Tuesday 1 March 2022

மீண்டும் துவாரகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 106

(ஷ்ரீக்ருஷ்ணஸ்ய த்வாரவதீகமநம்)

Return to Dwaraka | Bhavishya-Parva-Chapter-106 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்:  புஷ்கரையில் கிருஷ்ணனைத் துதித்த முனிவர்கள்; துவாரகை திரும்பிய கிருஷ்ணன்...


Balarama and Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன், பிற யாதவர்களுடன் சேர்ந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் புஷ்கரையில் நின்று அங்கே வசித்து வந்த பெரும் முனிவர்களைச் சந்தித்தான்.(1)

பொறாமையற்றவர்களான அந்தப் பெரும் முனிவர்கள், யதுவின் புகழ்பெற்ற வழித்தோன்றலான கிருஷ்ணனைக் கண்டு, அவனுக்கு அர்க்கியத்தையும், பிற மங்கலப் பொருட்களையும் கொடுத்தனர்.{2} பிறகு அவர்கள், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அறிந்த ஜகத்பதியான ஜனார்த்தனனிடம், "விஷ்ணுவே, நினைத்தற்கரிய ஆற்றல்படைத்தவன் நீயே.{3} போரில் ஹம்சனையும், டிம்பகனையும் கொன்றவன் நீயே. ஈசுவரனே, தேவர்களின் தலைவனாலும் {இந்திரனாலும்} கொல்லப்பட முடியாத ராக்ஷசன் விசக்ரனைக் கொன்றவன் நீயே.{4} உண்மையில் உன்னைத் தவிர வேறு எவனாலும் அவனைக் கொன்றிருக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம்.

ஹரியே, எங்கள் தினப்படி ஆன்ம அறுவடைக்குத் தேவையான பரிவாரங்கள் அனைத்தும் இனி தடையில்லாமல் எங்களுக்குக் கிடைக்கும்.{5} உண்மையில், உன் தாமரைப் பாதங்களை நினைவுகூர்வதாலேயே நாங்கள் தூய்மை அடைந்து விடுவோம். உன்னைத் தியானிப்பவனின் வாழ்வில் நேரும் துன்பங்கள் அனைத்தையும் அகற்றுபவன் நீயே.{6} தொடர்ந்து நினைவுகூரப்படுவதன் மூலம் உன் தாமரைப் பாதங்கள் பரம புண்ணியத்தை அருள்கின்றன. ஹரியே, தவம் செய்யும் எங்களை நீயே பாதுகாக்கிறாய்.{7}

புனித அக்ஷரமான ஓம் எனும் ஓங்கார வஷட்காரத்தின் உருவகமாக நீயே இருக்கிறாய். யஜ்ஞம் {வேள்வி} நீயே, உயிரினங்கள் அனைத்தின் முப்பாட்டன் நீயே. ஜோதியாகத் திகழும் பிரம்மத்தின் பிறப்பிடமான நீயே பிரம்மனாகவும், ருத்திரனாகவும் இருக்கிறாய். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் உயிராகவும், ஆன்மாவாகவும் வசிக்கும் பரமாத்மா நீயே. ஜகத்பதியே, வேள்வி செய்வதன் மூலமும், கொடையளிக்கும் ஈகையின் மூலமும் நீயே வழிபடப்படுகிறாய்.{8,9}(2-9) அண்டத்தைப் படைக்கும் பிரம்மம் நீயே. எனவே நாங்கள் உன்னைப் பக்தியுடன் வணங்குகிறோம். தேவா, உன்னிடம் பகை பாராட்டும் அனைவரையும் அழித்து அண்டத்தைக் காப்பாயாக" என்றனர் {முனிவர்கள்}.(10)

ஹரியும், "நன்று. அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே அவன் விருஷ்ணி குலத்தாருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருந்தான்.(11) ஜனமேஜயா, நீ கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேவதேவனான கிருஷ்ணனின் கடந்த காலத்தை உனக்கு விளக்கிச் சொன்னேன். இன்னும் நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" என்றார் {வைசம்பாயனர்}.(12)

பவிஷ்ய பர்வம் பகுதி – 106ல் உள்ள சுலோகங்கள் : 12

மூலம் - Source