Friday, 20 March 2020

மன்வந்தரங்கள் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 07

(மன்வந்தராதி கீர்த்தனம்)

An Account Of Manwantaras - Time Cycles | Harivamsa-Parva-Chapter-07 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பதினான்கு மன்வந்தரங்கள்; அந்தந்த மன்வந்தரங்களுக்குரிய மனுக்கள், சப்தரிஷிகள், மனுவின் மகன்கள் மற்றும் தேவர்கள் ஆகியோரின் பெயர்களைப் பட்டியலிட்ட வைசம்பாயனர்...


ஜனமேஜயன், "ஓ! வைசம்பாயனரே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, மன்வந்தரங்கள் அனைத்தையும், அவற்றுக்கு முந்தைய படைப்புகளையும் விரிவாக விளக்குவீராக.(1) ஓ! பிராமணரே, மனுக்கள் அனைவரையும், அவர்களின் ஆட்சிக்கால அளவுகளையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருவின் வழித்தோன்றலே, நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் கூட மன்வந்தரங்கள் குறித்து விரிவான கணக்கை என்னால் சொல்ல முடியாது. என்னிடமிருந்து சுருக்கமாகக் கேட்பாயாக.(3) ஓ! குருவின் வழித்தோன்றலே, {இதற்கு முன்பு} ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ, ஔத்தமி {உத்தம}, தாமஸ, ரைவத, சாக்ஷுஷ ஆகியோரும் {ஆகிய அறுவரும்}, தற்போது உள்ள வைவஸ்வத மனுவும்(4) {இனி வரப்போகும்} ஸாவர்ணி, ரைப்ய, பௌத்ய, மேரு-ஸாவர்ணி என்ற நால்வரும் மனுக்களாவர்[1].(5) நான் கேள்விப்பட்டவாறே, தற்கால, கடந்த கால மற்றும் எதிர்கால மனுக்களைக் குறித்துச் சொன்னேன். இனி, பல்வேறு மன்வந்தரங்களில் பிறந்த மனுக்களின் மகன்களான முனிவர்கள் மற்றும் தேவர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(6,7)

[1] மேற்கண்ட இவர்களின் பெயர்களே மன்வந்தரங்களின் பெயர்களாகவும் அமைகின்றன. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் "பிரம்ம ஸாவர்ணி, ருத்திர ஸாவர்ணி, மேரு சாவர்ணி, தக்ஷ ஸாவர்ணி என்ற நால்வரும் மேரு மலையில் தவம் செய்து ஒருவரானபடியால் அவர்கள் மேரு ஸாவர்ணிகள் என்று அறியப்படுகின்றனர்" என்று இருக்கிறது. கீழே பதினான்கு மன்வந்தரங்கள், அவற்றின் மனுக்கள், முனிவர்கள் மற்றும் தேவர்கள் பட்டியலிடப்படுகின்றனர்.

மரீசி, மதிப்புக்குரிய அத்ரி, அங்கிரஸ், புலஹர், கிரது, புலஸ்தியர் மற்றும் வசிஷ்டர் ஆகிய எழுவரும் பிரம்மனின் {மனத்தில் பிறந்த} மகன்களாவர்.(8) ஓ! மன்னா, ஸ்வாயம்பூ மன்வந்தரத்தில் {இந்த} ஏழு முனிவர்களும், யாமர்கள் என்ற பெயரைக் கொண்ட தேவர்களும் வடக்கில் {வடக்கு வானில்} இருந்தார்கள்.(9) அக்னீதரன், அக்னிபாஹு, மேதா, மேதாதிதி, வஸு, ஜியோதிஷ்மான், தியுதிமான், ஹவ்யன், ஸவனன், புத்ரன் ஆகியோர் ஸ்வாயம்பூ மனுவின் உயர்ந்த பலமிக்கப் பத்து மகன்களாவர். ஓ! மன்னா, இவ்வாறே நான் முதல் மன்வந்தரத்தை {ஸ்வாயம்புவ மன்வந்தரத்தை} உனக்கு விளக்கிச் சொன்னேன்.(10,11)

ஓ! குழந்தாய் {ஜனமேஜயனே}, {வாயு புராணத்தில்} வாயுவால் சொல்லப்பட்ட ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில், பெரும் நோன்புகளை நோற்றவர்களான வசிஷ்டரின் மகன் ஔர்வர், கசியபரின் மகன் ஸ்தம்பர், பிராணன், பிருஹஸ்பதி, தத்தர், அத்ரி மற்றும் சியவனர் ஆகியோரே {ஏழு} பெரும் முனிவர்களாகவும், துஷிதர்கள் தேவர்களாகவும் இருந்தனர்[2].(12,13) ஹவித்ரன், ஸுக்ருதி, ஜியோதி, ஆபன், மூர்த்தி, அயஸ்மயன், பிரதிதன், நபஸ்யன், நபன், ஊர்ஜன் ஆகியோர் உயர் ஆன்ம ஸ்வாரோசிஷ மனுவின் மகன்களாவர். ஓ! மன்னா, பெரும் சக்தியையும், ஆற்றலையும் கொடையாகக் கொண்டவர்களாக அவர்கள் சொல்லப்படுகிறார்கள்.(14,15) இவ்வாறே நான் {ஸ்வாரோசிஷ மன்வந்தரம் என்றழைக்கப்படும்} இரண்டாவது மன்வந்தரத்தை விளக்கிச் சொன்னேன். ஓ! மன்னா, {உத்தம மன்வந்தரம் என்ற} மூன்றாவதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(16)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "வசிஷ்டரின் மகன் ஔர்வர், ஸ்தம்பர், கசியபர், பிராணர், பிருஹஸ்பதி, நிஷ்சியவனர் ஆகியோர் ஏழு முனிவர்களாக இருந்தனர்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "ஔர்வர், ஸ்தம்பர், கசியபர், பிராணர், பிருஹஸ்பதி, தத்தர் மற்றும் அத்ரிசியவனர் ஆகியோர் பெரும் முனிவர்களாக இருந்தனர்" என்றிருக்கிறது.

{முன்பு} சுதேஜர்கள் என்ற பெயரில் இருந்த ஹிரண்யகர்ப்பனின் பெருஞ்சக்தி கொண்ட {ஹிரண்ய கர்ப்பனின் மனத்தில் பிறந்த} மகன்களும், {பின்பு} வசிஷ்டர்கள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டவர்களுமான வசிஷ்டரின் {மனத்தில் பிறந்த} ஏழு மகன்களே நான் சொன்னது போல {அப்போது} ஏழு முனிவர்களாக இருந்தனர். ஓ! ஏகாதிபதி, உத்தமனுக்குப் பத்து அழகான மகன்கள் இருந்தனர். அவர்களைச் சொல்கிறேன் நீ கேட்பாயாக.(17,18) இஷன், ஊர்ஜன், தனூஜன், மது, மாதவன், சுசி, சுக்ரன், ஸஹன், நபஸ்யன் மற்றும் நபன் ஆகியோரே அவர்களாவர்.(19) அந்த {உத்தம} மன்வந்தரத்தில் பானுக்களே தேவர்களாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. {தாமஸ மன்வந்தரம் என்றழைக்கப்படும்} நான்காவது மன்வந்தரத்தைச் சொல்கிறேன் கேட்பாயாக.(20)

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, காவ்யர், பிருது, அக்னி, ஜன்யு, தாதா, கபீவான், அகபீவான் ஆகியோர் முனிவரெழுவராக இருந்தனர்.(21) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவர்களுடைய மகன்களும், பேரப்பிள்ளைகளும் புராணங்களில் சொல்லப்படுகின்றனர். தாமஸ மன்வந்தரத்தில் சத்யர்கள் தேவர்களாக இருந்தனர்.(22) ஓ! மன்னா, தாமஸ மனுவின் பிள்ளைகளை இனி பட்டியலிடுகிறேன். பெருஞ்சக்தி கொண்டவர்களான தியுதி, தபஸ்யன், ஸுதபன், தபோமூலன், தபோதனன், தபோரதி, அகல்மாஷன், {த்}தன்வி, தன்வி, பரந்தபன் ஆகிய பத்து பேரே தாமஸ மனுவின் மகன்களாக இருந்தனர். இவ்வாறு வாயு சொல்லியிருக்கிறான்.(23,24)

{ரைவத மன்வந்தரம் என்றழைக்கப்படும்} ஐந்தாவது மன்வந்தரத்தில், வேதபாஹு, யதுத்ரர், முனிவர் வேதஷிரர், ஹிரண்யரோமர், பர்ஜன்யர், சோமசுதனான {சோமனின் மகனான} ஊர்த்வபாஹு, ஆத்ரேயரான {அத்ரியின் மகனான} ஸத்யநேத்ரர் ஆகியோர் முனிவரெழுவராக இருந்தனர். இருள் {தாமஸ} குணத்தால் ஊடுருவப்படாத இயல்பைக் கொண்டவர்களான அபூதரஜஸர்கள் என்ற பெயரைக் கொண்டவர்கள் தேவர்களாக இருந்தனர். பாரிப்லவர்கள் மற்றும் ரைப்யர்கள் {பாரிவ்ரஜர்கள்} என்ற பெயர்களில் தேவர்களில் மற்றுமிரு வர்க்கத்தினரும் இருந்தனர்.(25-27) அவர்களுடைய மகன்களின் பெயர்களை இனி பட்டியலிடுகிறேன் கேட்பாயாக. திருதிமான், அவ்யன் {அவ்யயன்}, யுக்தன், தத்வதர்ஷி, நிருத்ஸுகன், அரணி {அரண்யன்}, பிரகாசன், நிர்மோஹன், ஸத்யவாக், கதி {கவி} ஆகியோர் ரைவத மனுவின் மகன்களாவர். இஃது ஐந்தாவது மன்வந்தரமாகும்.(28,29)

ஓ! மன்னா {ஜனமேஜயனே}, {சாக்ஷுஷ மன்வந்தரம் என்றழைக்கப்படும்} ஆறாவது மன்வந்தரத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. பிருகு, நபர், விவஷ்வான், ஸுதாமர், விரஜர், அதினாமர் மற்றும் ஸஹிஷ்ணு ஆகியோரே ஆறாவது மன்வந்தரத்தின் முனிவரெழுவராவர். சாக்ஷுஷ மன்வந்தரத்தில் செழிப்பாக இருந்த தேவர்களின் பெயர்களைக் கேட்பாயாக.(30,31) ஓ! மன்னா, ஆத்யர்கள், பிரபூதர்கள், ருயிபவர்கள், பிருயிதகபாவர்கள், லேகர்கள் ஆகியோர் தேவர்களின் ஐந்து வர்க்கத்தினராகச் சொல்லப்படுகிறார்கள். பெருஞ்சக்தியும், உயர் ஆன்மாவும் கொண்டவர்களான இந்த முனிவர்கள் அங்கீரஸின் மகன்களாவர்.(32) ஓ! ஏகாதிபதி, ஊரு முதலிய பத்து மகன்கள் {நட்வலை என்பவள் மூலம் பிறந்ததால்} நாட்வலேயர்கள் என்ற பெயரில் அறியப்பட்டனர். இதுவே {சாக்ஷுஷ என்றழைக்கப்படும்} ஆறாவது மன்வந்தரமாக அறியப்படுகிறது.(33)

அத்ரி, மதிப்புக்குரிய வசிஷ்டர், பெருந்தவசியான கசியபர், கௌதமர், பரத்வாஜர், விஷ்வாமித்ரர், உயரான்ம ரிசீகரின் மகனான மதிப்புக்குரிய ஜமதக்னி ஆகியோர் இப்போது சொர்க்கத்தில் வாழும் முனிவரெழுவராவர்.(34,35) சத்யர்கள், விஷ்வர்கள், ருத்ரர்கள், வஸுக்கள், மருத்துகள், ஆதித்யர்கள், வைவஸ்வான், அஸ்வினி இரட்டையர்கள் ஆகியோர் அனைவரும் தற்போதைய வைவஸ்வத மன்வந்தரத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவன் {வைவஸ்வான்} இக்ஷ்வாகு தலைமையிலான பத்து உயர் ஆன்ம மகன்களைப் பெற்றிருந்தான்.(36,37) ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, அந்தப் பெரும் முனிவர்களின் மகன்களும், பேரப்பிள்ளைகளும், அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.(38)

முந்தைய கல்பத்தைப் போலவே மக்களைப் பாதுகாத்து ஆள்வதற்கு நாற்பத்தொன்பது மருத்துகளும் அனைத்து மன்வந்தரங்களிலும் இருக்கின்றனர்.(39) ஒரு மன்வந்தரம் நிறைவடைந்ததும், தெய்வீகச் செயல்களைச் செய்த இருபது மருத்துகள், ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுப் பிரம்மலோகத்தை அடைகின்றனர்.(40) அதன்பிறகு, கடுந்தவங்களைச் செய்யும் பிறரும் அவர்களைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஓ! பரதனின் வழித்தோன்றலே, ஓ! குருவின் வழித்தோன்றலே, இவ்வாறே நான் கடந்த கால மற்றும் நிகழ்கால மன்வந்தரங்கள் மற்றும் ஏழு மனுக்கள் குறித்து உனக்குச் சொன்னேன். வரப் போகும் மன்வந்தரம் குறித்தும் நான் சொல்வேன் கேட்பாயாக.(41,42)

ஐந்து ஸாவர்ணி மனுக்களைக் குறித்து என்னிடம் இருந்து கேட்பாயாக; அவர்களில் ஒருவன் சூரியனின் மகனாவான், மற்ற நால்வரும் பிரஜாபதி பரமேஷ்டியின் வாரிசுகளாவர். ஓ! மன்னா, அவர்கள் தக்ஷனின் பேரப்பிள்ளைகளும், {தக்ஷனின் மகளான} பிரியையின் மகன்களுமாவர். வலிமைமிக்கவர்களும், சக்திமிக்கவர்களுமான அவர்கள் மேரு மலையில் கடுந்தவங்கள் இருந்ததால் அவர்கள் மேரு ஸாவர்ணி என்றழைக்கப்பட்டனர்.(43,44) குடிமுதல்வர் ருசியின் மகன் ரௌச்யர் என்ற பெயரால் கொண்டாடப்படுவார். ருசி பூதியிடம் பெறும் மகன் பௌத்யர் என்றழைக்கப்படுவார்.(45) ஸாவர்ணி மந்தரத்தில் இன்னும் வராதவர்களும், தேவலோகத்தில் வாழ்பவர்களாகச் சொல்லப்படுபவர்களுமான ஏழு முனிவர்களைக் குறித்து இனி கேட்பாயாக.(46) ராமர், பிரகாசமிக்க வியாசர், கொண்டாடப்படும் ஆத்ரேயர், உயர்ந்த சக்தியைக் கொண்டவரும், பரத்வாஜர் மகனான துரோணரின் மகன் அஸ்வத்தாமர், சரத்வான் மகனான கௌதமரின் மகன் கிருபர், குசிகரின் மகனான காலவர் மற்றும் கசியபரின் மகனான ருரு ஆகிய எழுவரும் எதிர்காலத்தில் உண்டாகப்போகும் உயர் ஆன்ம முனிவர்களாவர். இந்த முனிவரெழுவரும் பிரம்மனுக்கு இணையானவர்களாகவும், நற்பேறுபெற்றவர்களாகவும் இருப்பார்கள்.(47-49) தாங்கள் பிறந்தது முதல் பயின்ற தவத்தினாலும், புனித மந்திரங்கள் மற்றும் இலக்கணங்களில் தாங்கள் கொண்டுள்ள அறிவினாலும், பிரம்மலோகத்தில் பதவியை அடையும் அவர்கள் தூய பிரம்மரிஷிகளாகக் கொண்டாடப்படுவார்கள்.(50)

பொற்காலம் தொடங்கி ஒவ்வொரு யுகத்திலும் மீண்டும் மீண்டும் பிறப்பவர்களும், உன்னதமானவர்களும், வாய்மை நிறைந்தவர்களுமான முனிவரெழுவரும் பல்வேறு வகைகளை அமைத்து, அவர்களுக்கான கடமைகளை விதிப்பார்கள். தற்கால, கடந்த கால எதிர்கால ஞானத்துடன் கூடிய அவர்கள், தங்கள் தவத்தின் மூலம் நீதிமான்களாகவும், பரிவுகொண்டவர்களாகவும் நன்கறியப்படுவார்கள். சூத்திரம் மற்றும் இலக்கண அறிவின் மூலமும், தங்கள் உள்முக ஆன்மப் பார்வையின் மூலமும், அனைத்தையும் அவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போலக் கான்பார்கள். அவர்கள் ஏழு வகைக் குணங்களின் மூலம் ஏழு முனிவர்களாக அறியப்படுகிறார்கள். நீண்ட நாள் வாழ்பவர்களாகவும், தொலைநோக்கு கொண்டவர்களாகவும், கடவுளைக் கண்டவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். முதலில் பிறப்பவர்களாகவும், பல்வேறு கடமைகள் நன்கறிந்தவர்களாகவும், பல்வேறு குலங்களை நிறுவுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.(51-55)

மந்திரங்களைத் தோற்றுவித்த முனிவர்களும், பிராமணர்களும், அறத்திற்குக் கேடேதும் நேரும்போது, மீண்டும் மீண்டும் தங்கள் குலங்களில் பிறக்கின்றனர்.(56) முனிவர்கள் அனைவரும் வரங்களை அளிக்கவல்லவர்களாகவும், முறையே பெருமைமிக்கவர்களாகவும் இருப்பர் எனும் போது, அவர்கள் புகழடையும் காலம் மற்றும் வயது ஆகியவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.(57) ஓ! மன்னா, இவ்வாறு முனிவரெழுவரைக் குறித்து நான் உனக்கு விளக்கிச் சொன்னேன். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே, ஸாவர்ணி மனுவின் எதிர்கால மகன்கள் குறித்து இப்போது கேட்பாயாக.(58) ஓ! பரதனின் வழித்தோன்றலே, வரீயன், அவரீயன், ஸம்மலன் {ஸம்மதன்}, திருதிமான், வஸு, வரிஷ்ணு {சரிஷ்ணு}, ஆர்யன், த்ருஷ்ணு, ராஜன், ஸுமதி ஆகியோர் ஸாவர்ணி மனுவின் பத்து எதிர்கால மகன்களாவர்.(59)

முதல் ஸாவர்ணி மனுவின் {ஒன்பதாவது மனுவின்} ஆட்சிக்காலத்தில் வரப்போகும் முனிவர்களைப் பட்டியலிடுகிறேன் கேட்பாயாக. புலஸ்தியரின் மகன் {புலஸ்திய குலத்தைச் சேர்ந்த} மேதாதி, கசியபரின் மகன் {கசியப குலத்தைச் சேர்ந்த} வஸு, பிருகுவின் மகன் ஜோதிஷ்மானர், அங்கீரஸின் மகன் தியுதிமானன், வசிஷ்டரின் மகன் ஸாவனர், அத்ரியின் மகன் ஹவ்யவாஹனர், பௌலகர் ஆகியோர் ரோஹித மன்வந்தரத்தில் புகழடையப்போகும் முனிவரெழுவராவர். ஓ! மன்னா அப்போது மூன்று வகைத் தேவர்கள் இருப்பார்கள்.(60-62)

தக்ஷரின் மகனான குடிமுதல்வர் ரோஹிதரின் மகன்கள், மனுவின் மகனான திருஷ்டகேது, பஞ்சஹோத்ரன், நிராக்ருதி, பிருது, ஸிரவன், பூரித்யும்னன் {பூரித்தாமன்}, ரிசகன் {ருசீகன்}, பிருஹதன் {அஷ்டஹதன்} மற்றும் கயன் ஆகியோரே பத்தாம் வகையில் இரண்டாம் மன்வந்தரத்தின்போது {தக்ஷஸாவர்ணி மன்வந்தரத்தில்} வரும் முதல் ஸாவர்ணி மனுவின் பெருஞ்சக்தி கொண்ட மகன்களாவர். புலஹரின் மகனான ஹவிஷ்மான், பிருகுவின் மகனான ஸுக்ருதி, அத்ரியின் மகனான அபோமூர்த்தி, வசிஷ்டரின் மகனான அஸ்வத்தாமர் {அஷ்டமர்}, புலஸ்டியரின் மகனான பிரமாதி, கசியபரின் மகனான நாபாகர் {நபோகர்}, அங்கீரசின் மகனான நபசசத்யர் ஆகியோரே ஏழு பெரும் முனிவர்களாவர்.(63-66) தேவர்கள் மற்றும் முனிவர்களைச் சேர்ந்த இரண்டு வர்க்கத்தினர் (ஏற்கனவே) பட்டியலிடப்பட்டனர். உத்தமன், ஓஜா, நிகுஷஞ்ஞன், வீர்யவான், ஸதானீகன், நிராமித்ரன், விருஷஸேனன், ஜயத்ரதன், பூரித்யும்னன், ஸ்வர்ச்சன் ஆகியோர் மனுவின் பத்து மகன்களாவர்.(67,68)

மூன்றாவது மன்வந்தரத்தின் பதினோராவது காலத்தில் புகழ்பெரும் முனிவரெழுவரின் பெயர்களைப் பட்டியலிடுகிறேன் கேட்பாயாக. கசியபரின் மகன்{கசியபரின் குலத்தில் தோன்றும்} ஹவிஷ்மான் {ஹவிஷ்மந்தர்}, பிருகுவின் மகன் ஹவிஷ்மர் {ஹவிஷ்மான்}, அத்ரியின் மகன் தருணர், வசிஷ்டரின் மகன் தருணர் {அனகர்}, அங்கீரசின் மகன் உருதிஷ்ணர் {நிஷ்சரர்}, புலஸ்தியரின் மகன் நிஷ்சரர், புலஹரின் மகன் அக்னிதேஜஸ் ஆகியோரே எதிர்காலத்தின் பெரும் முனிவரெழுவராவர்.(69-71) பிரம்மனின் மகன்களான தேவர்கள் மூன்று வர்க்கமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஸர்வத்ரகன் {ஸம்வர்த்தகன்}, ஸுசர்மன், தேவானீகன், புரூத்வஹன், க்ஷேமதன்வன், நீண்ட ஆயுள் கொண்ட {திருடாயு} ஆதர்சன், பண்டகன் மற்றும் மனு ஆகியோர் மூன்றாவது ஸாவர்ணி மனுவின் ஒன்பது மகன்களாவர்.(72,73)

நான்காவது மன்வந்தரத்தில் முனிவரெழுவரின் பெயர்களை என்னிடம் கேட்பாயாக. வசிஷ்டரின் மகன் தியுதி, அத்ரியின் மகன் ஸுதபர், {தபஸ்வி}, புலஸ்தியரின் மகன் தபோஷனர், புலஹரின் மகன் தபோரவி, ஏழாவதாகப் பிருகுவின் மகன் தபோவிருத்தி ஆகியோரே அவர்களாவர். பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்களான தேவர்கள் ஐந்து வர்க்கங்களாக இருப்பர் என்று சொல்லப்படுகிறது.(74-76) தேவவாயு, அதூரன், தேவசிரேஷ்டன், விதூரதன், மித்ரவான், மித்ரதேவன், மித்ரஸேனன், மித்ரக்ருதன், மித்ரவஹன் {மித்ரபாஹு}, ஸுவர்சஸ் ஆகியோர் பனிரெண்டாவது மனுவின் மகன்களாவர்.(77)

வரப்போகும் பதிமூன்றாவது மன்வந்தரத்தில் {ரௌச்ய / ரைப்ய மன்வந்தரத்தில்} அங்கீரஸின் மகன் திருதிமான், புலஸ்தியரின் மகன் ஹவ்யபர், புலஹரின் மகன் தத்வதர்ஷி, பிருகுவின் மகன் நிருத்ஸகர், அத்ரியின் மகன் நிஷ்பிரகம்பர், கசியபரின் மகன் நிர்மோகர், வசிஷ்டரின் மகன் ஸுதபர் ஆகியோர் முனிவரெழுவராக இருப்பார்கள், மேலும், சுயம்புவால் (பிரம்மனால்) குறிப்பிடப்படும் தேவர்கள் மூன்று வர்க்கத்தினர் இருப்பார்கள்.(78-80) பதிமூன்றாவது மன்வந்தரத்தில், ருசியின் மகன்களே மனுவின்வின் மகன்களாக இருப்பர், சித்ரசேனன், விசித்ரன், நயன், தர்மக்ருத் {தர்மப்ருதன்}, திருதன், ஸுனேத்ரன், க்ஷத்ரன், விருத்தி, ஸுதபன், நிர்ப்பயன், திரிடன் ஆகியோர் பதிமூன்றாவது மன்வந்தரத்தில் ரௌச்ய மனுவின் மகன்களாக இருப்பர்.(81,82)

பௌத்ய மனுவின் பதினான்காவது மன்வந்தரத்தில் {பௌத்ய மன்வந்தரத்தில்} கசியபரின் மகன் அக்னிதரர், புலஸ்தியரின் மகன் பார்க்கவர், பிருகுவின் மகன் அதிபாஹு, அங்கீரசின் மகன் ஸுசி, அத்ரியின் மகன் யுக்தர், வசிஷ்டரின் மகன் அஸுக்ரர், புலஹரின் மகன் அஜிதர் ஆகியோரே இறுதி முனிவரெழுவராக இருப்பர்.(83,84) அந்தக் காலத்தின் மகிமையைப் பாடும் மனிதன், மகிழ்ச்சியையும், பெரும்புகழையும், நீண்ட வாழ்நாட்களையும் அடைவான்.(85) கடந்த கால மற்றும் நிகழ்காலத்தைச் சேர்ந்த பெரும் முனிவர்களின் பெயர்களை எப்போதும் உரைப்பவன், நீண்ட வாழ்நாட்களை அடைந்து, பெரும்புகழைப் பெறுவான். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, அப்போது தேவர்களில் நான்கு வர்க்கத்தினர் செழித்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.(86) தரங்கபீரு, புஷ்மன் {வப்ரன்}, தரஸ்மான் {தரஸ்வான்}, உக்ரன், அபிமானி, பிரவீரன் {ப்ரவீணன்}, ஜிஷ்ணு, ஸங்கிரந்தனன், தேஜஷி {தேஜஸ்வி}, ஸபலன் ஆகியோர் பௌத்ய மனுவின் மகன்களாவர். பௌத்ய மன்வந்தரம் நிறைவடைந்ததும் ஒரு கல்பம் முழுமை பெறும்.(87,88) இவ்வாறே கடந்த கால மற்றும் எதிர்கால மனுக்களின் பெயர்களை நான் பட்டியலிட்டிருக்கிறேன். ஓ! மன்னா, இந்த மனுக்கள் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து பெருங்கடல் வரை பரந்திருக்கும் பூமியை ஆயிரம் யுகங்கள் ஆண்டு, குடிமக்களைத் தவத்தால் ஆள்வார்கள். அவர்களும் குறித்த காலத்தில் வழக்கம் போலவே அழிவார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(89,90)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 90
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English