Wednesday 7 July 2021

பிரம்ம வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 43

(கஷ்யபாதீந்ப்ரதி ப்ரஹ்மவாக்யம் க்ஷிரோதஸ்யோத்தரே தீரே கஷ்யபாதேர்கமநம் தபஷ்சர்யா ச)

Brahma instructs the devas to go to Vishnu | Bhavishya-Parva-Chapter-43 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் :  பதிவின் சுருக்கம்: பிரம்மனின் சொற்கள்; கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; பாற்கடலின் வடகரையில் தவமிருந்த தேவர்கள்...

Lord Vishnu and Goddess Lakshmi in Milk ocean Ksheer Sagar Parkadal

பிரம்மன் {தேவர்களிடம்}, "பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களே, உங்கள் வரவின் நோக்கத்தை நான் அறிந்தேன். ஓ! முன்னணி சூரர்களே, உங்கள் நோக்கம் நிறைவேறும்.{1} தானவர்களில் {அதிதியின் மகன்களின் வழிதோன்றலில்} முதன்மையான பலியை வெல்லப்போகும் அண்டத்தின் தலைவன், மூவுலகங்களையும் வெல்பவன் மட்டுமல்லாமல், தேவர்களாலும் வழிபடத்தகுந்தவனாக இருக்கிறான்.{2,3}

அண்டத்தின் நித்திய பிறப்பிடமான அவனே உலகங்களின் விதி சமைப்பவன் ஆவான். மக்கள் அவனை எல்லாம்வல்லவன் என்றும், ஹேமகர்பன் என்றும் அழைக்கிறார்கள்.{4} அசுரத்தலைவன் பலியையும், உலகையும் அழிக்கும் பெருந்தலைவனே, அனைத்திற்கும் பிறப்பிடமும், நம்மில் மூத்தவனும் ஆவான்.{5} அண்டத்தின் ஆன்மாவாக இருக்கும் அந்த யோகி, சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் ஆவான்.{6} தேவர்களும் அந்தப் பரமனை அறியமாட்டார்கள்; ஆனால் தேவர்களையும், நம்மையும், மொத்த அண்டத்தையும் அந்தப் புருஷோத்தமன் அறிவான்.{7} அவன் அருளால் நாம் நலமாக இருக்கிறோம். மக்கள் இவ்வுலகில் அவனுடன் ஐக்கியத்தை நிறுவி கடுந்தவம் செய்கிறார்கள்.{8}

ஓ! தேவர்களே, வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சிறந்த பகுதியான பாற்கடலின் வடகரையில் அமுதம் இருப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அங்கே சென்று தற்கட்டுப்பாட்டுடன் கடந்தவம் பயில்வீராக.{9} அங்கே மிகப் புனிதமானவையும், மழைக்காலத்தில் நீருண்ட மேகங்களின் முழக்கம் போலக் கம்பீரமானவையும், பிரம்மம் தொடர்பானவையுமான தூய சொற்களைக் கேட்பீர்கள்.{10} பாவங்களை அழிக்கவல்ல அந்தத் தெய்வீக வாக்கு, தூய ஆன்மா படைத்த தேவதேவனின் வாக்காகும்.{11} உங்கள் நோன்பு நிறைவடையும்வரை அந்தப் பேரண்ட வாக்கை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.{12} ஓ! தேவர்களே, என்னிடம் வந்திருக்கும் உங்களுக்கு வரங்களைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள்" என்றான்.{பிரம்மன்}.{13-15}

கசியபரும், அதிதியும் யோகத்துடன் அடையாளங்காணப்படுபவனை {யோகாத்மனான பிரம்மனை} வணங்கி, அவனது பாதங்களைத் தீண்டி, "தலைவன் எங்கள் மகனாகப் பிறக்கட்டும்" என்ற வரத்தைக் கேட்டனர்.

அவர்கள் பெரும் மதிப்புடன் இவ்வாறு சொன்ன போது, பிரம்மன், "அவ்வாறே ஆகட்டும். அவன் தங்கள் தம்பியாகட்டும் என்று தேவர்கள் அவனிடம் வேண்டட்டும், அவனும் ஏற்பான்" என்றான்.{16-18}

இந்த வரத்தை அவனிடம் அடைந்து தங்கள் காரியத்தில் வெற்றியை அடைந்த தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.{19} சூரர்கள், கசியபர், அதிதி ஆகியோர் "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி பிரம்மனின் பாதங்களைத் தீண்டி வடதிசைக்குச் சென்றனர்.{20} தெய்வீக பிரம்மனால் ஆணையிடப்பட்டவாறே அவர்கள் பாற்கடலின் வடகரையைக் குறுகிய காலத்திற்குள் அடைந்தனர்.{21} அந்த முன்னணி தேவர்கள், பல பெருங்கடல்களையும், மலைகள், ஆறுகளையும் கடந்து சென்று சூரியனும், உயிரினங்களும் அற்றதும் இருளால் மறைக்கப்பட்டதுமான அந்தப் பயங்கரப் பகுதியைக் கண்டனர்.{22}

சூரர்களும், கசியபரும் அமுதம் இருந்த இடத்தை அடைந்து, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க யோகியும், தலைமை சக்திகள் அனைத்தையும் கொண்டவனுமான நாராயணனை நிறைவடையச் செய்யும் நோக்கில் பல வருடங்கள் கடுந்தவங்களைச் செய்தனர்.{23,24} சூரர்கள், பிரம்மசரிய நோன்பையும், மௌன விரதத்தையும் நோற்று, தங்கள் புலன்களையும், அசைவுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கே கடுந்தவம் இருந்தனர்.{25} தெய்வீகரான கசியபர், தலைவன் நாராயணனை நிறைவடையச் செய்வதற்காக வேத மந்திரத் துதிகள் பலவற்றை ஓதத் தொடங்கினார்" என்றார் {வைசம்பாயனர்}.{26}(1-26))

பவிஷ்ய பர்வம் பகுதி – 43ல் உள்ள சுலோகங்கள் : 26

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English