Wednesday 7 July 2021

பலியின் செழிப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 41

(பலிர்விஜயே ஷ்ரிய꞉ ஸ்வயமாகமநகதநம்)

Bali's prosperity | Bhavishya-Parva-Chapter-40 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பலியை வந்தடைந்த செழிப்பின் தேவியான ஸ்ரீதேவி...

Bali, Mahabali, Bali Chakravarthi , Maveli

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{அதிதியின் மகன்களான} தேவர்கள் {திதியின் மகன்களான} தைத்தியர்களால் வீழ்த்தப்பட்டனர், அதன்படி தைத்தியர்களே உலகங்களை ஆக்கிரமித்தனர். மயன், சம்பரன் ஆகியோர் பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வெற்றியை அறிவித்தனர்.{1} அந்த நேரத்தில் திசைகள் தெளிவடைந்தன, பக்திச் செயல்பாடுகள் செழித்தன, அநீதி ஒடுக்கப்பட்டது, சூரியன் தன் பாதையில் முறையாகப் பயணித்தான்.{2}

பிரஹ்லாதன், சம்பரன், மயன், அனுஹ்லாதன் ஆகியோர் கவனமாகத் திசைகள் அனைத்தையும் பாதுகாத்தனர்.{3} மக்கள் நல்வழிகளில் சென்றனர், அதனால் பாவம் மறைந்து அறம் பெருகியது. சித்தர்கள் தவம் பயின்றனர்.{4,5} தர்மம் நான்கு கால்களுடன் செழித்தது, அதர்மம் (பாவம்) ஒற்றைக்காலுடன் நின்றது.(6) மன்னர்கள் தங்கள் குடிமக்களை முறையாகப் பாதுகாத்தனர், அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்றினர்.{7} பலி, அசுரர்கள் அனைவராலும் ஒருமனதாகத் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.{8|

அவர்கள் {அசுரர்கள்} மகிழ்ச்சி கூச்சலிடத் தொடங்கிய போது வரமளிப்பவளான செழிப்பின் தேவி {ஸ்ரீதேவி}, தன் கையில் தாமரை மலருடன் பலியின் முன்பு தோன்றி,{9} "ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களில் முதன்மையானவனே, ஓ! பேரொளி படைத்த தைத்திய மன்னன் பலியே, தேவர்களை வீழ்த்தியதால் நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.{10} உனக்கு நன்மை நேரட்டும்.{10} போரில் உன் ஆற்றலை வெளிப்படுத்தித் தேவர்களின் மன்னனை நீ வீழ்த்தினாய். அற்புதம் நிறைந்த உன் சக்தியைக் கண்டே நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.{11} ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஹிரண்யகசிபுவின் குலத்தில் பிறந்த நீ அசுரர்களின் மன்னனாக நியமிக்கப்பட்டிருக்கிறாய். எனவே, இத்தகைய அருஞ்செயலை நீ செய்ததில் வியப்பேதுமில்லை.{12} மூவுலகங்கள் அனைத்தையும் அனுபவித்த அந்தத் தைத்திய மன்னனையும் {ஹிரண்யகசிபுவையும்} நீ விஞ்சிவிட்டாய். மேலும் நீ எப்போதும் அறம்சார்ந்தவனாகவும், பக்திமானாகவும் இருக்கிறாய்.{13} எனவே, ஓ! அளவற்ற ஆற்றல் படைத்தவனே, நீயே மூவுலகங்களையும் ஆள்வாயாக" என்றாள் {ஸ்ரீதேவி}.

வரமளிப்பவளும், அழகிய தேவியுமான லக்ஷ்மி இவ்வாறு அந்தத் தைத்திய மன்னனிடம் சொல்லிவிட்டுக் காட்சியில் இருந்து மறைந்தாள்[1]"என்றார் {வைசம்பாயனர்}.(14-18)

[1] சித்திரசாலை பதிப்பில் இந்த அத்தியாயத்தில் 18 ஸ்லோகங்கள் இருக்கின்றன. மன்மதநாததத்தரில் 14 தான் குறிக்கப்பட்டிருக்கிறது. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் சித்திரசாலை பதிப்பின் மூலத்தைக் கண்டு அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பவிஷ்ய பர்வம் பகுதி – 41ல் உள்ள சுலோகங்கள் : 18

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English