Friday 16 October 2020

இந்திரனிடம் பேசிய நாரதர் | விஷ்ணு பர்வம் பகுதி – 126 – 070

(இந்த்ரஸ்ய பாரிஜாததாநே(அ)ஸம்மதிம்)

The coloquy between Narada and Indra regarding the transplantation of the Parijata | Vishnu-Parva-Chapter-126-070 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சிவனைத் துதித்து இந்திரன் எடுத்த விழா; பாரிஜாதம் பெற தூதாகச் சென்ற நாரதர்; பாரிஜாதத்தைக் கொடுக்காததற்கு காரணங்களை அடுக்கிய இந்திரன்...

Narada and Indra


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பிறகு மஹேந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார் நாரத முனிவர்; அங்கே அவர் (சிவனைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற) விழாவைக் கண்டு அந்த இரவைக் கழித்தார்.(1) சிறப்புமிக்க ஆதித்யர்கள், தேவர்களில் சிறந்த வசுக்கள், புண்ணியச் செயல்களின் மூலம் சொர்க்கத்தை அடைந்தவர்களும், கல்விமான்களுமான ராஜரிஷிகள்,(2) நாகர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், சாரணர்கள், தவத்துறவுகளை மேற்கொள்ளும் தவசிகள் {தபோதனர்கள்}, ஆயிரக்கணக்கான பிரம்மரிஷிகள், தேவரிகள், முனிவர்கள்,(3) உயரான்ம சுபர்ணர்கள், பெருஞ்சக்திவாய்ந்த மருத்துகள் ஆகியோரும் நூற்றுக்கணக்கான தெய்வீக உயிரினங்கள் பிறரும் அங்கே கூடியிருந்தனர்.(4)

எல்லையற்ற சக்தி கொண்ட தேவன் மஹேஸ்வரன் {சிவன்}, உமையின் துணையுடன் கூடியவனாகத் தன் தொண்டர்கள் {பூதகணங்கள்} சூழ அவர்கள் அனைவருக்கும் தலைமையில் அமர்ந்திருந்தான்.(5) உயிரினங்கள் அனைத்தின் பாதுகாவலனான அவன், ஆயிரக்கணக்கான கல்பங்களின் முடிவிலும் அழிவற்றவர்களாகத் திகழ்பவர்களும், இந்திரனுக்கு இணையான தேவர்களாலும் வழிபடப்படுபவர்களும், தன்னறிவு பெற்றவர்களும், செருக்கிலிருந்து விடுபட்டவர்களும், அறப்பாதையில் எப்போதும் நடப்பவர்களுமான முதன்மையான தேவரிஷிகளாலும் சூழப்பட்டிருந்தான்.(6,7) ஓ! பாரதா, ருத்திரர்கள், கசியபரின் சந்ததியினர், ஸ்கந்தன், நெருப்பின் தேவன் {அக்னி}, ஆறுகளில் சிறந்த கங்கை, அர்சிஷ்மான், தும்புரு, நாநயமிக்கப் பேச்சாளர்களில் முதன்மையான பாரிசன் {பாரி}, தவத்தகுதிகளைக் கொண்டோர் {புண்ணியவான்கள்}, தேவ படையின் தலைவர்கள் ஆகியோர் அங்கே அந்தப் பரமசிவ தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(8,9) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அறவழிகளிலும், தவங்களிலும் அர்ப்பணிப்புள்ளவர்களும், நல்லோரின் பாதையைப் பின்பற்றுபவர்களுமான பிற தேவர்களும் ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டவர்களான அந்தத் தலைவர்களைப் பின்பற்றினார்கள் (சிவனைத் துதித்தனர்).(10)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, நன்மையை விரும்பும் மனிதர்கள் பூமியில் தேவர்களை வழிபடுகிறார்கள், அதே மனிதர்கள், நன்மையை அடைய விரும்பும் தேவர்களால் சொர்க்கத்தில் வழிபடப்படுகின்றனர்.(11) ஓ! கௌரவர்களின் வழித்தோன்றலே, சாத்திர விதிகளின்படி வாழ்பவர்களும், பித்ருக்களின் நன்மைக்காக அறச்சடங்குகளைச் செய்து தேவர்களைத் துதிப்பவர்களும்,, வேதங்களை அறிந்தவர்களுமான மனிதர்கள், மறுமையில் தேவர்களால் உயர்வாகக் கௌரவிக்கப்படுகின்றனர்.(12) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அங்கே கந்தர்வர்களின் மன்னனான சிறப்புமிக்கச் சித்திரரதன், தன் மகனுடன் கூடியவனாக தெய்வீக இசைக்கருவிகளை மகிழ்ச்சியாக இசைத்துக் கொண்டிருந்தான்.(13) ஊர்ணாயன், சித்திரசேனன், ஹாஹா, ஹுஹு, தும்பரன் {கும்பரன்}, தும்புரு ஆகியோரும், பிற கந்தர்வர்களும் ஆறு வெவ்வேறு குணங்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.(14) ஊர்வசி, விப்ரசித்தி, ஹேமா, ரம்பை, ஹேமதந்தா, கிருதாசி, சஹஜன்யை ஆகியோரும் பிற காரிகையரும் பல்வேறு வகையில் அங்கே ஆடிக் கொண்டிருந்தனர்.(15) தன்னை ஆள்பவனும் {ஆத்மஞானியும்}, சிறப்புமிக்கவனுமான சிவன், இந்தக் கௌரவங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான், மேலும் அந்த உலகத் தலைவன், சக்ரனின் வழிபாடுகளில் மகிழ்ந்தவனாகத் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(16)

படைக்கப்பட்ட உயிரினங்களின் தலைவனான அவன் சென்றதும், (அங்கே கூடியிருந்த) மன்னர்கள், தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்; மஹேந்திரனால் கௌரவிக்கப்பட்ட தேவர்களும் தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(17) அனைவரும் சென்றபிறகு தன் சபை உறுப்பினர்களுடன் சுகமாக அமர்ந்திருந்த புரந்தரனிடம் நாரத முனிவர் சென்றார்.(18) இந்திரன், தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று தவமெனும் செல்வத்தைக் கொண்ட அந்த முனிவரை வரவேற்று தன் இருக்கைக்கு இணையான குசப்புல்லாலான இருக்கையை அவருக்கு அளித்தான்.(19)

அப்போது, பெருஞ்சக்திவாய்ந்தவரான நாரதர், பின்வரும் சொற்களை மஹேந்திரனிடம் சொன்னார், {நாரதர்}, "ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் இப்போது ஒப்பற்ற வலிமை கொண்ட விஷ்ணுவிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து இங்கே தூதனாக வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(20) எல்லையில்லா சக்திகளைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவன், தன்னுடைய துன்பங்களில் {பிரச்சனைகளில்} ஒன்றை நீக்கும் பணியில் என்னை இங்கே அனுப்பியிருக்கிறான்" என்றார்.(21)

சிறப்புமிக்கவனான அந்தப் பாகசாசனன் {இந்திரன்}, மகிழ்ச்சியுடனும், இனிய, ஏற்புடைய சொற்களுடனும் அந்த முனிவரிடம் பேசியவாறு,(22) "ஓ! முனிவரே, அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்} என்ன சொல்லி அனுப்பினான் என்பதைத் தாமதமில்லாமல் என்னிடம் சொல்வீராக; நீண்ட காலம் கழிந்து உயரான்ம கிருஷ்ணன் எங்களை நினைவுகூர்ந்திருக்கிறான்" என்றான்.(23)

நாரதர், "ஓ! மஹேந்திரா {இந்திரா}, கசியபர்களின் மகிமையை அதிகரிப்பவனும், உன் தம்பியுமான உபேந்திரனைக் {கிருஷ்ணனைக்} காணவும், என் காரியம் ஒன்றிற்காகவும் நான் துவாரகைக்குச் சென்றேன்.(24) பகைவரை அடக்குபவனான அந்த வீரன், தன் மனைவியான ருக்மிணியின் துணையுடன் ரைவதக மலையில் அமர்ந்து கொண்டு, காளையைச் சின்னமாகக் கொண்ட தேவனைத் {மஹேஸ்வரனை} துதித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.(25) ஓ! பாவமற்றவனே, தேவர்களின் ஆட்சியாளா, நான் அவனுடைய மனைவிகளை ஆச்சரியப்படுத்துவதற்காகப் பாரிஜாத மரத்தின் மலரை அவனிடம் கொடுத்தேன்.(26) விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்ல சிறந்த மரத்தில் விளையும் அந்த மலரைக் கண்டதும் கேசவனின் மனைவிமார் பேராச்சரியம் அடைந்தனர்.(27) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அம்மலரின் குணங்களையும், உயரான்ம கசியபரால் பாரிஜாத மரம் உண்டாக்கப்பட்டதையும் நான் அவர்களுக்கு விபரமாகச் சொன்னேன்.(28) தற்கட்டுப்பாட்டைக் கொண்டவரான கசியபர் மலர்மாலைகளால் கழுத்தில் கட்டப்பட்டு அதிதியின் புண்யக நோன்புக்காக எவ்வாறு என்னிடம் கொடையளிக்கப்பட்டார் (என்பதை அவர்களுக்கு நான் விவரித்துச் சொன்னேன்);(29) சசியால் நீ எவ்வாறு கொடையளிக்கப்பட்டாய் என்பதையும், ஓ! தேவர்களின் தலைவா, அவ்வாறே பிற தேவர்களும் எவ்வாறு கொடையளிக்கப்பட்டார்கள் என்பதையும், கசியபரும், வலிமைமிக்கப் பிற முனிவர்களும் பிணை {மாற்றுக் கிரயம்} கொடுத்த பிறகு எவ்வாறு விடுவிக்கப்பட்டார்கள் என்பதை {நான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னேன்}.(30) சத்யபாமா என்ற பெயரைக் கொண்ட உன் தம்பியின் அன்புக்குரிய மனைவியானவள், இதைக் கேட்டு அந்தப் புண்யக நோன்பைச் செய்யும் உறுதியை மனத்தில் அடைந்தாள்.(31) ஓ! தேவர்களின் தலைவா, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பிறகு அந்த ராணி தன் நோன்புக்கு உதவி செய்யத் தன் கணவனை வேண்டினாள், உன் தம்பியும் அதைச் செய்வதாக உறுதியேற்றிருக்கிறான்.(32) ஓ! தேவர்களின் தலைவா, பலம்வாய்ந்தவர்களில் முதன்மையான விஷ்ணு, உன்னிடம் சொல்லுமாறு என்னிடம் சொன்னவற்றை இனி சொல்லப் போகிறேன், கவனமாகக் கேட்பாயாக.(33)

உன்னால் சீராட்டப்பட வேண்டிய உன் தம்பி அச்யுதன், உனக்குச் சொல்லியனுப்பியது பின்வருமாறு, "ஓ! தேவர்களின் தலைவா, மரங்களில் முதன்மையானதும், சிறந்ததுமான பாரிஜாதத்தை எனக்குக் கொடுப்பதே உனக்குத் தகுந்தது.(34) ஓ! அசுரர்களைக் கொல்பவனே, உன் கொழுந்தியாளின் {தம்பியின் மனைவியுடைய} விருப்பம் நிறைவேறட்டும்; ஓ! தேவர்களில் முதன்மையானவனே, குறிப்பாக அவள் அறச்செயல் செய்ய விரும்புவதால் அது நிறைவேற்றட்டும்.(35) ஓ! படைக்கப்பட்ட உயிரினங்களின் தலைவா, சொர்க்கத்திலுள்ளோர் அந்த அருளப்பட்ட மரத்தைக் காணும் நல்வினை பெற்றவர்களாக இருக்கின்றனர்; என்னுடைய வழிவகையின் மூலமாக {என்னைக் கருவியாகக் கொண்டு} இனி பூமியின் மனிதர்களும் அதைக் காணும் அருளைப் பெறட்டும்" {என்று உனக்குச் சொல்லுமாறு கிருஷ்ணன் என்னிடம் சொல்லி அனுப்பினான்" என்றார் நாரதர்}".(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குலத்தை மகிழச் செய்பவனே, வசுதேவரின் மகனுடைய {கிருஷ்ணனின்} சொற்களைக் கேட்ட மஹேந்திரன், நாநயமிக்கப் பேச்சாளர்களில் முதன்மையான நாரதரிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்,(37) {இந்திரன்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமது இருக்கையில் அமர்வீராக; நீர் சரியாகவும் முறையாகவும் பேசினீர்; ஒப்பற்ற சக்திகளைக் கொண்ட விஷ்ணுவுக்கான பதில் செய்தியை நான் உம்மிடம் சொல்கிறேன்" என்றான்.(38) நாரதர், தமது இருக்கையில் அமர்ந்த பிறகு, நாரதரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவருடைய இருக்கை போன்ற இருக்கையிலேயே சக்ரனும் அமர்ந்தான்.(39) இவ்வாறு அமர்ந்ததும், விருத்திரனைக் கொன்றவனும், தேவர்களின் தலைவனுமான அவன், தன் மகத்துவத்தின்[1] மீது பார்வையைச் செலுத்தி {தன் ஆற்றலையும், சக்தியையும் கண்டு} மகிழ்ச்சியால் நிறைந்தவனாக நாரத முனிவரிடம் பின்வருமாறு பேசினான்.(40)

[1] "உண்மையில் இங்கே சொல்லப்படுவது அவனது ஆற்றலும், சக்தியுமாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

இந்திரன் {நாரதரிடம்}, "வலிமைமிக்கவரும், அறம்சார்ந்தவருமான முனிவரே, அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சிக்கான பிறப்பிடமாகத் திகழும் ஜனார்த்தனனின் உடல் நலத்தை வழக்கம் போல விசாரித்தபிறகு, நான் சொல்லும் இந்தச் சொற்களை நீர் அவனிடம் சொல்வீராக.(41) "என்னை விட்டால் {எனக்குப் பிறகு} உலகத்தின் தலைவன் நீயே என்பதில் ஐயத்தின் நிழல்கூடப் படராது. ஓ! குற்றங்குறையற்றவனே, பாரிஜாதமும், சொர்க்கத்தின் மதிப்புமிக்கப் பிற உடைமைகள் அனைத்தும் உனதே.(42) ஓ! தெய்வீகமானவனே, பூமியின் சுமையில் இருந்து அவளை விடுவிக்கவே நீ அங்கே சென்றாய், உன் பணியின் வெற்றிக்காகவே நீ மனிதனைப் போல நடந்து கொள்கிறாய்.(43) ஓ! அதோக்ஷஜா, பூமியில் உன் பணி நிறைவடைந்து நீ சொர்க்கத்திற்குத் திரும்பியதும், உன் (அன்புக்குரிய) மனைவியின் விருப்பங்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன்.(44) ஓ! கேசவா, சொர்க்கத்தின் மதிப்புமிக்கப் பொருட்களை ஓர் அற்பக் காரியத்திற்காகப் பூமிக்குக் கொண்டு செல்வது முறையானதல்ல, மேலும் இதுவே {இவ்வாறு கொண்டு செல்லாமலிருப்பதே} நீண்டகால நடைமுறையுமாகும்.(45) ஓ! வலிமைமிக்கத் தலைவா, சொர்க்கத்தில் நிலவும் இந்த நீண்ட கால விதியை நானே மிறினால், பிரஜாபதிகள் என்ன சொல்வார்கள்?(46)

உயரான்ம பிரம்மன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து உலகங்களில் செய்யப்படும் அனைத்துச் செயல்களுக்குமான நிரந்தர விதிகளை ஏற்படுத்தியிருக்கிறான்.(47) பிரஜாபதியான பிரம்மனால் இவ்வாறு விதிக்கப்பட்ட பாதையைக் கடந்து நான் நடக்கத் துணிந்தால், நுண்ணறிவுமிக்கவனான அந்தத் தலைவன் என் அத்துமீறலை அறியும்போது என்னைச் சபிப்பான்.(48) நிலைத்து நிற்கும் பழக்க வழக்கங்களின் விதிகளை நாமே உடைத்தால், தைத்தியர்களும், அவர்களைச் சார்ந்தவர்கள் சிறிதும் தயங்காமல் அவற்றை மீறுவார்கள்.(49) சிறப்புமிக்கப் பாரிஜாதத்தை நீ உன் மனைவிக்காகப் பூமிக்கு எடுத்துச் சென்றால், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, சொர்க்கவாசிகள் மனச்சோர்வடைவார்கள்" {என்று நான் சொன்னதாகக் கிருஷ்ணனிடம் சொல்வீராக}.(50)

ஓ! முனிவரே {நாரதரே}, காலத்தின் போக்கைக் காணும் என் தம்பி {உபேந்திரனான கிருஷ்ணன்}, படைக்கப்படாதவனான {சுயம்புவான} பிரம்மனால் மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட இன்பங்களில் மட்டுமே நிறைவடைய வேண்டும்.(51) ஓ! ஐயா, கிருஷ்ணன் சொர்க்கத்தில் இருக்கும் வரை, இங்கே நான் கொண்டுள்ள உடைமைகள் அனைத்தையும் அவன் அனுபவிக்கத்தகுந்தவன்.(52) ஜனார்த்தனன், ஊனுணவு உண்பவர்களுக்கு ஏற்படும் ஆணவத்தால் நிறைந்திருப்பதாலேயே, அவன் அறத்தைப் புறந்தள்ளி பாவத்தின் பாதையைப் பின்பற்றுகிறான்.(53) ஓ! நாரதரே, மனிதர்களின் உலகில் மனிதனாகப் பிறந்த கிருஷ்ணன், அண்ணனான என்னிடம் நடந்து கொள்ளும் நடத்தை, அதாவது தன் மனைவியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து கொண்டு அவன் என்னிடம் நடந்து கொள்ளும் விதம், நிச்சயம் அவனுக்கு இழிவையே உண்டாக்கும் என்பது என் கருத்தாகும்.(54,55) சொர்க்கத்தின் மதிப்புமிக்க உடைமைகளைக் கைப்பற்றுவது நேரடியாக என்னை அவமதிப்பதாகும்; உறவினர்களால் செய்யப்படும் அவமதிப்பு நிச்சயம் மிக இழிவானதாகும்.(56) மதுசூதனன், அடுத்தடுத்து அறம், பொருள், இன்பத்தையும், தாமரையில் பிறந்த பிரம்மனால் நல்லோருக்கு விதிக்கப்பட்ட உடைமைகளையும் அனுபவிக்கட்டும்.(57) இந்தப் பாரிஜாத மரத்தைப் பூமிக்கு எடுத்துச் செல்ல நான் அனுமதித்தால், புலோமனின் மகள் {இந்திராணியான சசி} தொடங்கிச் சற்றேனும் கூட யார் என்னை மதிப்பார்கள்?(58)

மேலும், பூமியின் பரப்பில் பாரிஜாத மரத்தைக் கண்டு தீண்டும் மனிதர்கள் பூமியிலேயே சொர்க்கத்தின் அருள்களை அனுபவிப்பதால் அதற்கு மேலும் சொர்க்கத்தை அடைய முயற்சிக்க மாட்டார்கள்.(59) ஓ! நாரதரே, பாரிஜாத மரத்தின் அருளை மனிதர்கள் அனுபவித்தால், அவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கும்?(60) பூமியில் மனிதர்கள் செய்யும் செயல்களை {செயல்களுக்கான பலன்களை} அவர்கள் இங்கே அனுபவிக்கிறார்கள்; இனி பாரிஜாதமெனும் உடைமையால் அவர்கள் அருளப்பட்டால் சொர்க்கத்தை அடைய அவர்கள் ஒருபோதும் முயற்சிக்க மாட்டார்கள்.(61) ஓ! முனிவரே, சொர்க்கத்தின் மதிப்புமிக்க உடைமைகளில் பாரிஜாதமே சிறந்தது, சொர்க்கத்தின் மகிமையாக இருக்கும் அஃது இங்கிருந்து அகற்றப்பட்டால், தேவர்களுடன் கூடிய சொர்க்கத்தைப் போலவே மனிதர்களுடன் கூடிய பூமியும் இருக்கும்.(62) மனிதர்கள் விரும்புவது போன்ற சொர்க்கத்தின் அருள்களைப் பூமியிலேயே அடைந்துவிட்டால் தேவர்களின் நிலைக்கு எளிதாக உயரும் அவர்கள் வேள்விகளையோ, அறக் கொடைகளையோ செய்யமாட்டார்கள்.(63)

ஓ! முனிவரே, இப்போது மனிதர்கள், சொர்க்கத்தை அடையும் விருப்பத்தில் தினமும் வேள்விகளையும், ஜபங்களையும், அனிகங்களையும் {நித்ய கர்மங்களையும்} செய்து மதிப்புடன் எங்களை நிறைவடையச் செய்கிறார்கள்.(64) பாரிஜாத அருளைப் பெற்றுவிட்டால், இந்த நோன்புகளைப் பின்பற்றவும் அவர்கள் நினைக்க மாட்டார்கள்; அவை புறக்கணிக்கப்பட்டால், புண்ணியம் இழக்கும் நாங்களும் {தேவர்களும்} எங்கள் பலத்தை இழப்போம்[2].(65) இங்கிருந்து போதுமான மழையைப் பொழிவதன் மூலம் மனிதர்கள் பூமியில் உண்டு வாழும் தானியங்களை நாமே வளர்க்கிறோம்; அவர்களும் வேள்விகளையும், கொடை போன்ற அறச்செயல்களையும் செய்வதன் மூலம் பதிலுக்கு எங்களுக்கு நிறைவடையச் செய்கிறார்கள்.(66) பாரிஜாதமெனும் அருளை அடையும் போது பசி, தாகம், நோய், மூப்பு, மரணம், நிறைவின்மை, நாற்றம், வருங்காலப் பயங்கரங்கள் ஆகியவை மனிதர்களைத் தாக்காதென்றால், அவர்கள் ஏன் சொர்க்கத்தை அடைய முயற்சிக்கப்போகிறார்கள்?(67,68)

[2] "வேள்விகள் முதலிய கொண்டாட்டங்களில் எரிக்கப்படும் காணிக்கைகளே தேவர்களின் முக்கிய வாழ்வாதாரங்கள் என நம்பப்படுகிறது" என மன்மதநாததத்தர்கள் இங்கே விளக்குகிறார்.

இந்தக் காரணங்களுக்காகப் பாரிஜாத மரத்தை அங்கே கொண்டு செல்வது நல்லதல்ல. ஓ! இருபிறப்பாள முனிவரே, பாவமற்ற செயல்களைச் செய்யும் விஷ்ணுவிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வாறே நீர் சொல்ல வேண்டும்.(69) ஓ! முனிவரே, நீர் என்னை நிறைவடையச் செய்ய விரும்பினால், நீர் என் தம்பியான கேசவனை நிறைவடையச் செய்யும் அனைத்தையும் முதிர்ச்சியாகத் தீர்மானித்த பிறகு செய்வீராக.(70) கேசவன் விரும்பினால், தன் மனைவியின் இன்பத்திற்காக மாலைகளையும் {ஹாரங்களையும்}, ரத்தினங்களையும், பொன்னையும், அகுர சந்தனத்தையும் {அகில், சந்தனக் கட்டைகளையும்}, அழகிய ஆடைகளையும், தேவர்களுக்குத் தகுந்த பிற பொருட்களையும் துவாரகைக்கு எடுத்துச் செல்லட்டும். ஆனால், இப்போது சொர்க்கத்தைக் கொள்ளையிடுவது அவனுக்குத் தகாது.(71,72) அவன் விரும்பும் ரத்தினங்களை நான் தருவேன், அனைத்து வகைகளிலான அழகிய ஆபரணங்களையும் நான் தருவேன், ஆனால், ஓ! முனிவரே, சொர்க்கவாசிகளின் பேரன்புக்குரிய உடைமையான பாரிஜாத மரத்தை நான் ஒருபோதும் அவனுக்குத் தரமாட்டேன்" என்றான் {இந்திரன்}".(73)

விஷ்ணு பர்வம் பகுதி – 126 – 070ல் உள்ள சுலோகங்கள் : 73
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English