Tuesday 1 February 2022

வரலாபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 80

(ஹம்ஸடிம்பகயோர்வரலாபம்)

Boons obtained | Bhavishya-Parva-Chapter-80 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சிவனை நோக்கித் தவம் செய்த ஹம்சனும், டிம்பகனும்; அவர்கள் அடைந்த வரங்கள்...


Hamsa and Dimbhaka receive boons from Lord Shiva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, இளவரசர்களான ஹம்சனும், டிம்பகனும் சிவனின் சக்திமிக்க அவதாரங்களாகத் தோன்றியதால், அவர்கள் பெரும் நுண்ணறிவுமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஒரு காலத்தில் அவர்கள் கடுந்தவஞ்செய்யத் தீர்மானித்தனர்.(1) மன்னா {ஜனமேஜயா}, இதற்காக அவர்கள் இமய பர்வதத்திற்குச் சென்றனர். செந்நீல வண்ணனும், மங்கலம் அருள்பவனும், பக்தர்களின் வாழ்வுத் துயரங்கள் அனைத்தையும் விலக்குபவனும், உமையின் கணவனுமான சிவனை நிறைவடையச் செய்து, பேராற்றலையும், தெய்வீக ஆயுதங்களையும் அடையும் நம்பிக்கையில், தங்கள் மனத்தைக் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டும், நீரையும், காற்றையும் மட்டுமே ஆகாரமாக உண்டும் அங்கே அவர்கள் தவம் செய்து வந்தனர்.(2,3)

அவர்கள் {ஹம்சனும், டிம்பகனும்}, தங்கள் இதயங்களில் சிவனை வைத்துத் தங்கள் மனங்களை அவனிலேயே நிலைநிறுத்தி வந்தனர். அவர்கள் இவ்வாறே பகலிரவுகள் தொடர்ந்து, அவனுடைய பெயர்களைச் சொல்லி, "தேவர்களின் தலைவனும், அண்டத்தை ஆள்பவனும், பக்தர்களின் பேரன்புக்குரியவனும், சங்கரன், ஹரன், சர்வன், சிவானந்தன், நீலக்ரீவன், உமாபதி, ரிஷபத்வஜன், விரூபாக்ஷன், ஹரியக்ஷன், கிரீசன், ஈசன், வாசுதேவசிவன், அச்யுதன், சதாசிவன், மஹாதேவன் என்றெல்லாம் அழைக்கப்படுபவனும், புனித அக்ஷரமான ஓம் என்பதன் தனி உருவகமும் எவனோ, அவனை நாங்கள் வணங்குகிறோம்" என்றே துதித்தும் வந்தனர். இவ்வாறே அவ்விரு சகோதரர்களின் தவம் தொடர்ந்து வந்தது.(4-7)

மன்னா {ஜனமேஜயா}, படிப்படியாக, அந்த இளவரசர்கள் இருவரும் பொருள் பற்றிலிருந்தும், போலி ஆணவத்தில் இருந்தும் விடுபட்டனர். அவர்கள் மௌன விரதம் இருந்தவாறே, ஐந்து வருடங்கள் தவம் புரிந்தனர். அவர்களின் சுயக்கட்டுப்பாட்டில் நிறைவடைந்த சிவன், புலித்தோலுடுத்தி, சிரத்தில் பிறைமதி தாங்கிய திரிசூலபாணியாக அவர்களின் முன்பு காட்சியளித்தான். பாவங்களை அழிப்பவன் தங்கள் முன் நிற்பதைக் கண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், பெருமகிழ்ச்சியடைந்தவர்களாக அவனை மீண்டும் மீண்டும் வணங்கினர்.(8-10)

அப்போது சிவன், "என் அன்புக்குரிய இளவரசர்களே, நீங்கள் இருவரும் மங்கலங்களை அடைவீராக. வேண்டும் வரத்தைக் கேட்பீராக. அதை நான் அருள்வேன்" என்றான்.

மன்னா, இந்தச் சொற்களைக் கேட்ட அந்த இளவரசர்கள் இருவரும் {ஹம்சனும், டிம்பகனும்}, "பிரபுவே, எங்களிடம் நீ நிறைவடைந்தது நிச்சயமென்றால், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் நாங்கள் வெல்லப்பட முடியாதவர்களாவோமாக. உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாகவும் {உயிராகவும்}, ஆன்மாவாகவும் இருப்பவனே, இந்த வரத்தையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.(11,12) சிவனே, சக்திமிக்க தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் அடைவதையே நாங்கள் இரண்டாம் வரமாக வேண்டுகிறோம். மஹேஷ்வரம், ரௌத்ரம், பிரம்மசிரம் என்ற ஆயுதங்களை நாங்கள் அடைவோமாக.(13) சர்வனே, போர்க்களங்களில் நம்பிக்கையெனும் முற்றான உறுதியை உணர்வதற்காக, துளையா கவசத்தையும், முறியா விற்களையும், நொறுங்கா கோடரிகளையும் நாங்கள் விரும்புகிறோம்.(14) மஹாதேவா, {இருவராக இங்கிருக்கும்} நாங்கள் ஒவ்வொருவரும், உமது பூதகணங்கள் இரண்டைத் துணையாகக் கொள்வோமாக" என்று கேட்டனர்.

சிவன், அதற்கு மறுமொழியாக, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, பிருங்கி, ரிடீ, குண்டோதரன், விரூபாக்ஷன் என்ற தன்னுடைய நான்கு பூதகணங்களை அவர்களுக்குத் துணையாகக் கொடுத்தான்.

அப்போது சிவன், "பூதேசர்களே, இவ்விரு இளவரசர்கள் போரில் ஈடுபடும்போதெல்லாம் நீங்கள் இவர்களுக்குத் துணைபுரிவீராக" என்றான். இதைச் சொன்ன சிவன், அங்கேயே அப்போதே மறைந்தான்.(15-17)

அந்தக் காலத்தில் இருந்தே ஹம்சனும், டிம்பகனும் பெருஞ்சக்திமிக்கப் போர்வீரர்களாகவும், அனைத்து வகை ஆயுதப் பயன்பாடுகளையும் முற்றாக அறிந்தவர்களாகவும் திகழ்ந்தனர். அவர்கள் தன்னிகரற்ற வில்லாளிகளாகவும், பெருஞ்செல்வாக்குமிக்க ஆளுமைகளாகவும் வலம் வந்தனர்.(18) கவசந்தரித்தவர்களான அவர்கள் இருவரும், போர்க்களம் புகும்பொழுதெல்லாம், முன்னணி தேவர்களாலும், அசுரர்களாலுங்கூடத் தங்களை வெல்ல முடியாது என்பதை நிரூபித்து வந்தனர்.(19)

அவர்கள், தங்கள் மேனிகளைச் சாம்பலால் {பஸ்மத்தால் / நீறால்} அலங்கரித்துக் கொண்டும், மூவரி திலகத்தைத் தங்கள் நெற்றியில் தரித்துக் கொண்டும், சிவனைப் போற்றும் விழாக்களை அப்போதைக்கப்போது நடத்தி வந்தனர்.(20) அவர்கள் தங்கள் உடல்களை ருத்ராக்ஷங்களால் அலங்கரித்துக் கொண்டும், மான் தோல் உடுத்திக் கொண்டும், "அமைதியில் ஆழ்ந்த அறிஞனான மஹாதேவனையே நாங்கள் வணங்குகிறோம். நமசிவாய" என்று அவனையே {சிவனையே} துதித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு அந்த இளவரசர்கள் இருவரும், தலையில் கங்கையைத் தரித்த அந்த மஹாதேவனைப் போலவே நீரில் நனைந்த சடாமுடிகளுடன் தோற்றமளித்தனர்.(21,22) தவம் செய்து முடித்த அந்தப் பெரும் வீரர்கள் இருவரும் வீடுகளுக்குத் திரும்பி, தங்கள் தந்தை {பிரம்மதத்தன்}, தந்தையின் நண்பரான மித்ரஸஹர், தங்கள் அன்னையர் ஆகியோரை வணங்கினர்.(23)

மன்னா {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன் இடையறாமல் நீண்டகாலமாகத் தொடர்ந்து சாத்திரங்களைப் பயின்று வந்தான். தர்மாத்மாவான அவன், அனைத்து வகை ஞானங்களிலும் தேர்ச்சியடைந்து, ஐயந்தெளிந்த ஞானியானான்.(24) அவன், தொடர்ச்சியாகத் தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் முற்றான உண்மையை {பிரம்மத்தைத்} தியானித்து வந்தான். அவன் {ஜனார்த்தனன்}, புலன்களின் தலைவனும், பீதாம்பரதாரியுமான {மஞ்சற்பட்டாடை உடுத்தியவனுமான} விஷ்ணுவை வழிபடுவதிலேயே ஈடுபட்டுவந்தான்.(25) உரிய காலத்தில் ஹம்சனும், டிம்பகனும் திருமணம் செய்து கொண்ட பிறகே, ஜனார்த்தனுனும் இல்லறவாழ்விற்குள் நுழைந்தான்.(26)

அந்த மூன்று நண்பர்களும் ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் தங்கள் தங்கள் மனைவியருடன் பற்றுமிக்கவர்களாகவும், நன்றியுணர்வுடன் தங்கள் பெரியோருக்கு கடமையாற்றுபவர்களாகவும் திகழ்ந்தனர். மன்னா, அறப்பாதையைப் பின்பற்றுவதே நாகரிக மனிதனுக்கு மிகச் சிறந்த வழி என்பதில் அவர்கள் ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(27)

பவிஷ்ய பர்வம் பகுதி – 80ல் உள்ள சுலோகங்கள் : 27

மூலம் - Source