Monday 17 January 2022

ஓடி ஒளிந்த ஏகலவ்யன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 77

(ஏகலவ்யநிர்யாணம்)

Ekalavya disappear | Bhavishya-Parva-Chapter-77 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: பலராமனிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் கடல் தாண்டி தனித்தீவில் ஓடி ஒளிந்த ஏகலவ்யன்; யாதவர்களின் சபையில் உரையாற்றிய கிருஷ்ணன்...


Krishna after killing Paundraka in his palace

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதே வேளையில் போர்க்களத்தில் பலசாலிகளில் சிறந்த பலராமன், ஏகலவ்யனின் மார்பைத் தாக்கி சிங்கம்போலக் கர்ஜித்தான்.(1) அதற்குப் பதிலடியாக ஏகலவ்யனும், பலத்தின் செருக்கில் வெறிக் கொண்டிருந்த வலிமைமிக்கப் பலராமனின் மார்பைத் தன் கதாயுதத்தால் தாக்கினான்.(2) ஏகலவ்யனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட விருஷ்ணி குல பலராமன், அலட்சியமாகத் தன் இரு கைகளாலும் அதைப் பற்றி, அந்த நிஷாத மன்னன் {ஏகலவ்யன்} வெற்றியில் நம்பிக்கை அனைத்தையும் இழந்து, சீற்றமிக்கக் கடுஞ்சுறாக்களின் வசிப்பிடமான பெருங்கடலின் கரைக்குத் தப்பியோடும் வகையில் அவனைப் பலமாகத் தாக்கினான்.(3,4)

ஏகலவ்யன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடும்போது, பலராமன் அவனைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான். ஏகலவ்யன் உண்மையில் அஞ்சி எங்கு ஓடினாலும் அங்கெல்லாம் பலராமன் அவனை நெருங்கினான்.(5) மன்னா, இறுதியில் ஏகலவ்யன், பலராமனின் கோபத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கடலுக்குள் புகுந்து, ஐந்து யோஜனைகள் நீந்திச் சென்றான்.(6) ஏகலவ்யன் வசிப்போரெவருமற்ற தீவொன்றை அடைந்து அங்கே வசித்து வந்தான். இவ்வாறே பலராமன் நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யனை வென்றான்.(7)

அதன் பிறகு, அந்த ஹலாயுதன், எண்ணற்ற வைரங்களாலும், மதிப்புமிக்க ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுதர்மம் என்ற சபையை அடைந்தான். அதே வேளையில் சாத்யகியும் போர்க்களத்தை விட்டு அந்தச் சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.(8) மன்னா, பிற யாதவர்கள் அனைவருங்கூடப் போர்க்களத்தை விட்டு வந்து அந்த ராஜசபையின் இருக்கைகளில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தேவகியின் மகனான பகவான் {கிருஷ்ணன்} அந்த விருஷ்ணிகளின் சபையில் பின்வருமாறு பேசினான்.(9,10)

கிருஷ்ணன், "யாதவர்களில் முதன்மையானவர்களே, நான் கைலாச மலைக்குச் சென்று, செந்நீல வண்ணனான சங்கரனை என் தவத்தால் நிறைவடையச் செய்து, அவனது ஆசியைப் பெற்றேன்.(11) தேவர்கள் அனைவரும், தபோதனர்களான பெரும் முனிவர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். சங்கரன் என்னைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்து, நான் புறப்படும் முன் அழகிய துதிகளை எனக்கு அர்ப்பணித்தான்.(12) நான் பதரிகாசிரமத்தில் இருந்தபோது ஓரிரவில் அசாதரண அனுபவம் ஒன்றை அடைந்தேன். வலிமைமிக்கப் பிசாசங்கள் இரண்டு வேட்டையாடியவாறும் என்னைக் குறித்துப் பேசிக் கொண்டும் என் முன் வந்தன. உண்மையில், அவற்றின் மனங்கள் என்னில் நிலைத்திருந்தன. உண்மையில் பேரான்மாக்களான இந்தப் பிசாசங்கள் இரண்டும் என்னைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தன. அவை பெரும்பணிவுடனும், பக்தியுடனும் என்னை வணங்கின. நான் அவர்களிடம் நிறைவடைந்ததால் தேவலோகத்தில் வசிக்குமாறு அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு, என் தவத்தால் மஹாதேவனை நிறைவடையச் செய்து இன்று இங்கே திரும்பினேன்" என்றான் {கிருஷ்ணன்}".

வைசம்பாயனர் தொடர்ந்தார், "கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தோர் அனைவரும், அவனது புகலிடத்தை மீண்டும் அடைந்து, மிகப் பாதுகாப்பாக உணர்ந்து அவனைத் துதித்தனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(13-17)

பிறகு ஜகந்நாதன் தன் மாளிகைக்குச் சென்று நடந்தவை அனைத்தையும் ருக்மிணி, சத்யபாமா ஆகியோருக்கு உரைத்தான்.(18) அன்பு மனைவியரான அவ்விருவரும் தங்கள் கணவன் சொன்னதைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னா, இவ்வாறே கிருஷ்ணனின் கடந்த காலங்கள் அனைத்தையும் உனக்கு விரிவாகச் சொல்லிவிட்டேன்.(19) கிருஷ்ணன் தொடர்ந்து பூமியை ஆண்டு, எண்ணற்ற துஷ்டர்களைக் கொன்று, பூமியின் பாரத்தைக் குறைத்தான். தேவர்களின் தலைவனும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவனுமான அவன் {கிருஷ்ணன்}, நரகாசுரன், பெரும் மன்னன் பௌண்டரகன், ஹயக்ரீவன், நிசும்பன், சுந்தன், உபசுந்தன் உள்ளிட்ட முக்கிய அசுரர்களைக் கொன்று முனிவர்களையும், பிராமணர்களையும் பாதுகாத்தான்.(20,21)

கிருஷ்ணன் எண்ணற்ற பசுக்களையும், அளவில்லா செல்வத்தையும் பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான். அவன் அக்னி ஹோத்ரங்களைச் செய்து, பிராமணர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்தான்.(22) அவன் வேதங்கற்றுப் பிரம்மச்சரியம் அனுசரித்து முனிவர்களையும், யஜ்ஞங்களைச் செய்து தேவர்களையும், ஆகுதிகளைக் கொடுத்துப் பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(23) இவ்வாறே தேவர்களின் தலைவனான கிருஷ்ணன், தன் ராஜ்ஜியத்தைத் தடையில்லாமல் ஆண்டான், பிராமணர்களின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(24)

பவிஷ்ய பர்வம் பகுதி – 77ல் உள்ள சுலோகங்கள் : 24

மூலம் - Source