Friday 28 May 2021

பிராமணர்களின் கடமைகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 22

(வர்ணாஷ்ரமதர்மபரிபாலநம்)

Kurukshetra and the duty of the Brahmanas | Bhavishya-Parva-Chapter-22 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஆசிரமங்கள்; பிராமணர்களின் கடமைகள்...

Yajna Homa

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இல்லறவாசிகளும், தவத்தில் அர்ப்பணிப்பு உள்ளவர்களுமான அந்த பிராமணர்களால், மலையின் வடிவிலிருந்த தங்கள் ஆசானின் போதனைகளைக் கேட்டாலும் தங்கள் உடல் சார்ந்த பற்றுகளைக் கைவிட முடியவில்லை.(1) எனவே, ஆகுதிகளுடன் கூடிய நெருப்பு வழிபாடு தினமும் பெருகியது, விஷ்ணுவை வழிபடுவதும், ஆசான்களை வழிபடுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறே, ஓ! மன்னா, பிராமணர்களின் ஆன்மாக்களைத் தூய்மை அடையச் செய்வதற்காக அந்தப் பிரம்மவாதிகளால் கர்ம காண்டம் இவ்வுலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.({2}(1-2)

இந்தப் பூமியில் புண்ணிய மலையின்[1] அருகில், குருக்ஷேத்திரம் என்ற பெயரைக் கொண்டதும், முட்களற்றதும், நெருப்பு மூட்டுவதற்கான மரங்களும், கொப்புகளும் நிறைந்ததுமான ஒரு புனித மாகாணம் இருக்கிறது.{3} இல்லறவாசிகளாக {கிருஹஸ்தர்களாக} இருந்த பிராமணர்கள், தூய இதயத்துடன் கடவுளின் பணிகளைச் செய்தபடியே அங்கே வாழ்ந்து துறவையும், தவங்களையும் பயின்று வந்தனர். யதிகளும் கூட பக்தியை அடையும் பேரார்வத்துடன் அங்கே வாழ்கிறார்கள்.{4} வானப்பிரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றுபவர்களும், அக்னி ஹோத்ரம் செய்பவர்களும், தங்கள் கோபத்தையும், ஆசைகளையும் கட்டுப்படுத்தியவர்களும், மான்தோலும், மரவுரியும் தரித்தவர்களும், வேண்டிப் பெறாத {பிச்சை எடுக்காத} உணவை உண்டு வாழ்பவர்களுமான பிராமணர்களும் அங்கே வாழ விரும்பினர். ஓ! மன்னா, முன்னறிவால் படிப்படியாக அதை அடையும் பிராமணர்கள், பெருங்கவனத்துடன் இவ்வகை வாழ்வு முறையைப் பின்பற்றுகின்றனர்.{5,6}

[1] மன்மதநாததத்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இங்கே விந்திய மலையின் அருகில் என்று இருக்கிறது, சித்திரசாலை பதிப்பின் சம்ஸ்கிருத மூலத்தில், "ப்ராஜ்யேந்த⁴நத்ருணே தே³ஷே² புண்யே பர்வதரோத⁴ஸி" என்று இருக்கிறது. "விந்திய மலை" என்ற சொல் எங்கும் காணப்படவில்லை. உண்மையில், குருக்ஷேத்திரம் ஹரியானா மாநிலத்தில் இருக்கிறது. விந்திய மலை மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருக்கிறது. இரண்டிற்கும் இடையில் உள்ள தொலைவு ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமாகும். நிலை இவ்வாறிருக்கு, மூலத்திலும் விந்திய மலை என்ற சொல்லும் தென்படாததால் இங்கே அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. 

பழங்காலத்தைச் சேர்ந்த பிரம்மவாதி முனிவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்தப் புனித தொடக்கத்தை அறிந்தவர்கள் நித்திய பண்பை {அறத்தை} அடைகிறார்கள்.{7} ஒருவன், வேதங்களில் முற்றாகத் தேர்ச்சி அடையாமல் ஒருவன், இல்லற வாழ்வுமுறையை {கிருஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றக்கூடாது, மிகக் கடினமான பிரம்மசரிய வாழ்வையும் வாழக்கூடாது, அவன் துறவியின் வாழ்வையும் வாழக்கூடாது, இல்லறவாசியின் கடமைகளையும் கைவிடக்கூடாது. வேதங்களில் தேர்ச்சியடையாமல் துயரங்கள் ஒருபோதும் முடியாது. சாம, யஜுர் வேதங்களை உரைப்பவர்கள் ரிக் வேதத்தை அடைகிறார்கள்.{8,9} இல்லறவாசிகளைப் போல வாழ விரும்பும் பிராமண தவசிகள் {சந்நியாசிகள்}, தங்கள் ஆசான்களிடம் இருந்து வேதாந்த வழிமுறைகளைப் பெற்றுக் கொண்டு அதன் பலன்களை அறுவடை செய்யலாம்.{10}

பக்திமானாக இருக்கும் ஒரு மன்னன், வேதங்களைக் கேட்காதவனையும், வேத சடங்குகளைச் செய்யாதவனையும் ஒரு சூத்திரனாகச் செயல்படும்படி வற்புறுத்த வேண்டும்.{11} மறுபுறம், பிராமணர்களில் வேதங்களை மதிக்காதவர்கள் எவரும் இருப்பதில்லை என்பதாலும், ஒரு மாணவனாகவோ {பிரம்மசாரியாகவோ}, இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ} இருக்கும் ஒவ்வொரு பிராமணனும் தன் கடமைகளின் விளக்கத்தைக் கேட்கும்போது தன் மனத்தைக் கட்டுப்படுத்தி வேதங்களைப் படித்து, போதனைகளைப் பெறுகிறான் என்பதாலும், எந்த மன்னனும் ஒரு பிராமணனை அவமதிக்கக்கூடாது.{12-14} எனவே, சாத்திரங்களின் அறிவை அடைந்தவனும், அனைத்தையும் கடந்த ஆழ்நிலை அறிவை ஈட்டியவனுமான ஒரு பிராமணன், இவ்வாறே வேதங்களைப் படித்துத் தன் புலன்களை அடக்க வேண்டும்" என்றார் {வைசம்பாயனர்}.{15}(3-15)

பவிஷ்ய பர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 15

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English