Sunday, 22 March 2020

காலப்பிரிவினை | ஹரிவம்ச பர்வம் பகுதி – 08

(நிமிஷாதி கல்பாந்த ஸங்க்யம்)

Division of Time | Harivamsa-Parva-Chapter-08 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : மனிதர்களுக்கான காலப் பிரிவினைகள்; தேவர்களுக்கான காலப் பிரிவினைகள்; மனுவின் ஆட்சிக் காலம்; கல்பங்கள் ஆகியவற்றை ஜனமேஜயனுக்கு விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! உயர்ந்த நுண்ணறிவைக் கொண்ட இரு பிறப்பாளரே, யுகங்களைப் பட்டியலிட்டு, பிரம்மாவுடைய நாளின் கால அளவையும் நீர் குறிப்பிடுவீராக" என்றான்.(1)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பகைவரை அடக்குபவனே, பகல் என்றும், இரவென்றும் மனிதர்கள் எதைக் கொண்டு பிரிக்கிறார்களோ அதே கணக்கீட்டின் படி பிரம்மனின் நாட்களை நான் கணக்கிடப் போகிறேன் கேட்பாயாக.(2) ஐந்து நிமிடங்கள் ஒரு காஷ்டையாகவும், முப்பது காஷ்டைகள் ஒரு கலையாகவும், முப்பது கலைகள் ஒரு முகூர்த்தமாகவும் அமைகின்றன. சூரியன் மற்றும் சந்திரனின் நகர்வுகளைப் பொருத்து அமையும் ஒரு பகலும், இரவும் {ஒரு நாள் / ஓர் அகோரத்திரம்} முப்பது முகூர்த்தங்களைக் கொண்டன என்று நுண்ணறிவுமிக்கோர் கருதுகின்றனர். அத்தகைய பகல்களும், இரவுகளும் மேரு மலையைச் சுற்றி அமைந்திருக்கும் நாடுகள் அனைத்திலும் நாள்தோறும் நடைபெறுகின்றன.(3,4) பதினைந்து பகல்கள் மற்றும் இரவுகள் சேர்ந்து ஒரு பக்ஷமாகின்றன (அரைத்திங்களாகின்றன); {சுக்லபக்ஷம் [சொக்கு அரைத்திங்கள்] மற்றும் கிருஷ்ணபக்ஷம் [கருத்த அரைத்திங்கள்] என்ற} இரண்டு அரைத்திங்கள்கள் ஒரு மாதமாகின்றன; இரண்டு மாதங்கள் ஒரு ருது (பருவகாலம்) ஆகின்றன.(5) மூன்று ருதுகள் ஓர் அயனமாகவும், இரண்டு அயனங்கள் ஓர் ஆண்டும் ஆகின்றன. கணக்கீடு செய்யும் அறிவியலை நன்கறிந்தோர் அயனங்களை (பாதைகளை) வடக்கு {உத்தராயனம்} மற்றும் தெற்கு {தக்ஷிணாயனம்} என இரண்டாகப் பிரிக்கின்றனர்.(6)

காலத்தில் (பல்வேறு காலப் பிரிவினைகளில்) திறம்பெற்றோர் இரண்டு அரைத்திங்கள்களை {பக்ஷங்களைக்} கொண்ட ஒரு மாதமானது, பித்ருக்களின் ஒரு பகலும், இரவுமாகும் எனக் கருதுகின்றனர்.(7) மாதத்தின் கரும்பாதி {கிருஷ்ணபக்ஷம் / தேய்பிறை} அவர்களது பகலும், வெண்பாதி {சுக்லபக்ஷம் / வளர்பிறை} அவர்களது இரவுமாகின்றன. எனவே, ஓ! மன்னா, பித்ருக்களுக்கான சிராத்தங்கள் மாதத்தின் கரும்பாதியில் {கிருஷ்ணபக்ஷம் / தேய்பிறையில்} செய்யப்படுகின்றன.(8) மனிதர்களின் ஸம்வத்ஸரம் (ஓராண்டு) என்று கருதப்படுவது தேவர்களின் ஒரு பகலும், இரவுமாகும். அவற்றில் வட பாதை {உத்தராயனம்} அவர்களின் பகல் என்றும், தென் பாதை அவர்களின் இரவு என்றும் கருதப்படுகின்றன.(9) ஒரு தேவ வருடம் பத்து மடங்கில் பெருக்கப்படும்போது அது {அதாவது தேவர்களின் பத்து ஆண்டுகள்} மனுவின் ஒரு பகலும், இரவுமாகக் கருதப்படுகிறது. ஒரு பகலும் இரவும் பத்து மடங்காகப் பெருக்கப்படும்போது {அதாவது மனுவின் பத்து நாட்கள்} மனுவின் ஒரு பக்ஷமாக (அரைத்திங்களாக) அமைகின்றன.(10) {மனுவின்} ஒரு பக்ஷம் பத்து மடங்காகப் பெருக்கப்படும்போது அது {அதாவது மனுவின் பத்து பக்ஷங்கள்} ஒரு மாதமாகவும், பனிரெண்டு மாதங்கள் மனுவின் ஒரு பருவகாலமாகவும் {ருதுவாகவும்} உண்மையைப் பகுத்தாயும் ஞானிகளால் கருதப்படுகிறது. மூன்று ருதுக்கள் (பருவ காலங்கள்) ஓர் அயனமாகவும், இரண்டு அயனங்கள் ஒரு ஸம்வத்ஸரமாகவும் {ஓராண்டாகவும்} அமைகின்றன.(11)

அவர்களின் நாலாயிரம் ஆண்டுகள் {அதாவது தேவர்களின் 4000 ஆண்டுகள்} கிருத யுகத்தின் (பொற்காலத்தின்) கால அளவாக அமைகின்றன. ஓ! மன்னா {அத்தகைய} நானூறு ஆண்டுகள் ஸந்தியாகவும், இன்னும் அத்தகைய நானூறு ஆண்டுகள் ஸந்தியாம்ஷையாகவும் அமைகின்றன.(12) திரேதாயுகத்தின் அளவு {தேவர்களின் கால அளவில்} மூவாயிரம் ஆண்டுகளாகும். அதன் ஸந்தி மற்றும் ஸந்தியாம்ஷைக் காலங்கள் ஒவ்வொன்றும் முன்னூறு ஆண்டுகளின் அளவைக் கொண்டதாகும்.(13) துவாபர யுகத்தின் கால அளவும் {தேவர்களின் கால அளவில்} இரண்டாயிரம் ஆண்டுகளாகும். அதன் ஸந்தி மற்றும் ஸந்தியாம்ஷைக் காலங்கள் ஒவ்வொன்றும் இருநூறு ஆண்டுகளின் அளவைக் கொண்டதாகும்.(14) கலியுகம் {தேவர்களின் கால அளவில்} ஓராயிரம் ஆண்டின் அளவைக் கொண்டது என ஞானிகள் கணக்கிடுகின்றனர். அதன் ஸந்தி மற்றும் ஸந்தியாம்ஷைக் காலங்கள் ஒவ்வொன்றும் நூறு ஆண்டுகளின் அளவைக் கொண்டதாகும்.(15) இவ்வாறே {தேவர்களின் கால அளவில்} பனிரெண்டாயிரம் வருடங்கள் கொண்ட யுக அளவை நான் விளக்கினேன். தேவ அயனங்களால் அளக்கப்படும் யுகக் கணக்கைச் சொல்கிறேன் கேட்பாயாக.(16)

கிருதம், திரேதம், துவாபரம், கலி ஆகியன நான்கு யுகங்களாகும். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அத்தகைய எழுபத்தோரு யுகங்களில் ஒரு மன்வந்தரம் நிறைவடைகிறது. இவ்வாறே கணக்கீடு செய்யும் அறிவியலை நன்கறிந்தோர் சொல்கின்றனர். ஏற்கனவே குறிப்பிட்ட அயனமானது, வடக்கு, தெற்கு என இருவகையாக இருக்கிறது.(17,18) ஒரு மனு மறையும்போது அவனது அயனம் நிறைவடைகிறது, மற்றொருவன் {மற்றொரு மனு} ஆட்சி செய்கிறான். இவ்வகையில் பல மனுக்கள் தோன்றி மறையும்போது பிரம்மனின் ஒரு ஸம்வத்ஸரம் {ஓராண்டு} நிறைவடைகிறது. அவனுடைய {பிரம்மனின்} ஒரு ஸம்வத்ஸரம் {ஓராண்டு} பத்து லட்சம் ஆண்டுகளைக் கொண்டதாகும் என்று வாய்மை பயிலும் தவசிகளால் விளக்கப்பட்டிருக்கிறது.(19,20)

பிரம்மனின் ஒரு நாளானது, ஒரு கல்பத்துக்கு ஒப்பானதெனச் சொல்லப்படுகிறது. மலைகள், சோலைகள், காடுகளுடன் கூடிய பூமியானது, ஓராயிரம் யுகங்கள் நீளும் என ஞானிகளால் கணக்கிடப்படும் இரவில் முழுகிப் போகும். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஓராயிரம் யுகங்கள் நிறைவடைந்ததும், பிரம்மனின் ஒரு நாள் நிறைவடைந்து, ஒரு கல்பத்திற்கான முடிவும் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறே முன்சென்ற எழுபத்தோரு யுகங்களை நான் உனக்கு விளக்கினேன்.(21-23) கிருதம், திரேதம் மற்றும் பிற யுகங்களும் {அடங்கிய எழுபத்தோரு சதுர்யுகங்கள்} ஒரு மன்வந்தரத்தில் அடங்கும் எனச் சொல்லப்படுகிறது. நான் உனக்குத் தங்கள் மகிமையைப் பெருக்கிக் கொண்ட பதினான்கு மனுக்களையும் சொன்னேன்.(24) ஓ! மன்னா, இந்தக் குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} அனைவரும் வேதங்களிலும், புராணங்களிலும் திறன் பெற்றவர்களாவர். அவர்களது மகிமையைச் சொல்வதே கூட வெற்றியால் மகுடம் சூட்டப்படும் {அவர்களது மகிமையைச் சொல்வதால் ஒரு மனிதன் வெற்றியால் மகுடம் சூட்டப்படுவான்}.(25)

ஒரு மன்வந்தரம் முடிவடையும்போது, (அண்டத்திற்கு) அழிவு ஏற்பட்டு, படைப்புத் தொழில் மீண்டும் தொடங்குகிறது. நூறு ஆண்டுகளிலும் என்னால் இந்தக் காலத்தைக் கணக்கிட முடியாது.(26) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, இந்த மன்வந்தரங்களில் உயிரினங்களின் தோற்றமும், அழிவும் நேர்கின்றன. இதையே நான் கேட்டிருக்கிறேன்.(27) அந்த நேரத்தில் திரள் மற்றும் நுண் பூதங்களுடன் கூடிய தேவர்களும், சாத்திர அறிவுடன் கூடியவர்களும், பிரம்மச்சரிய வாழ்வைப் பின்பற்றுபவர்களும், தவங்களைச் செய்து கொண்டிருப்பவர்களுமான முனிவரெழுவரும் இருப்பார்கள்.(28) ஓராயிரம் யுகங்கள் நிறைவடையும்போது ஒரு கல்பம் முடிகிறது. அப்போது சூரியனின் கதிர்களால் எரிக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், தங்கள் முன்னிலையில் தலைவன் பிரம்மனை நிறுத்திக் கொண்டும், ஆதித்யர்களின் துணையுடனும், எல்லாம் வல்ல தலைவனும், தேவர்களில் முதன்மையானவனும், எப்போதும் யோகத்தில் ஈடுபடுபவனும், யோகியரின் ஆசானும், பிறப்பற்றவனும், அழிவற்றவனும், அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனும், பல்வேறு கல்பங்களில் உயிரினங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் தோன்றச் செய்பவனுமான நாராயணனை அணுகுகின்றன.(29-31)

அப்போது தோன்றும் இரவில் அனைத்தும் ஒரே பெருங்கடலாக மாற்றப்படுகின்றன. அவை அனைத்தும் பிரம்மனின் ஓராயிரமாண்டு கால அளவுக்கு நாராயணனின் வயிற்றுக்குள் உறங்குகின்றன.(32) பெரும்பாட்டன் (பிரம்மன்) யோகத் துயிலில் நுழையும்போது அந்தக் கால அளவு {பிரம்மனின்} இரவு என்ற பெயரில் அழைக்கப்படும்.(33) ஓராயிரம் யுகங்கள் நீளும் அவ்விரவின் முடிவில் அனைத்தின் பெரும்பாட்டனும், தெய்வீகமானவனுமான பிரம்மன் விழித்துக் கொள்கிறான்.(34) சந்ததியை உண்டாக்க விரும்பும் அவன், படைப்புத் தொழிலில் தன் மனத்தை நிலைநிறுத்துகிறான். அப்போது அதே குணம், செயற்பாட்டுக்கான அதே சக்தி, தேவர்களுக்கான அதே வசிப்பிடம் என அதே புராதன மறுதொகுப்பு இருப்பில் வருமென்றாலும், நடக்கும் காரியங்களின் வரிசையில் மட்டுமே மாற்றம் நிகழும். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, சூரியக் கதிர்களால் (முன்பு) எரிக்கப்பட்ட தெய்வீகத் தவசிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் யுகத்தொடக்கத்தின் போது, மீண்டும் பிறக்கின்றனர்.(35-37)

யுக மாற்றம் நேரும்போது பல்வேறு பருவகாலங்களும் மாற்றமடைவதைப் போலவே, பிரம்ம இரவில் பல்வேறு உயிரினங்களிலும் வடிவமாற்றம் ஏற்படுகிறது.(38) (நாராயணனின் உந்தித் தாமரையில் இருந்து) வெளிவரும் பிரஜாபதி, ஆறுதலுக்காகப் படைப்புத் தொழிலில் ஈடுபடுகிறான். ஓ! என் குழந்தாய், ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, உடல்மீது கொண்ட பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவர்களும், மனத்தால் தூயவர்களுமான தேவர்கள், மனிதர்கள், தவசிகள் ஆகியோர் அடுத்த யுகத்தில் ஒருபோதும் பிறப்பதில்லை.(39-40) அனைத்தையும் விதிப்பவனும், காலக் கணக்கீட்டை நன்கறிந்தவனுமான தெய்வீகப் பிரம்மன், தன் பகலை ஆயிரம் யுகங்களாகவும், தன் இரவை அதே எண்ணிக்கையிலும் முறையான வரிசையில் பகுத்துக் கொண்டு, உயிரினங்களை மீண்டும் மீண்டும் படைத்து அழிக்கிறான்.(41,42)

பெருந்தேவனும், தலைவனான நாராயணனுமான ஹரி, தன்னுடைய நுட்பமான மற்றும் திரள் வடிவங்களில் இருக்கிறான். அவனது சக்தியின் ஒரு பகுதியாகப் பிறந்த வைவஸ்வத மனுவின் வரலாற்றை நான் சொல்லப்போகிறேன்.(43) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, விருஷ்ணி குல விளக்கத்துடன் தற்செயலாக விளக்கப்படும் உயர்ந்த பிரகாசத்தைக் கொண்ட மனுவின் புராதன வரலாற்றைக் கேட்பாயாக.(44) எல்லாம் வல்ல பெருந்தேவனான ஹரி, அசுரர்கள் அனைவரையும் அழிப்பதற்காகவும், உலகங்கள் அனைத்திற்கும் உதவுவதற்காகவும் இங்கே {இவ்வுலகில்} பிறந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(45)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 45
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English