Monday 20 December 2021

பௌண்டரகனும் நாரதரும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 67

(பௌண்ட்ரகநாரதஸம்வாதம்)

Paundraka Narada Conversation | Bhavishya-Parva-Chapter-67 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: நாரதரிடம் பேசிய பௌண்டரகன்; பௌண்டரகனை எச்சரித்த நாரதர்...

Paundraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதே வேளையில் சர்வலோகங்களில் பயணிக்க வல்ல நாரதர், கைலாச சிகரத்தில் இருந்து, பௌண்டரகனின் நகரத்திற்குச் சென்றார்.(1) அவர் வானத்தில் இருந்து இறங்கி, மன்னனின் {பௌண்டரகனின்} வாயிற்காப்போனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவனது அரண்மனைக்குள் பிரவேசித்தார்.(2) அர்க்கியம் மற்றும் பிற மங்கலப் பொருட்களுடன் மன்னனால் மதிக்கப்பட்டு, தொண்டாற்றப்பட்ட அவர், அதன்பிறகு அலங்காரத் துணிகளால் மறைக்கப்பட்ட வெண்மையான ஆசனத்தில் அமர்ந்தார்.(3)

அப்போது ஆற்றலில் அதீத செருக்குக் கொண்ட பௌண்டரகன், முதலில் நாரதரின் நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு பின்வருமாறு பேசினான்:(4) "விப்ரேந்திரரே, நாரதரே, சர்வ காரியங்களிலும் பண்டிதரே, தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரே, எங்கும் தடையில்லாமல் சர்வலோகங்களுக்கும் செல்லவல்லவரே, பலமிக்கவனும், புகழ்மிக்கவனுமான பௌண்டரகனாகிய நான் வாசுதேவன் என்ற பெயருக்குத் தகாதவனா?(5-7)

சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகிய அடையாளங்களால் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய வாளையும், கேடயத்தையும் கொண்டு சிங்கம் போன்ற மன்னர்கள் பலரை நான் வென்றிருக்கிறேன். அனைவரின் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நானே கொடுக்கிறேன்.(8) ஒப்பற்ற ராஜ்ய போகம் கொண்டவனாகவும், ஒப்பற்ற ஆற்றலுடன் ஆளும் வலிமைமிக்க மன்னனாகவும் நான் இருக்கிறேன். வெல்லப்படமுடியாதவனான நான் என் குடிமக்களைப் பாதுகாக்க வல்லவனாகவும் இருக்கிறேன்.(9)

இப்போது வாசுதேவன் என்ற பெயரில் ஓர் இடையன் இருக்கிறான். எனினும் அவன் அந்தப் பெயரைக் கொள்வதற்குப் போதுமான ஆற்றலைக் கொண்டவனல்ல என நான் கருதுகிறேன்.(10) விப்ரேந்திரரே, அந்த இடையன் மூடத்தனத்தால் என் பெயரைப் பயன்படுத்துகிறான். இவ்வுலகில் சச்சரவின்றி நானே வாசுதேவனாக இருக்க அந்த யாதவனை நிச்சயம் வீழ்த்துவேன். என் சொற்களைக் குறித்து வைத்துக் கொள்வீராக. விருஷ்ணி குலத்தவர் அனைவரையும் வீழ்த்தி, கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை நான் அழிப்பேன். இந்தப் படையெடுப்பில் எனக்குத் துணை புரியும் விருப்பத்தை உறுதி செய்வதற்காக வலிமைமிக்க மன்னர்கள் பலர் இங்கே கூடியிருப்பதை நீர் காணலாம்.(11-13)

என்னிடம் வேகமான குதிரைகள் எண்ணற்றவையும், காற்றைவிட வேகமாகச் செல்லும் ரதங்களும், மதங்கொண்ட யானைகள், ஒட்டகங்கள் ஆகியவை கோடிக்கணக்கிலும் இருக்கின்றன. விப்ரரே, நாரதரே, நீர் செல்லும் இடமெங்கும் என் எண்ணத்தைக் குறித்துச் சொல்வீராக. இந்திரனின் சபையிலும் என்னுடைய ஒப்பற்ற ஆற்றலைச் சொல்லி நீர் துதிப்பீராக. இதுவே எனது வேண்டுகோளாகும். நான் உம்மை வணங்குகிறேன்" {என்றான் பௌண்டரகன்}.(14-16)

அப்போது நாரதர் {பௌண்டரகனிடம்}, "மன்னா, அண்டத்திற்குள் எங்கும் என்னால் செல்ல முடியும் என்பது உண்மைதான். என்னால் நிறைவேற்ற முடியாத பணியென ஏதும் கிடையாது.(17) எனினும், நீ விரும்பியபடி நான் எவ்வாறு பேசத்துணிவேன்? தேவேசனும், சக்கரபாணியும், ஜனார்த்தனனும், விஷ்ணுவுமான அந்தத் தேவன் துஷ்டர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் கொல்லும் வரை அவனைத் தவிர வேறு எவனை வாசுதேவனென அழைக்க முடியும்?(18,19) சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்படும் உலகங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் ஆளும்வரை, "பௌண்டரகன்தான் வாசுதேவன்" என எவன் சொல்லத் துணிவான்?

உன்னைப் போன்ற மூடனால் மட்டுமே இவ்வாறு பேச முடியும்.(20) அண்டத்திற்குள் எங்கும் திரிய வல்லவனும், சிந்தனைக்கு அப்பாற்பட்டவனும், ஆறு செல்வங்கள்[1] நிறைந்தவனும், பாவங்களை அழிப்பவனும், வில்லும், கதாயுதமும் தரிப்பவனும், நீக்கமற எங்கும் நிறைந்தவனுமான அந்த விஷ்ணு விரைவில் உன் செருக்கை அழிப்பான்.(21) மன்னா, ஆதிதேவனான கிருஷ்ணன் உன் கர்வத்தைக் கலங்கடிப்பான். நீ நினைப்பதும், செய்வதும் அனைத்தும் நகைப்பிற்குரியனவாகும். உன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு கிருஷ்ணனின் வலிமைமிக்க வில்லையும், வாளையும் அழிக்க இயலாது. உன்னை நீயே நகைப்பிற்குரியவனாக்கிக் கொள்கிறாய்" {என்றார் நாரதர்}".(22,23) 

[1] வலிமை {வீரியம்}, புகழ், ஞானம், வைராக்யம், அழகு, துறவு ஆகியவையே கிருஷ்ணனின்  வற்றாத நிறைந்த செல்வங்கள் / குணங்கள் ஆறு என்று சொல்லப்படுகின்றன.

பவிஷ்ய பர்வம் பகுதி – 67ல் உள்ள சுலோகங்கள் : 23

மூலம் - Source