Saturday 3 July 2021

ஹிரண்யகசிபுவின் சபா மண்டபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37அ

(ஹிரண்யகஷிபுஸபாவர்ணநம்)

The assembly hall of Hiranyakashipu | Bhavishya-Parva-Chapter-37a | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹரிண்யகசிபுவின் சபா மண்டப வர்ணனை; அங்கிருந்த அப்சரஸ்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள்...

Lord Narasimha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அந்தச் சபாமண்டபத்தில் தைத்தியேந்திரனான தலைவன் ஹிரண்யகசிபு, நூறு முழம் சுற்றளவைக் கொண்ட ஒரு தெய்வீக அரியணையில் அமர்ந்திருந்தான்.(1) ஓ! மன்னா, சுடர்மிக்கக் காதுகுண்டலங்களை அணிந்த தலைவன் ஹிரண்யகசிபு, சூரியனைப் போன்று பிரகாசிக்கும் தெய்வீகமான அழகிய கூரையைக் கொண்ட அந்தச் சபாமண்டபத்தில் தலைமை தாங்கி நீண்ட காலம் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.(2) அந்தத் தைத்திய மன்னனைச் சுற்றிலும், புழுதியற்றதும், தெய்வீக நறுமணம் கமழ்வதுமான சுகமான தென்றல் மென்மையாக வீசிக் கொண்டிருந்தது.(3)

அங்கே அப்சரஸ்கள் சூழ தேவர்களும், கந்தர்வர்களும் தெய்வீகத் தாளத்தின் துணையுடன் தெய்வீகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.(4) விஷ்வாசி, பிரம்லோசை என்று புகழப்படும் ஸஹஜன்யை, திவ்யை, ஸௌரபேயை, ஸமீசி, புஞ்ஜிகஷ்தலை,(5) மிஷ்ரகேசி, ரம்யை, சித்திரசேனை, ஷுசிஸ்மிதை, சாருநேத்ரை, கிருதாசி, மேனகை, ஊர்வசி ஆகியோரும்,(6) பாடுவதிலும் ஆடுவதிலும் புகழ்பெற்ற இன்னும் நூற்றுக்கணக்கான அப்சரஸ்களும் மன்னன் ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(7) அற்புத ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், சுடர்மிக்கக் காதுகுண்டலங்களுடன் கூடியவனுமான ஹிரண்யகசிபு, ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டிருந்தான்.(8)

பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட தலைவன் ஹிரண்யகசிபு, அந்தச் சபாமண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, ஏற்கனவே வரங்களைப் பெற்ற திதியின் மகன்கள் அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர்.(9) விரோசனன் மகனான பலி, பூமியை வென்ற நரகன், பிரஹ்லாதன், விப்ரசித்தி, மஹாசுரனான கவிஷ்டன்,(10) அஹந்தன், குரோதஹந்தன், ஸுமநன், ஸுமதி, கரன், கடோதரன், மஹாபார்ஷ்வன், கிரதநன், பிடரன்,(11) விஷ்வரூபன், ரூபன், விரூபன், மஹாத்யுதி, தசக்ரீவன் {ராவணன்}, வாலி, மேகவாஸன், மஹாரவன்,(12) கடாபன், விகடாபன், ஸம்ஹ்ராதன், இந்திரதாபநன் முதலிய தைத்திய, தானவர்கள் அனைவரும் சுடர்மிக்கக் காது குண்டலங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(13) அவர்கள் அனைவரும் மாலைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும், தபங்கள் செய்த நல்ல வரலாற்றைக் கொண்டவர்களாகவும், வரங்களைப்பெற்றவர்களாகவும், வீரர்களாகவும், மரணமற்றவர்களாகவும் இருந்தனர்.(14)

தெய்வீக ஆடைகளையுடுத்தியிருந்த இந்தத் தைத்தியர்களும், இன்னும் பிற தானவர்கள் பலரும் தலைவனான ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(15) மாலைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்த அவர்கள், காணிக்கைகளால் சுடர்விடும் ஆகாய விமானங்கள் பலவற்றில் அந்தச் சபாமண்டபத்திற்கு வந்திருந்தனர்.(16) அவர்கள் விசித்திர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர், அழகிய ஆடைகளை உடுத்தியிருந்தனர், விசித்திர ஆயுதங்களையும், கேடயங்களையும் கொண்டிருந்தனர், விசித்திரமான கொடிக்கம்பங்களையும் வாகனங்களையும் கொண்டிருந்தனர்.(17) அவர்கள் தங்கள் தோள்களில் வானவில்களைப் போலிருந்த மிகச் சிறந்த தோள்வளைகளைப் பூண்டிருந்தனர். திதியின் மகன்களான அந்தத் தைத்தியர்கள் எப்போதும் தைத்திய மன்னனுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(18) அந்தத் தெய்வீக சபாமண்டபத்தில் மலைகளுக்கு ஒப்பாகத் திகழ்ந்த அவர்கள் அனைவரும் சூரியனைப் போன்று பளபளக்கும் பொன்மகுடங்களை அணிந்திருந்தனர்.(19)

அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்னாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய மேடையைக் கொண்டதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளைக் கொண்டதும், யானைகளின் தந்தங்களாலான சாளரங்களைக் கொண்டதுமான அந்தச் சபாமண்டபத்தைக் கண்டான்.(20) அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், சூரியனைப் போலப் பளபளக்கும் அசுரகணங்களால் தொண்டாற்றப்பட்டவனும், திதியின் மகனுமான அந்த ஹிரண்யகசிபுவைக் கண்டான்" என்றார் {வைசம்பாயனர்}[1].(21)

[1] இந்த அத்தியாயம் முழுவதும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இது சித்திரசாலை பதிப்பில் உள்ளது. இந்த அத்தியாயம் முழுவதும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாததால் இந்த அத்தியாயத்தின் எண் 37அ என்று கொடுக்கப்படுகிறது.

பவிஷ்ய பர்வம் பகுதி – 37அ_ல் உள்ள சுலோகங்கள் : 21

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English