Sunday 20 December 2020

துவாரகை புகுந்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 156 – 100

(கிருஷ்ணஸ்ய த்வாரகாப்ரவேஷம்)

Krishna's entrance into Dwaraka and reception | Vishnu-Parva-Chapter-156-100 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் மாளிகை சிறப்பு; பாரிஜாத மரம் நடப்பட்டது; பதினாறாயிரம் பெண்களைக் கௌரவித்தல்...


Krishna and his sixteen thousand wives

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு மிகச்சிறந்த கண்களைக் கொண்ட கிருஷ்ணன் துவாரகையைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நூற்றுக்கணக்கான மாளிகைகளுடன் கூடிய தன் வீட்டைப் பார்த்தான்.(1) வெண்ணிறத்துடன் ரத்னமயமான தூண்கள் கோடிக்கணக்கானவற்றையும், நெருப்பைப் போன்று ஒளிரும் ரத்னங்களுடன் கூடிய ஒரு வாயிலையும், அங்கேயும், இங்கேயுமென வைக்கப்பட்டிருந்த பிரகாசமிக்கப் பொன் இருக்கைகள் எண்ணற்றவற்றையும் அங்கே அவன் கண்டான்.(2) ஸ்படிகத் தூண்களைக் கொண்டதும், மொத்தமாகப் பொன்னால் கட்டப்பட்டதுமான ஒரு பெரும் மாளிகை அவனது சபையாக இருந்தது.(3)

நீரில் நிறைந்திருக்கும் தாமரைகளுடனும், பித்துப் பிடித்த மயில்களும், குயில்களும் வந்து செல்லும் நறுமணமிக்கச் சிவந்த உற்பலங்களுடனும் கூடியவையும், பொன்னாலும், ரத்தினங்களாலும் அமைந்த படிக்கட்டுகளைக் கொண்டவையும், பல்வேறு மரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அழகிய பெரிய தடாகங்களையும் அங்கே அவன் கண்டான்.(4,5) நூறு முழம் உயரம் கொண்டவையும், மலைப்பாறைகளால் அமைந்தவையுமான மதில்களும், அகழிகளும் சூழ விஷ்வகர்மன் அந்த வீட்டைக் கட்டியிருந்தான்.(6) அனைத்துப் பக்கங்களிலும் அரை யோஜனை அளவுள்ள நிலம் கொண்ட அந்த வீட்டை இந்திரனுடைய அரண்மனையின் அளவுகளின்படியே விஷ்வகர்மன் கட்டியிருந்தான். கருடனின் முதுகில் இருந்தபடியே அந்த மணல் வண்ண மாளிகையை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.(7,8)

அதன்பிறகு அவன், பகைவருக்கும் மயிர் கூச்சத்தை ஏற்படுத்தும் ஒலியைக் கொண்ட தன் சங்கை முழக்கினான். அவ்வொலியால் பெருங்கடல் பெரிதும் கலங்கியது, வானம் அதை எதிரொலித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அஃது அற்புதம் நிறைந்ததாகக் காட்சியளித்தது.(9) குகுர, அந்தகக் குலத்தினர், அந்தப் பாஞ்சஜன்ய சங்கின் ஒலியைக் கேட்டும், கருடனைக் கண்டும் கவலையில் இருந்து விடுபட்டனர்.(10) கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதத்துடன் சூரியனைப் போன்று பிரகாசித்துக் கொண்டு கருடனில் அமர்ந்திருக்கும் கேசவனைக் கண்டு குடிமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(11) அவர்கள் பேரிகைகளையும், துந்துபிகளையும் இசைக்கத் தொடங்கிச் சிங்க முழக்கம் செய்தனர்.(12) குகுரர்களும், அந்தகர்களும், தாசார்ஹர்களும் மதுசூதனனைக் கண்ட பிறகு பெரும் மகிழ்ச்சியுடன் அவனிடம் சென்றனர்.(13) மன்னன் உக்ரசேனன், தன் முன்னே வாசுதேவனை {கிருஷ்ணனை} வைத்துக் கொண்டு சங்கு, துந்துபி ஒலிகளுடன் வசுதேவனின் மாளிகைக்குச் சென்றான்[1].(14) தேவகி, ரோஹிணி, {யசோதை}[2], ஆஹுகனின் {உக்ரசேனனின்} மனைவியர் ஆகியோர் தங்கள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியாகத் திரிந்து உபசரிக்கத் தொடங்கினர்.(15) தான் விரும்பியபடி இந்திராதி தேவர்களுடன் பயணிக்கும் ஹரி சில கணங்களுக்குப் பிறகு குறிப்பட்ட அந்த வீட்டை வந்தடைந்தான் {தன்னுடைய வீட்டை அடைந்தான்}.(16)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் வசுதேவன், வாசுதேவன் என்ற பெயர்களில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற பதிப்புகளையும் ஒப்பிட்டு இங்கே திருத்தப்பட்டிருக்கிறது.

[2] மற்ற இரு பதிப்புகளிலும் இங்கே யசோதையும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

யது குலத்தில் முதன்மையான கிருஷ்ணன் தன் வீட்டின் நுழைவாயிலில் இறங்கிக் கொண்டு யதுக்கள் அனைவருக்கும் உரிய மதிப்பைச் செலுத்தினான்.(17) பதிலுக்கு ராமன் {பலராமன்}, ஆஹுகன் {உக்ரசேனன்}, கதன், பிரத்யும்னன் மற்றும் {சூர குலத்தில் பிறந்த} பிறரால் மதிக்கப்பட்டு, ரத்தின மலைகளுடன் கூடியவனாகத் தன் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்.(18) ருக்மிணியின் மகனான பிரத்யும்னன், இந்திரனின் மனைவிக்கு மிகவும் பிடித்தமான பாரிஜாதத்தை அந்த வீட்டிற்குக் கொண்டு சென்றான்.(19) பாரிஜாதத்தின் சக்தியின் மூலம் அந்த வீரர்கள் தங்கள் மேனி அழகைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(20) இவ்வாறு விஷ்வகர்மனால் கட்டப்பட்ட வீட்டிற்குள் யது குலத் தலைவர்களால் துதிக்கப்பட்டவனாக நுழைந்தான் கிருஷ்ணன்.(21) ஒப்பற்ற சக்தியைக் கொண்ட அச்யுதன், சிகரங்களுடன் கூடிய ரத்தின மலைகளைத் தன் அந்தப்புரத்தில் வைத்து விட்டு,(22) விருஷ்ணிகளுடன் சேர்ந்து தெய்வீக மரமான பாரிஜாதத்தை வழிபட்டு உரிய இடத்தில் அதை நட்டு வைத்தான்.(23)

அதன் பிறகு, உற்றார் உறவினரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டவனும்,, பகைவரைக் கொல்பவனுமான கிருஷ்ணன், நரகனின் {நரகாசுரனின்} வீட்டில் இருந்து கொண்டு வந்த கன்னிகையர் அனைவருக்கும் {பதினாறாயிரம் பேருக்கும்}(24) ஆடைகள், ஆபரணங்கள், பணிப்பெண்கள், செல்வங்கள், இன்பநுகர் பொருட்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்களைக் கௌரவித்தான்.(25) தேவகி, ரோஹிணி, ரேவதி, ஆஹுகனின் மனைவியர் ஆகியோரால் ஏற்கனவே அந்தக் கன்னிகையர் மதிப்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.(26) சத்யபாமா தன் நற்பேற்றினால் பெண்கள் அனைவரையும் ஆண்டு வந்தாள், பீஷ்மகனின் மகளான ருக்மிணியோ உறவினர்களைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் தேவியானாள்.(27) கிருஷ்ணன் அந்தப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடுகளையும், தடாகங்களையும், தோட்டங்களையும் ஒதுக்கிக் கொடுத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(28)

விஷ்ணு பர்வம் பகுதி – 156 – 100ல் உள்ள சுலோகங்கள் : 28
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English