Thursday, 2 April 2020

ஸகரன் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 14

(ஸகரோத்பத்தி)

An Account of Sagara | Harivamsa-Parva-Chapter-14 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஸகரன் நஞ்சுடன் பிறந்த காரணம்; ஔர்வரிடம் இருந்து ஆக்னேயாஸ்திரத்தை அடைந்த ஸகரன்; பகைவர்களை வென்றது; அவர்களது நெறிமுறைகளைத் தகர்த்தது; அஸ்வமேதயாகம் செய்யத் தொடங்கிய ஸகரன்; யாகக் குதிரை காணாமல் போனது; ஸகரனின் மகன்கள் கபிலரின் பார்வையால் எரிந்துபோனது; பெருங்கடலுக்கு ஸாகரம் என்ற பெயர் வந்தது; வேள்விக்குதிரையை ஸகரனிடம் திரும்பக் கொடுத்த பெருங்கடல்...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பலம்நிறைந்த மன்னனான ஸகரன் நஞ்சுடன் பிறந்தது ஏன்? ஷகர்கள் மற்றும் பெருஞ்சக்திவாய்ந்த க்ஷத்ரிய குலங்களுக்கென விதிக்கப்பட்ட அவரவருக்குரிய நெறிமுறைகளை அவன் ஏன் கோபத்தில் இழக்கச் செய்தான்? நஞ்சால் அவன் தீங்குறாதது ஏன்? ஓ! பெருந்தவசியே, இவை அனைத்தையும் முழுமையாக விளக்குவீராக" என்று கேட்டான்.(1,2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, தீமைக்கு அடிமையான பாகு {பாஹுகன்} வளர்ந்து வந்தபோது, தாலஜங்கர்கள் மற்றும் ஷகர்களுடன் கூடிய ஹைஹயர்கள் அவனது நிலப்பகுதிகளைச் சூறையாடினர்.(3) யவனர்கள், பாரடர்கள் {ப்பாரடர்கள்}, காம்போஜர்கள், பஹ்லவர்கள், ஷகர்கள் ஆகிய ஐந்து (மிலேச்ச) குலங்கள் ஹைஹயர்களுக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர்.(4) மன்னன் பாகு {பாஹுகன்}, தன் நாட்டை இழந்து காட்டு வாழ்வுக்கு ஓய்ந்து சென்றான். அவனைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியுடன் சேர்ந்து பெருந்துன்பத்தை அனுபவித்துத் தன் உயிரையும் விட்டான்.(5) யது குலத்தைச் சேர்ந்த அவனது {பாஹுகனின்} மனைவி (அந்நேரத்தில்) கருவுற்றிருந்தாள். {பாஹுகன் காட்டுக்குச் சென்ற போது} அவள் தன் கணவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவளுடைய கணவனின் {பாஹுகனின்} மற்றொரு மனைவி (அவள் செல்வதற்கு) முன்பு அவளுக்கு நஞ்சைக் கொடுத்திருந்தாள்.(6)

{பாஹுகன் இறந்த நேரத்தில்} அவள், தன் கணவனுக்கான ஈமச் சிதையை அமைத்து அதில் ஏறியபோது, பிருகு குலத்தில் பிறந்த ஔர்வர், கருணை கொண்டு அவளைத் தடுத்தார்.(7) அவள் அவரது {ஔர்வரின்} ஆசிரமத்திலேயே பெருஞ்சக்திவாய்ந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான மன்னன் ஸகரனை நஞ்சுடன் சேர்த்துப் பெற்றெடுத்தாள்.(8) அந்த உயரான்மா (கொண்ட மன்னன்) பிறந்ததைத் தொடர்ந்து செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து, அவனுக்கு வேதங்களைக் கற்பித்த ஔர்வர், இறுதியாகத் தேவர்களாலும் தாக்குப்பிடிக்கமுடியாது நெருப்பாயுதத்தை {ஆக்னேயாஸ்திரத்தை} அவனுக்குக் கொடுத்தார். பெரும்பலத்தைக் கொடையாகக் கொண்டிருந்த அவன், அவ்வாயுதத்தின் வலிமையைக் கண்டு, சினமடைந்த ருத்திரன் விலங்குகளைக் கொல்வதைப் போல ஹைஹயர்களை உடனே அழித்தான். (மன்னர்களில்) சிறப்புமிக்கவர்களில் முதன்மையான அவன் {ஸகரன்}, உலகம் முழுவதும் தன் புகழைப் பரப்பினான்.(9-11)

அதன்பிறகு அவன், ஷகர்கள், காம்போஜர்கள் மற்றும் பஹ்லவர்களின் குலத்தை வேரோடு அழிக்க எண்ணம் கொண்டான்.(12) அந்த உயரான்ம வீரனால் {ஸகரனால்} கொல்லப்பட இருந்த போது, அவர்கள் நுண்ணறிவுமிக்க வசிஷ்டரின் புகலிடத்தை நாடி அவரை வணங்கினர்.(13) பெரும்பிரகாசம் கொண்ட வசிஷ்டர், உரிய நேரத்தில் வந்த அவர்களைக் கண்டு, அவர்களைப் பாதுகாத்து, ஸகரனைத் தடுத்தார்.(14) ஸகரன், தன் உறுதிமொழியையும், தன் ஆசானின் சொற்களையும் கருத்தில் கொண்டு, அவர்களது நெறிமுறைகளை மீறி, அவர்களது உடைகளை மாற்றச் செய்தான்.(15) அவன் {ஸகரன்}, ஷகர்களின் பாதித் தலைகளை மழித்துவிட்டு அவர்களை அனுப்பினான். யவனர்களையும், காம்போஜர்களையும் முழுமையாகத் தலைகளை மழித்தனுப்பினான்.(16) பாரடர்கள் {ப்ராடர்கள்} தங்கள் தலைமயிர் கலைந்தவர்களாகவும், பஹ்லவர்கள் தாடி வைப்பவர்களாகவும் ஆனார்கள். அவர்கள் வேதங்கற்பதற்கும், நெருப்பில் படையல் அளிப்பதற்கும் அந்த உயரான்மாவால் (ஸகரனால்) தடை செய்யப்பட்டனர்.(17)

ஓ! என் குழந்தாய், ஷகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பாரடர்கள், கோலீஸர்ப்பர்கள், மஹிஷர்கள், தார்த்யர்கள், சோழர்கள், கேரளர்கள் {சேரர்கள்} ஆகியோர் அனைவரும் க்ஷத்ரியர்களாவர். ஓ! மன்னா, வசிஷ்டரின் சொற்களுக்கிணங்க உயரான்ம ஸகரனின் மூலம் அவர்கள் தங்கள் நெறிமுறைகளை இழந்தனர் {பழக்கவழக்கங்களைக் கைவிட்டனர்}.(18,19) பிறரின் நெறி வடிவங்களை இழக்கச் செய்த அந்த மன்னன் {ஸகரன்}, கஸாம், துகாராம் {பாராம்}, சீனம் {சோழம்}, மத்ரம், கிஷ்கிந்தை, குந்தலம் {கௌந்தலம்}, வங்கம், சால்வம், கொங்கணம் {கௌங்கணகம்} மற்றும் பிற (மாகாணங்கள்) அடங்கிய மொத்த பூமியையும் வென்று, வாஜபேய வேள்வியைச்[1] செய்யத் தொடங்கி ஒரு குதிரையை அவிழ்த்து விட்டான்.(20,21) அந்தக் குதிரை தென்கிழக்குப் பெருங்கடலில் உலவிக் கொண்டிருந்தபோது களவாடப்பட்டு, பூமிக்குள் கொண்டு செல்லப்பட்டது.(22)

[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், இந்த வேள்வி அஷ்வமேதம் என்று குறிப்பிடப்படுகிறது.

பிறகு அந்த மன்னன் நாட்டின் அந்தப் பகுதியைத் தன் மகன்களைக் கொண்டு அகழச் செய்தான். இவ்வாறு அந்தப் பெருங்கடல் அகழப்பட்டபோது, தேவர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் சிறந்தவனும் {புருஷோத்தமனும்}, குடிமுதல்வனுமான ஹரி, கபிலரின் வடிவில் உறங்கக் கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தனர்.(23,24) ஓ! பெரும் மன்னா, அவன் {கபிலரின் வடிவில் இருந்த ஹரி} விழித்தபோது, அவனது கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பின் மூலம், (ஸகரனின்) மகன்களில் நால்வரைத் தவிர மற்ற அனைவரும் எரிக்கப்பட்டனர்.(25) ஓ! மன்னா, {அவர்களில் எஞ்சிய} பர்ஹகேது, ஸுகேது, தர்மரதன், வீரனான பஞ்சஜனன் ஆகியோர் ஸகரின் குலத்தைத் தழைக்கச் செய்தனர்.(26) அனைத்தையும் அறிந்தவனான ஹரிநாராயணன், முடிவற்ற வம்சத் தொடர்ச்சி, இக்ஷ்வாகு குடும்பத்தின் நித்திய மகிமை, பெருங்கடல் {சமுத்ரன்} மகனாகப் பிறத்தல், சொர்க்கத்தில் நித்திய வசிப்பிடம், கபிலரின் நெருப்புப் பார்வையால் எரிக்கப்பட்ட அவனுடைய மகன்கள் அனைவரும் நித்திய உலகத்தை அடைதல் ஆகிய பல வரங்களை அவனுக்கு {ஸகரனுக்கு} அளித்தான்.(27,28)

அதன்பிறகு, அர்க்கியத்துடன் அம்மன்னனை {ஸகரனை} வழிபட்ட பெருங்கடல் {ஸமுத்ரம்}, இதற்காக ஸகரன் தொடர்புடைய {ஸாகரம் என்ற} பட்டப்பெயரைப் பெற்றது.(29) அவன் அஸ்வமேத வேள்விக்கென விதிக்கப்பட்ட குதிரையைப் பெருங்கடலிடமிருந்து அடைந்தான்.(30) பெருஞ்சிறப்புடைய அந்த மன்னன் {ஸகரன்}, நூறு குதிரை வேள்விகளைச் செய்தான் என்றும், அவனுக்கு அறுபதாயிரம் மகன்கள் இருந்தனர் என்றும் நாம் கேள்விப்படுகிறோம்" {என்றார் வைசம்பாயனர்}.(31)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 31
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English