Sunday 4 July 2021

ஹிரண்யகசிபுவின் வல்லமை | பவிஷ்ய பர்வம் பகுதி – 38இ

(ஹிரண்யகஷிபோ꞉ பராக்ரம꞉)

Hiranyakashipu's valour | Bhavishya-Parva-Chapter-38c | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹிரண்யகசிபுவின் ஆற்றல் விளக்கம்; அவனால் நடுக்கமடைந்த ஆறுகள், மலைகள், தேசங்கள் ஆகியவற்றின் பெயர்கள்...

Hiranyakashipu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மாயைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட பிறகு, திதியின் மகன்கள் அனைவரும் நொந்து போனவர்களாக ஹிரண்யகசிபுவின் புகலிடத்தை நாடினார்கள்.(1) அப்போது ஹிரண்யகசிபு, எரியும் கோபத்துடனும், மகிமையில் சுழன்று கொண்டும் மேதினியை {பூமியை} நடுங்கச் செய்தான்.(2)

நீர் நிறைந்த பெருங்கடல்கள் அனைத்தும் இதனால் கலக்கமடைந்தன. காடுகளுடனும், காட்டு மரங்களுடன் கூடிய மலைக்ள அனைத்தும் நடுங்கின.(3) அந்தத் தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு} கோபமடைந்த போது, உலகம் இருண்டது. எங்கும் இருள் நிறைந்ததால் எதையும் உணரமுடியாத நிலை உண்டானது.(4) ஆவஹம், பிரவஹம், அசையும் விவஹம், பராவஹம், ஸம்வஹம், பெருஞ்சக்திவாய்ந்த உத்வஹம்,(5) மங்கலமான பரிவஹம் என்ற ஏழு காற்றுகளும் {வாயுக்களும்} வானில் அசைந்து கலக்கமடைந்து அச்சக்குறியீடுகளை வெளியிடத் தொடங்கின.(6) உலகங்கள் அனைத்தின் வீழ்ச்சியில் வெளிப்படும் கோள்கள் மகிழ்ச்சியுடன் வானில் சுகமாக நகர்வது தென்பட்டது.(7) (தேவையான சேர்க்கையில்லாத) யோகமற்ற நட்சத்திரங்களுடன் சந்திரன் கூடினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கோள்களுடனும், நட்சத்திரங்கள் அனைத்துடனும் வானம் சுடர்விடத் தொடங்கியது.(8)

நாளின் தலைவனான சூரியன் வானில் ஒளியிழந்திருந்தான். தலையற்ற கரிய பேருடல் ஒன்று வானில் தென்பட்டது.(9) சூரியன் அச்சந்தரும் வகையில் கரிய புகையை வெளியிட்டான். வானில் உள்ள தலைவன் சூரியன் வெப்பமடையத் தொடங்கி, ஒவ்வொரு கணமும் (உலகைச்) சுட்டெரிக்கத் தொடங்கினான்.(10) பிறகு, புகையால் நிறைந்த பயங்கரமான சூரியர்கள் எழுவர் வானில் எழுந்தனர். வானில் சந்திரனுடைய தலைக்கு மேல் கோள்கள் தங்கின.(11) சுக்கிரன் (வெள்ளி), பிருஹஸ்பதி (வியாழன்) ஆகியோர் {ஆகிய கோள்கள்) இடப்பக்கமும், வலப்பக்கமும் தங்கினர். செஞ்சூரியனுக்கு இணையான ஒளி பொருந்திய சனி, லோஹிதாங்கன் (செவ்வுடல் படைத்த செவ்வாய்) ஆகியோர் பின் தொடர்ந்தனர்.(12) யுகத்தை மாற்றுபவையான பயங்கரக்கோள்கள், வானில் ஒன்றாகச் சேர்ந்து நகர்ந்து (மேரு மலையின்) தங்கச் சிகரங்களெனும் கோட்டைகளுக்குள் நுழைந்தன.(13) ஏழு கோள்களால் சூழப்பட்ட சந்திரன், அசைவன, அசையாதனவற்றை அழிக்க (அழிவுக்கு வழிவகுக்க) ரோஹிணியை மதிக்காமல் வேறு நட்சத்திரங்களுடன் சேர்ந்தான்.(14) ராஹுவால் பீடிக்கப்பட்ட சந்திரன் எரிகொள்ளிகளால் வதைக்கப்பட்டான். சந்திரனுக்குள் நுழையும் சுடர்மிக்க எரிகொள்ளிகளின் காட்சி பயங்கரத்தை ஏற்படுத்தியது.(15) தேவர்களின் தலைவன் (இந்திரன்) வானில் இருந்து குருதி மழையைப் பொழிந்தான். வானில் எரிகொள்ளிகள் மின்னலைப் போல மினுமினுத்தன.(16)

மரங்கள் அனைத்தும் பருவமில்லாத காலத்தில் மலரத் தொடங்கி, கனிகளை விளைவித்தன. தைத்தியர்களின் அழிவை வெளிப்படுத்தும் வகையில் செடிகொடிகள் கனிநிறைந்திருந்தன.(17) கனிகள், கனிகளில் விளைந்தன, மலர்கள் மலர்களில் மலர்ந்தன. தேவர்கள் அனைவரின் சிலைகளும் தங்கள் கண் இமைகளைத் திறந்து, மூடி, சிரித்து, உரத்த குரலுடன் கதறி, யுக வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் புகைந்து, ஒளிவீசின.(18,19) கிராமங்கள் காடுகளுடன் கலந்தன. அந்த மிருகேந்திரன் {நரசிம்மன்} அணுகியபோது விலங்குகளும், பறவைகளும் பேரச்சம் தரும் ஒலிகளை வெளியிட்டன.(20) ஆறுகள் எதிர் திசைகளில் பாய்ந்தன, உலகத்தில் வீழ்ச்சியை உண்டாக்கும் சூரியன் மதியத்தை அடைந்தபோது, நீராதாரங்கள் புழுதியடைந்தன.(21) செம்புழுதியால் கலந்த திசைகள் ஒளிவீசவில்லை. வழிபாட்டுக்குரிய மூலிகைகள், அனைத்து வகை வழிபாடுகளையும் இழந்தன.(22) காற்றானது, அடித்து, பிளந்து, தள்ளி வேகமாக வீசியது. அப்போது உயிரினங்கள் அனைத்தும் நிழலற்றவையாகின.(23)

உலகில் வீழ்ச்சியை விளைவிக்கும் சூரியன் மதியத்தை அடைந்தபோது, தைத்தியன் ஹரிண்யகசிபுவுடைய வசிப்பிடத்தின் உச்சியில்(24) இருந்த ஆயுதக்கிடங்கிலும், கருவூலத்திலும் தேனீக்கள் தங்கள் கூட்டை அமைத்தன. அதேபோல், ஆயுதக்கிடங்கில் புகையும் தென்பட்டது.(25) பெரும் எரிகொள்ளிகள் விழுவதைக் கண்ட ஹிரண்யகசிபு, தன்னுடைய தலைமை புரோஹிதரான சுக்ரரிடம் பின் வரும் சொற்களைச் சொன்னான்.(26)

ஹிரண்யகசிபு, "ஓ! தலைவரே, இந்தப் பெருங்கொள்ளிகள் விழுவதற்கான பொருளென்ன? இதன் பொருளைக் கேட்க நான் பேராவல் கொண்டுள்ளேன்" என்றான்.(27)

சுக்கிரர், "ஓ! மன்னா, ஓ! மஹாசுரா, இந்தப் பெரும் எரிகொள்ளிகள் பேரச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீழ்வதன் பொருளைச் சொல்கிறேன், என் சொற்களைக் கவனமாகக் கேட்பாயாக. (28) ஓ! மன்னா, எந்த மன்னனின் தேசத்தில் இவை (எரிகொள்ளிகளின் வீழ்ச்சி) காணப்படுமோ, அந்தத் தேசம் காணாமல் போகும், அதன் மன்னன் கொல்லப்படுவான்.(29) அனைத்தும் அழியும்போது உன் புத்தியால் அதை உறுதிசெய்வாயாக. உடனே பேரச்சம் விளையும். இதில் ஐயமேதும் இல்லை" என்றார்.(30)

சுக்கிரர் இவ்வாறே ஹிரண்யகசிபுவிடன் சொன்னார். தைத்தியேந்திரனுக்குத் தன் நல்வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு சுக்கிரர் தன் இல்லம் திரும்பினார். சுக்கிரர் சென்ற பிறகு, அந்தத் தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு} சிறிது நேரம் தியானித்தான்.(31) பெருந்துயர ஆன்மாவைக் கொண்ட அவன், தலைவன் பிரம்மனின் சொற்களை நினைவுகூர்ந்தபடியே சிறிது நேரம் அமர்ந்தான். "அசுரர்களின் அழிவுக்காகவும், தேவர்களின் வெற்றிக்காகவும் பலவகைப்பட்ட பயங்கர எரிகொள்ளிகள், அச்சந்தரும் வகையில் வீழ்வது காணப்படும்.(32) தைத்தியேந்திரர்களின் அழிவுக்காகக் காலத்தால் அமைக்கப்படும் இன்னும் பயங்கர எரிகொள்ளிகளின் வீழ்ச்சிகளும் காணப்படும்" {என்று ஹிரண்யகசிபுவிடம் முன்னர்ச் சொல்லியிருந்தான் பிரம்மன்}.(33)

அப்போது ஹிரண்யகசிபு விரைவாக ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, பெரும் வேகத்துடன் விரைந்து தரணியை {பூமியை} நடுங்கச் செய்தான்.(34) தைத்தியன் ஹிரண்யகசிபு, தன் தமையன் (ஹிரண்யாக்ஷன்) கோபத்தில் உதடுகளைக் கடித்தபடி வராஹனைக் குலுக்கியதைப் போலப் பூமியை நடுங்கச் செய்தான்.(35) பேரான்மாவான அந்தத் தைத்தியேந்திரன் (ஹிரண்யகசிபு) பூமியை நடுங்கச் செய்தபோது, அச்சத்தால் பீதியடைந்த பெரும்பாம்புகள் மலைகளை விட்டுத் தப்பி ஓடின.(36) நான்கு தலை, ஐந்து தலை, ஏழு தலை கொண்ட பெரும்பாம்புகள் தங்கள் வாய்களில் நஞ்சுமிக்கத் தழல்களை வெளியிட்டு நெருப்பைக் கக்கின.(37) வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், ஏலாபத்திரன், காளியன், வீரியவானான மஹாபத்மன் ஆகியோரும், ஆயிரந்தலைகளையும், பொன்தாலத்தைக் கொடியாகக் கொண்டவனும், பாம்புகளின் தலைவனும், பெரும்நாகனும், எல்லையற்றவனும், உலகைப் பாதுகாப்பவனும், நடுக்கமடையாதவனுமான சேஷனும் கூட (ஹிரண்யகசிபுவால்) நடுக்கத்தை அடைந்தனர்.(38,39) பூமியைச் சுமக்கும் மலைகளும், நீரைத் தாங்கும் பிரகாசமிக்க மலைகளும் கூடக் கோபமடைந்த அந்தத் தைத்தியனால் நடுக்கமடைந்தன.(40)

பாதாளத்தில் பாய்வதும், பாம்புகளின் ஒளியை சுமப்பதும், நடுங்கச் செய்ய அரிதானதுமான மங்கல நீர்நிலையும் திடீரெனக் கோபமடைந்தது. பாகீரதி {கங்கை} ஆறும், சரயுவும், கௌசிகியும்,(41,42) யமுனை, காவேரி, கிருஷ்ணை, வேணை, ஸுவேணை, நற்பேறுபெற்ற ஆறான கோதாவரி,(43) சர்மண்வதி ஆகியனவும், மேகல மலையில் தோன்றும் ஆறும், ரத்தினம் போன்று தூய்மையான நீரைக் கொண்டதும், ஆறுகளின் தலைவனுமான சிந்து,(44) நல்ல பிறப்பிடத்துடன் கூடிய நீரைக் கொண்ட நர்மதை, வேத்ரவதி, பசுக்கொட்டில்கள் பலவற்றால் நிறைந்த கரைகளைக் கொண்ட கோமதி, முழுமையாகப் பாயும் சரஸ்வதி,(45) மஹீ, காலநதி, புனித நீரைக் கொண்ட தமசை, சிதை, செக்ஷுமதி, தேவிகை, மஹாநதி ஆகிய ஆறுகளும்,(46) ரத்தினங்களால் நிறைந்ததும், அனைத்து வகை ரத்தினங்களும் பளபளப்பதுமான ஜம்பூத்வீபம் {நாவலந்தீவு}, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட சுவர்ணகூடக மலை ஆகியன அனைத்தும் அந்தத் தைத்தியனால் நடுக்கமடைந்தன.(47)

மலைகளாலும், காடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட லோஹித்யமெனும் பேராறு, கௌசிகாரண்யம் என்ற நகரம், வெள்ளி நிறைந்த திரவிடம் என்ற இடம்,(48) பெரும் நிலமான மாகதம், அங்கம், வங்கம், சுஹ்மம், மல்லம், விதேஹம், மாளவம், காசி, கோசலம்,(49) பொன்னிறம் கொண்ட வைனதேயனின் புவனமும் {கருடனின் நிலமும்} ஹிரண்யகசிபுவால் நடுக்கமடைந்தன. சிகரத்தின் வடிவில் விஷ்வகர்மனால் அமைக்கப்பட்ட கைலாச மலை,(50) குருதியின் நிறத்திலான நீரைக் கொண்டதும், பெரும் வேகத்தில் அசைவதும், லௌஹித்யம் என்ற பெயரைக் கொண்டதுமான பெருங்கடலும், வெண்மேகம் போன்ற வண்ணத்தில் நீரைக் கொண்ட பாற்கடலும்,(51) பாம்புகளாலும், பறவைகளாலும் தொண்டாற்றப்படும் மங்கலமான பொன் பீடங்களையும், நூறு யோஜனை உயரத்தையும் கொண்ட உதய மலை,(52) முழுமையாகப் பொன்னாலானவையும், சூரியனைப் போலப் பிரகாசிப்பவையும், மலரும் சாலம், பனை, தமாலம், கர்ணிகாரம் போன்ற மரங்களைக் கொண்டவையுமான மலைகள்,(53) அனைத்து வகைத் தாதுக்களையும் கொண்ட அயோமுகம் என்ற பெரிய மலை, வெண்மலர்கள் மலர்ந்த தமால மரக்காடுகளின் மணம் நிறைந்ததும், மங்கலமானதுமான மலய மலை ஆகியவையும்,(54) ஸுராஷ்ட்ரம், ஸுபாஹ்லீகம், ஷூரம், ஆபீரம், போஜம், பாண்டியம், வங்கம், கலிங்கம், தாமரலிப்தகம், ஆந்திரம், புண்டரம், வாமுசூடம், கேரளம் ஆகியனவும், தேவகணங்களும், அப்சரஸ்களும்  நடுக்கமடைந்தனர்.(56)

நீண்ட காலத்திற்கு முன்பு படைக்கப்பட்டதும், எவராலும் அடைய முடியாததும், மனத்தைக் கொள்ளை கொள்வதும் சித்தர்கள், சாரணர்களாலும், அப்சரஸ்களாலும் தொண்டாற்றப்படுவதும், விசித்திர பாம்புகள், பறவைகள், மலர்ந்த செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், பொன்னாலான சிகரங்களைக் கொண்டதுமான அகஸ்திய புவனமும் {அகஸ்தியரின் நிலமும்} அவ்வாறே நடுங்கியது.(57,58) செல்வம் நிறைந்ததும், காண்பதற்கு இனியதும், சந்திரனையும், சூரியனையும் துணையாகக் கொண்டு கடலைப் பிளந்து எழுந்ததும், பெருஞ்சிகரங்களால் ஒளிர்ந்ததும், வானத்தைத் தீண்டுவதும், சூரிய, சந்திர கதிர்களால் ஒளிரும் சிகரங்களைக் கொண்டதும், பெருங்கடலின் நீரால் சூழப்பட்டதுமான புஷ்படக மலையும் அவ்வாறே நடுங்கியது.(59,60) வானில் இருந்து இடிகளை வாங்கிக் கொள்வதும், மலைகளில் சிறந்ததும், நூறு யோஜனை உயரம் கொண்டதும், மங்கலமானதுமான வித்யுத்வான் மலையும் அவ்வாறே நடுங்கியது.(61) 

மங்கலமான ரிஷபர்கள் வாழும் ரிஷப மலையும், அகஸ்திய முனிவரின் வசிப்பிடம் இருக்கும் குஞ்சர மலையும்,(62) வெல்லப்படமுடியாத விஷாகரத்யம் என்ற பெயரைக் கொண்ட நகரமும், நாகர்களின் வசிப்பிடமான போகவதி நகரமும் அந்தத் தைத்தியேந்திரனால் (ஹிரண்யகசிபுவால்) நடுக்கமடைந்தன.(63) மஹாமேக மலை, பாரியாத்ர மலை, சக்ரவான் மலை, வராஹ மலை,(64) மங்கலமானதும், தீய ஆன்மாவான தானவன் நரகன் வாழும் பொன்னகரமான பிராக்ஜோதிஷபுரம்,(65) மேகங்கள் முழங்கும் சிறந்த மலையும், அறுபதாயிரம் மலைகளைக் கொண்டதுமான மேரு மலை,(66) பாலசூரியனைப் போல ஒளிர்வதும், மங்கலமானதும், புனிதமானதும், சொர்க்கத்திற்கே உயர்ந்து செல்வதும், மலைகளின் மன்னனுமான பெரிய மஹேந்திர மலை,(67) ஹேமசிருங்கமெனும் பெரும் மலை, மேகசக மலை, அசைக்க அரிதான கைலாச மலை ஆகியனவும் அந்தத் தானவேந்திரனால் (ஹிரண்யகசிபுவால்) நடுக்கமடைந்தன.(68) 

யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் வாழும் குகைகளைக் கொண்டவையும், மங்கலமானவையும் எப்போதும் மலரும் மரங்களைக் கொண்டவையுமான மலைகள்,(69) பொன்தாமரைகளால் மறைக்கப்பட்ட வைகானச தடாகம், அன்னங்களால் தொண்டாற்றப்படும் மானஸத் தடாகம் ஆகியவையும் அந்த அசுரனால் நடுக்கமடைந்தன.(70) விஷ்ருங்க மலை, ஆறுகளில் சிறந்த குமாரி ஆறு, பனியைப் போன்று வெண்மையான மந்தர மலை,(71) உஷீரபீஜ மலை, மலைகளின் மன்னனான ருத்ரோபாஷ்ட மலை, பிரஜாபதியின் வசிப்பிடமான புஷ்கர மலை,(72) தேவாவிருத மலை, வாலுக மலை, கிரௌஞ்ச மலை, சப்தரிஷி மலை, தூமவர்ண மலை,(73) ஆகிய மலைகள், தேசங்கள், ஜனபதங்கள் {சமூகங்கள்}, ஆறுகள், பெருங்கடல்கள் என அனைத்தும் அந்தத் தானவேந்திரனால் {ஹிரண்யகசிபுவால்} நடுக்கமடைந்தன.(74) பூமியின் மகனான கபிலரும், வியாகிராக்ஷனும் நடுக்கமடைந்தனர். வானுலாவிகளும், பாதாள உலகில் வசிக்கும் இரவுலாவிகளும்,(75) மேகநாதன், அங்குஷாயுதன், பீமவேகன் உள்ளிட்ட பயங்கரப் பூதகணங்களும் அவ்வாறே {அந்த தைத்தியன் ஹிரண்யகசிபுவால்} நடுக்கமடைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}[1].(76)

[1] இந்த அத்தியாயம் முழுவதும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. எனவே சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த அத்தியாயத்திற்கு 38இ என்று எண் கொடுக்கப்படுகிறது.

பவிஷ்ய பர்வம் பகுதி – 38இவில் உள்ள சுலோகங்கள் : 76

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English