Wednesday, 1 April 2020

ஸத்யவிரதன் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 12

(காலவோத்பத்தி)

The story of Satyavrata - Legend of Galava | Harivamsa-Parva-Chapter-12 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : குவலாஷ்வனின் வழித்தோன்றல்கள்; திரையாருணன், தன் மகன் ஸத்யவிரதனின் அத்துமீறலுக்குத் தண்டனையாக அவனைக் கைவிட்டது; சண்டாளர்களுடன் சென்று வாழ்ந்த ஸத்யவிரதன்; விஷ்வாமித்ரரின் மகன்களைக் காத்தது; விஷ்வாமித்ரரின் இரண்டாவது மகன் காலவர்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "உயிரோடு எஞ்சியிருந்த அவனுடைய {குவலாஷ்வனின்} மூன்று மகன்களில் திருடாஷ்வன் மூத்தவனாகச் சொல்லப்படுகிறான்; சந்திராஷ்வனும், கபிலாஷ்வனும் இளைய மகன்கள் இருவராவர்.(1) துந்துமாரனின் {குவலாஷ்வனின்} மகனான திருடாஷ்வனின் மகன் ஹரியஷ்வன் ஆவான். அவனுடைய {ஹரியஷ்வனின்} மகனான நிகும்பன் எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனாக இருந்தான்.(2) நிகும்பனின் மகன், போர்க்கலையை நன்கறிந்தவனான ஸங்கதாஷ்வான். ஓ! மன்னா, ஸங்கதாஷ்வனுக்கு, கிருஷாஷ்வன், அகிருஷாஷ்வன் என்று இரு மகன்கள் இருந்தனர்.(3) நல்லோரால் மதிக்கப்படுபவளும், மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவளும், இமயத்தின் மகளுமான திருஷத்வதியே அவனுடைய {கிருஷாஷ்வனின்} மனைவியாவாள். அவளுடைய மகன் {மகன்களில் சிறந்தவன்} பிரஸேனஜித் ஆவான்.(4) பிரஸேனஜித்துக்கு, எப்போதும் கணவனிடம் அர்ப்பணிப்புடன் கூடியவளும், கௌரி என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மனைவி இருந்தாள். அவள் தன் கணவனால் {பிரஸேனஜித்தால்} சபிக்கப்பட்டுப் பஹுதை என்ற பெயரில் ஓர் ஆறானாள்.(5)


மூவுலகங்களையும் வென்ற மாந்தாதாவை மகனாகக் கொண்டிருந்த பேரரசன் யுவனாஷ்வன் அவனுடைய {பிரஸேனஜித்தின்} மகனாவான்.(6) அவனுடைய {மாந்தாதாவின்} மனைவி, உலகில் ஒப்பற்ற அழகியும், கற்புடையவளும், சசபிந்துவின் மகளும், பிந்துமதி என்ற மற்றொரு பெயரைக் கொண்டவளுமான சைத்ரரதியாவாள்.(7) கற்புடையவளான அவள் {சைத்ரரதி} தன்னுடன் பிறந்தோர் ஒரு கோடி பேரில்[1] மூத்தவளாவாள். ஓ! மன்னா, மாந்தாதா அவளிடம், பக்திமானான புருகுத்ஸன், மற்றும் அறவோனான முசுகுந்தன் ஆகிய இரண்டு மகன்களைப் பெற்றான். புருகுத்ஸனின் மகன் பேரரசன் திரஸத்தஸ்யு ஆவான்.(8,9) மன்னன் ஸுதன்வனை {பிற்காலத்தில்} மகனாகக் கொண்டவனும், ஸம்பூதன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனை அவன் {திரஸத்தஸ்யு} நர்மதையிடம் பெற்றான்.(10)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் "பத்தாயிரம் சகோதரர்கள்" என்றிருக்கிறது.

ஸுதவன்னின் மகன் எதிரிகளை ஒடுக்குபவனான திரிதன்வனாவான். கல்விமானும், பலமிக்கவனுமான திரையாருணன், திரிதன்வனின் மகனாவான்.(11) பலமிக்கவனும், தீய புத்தி கொண்டவனும், ஸத்யவிரதன் என்ற பெயரைக் கொண்டவனுமான அவனுடைய {திரையாருணனின்} மகன் {ஸத்யவிரதன்}, திருமண மந்திரங்களுக்குத் தடங்கல் ஏற்படுத்தினான்.(12) சிறுபிள்ளைத்தனம், மூடத்தனம், காமம், அறியாமை மற்றும் இன்பத்தின் காரணமாக அவன் மற்றொரு மனிதன் முறையாக மணந்து கொண்ட வாழ்க்கைத் துணையைத் தன் மனைவியாகக் கொண்டான்.(13) காமத்தினால் அவன் மற்றொரு குடிமகனின் மகளைக் களவு செய்தான். கொடுமை என்ற ஈட்டியால் துளைக்கப்பட்டவனும், (அதனால்) கோபமடைந்தவனுமான மன்னன் திரையாருணன், "பாழிடம் {பாழடைந்த இடத்திற்குச்} செல்வாயாக" என்று சொல்லி அவனை {ஸத்யவிரதனைக்} கைவிட்டான். தந்தையால் கைவிடப்பட்ட அவன் {ஸத்யவிரதன்} அவனிடம் {திரையாருணனிடம்}, "நான் எங்கே செல்வது?" என்று மீண்டும் மீண்டும் கேட்டான்.(14,15)

அப்போது அவனுடைய தந்தை, "செல், சண்டாளர்களுடன்[2] வாழ்வாயாக. நீ உன் குடும்பத்தை இழிவு செய்தாய், உன்னைப் போன்ற மகனுக்குத் தந்தையாக இருக்க நான் விரும்பவில்லை" என்றான்.(16) இவ்வாறு தந்தையால் {திரையாருணனால்} சொல்லப்பட்ட அவன் {ஸத்யவிரதன்}, அந்த நகரத்தை விட்டு வெளியேறினான். (எனினும்) அனைத்தையும் அறிந்தவரான வசிஷ்ட முனிவர் அவனைத் தடுக்கவில்லை.(17) ஓ! குழந்தாய், இவ்வாறு தந்தையால் கைவிடப்பட்ட வீரனான ஸத்யவிரதன், சண்டாளர்கள் வாழும் இடத்திற்குச் சென்றான். அவனுடைய தந்தையும் {திரையாருணனும்}, காட்டுக்குச் சென்றான்.(18) பகனைத் தண்டிப்பவன் (இந்திரன்)[3], அவன் {ஸத்யவிரதன்} செய்த கொடுமையினால், அவனுடைய நாட்டில் பனிரெண்டு நீண்ட வருடங்களாக மழை பொழியாதிருந்தான்[4].(19)

[2] "எவருடன் வாழ்வதன் மூலம் மக்கள் தங்கள் சாதியில் இருந்து விரட்டப்படுவார்கள் அந்தத் தாழ்ந்த சாதி மக்கள் இவர்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். மூலத்தில் ஸ்வாபாகர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

[3] "இது மழையின் தேவனான இந்திரனைக் குறிக்கும். பகன் என்ற அசுரனை அழித்ததன் மூலம் அவன் இந்தப் பட்டப்பெயரைப் பெற்றான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "சத்யவிரதன் சென்று இழிமக்களுடன் வாழ்ந்தான். ஆனால் அவனது தந்தையான திரையாருணனால் தன் மகன் சத்யவிரதனின் அவலநிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வேட்டையாடச் செல்வதைச் சாக்காகக் கொண்டு தன் மகனை திரும்பி அழைத்து வருவதற்காகக் காட்டுக்குச் சென்றான். தவறு செய்தவனுக்குத் தண்டனை வழங்குவதில் மன்னன் மேற்கொண்ட இந்த அத்துமீறலின் காரணமாக இந்திரன் அந்த நாட்டில் மழையைப் பனிரெண்டு வருடங்கள் நிறுத்தி வைத்தான்" என்றிருக்கிறது.

[4] "நாட்டில் மன்னன் இல்லாதது தர்மாகாது என்பதால் இந்திரன் மழையைப் பொழியவில்லை" என்று பிபேக்திப்ராயின் பதிப்பில் இருக்கிறது.

பெருந்தவசியான விஷ்வாமித்ரர், தமது மனைவியரிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, கடலின் அருகில் கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்தார்.(20) அவருடைய மனைவி, எஞ்சியிருக்கும் மகன்களைப் பராமரிப்பதற்கு அவரது இரண்டாம் மகனின் கழுத்தில் கயிற்றைக் கட்டி நூறு நாணயங்களுக்கு {நூறு பசுக்களுக்காக}[5] அவனை விற்றாள்.(21) ஓ! பரதனின் வழித்தோன்றலே, பக்திமானான அந்த இளவரசன் {ஸத்யவிரதன்}, விற்பனைக்காக அந்தத் தவசியின் மகன் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அவனை விடுவித்தான்.(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ஸத்யவிரதன், விஷ்வாமித்ரரை மகிழ்விப்பதற்காகவும், அவரது உதவியைப் பெறுவதற்காகவும் அவரது மகன்களைப் பராமரித்தான்.(23) கழுத்தில் இவ்வாறு {கயிற்றால்} கட்டப்பட்டிருந்ததால் அந்தப் பெருந்தவசி {விஷ்வாமித்ரரின் இரண்டாவது மகன்} காலவர் என்ற பெயரைப் பெற்றார். பெருந்தவசியான கௌசிகர் {காலவர்}, அந்த வீரனால் (மன்னனால் {ஸத்யவிரதனால்}) விடுவிக்கப்பட்டார்" {என்றார் வைசம்பாயனர்}.(24)

[5] தேசிராஜுஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில், "நூறு பசுக்களுக்காக விற்றாள்" என்றே இருக்கிறது.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 24
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English