதிருஷ்டன் என்ற பெயர்களில் இரு மகன்களைப் பெற்றான். திருஷ்டனுக்கு, பக்திமான்களான, ஆவந்தன், தசார்ஹன், பலமிக்க விஷஹரன் என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான மூன்று வீரமகன்கள் இருந்தனர். தசார்ஹனின் மகன் வியோமனும், அவனுடைய மகன் ஜீமுதனும் ஆவர்.(23,24)

அவனுடைய {ஜீமுதனின்} மகன் பிரேஹதியும் {பிருஹதியும்}, அவனுடைய {பிருஹதியின்} மகன் பீமரதனும் ஆவர். அவனுடைய {பீமரதனின்} மகன் நவரதன் ஆவான்.(25) அவனுடைய {நவரதனின்} மகன் தசரதனும், அவனுடைய {தசரதனின்} மகன் சகுனியும் ஆவர். பின்னவனிடம் {சகுனியிடம்} கரம்பன் பிறந்தான். மன்னன் தேவராதன், கரம்பனின் மகனாவான். அவனுடைய {தேவராதனின்} மகன் தேவக்ஷத்ரன் ஆவான். பெருஞ்சிறப்புமிக்கவனும், தேவனைப் போன்றவனும், இனிய வாக்கைக் கொண்டவனும், தன் குலத்திற்கு மகிமை சேர்ப்பவனுமான மன்னன் மது, தேவக்ஷத்ரனின் மகனாவான். மது தன் மனைவியான விதர்பியிடம் மருவஸன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.(26-28)

மனிதர்களில் முதன்மையான புருத்வானன் {புருத்வான்}, மருவஸனின் மகனாவான். ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே} அவன் {புருத்வானன்}, வி/வைதர்ப்பர்களின் குலத்தில் பிறந்தவளான தன் மனைவி பத்ராவதியிடம், மது என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான்.(29) மது, இக்ஷ்வாகு குலத்தில் ஒரு பெண்ணை மணந்து கொண்டு அவளிடம் ஸத்வானன் {ஸத்வான்} என்ற மகனைப் பெற்றான். அவன் நல்லியல்பின் குணத்தைக் கொண்டவனாகவும், சாத்வதர்களின் குல மகிமையை அதிகரிப்பவனாகவும் இருந்தான்.(30) உயரான்ம ஜியாமோகனின் இந்தக் குடும்பக் கதையை அறிந்த மனிதன் சந்ததியையும், உயர்ந்த இன்பத்தையும் அடைவான்" என்றார் {வைசம்பாயனர்}.(31)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 31
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English