Monday, 29 June 2020

அக்ரூரன் மூலம் கிருஷ்ணனை அழைத்த கம்ஸன் | விஷ்ணு பர்வம் பகுதி – 77 – 022

(அக்ரூரப்ரஸ்தானம்)

Kansa invites Krishna and sends Akrura to bring him | Vishnu-Parva-Chapter-77-022 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  மாட்டுத் தொழுவங்களில் இருந்தோரை அச்சுறுத்திய அசுரக் காளை; அரிஷ்டனின் அட்டகாசங்கள்; அரிஷ்டனைக் கொன்ற கிருஷ்ணன்...

Kamsa in his Sabha

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "விரஜத்தில் கிருஷ்ணன் நெருப்பு போலச் சக்தியில் பெருகி வருகிறான் என்பதைக் கேள்விப்பட்ட கம்ஸன், அவனிடம் அச்சம் கொண்டவனாகக் கவலையில் நிறைந்தான்.(1) பூதனை கொல்லப்பட்டது, சிறுவனைப் போன்ற செயல்களைச் செய்யாத சிறுவனால் இரு மரங்கள் இழுக்கப்பட்டது, காளியன் வெல்லப்பட்டது, தேனுகன் கொல்லப்பட்டது, பிரலம்பன் வீழ்த்தப்பட்டது, கோவர்த்தன மலை தூக்கப்பட்டது, இந்திரனின் கட்டளை அலட்சியம் செய்யப்பட்டது, பொறாமைபடத்தக்க {விரும்பத்தக்க} செயல்களால் பசுக்கள் பாதுகாக்கப்பட்டது, ககுத்மி {திமில் கொண்ட காளையான} அரிஷ்டன் அழிக்கப்பட்டது ஆகியவற்றால் கோபர்கள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தனர். மதுராவின் மன்னனான கம்ஸன், தனக்கு வரப்போகும் மரணத்தைக் குறிக்கும் இந்தப் பயங்கரமிக்கச் சகுனங்களையும், பெருகி வரும் தன் பகைவரின் மத்தியில் நேரும் நினைத்தற்கரிய அருஞ்செயல்களையும் கண்டு மரணத்தின் ஆளுகைக்குள் தான் கொண்டுவரப்பட்டதாகக் கருதினான். உணர்விழந்த புலன்களையும், மனத்தையும் கொண்டிருந்த அவன் இறந்தவனைப் போலத் தெரிந்தான்.(2-6)

கடுமையான கட்டளைகளை இடுபவனும், உக்ரஸேனனின் மகனும், மதுராவின் மன்னனுமான கம்ஸன் அரவமற்ற ஒரு நள்ளிரவில் தன் தந்தையையும், தன் நகரத்தில் இருந்த உற்றார் உறவினரையும் அழைத்தான்.(7) தேவனைப் போன்ற வஸுதேவன், கங்கன், ஸத்யகன், தாருகன், கங்கனின் தம்பி, போஜன் வைதரணன், பெருஞ்சக்தி கொண்ட விகத்ரு, மன்னன் பயஷங்கன், பெருஞ்செழிப்புமிக்க விப்ருது, {பிருது, பப்ரு, தானபதியான அக்ரூரன்}, தயாளனான கிருதவர்மன், பெருஞ்சக்திமிக்கவனும், துணிச்சல்மிக்கவனுமான {பூரிதேஜஸான} பூரிச்ரவஸ் மற்றும் யது குலத்தின் பல்வேறு வழித்தோன்றல்களையும் அழைத்து, முறையாக அவர்கள் அனைவரையும் வரவேற்று, "ஓ! யாதவர்களே, வணிகர்களைப் போன்றவர்களும், வேதங்களில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், ஒழுக்கத்தின் முறையான விதிகளை உறுதிசெய்வதில் திறம்பெற்றவர்களும், மூன்று வர்க்கங்களை[1] அறிமுகம் செய்பவர்களும், எப்போதும் கடமைகளை நோற்பவர்களும், இவ்வுலகில் தேவர்களைப் போன்றவர்களும், எப்போதும் நல்வழியில் நடப்பவர்களும், மலை போன்ற உறுதிமிக்கவர்களுமாக நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்.(8-13)

[1] "வாழ்வின் மூவகை நோக்கங்களாலான தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

நீங்கள் அனைவரும் அகந்தையற்றவர்களாவும், ஆசான்கள் குடும்பங்களில் முறையாக வாழ்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்[2]; நீங்கள் அனைவரும் விற்கலையில் திறம்பெற்றவர்களாகவும், அரச ஆலோசன்களை நடத்த இயன்றவர்களாகவும் இருக்கிறீர்கள்.(14) இந்த உலகத்தில் நீங்கள் அனைவரும் மகிமை ஒளி போன்றவர்களாகவும், வேதங்களின் உண்மை பொருளையும், ஆசிரமங்களின் (வாழ்வுமுறை நிலைகளின்) உண்மை நோக்கத்தையும், வர்ணங்களின் வகைகளையும் (சாதிகளையும்) அறிந்தவர்களாகவும், அழகிய ஒழுக்கவிதிகளை முன்மொழிபவர்களாகவும், விதிகளை அமைப்பவர்களின் தலைவர்களாகவும், அயல் அரசுகளைக் கைப்பற்றுபவர்களாகவும், புகலிடம் நாடி வந்தோரை பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறீர்கள்.(15,16)

[2] "பழங்கால இந்தியாவில் மன்னர்கள் தங்கள் மகன்கள் முறையான கல்வியைப் பெறுவதற்காக ஆசான்களிடம் அனுப்புவது நடைமுறையில் இருந்தது. இந்த இளவரசர்கள் தங்கள் ஆசான்களின் குடும்பங்களில் வாழ்ந்தனர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

உரையாடல்களில் ஆர்வம் கொண்டவர்களாகவும், குற்றஞ்சாட்ட முடியாத குணத்துடன் கூடியவர்களாகவும் இருக்கும் நீங்கள் அனைவரும் (இருந்தால்) தேவலோகமே கௌரவிக்கப்பட்டதாகத் தன்னை உணரும் எனும்போது பூமியைக் குறித்துச் சொல்வானேன்?(17) நீங்கள் ரிஷிகளுக்கு ஒப்பான ஒழுக்கத்தையும், மருத்துகளைப் போன்ற சக்தியையும், ருத்திரர்களைப் போன்ற கோபத்தையும், நெருப்பைப் போன்ற பிரகாசத்தையும் கொண்டவர்கள்.(18) மலைகளால் பூமி ஆதரிக்கப்படுவதைப் போல அழிந்து கொண்டிருக்கும் யது குலமும் பெரும்புகழ் கொண்ட வீரர்களான உங்கள் அனைவராலும் ஆதரிக்கப்படுகிறது.(19) என் விருப்பத்தைப் பின்பற்றுபவர்களான நீங்கள் அனைவரும் ஏன் இப்போது எனக்கு எதிராக எழும் ஆபத்தை அலட்சியம் செய்கிறீர்கள்?(20)

பொங்கி வரும் மேகத்தைப் போன்றவனும், கொண்டாடப்படுபவனும், நந்தகோபன் மகனுமான விரஜத்தின் {ஆயர்பாடியின்} கிருஷ்ணன், (குலத்தின்) வேரையே தாக்கப் போகிறான்.(21) நான் என் இதயத்தையும் நான் கண்களையும் இழந்துவிட்டேன், திறமையான அமைச்சர்கள் எவரும் என்னிடம் இல்லை. எனவேதான், அந்தச் சிறுவன் ரகசியமாக நந்தகோபனின் வீட்டில் வளர்க்கப்பட்டான்.(22) அலட்சியம் செய்யப்பட்ட பிணி, பொங்கும் கடல், மழைக்கால மேகங்களின் முழக்கம் போல அந்தத் தீய மனம் கொண்டவன் சக்தியில் வளர்ந்து வருகிறான்.(23) நந்தகோபனின் வீட்டில் பிறந்து அற்புதச் செயல்களைச் செய்யும் அந்தச் சிறுவனின் நடமாட்டங்களைப் புரிந்து கொள்ளவோ, அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து கொள்ளவோ என்னால் இயலவில்லை.(24) இந்தச் சிறுவன் தேவனின் வழித்தோன்றலாகவோ, வேறு மீமானிடப் பிறவிகளுக்குப் பிறந்தவனாகவோ இருக்க வேண்டும். நான் எதையும் அறியாவிட்டாலும், தேவர்களாலும் செய்யமுடியாத அவனது மீமானிடச் செய்களினால் இவ்வாறு கருதுகிறேன்.(25)

குழந்தையாக அவன் {கிருஷ்ணன்} உறங்கிக் கொண்டிருக்கும்போது முலையுண்ணும் சாக்கைக் கொண்டு (பறவையின் வடிவில் அங்கே சென்ற) பூதனையின் உயிரைக் குடித்தான்.(26) பாதாள உலகத்தில் திரியும் நாகன் காளியன், யமுனையின் மடுவில் வெல்லப்பட்டு ஒரு நொடியில் மறைந்து போனான்.(27) ஆனால் நந்தனின் மகனோ தன் யோக சக்தியால் மீண்டும் எழுந்தான். தேனுகன், பனை மர உச்சியில் இருந்து விழுந்து தன் இறுதி மூச்சை சுவாசித்தான்.(28) போரில் தேவர்களாலும் வெல்லப்பட முடியாத பிரலம்பனும்கூடப் பலம் மிக்க ஒருவனுடைய முஷ்டியின் வீச்சில் சாதாரண விலங்கைப் போலக் கொல்லப்பட்டான்.(29) அந்தச் சிறுவன் {கிருஷ்ணன்}, இந்திரனை கௌரவிக்கும் பண்டிகையை நிறுத்தியும், அவனது {இந்திரனின்} கோபத்தின் விளைவால் உண்டான அதிக மழையை நிறுத்தியும், பசுக்களுக்கு உறைவிடமளிக்கக் கோவர்த்தன மலையைத் தூக்கியிருக்கிறான்.(30)

சக்திவாய்ந்த அரிஷ்டன், விரஜத்தில் {ஆயர்பாடியில்} தன் கொம்புகள் சிதற அவனால் கொல்லப்பட்டிருக்கிறான். ஆயர்களின் கிராமத்தில் வாழும் அவன் சிறுவனல்ல என்பதும், சிறுவனின் வேடம் புனைந்து அங்கே வெறுமனே விளையாடிக் கொண்டிருப்பவன் என்பதும் அவனுடைய செயல்பாடுகளின் மூலம் தெரிகிறது. உண்மையில் அவன் எனக்கெதிராகப் போரில் நிற்கும்போது, அவனே {கிருஷ்ணனே} முற்பிறவியல் என் உடலின் காலன் (என் உடலை அழித்தவன்) என்பதை அறியப் போகிறேன்[3].(31-33) மரணம் என்ற பலவீனத்தை உடைய மனிதர்களில் இழிந்த ஆயரின் பிறவிக்கும், தேவ சக்தியுடன் அவன் ஆயர்பாடியில் விளையாடுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது.(34) எவனோ ஒரு தேவன், தன் உண்மை வடிவைக் கோபனின் உடலில் மறைத்துக் கொண்டு, சுடலையில் நெருப்பைப் போல இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.(35)

[3] சித்திரசாலை பதிப்பில், "அந்தச் சக்தி வாய்ந்த சிறுவன் அரிஷ்டனின் கொம்புகளை நொறுக்கி அவனைக் கொன்றிருக்கிறான். அவன் சிறுவனாக இல்லாவிட்டாலும் சிறுவனைப் போல விளையாடிக் கொண்டிருக்கிறான். இவையே விரஜத்தில் வாழும் அந்தச் சிறுவனின் செயல்பாடுகளாகும். கேசிக்கும் எனக்கும் ஆபத்து வருகிறது என்பதில் நான் உறுதியடைகிறேன். முன்பு (என் முற்பிறவிகளில்) இவனே எப்போதும் என் மரணத்திற்குக் காரணனாக இருந்திருக்கிறான் என்பதிலும் நான் உறுதியடைகிறேன். இஃது அவன் என் எதிரே போரிடத் தயாராக நின்று கொண்டிருப்பதைப் போலாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விரஜத்தில் அவன் சக்திமிக்க அரிஷ்டனின் கொம்புகளைப் பிடுங்கி அவனைக் கொன்றிருக்கிறான். அவன் சிறுவனைப் போல விளையாடிக் கொண்டிருக்கிறான். ஆனால், அவன் சிறுவனின் வடிவைக் கொண்டிருந்தாலும் இவை ஒரு சிறுவனின் செயல்களல்ல. இவை விரஜத்தில் மாடுகளுடன் வாழ்பவன் செய்த செயல்கள். எனக்கும், கேசிக்கும் கெட்ட காலம் நேரப்போவது உறுதி. முற்பிறவியிலும் இவனே என் மரணத்திற்குக் காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது போரிட விரும்பி அவன் என் முன்னே நிற்பதைப் போன்றதாகும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கோகுலத்தில் பலவான் அரிஷ்டன் கொல்லப்பட்டான், கொம்பில்லாதவனாகவும் செய்யப்பட்டான். உண்மையில் பாலனில்லாத அவன் (க்ருஷ்ணன்) பால்யாவஸ்தையையேற்று குழந்தை விளையாட்டால் மகிழ்கிறான். ஆய்ப்பாடியில் வசிக்கும் அவனது இவ்விதச் செயல்களின் மொத்தம், எனக்கும், கேசிக்கும் மிக நெருங்கியிருக்கும் பயத்தை (காட்டுகிறது) நிச்சயம். அவன் (க்ருஷ்ணன்) எனக்கு முன்னரே ஏற்படுத்தப்பட்ட யமன், எப்போதும் பூர்வதேவரத்தையே (விஷ்ணு ஸ்வரூபத்தையே) உடையவன், அவன் யுத்தத்தை விரும்பி, என் முன்னால் இங்கே நிற்கிறான் போலும்" என்றிருக்கிறது.

பழங்காலத்தில் விஷ்ணு, தேவர்களின் பணிகளை நிறைவேற்றுவதற்காக, குள்ளனின் வடிவை ஏற்று {வாமனனாகி}, பலியிடமிருந்து பூமியை எடுத்துக் கொண்டான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(36) அந்தச் சக்திவாய்ந்த விஷ்ணு, மற்றொரு சமயம் ஒரு சிங்கத்தின் வடிவை ஏற்று {நரசிம்மமாகி}, தானவர்களின் பாட்டனான ஹிரண்யகசிபுவைக் கொன்றான்.(37) திரிபுரனை அழித்த பவன் {சிவன்}, நினைவுக்கு அப்பாற்பட்ட வடிவை ஏற்று ஸ்வேத மலையில் தைத்தியர்கள் அனைவரையும் கொன்றான்.(38) பிருகுவின் மகன் (சுக்ரன்), தமது ஆசானான அங்கீரஸின் மகன் (கசன்) தவளையின் மாயையை {தார்துரீ மாயையைக்}[4] கொண்டு தமது உறுதிமொழியைக்[5] கலங்கடித்ததால், தானவர்களின் நிலத்தில் பஞ்சத்தை {அனாவ்ருஷ்டியை} உண்டாக்கினார்.(39) நித்திய தேவனான ஆயிரந்தலை கொண்ட விஷ்ணு, ஒரு பன்றியின் வடிவையேற்று {வராகமாகி}, பெருங்கடலில் இருந்து பூமியை உயர்த்தினான்.(40)

[4] "ஒரு தவளை இறந்தவுடனே மீண்டு விடுவதைப் போலக் கசனும் தன் இறப்புக்குப் பிறகு பலமுறை உயிரோடு எழுந்து வந்தான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] "இறந்த மனிதனை உயிர்ப்பிக்கும் மந்திரங்களை எவருக்கும் கொடுப்பதில்லை எனச் சுக்ராச்சாரியர் உறுதிமொழி அழித்திருந்தார், ஆனால் அந்த உறுதிமொழி பொய்யாக்கப்பட்டது. மஹபாரதம் ஆதிபர்வம் 75 மற்றும் 76ம் அத்தியாயங்களில் இக்கதை இருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

தேவர்களும், அசுரர்களும் கூடி அமுதம் கடைந்தபோது, அந்த விஷ்ணு, கடலில் ஆமையின் வடிவை ஏற்று {கூர்மமாகி} மந்தர மலையைத் தாங்கிக் கொண்டான்.(41) அங்கே அமுதம் எழுந்தபோது, அவன் ஓர் அழகிய பெண்ணின் வடிவை ஏற்று {மோகினியாகி}, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போரை உண்டாக்கினான்.(42) பழங்காலத்தில் குள்ளனின் வடிவை ஏற்று {வாமனனாகி} தன் மூன்று காலடிகளால் பலியிடம் இருந்து தேவலோகம் உட்பட முன்று உலகங்களையும் மீட்டான்.(43) இவனே, தன்னை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு தசரதனின் வீட்டில் ராமனாகப் பிறந்து, ராவணனைக் கொன்றான்.(44) விஷ்ணு, தேவர்களின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பல்வேறு வடிவங்களை ஏற்று வஞ்சகமாகத் தன் பணியைச் செய்து வருகிறான்.(45) நாரதர் என்னிடம் சொன்ன விஷ்ணுவோ, தேவர்களின் மன்னனான இந்திரனோ எனக்கு மரணத்தைக் கொண்டு வருவதற்காக உண்மையில் இப்போது வந்திருக்கிறார்கள்.(46) இக்காரியத்தில் வஸுதேவரிடம் இருந்தே நமக்கு அச்சம் உண்டாகிறது; இதுவே என் உறுதியான நம்பிக்கையாகும். அவருடைய புத்தியினாலேயே நாம் இந்த அளவுக்குக் குறைக்கப்பட்டோம்.(47)

கட்வாங்க காட்டில் நான் மீண்டும் நாரதரைச் சந்தித்தபோது, அந்தப் பிராமணர் என்னிடம்,(48) "ஓ! கம்ஸா, தேவகியின் குழந்தையைக் குறித்த {அவளுடைய கருவை அழிப்பதற்கான} உன் பெருங் கவனத்தை வஸுதேவர் இரவில் கலங்கடித்துவிட்டார்.(49) அந்த இரவில் நீ கல்லில் மோதச் செய்தவள், யசோதையின் மகளாவாள், கிருஷ்ணனையே வஸுதேவனின் மகனாக அறிவாயாக.(50) நண்பனின் வேடத்தில் உன் பகைவராக இருக்கும் வஸுதேவர், உரிய ஆலோசனைக்குப் பின்னர் உனக்கு மரணத்தைக் கொண்டு வரப்போகும் குழந்தைகளை இரவில் பரிமாற்றிக் கொண்டார்.(51) யசோதையின் மகளானவள், விந்திய மலையில் வானுலாவிகளான சும்பன் மற்றும் நிசும்பன் என்ற இரு தானவர்களைக் கொன்று, தேவர்களால் நீர் தெளிக்கப்பட்டு {அபிஷேகம் செய்யப்பட்டுப்} பயங்கரக் கள்வர்களாலும், பல்வேறு விலங்குகளாலும் வழிபடப்பட்டு வருகிறாள். மனித மற்றும் விலங்கு வேள்விகளை விரும்பும் அவள் (தன்னை வழிபடுபவர்களின்) இதய விருப்பத்திற்கு ஏற்ற வரங்களை அளிக்கிறாள்.(52,53) அவள், மது மற்றும் குருதி நிறைந்த இரண்டு குடுவைகளுடன் பளபளப்பவளும், மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவளுமான அவள், விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ள காட்டில், தன் சக்தியால் தனக்காக ஒரு வீட்டை அமைத்துக் கொண்டாள்.(54) அது செருக்குமிக்கச் சேவல்களின் கூவல் மற்றும் காக்கைகளின் கரையல்களால் நிறைந்திருக்கிறது, சுதந்திரமான பறவைகளும் மான்களும் அங்கே நிறைந்திருக்கின்றன.(55) சிங்கங்கள், புலிகள், பன்றிகள் ஆகியவற்றின் முழக்கங்கள் அங்கே எதிரொலிக்கின்றன. அஃது அடர்த்தியான மரங்களாலும், சோலைகளாலும் மொத்தமாக மறைக்கப்பட்டு இருக்கிறது.(56) அந்தக் கோவில் தங்கக் குவளைகள், சாமரங்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவற்றால் நிறைந்தும், ஆயிரம் எக்காள ஒலிகளை எதிரொலித்துக் கொண்டும் இருக்கிறது.(57) பகைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தாயான அந்த அழகிய தேவி, தேவர்களாலும் துதிக்கப்படுபவளாக நாள்தோறும் அங்கே பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறாள்" என்றார் {நாரதர்}.(58)

மேலும், நந்தகோபனின் மகனாக அறியப்படும் அந்தச் சிறுவன் கிருஷ்ணன், பல முக்கியச் செயல்களைச் செய்பவனாக இருப்பான்.(59) வாஸுதேவன் என்ற பெயரில் வஸுதேவருக்குப் பிறக்கும் இரண்டாம் மகனும், உன் உற்ற உறவினனுமான அவன் {கிருஷ்ணன்} உன்னை எளிதில் கொல்வான் என்றும் நாரதர் சொன்னார்.(60) அவனே வஸுதேவரின் பலமிக்க மகனான வாஸுதேவன் {கிருஷ்ணன்} ஆவான். அறமுறையில் அவன் என் உற்ற உறவினன் என்றாலும் இதயத்தில் பயங்கரப் பகைவன் ஆவான்.(61)

இறைச்சியை விரும்பும் காக்கை, எவன் தலையில் தன் பாதங்களை வைத்திருக்கிறதோ அந்த மனிதனின் கண்களையே தன் அலகுகளால் துன்புறுத்துவதைப் போலவே,(62) என் வீட்டில் என்னால் வளர்க்கப்படும் இந்த வஸுதேவரும், அவருடைய உறவினர்களும், நண்பர்களும் என் குடும்பத்தின் வேரையே வெட்ட முயற்சிக்கின்றனர்.(63) ஒரு மனிதன், ஒரு கருவையோ, பசுவையோ, பெண்ணையோ கொன்ற பிறகும் தன்னை எவ்வாறாவது காத்துக் கொள்ளலாம் ஆனால் நன்றிமறந்த மனிதனுக்கு எந்த உலகமும் இல்லை.(64), நன்றிமறந்த மனிதன் ஒருவன், நீண்டகால ஓட்டத்தில் ஆபத்தாக முடியும் இனிய சொற்களுக்குத் தன்னல நோக்கில் வழி கொடுத்தால், அவன் கீழோரின் {நரக} வழியையே அடைவான்.(65) கொடுமை செய்யும் விருப்பம் கொண்டவன் ஓர் அப்பாவிக்குத் தீங்கிழைத்தால், நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழியையே கட்டாயம் அடைவான்.(66) எங்கள் ஒழுக்க விதிகள் மற்றும் சாதனைகளின் காரணமாக, நட்பை நாடுவோரான உங்களைப் போன்றவர்களால் நாங்கள் புகழப்படத் தகுந்தவர்களாவோம். அத்தகையோரின் மகன்களும் அதிகப் புகழுக்குத் தகுந்தவர்களே.(67) யானைகளின் பயங்கரப் போரால் அழியும் மரங்களே போருக்குப் பிறகு அவற்றின் உணவாவதைப் போல உற்றார் உறவினர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் நேரும்போது, உறவினர்களோ, பலவீனமான நடுவர்களோ அழிவை அடைகிறார்கள்.(68,69)

வஸுதேவா, நீ இந்தக் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை விதைக்கும்போது, காலனைப் போன்ற உன்னை உண்மையில் அறிந்து கொள்ளாமல் உனக்கு உணவளித்து வந்த நான் இப்போது உன்னைப் புரிந்து கொண்டேன்.(70) ஓ! மூடா, நீ எப்போதும் இயல்பிலேயே கோபம் கொண்டவனாகவும், பகைவரை உண்டாக்குவதில் விருப்பம் கொண்டவனாகவும், பாவம் நிறைந்தவனாகவும், போலிப் பணிவைக் கொண்டவனாகவும் இருந்தாய். யது குலத்தை இந்தப் பரிதாபகர நிலைக்குக் கொண்டு வந்தவன் நீயே.(71) ஓ! வஸுதேவா, உன் வயது முதிர்வால் எந்தப் பயனுமில்லை. தன் மயிரனைத்தும் நரைத்து நூறு வயதை அடைந்தாலும் முதிராதவனான உனக்கு அறியாமல் நான் வெகுமதியளித்தேனோ?(72) எவனுடைய புத்தி பழுத்திருக்கிறதோ அவனே பெரியவன். மயிர் நரைத்தவன் முதியவனாகமாட்டான்.(73) நீ கடுமைமிக்க மனோநிலையைக் கொண்டிருக்கிறாய், உன் புத்தி பழுக்கவில்லை, கூதிர்கால மேகம் போல வெறுமனே வயதினாலேயே நீ பெரியவனாக இருக்கிறாய்.(74) ஓ! வஸுதேவா, "கம்ஸன் கொல்லப்பட்டால் என் மகன் மதுராவை ஆள்வான்" என்று வீணாக நினைத்தாய்.(75) ஓ! பயனில்லாமல் முதிர்ந்தவனே, உன் நம்பிக்கை ஏற்கனவே வீணானது, உன் தீர்மானமும் பொய்யானது. வாழ விரும்பும் எவனாலும் என் முன்னால் நிற்க முடியாது.(76) உன் மீது நம்பிக்கை வைத்திருந்த எனக்கு இந்தத் தீய மனத்தின் மூலம் தீங்கிழைக்க நினைத்தாய்; உன் மகன்கள் இருவரின் முன்னிலையில் அதற்கு எதிரான நடவடிக்கைகளை நான் எடுப்பேன்.(77)

நான் ஒரு முதியவனையோ, ஒரு பிராமணனையோ, ஒரு பெண்ணையோ, குறிப்பாக என் உற்றார் உறவினருக்கு மத்தியில் எவரையோ ஒருபோதும் கொல்லவில்லை, அதை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன்.(78) {வஸுதேவா} நீ இங்கே பிறந்தாய், என் தந்தையால் வளர்க்கப்பட்டாய், அதையும் தவிர என் தமக்கையின் {தேவகியின்} கணவனாகவும், யதுக்களின் முதல் {முக்கிய} ஆசானாகவும் இருக்கிறாய்.(79) உலகின் புகழ்பெற்ற குடிமுதல்வர்களின் பெருங்குடும்பத்தில் பிறந்து, உன்னதர்களும், பக்திமான்களுமான யாதவர்களால் ஓர் ஆசானாக நீ வழிபடப்படுகிறாய்.(80) கிழவா, நாம் என்ன செய்யலாம்? உன்னைப் போன்ற ஒரு முன்னணி யாதவனின் இத்தகைய நடத்தைக்காக யது குலத்தவர் அனைவரும் மக்களின் கேலிப்பேச்சுக்கு ஆளாகின்றனர்.(81) ஓ! வஸுதேவா, உன்னுடைய முறையற்ற நடத்தையினால் நான் இறக்கவோ, வீழவோ நேர்ந்தால், அது நல்லோரின் மன்னால் யாதவர்களை நாணமடையச் செய்யும்.(82) என் அழிவுக்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் உன்னையே நம்பிக்கையின்மையின் பொருளாகவும், யாதவர்களை ஏளனத்தின் பொருளாகவும் நீ ஆக்கியிருக்கிறாய்.(83) எனக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் இதுபோன்ற பகையையும், எங்களில் ஒருவர் இறந்தாலன்றி யது குலத்தில் அமைதியேற்படாது என்ற நிலையையும் நீ உண்டாக்கியிருக்கிறாய்.(84)

ஓ! கொடைகளை அளிப்பவரே {தானபதியே / அக்ரூரே}, அஃது எதுவாக இருந்தாலும் என் ஆணையின் பேரில் விரஜத்திற்கு {ஆயர்பாடிக்குச்} சென்று அவ்விரு சிறுவர்களையும், நந்தனையும், நமக்குக் கப்பம் கட்டும் பிற கோபர்களையும் அழைத்து வருவீராக.(85) நந்தனிடம், அவனுடைய ஆண்டுக் கப்பத்தையும், பிற கோபர்களின் கப்பங்களையும் எடுத்துக் கொண்டு விரைவாக மதுராவுக்கு வருமாறு சொல்வீராக.(86) "பணியாட்கள் மற்றும் புரோஹிதர்களால் சூழப்பட்ட கம்ஸன், வஸுதேவரின் மகன்களான கிருஷ்ணன் மற்றும் ஸங்கர்ஷணன் {பலராமன்} ஆகிய இருவரையும் காண விரும்புகிறான்.(87) அவர்கள் இருவரும் கடுமையான அங்கங்களையும் கொண்டவர்கள், சக்திவாய்ந்தவர்கள், கவனம் நிறைந்தவர்கள், போரிடுவதில் புத்திசாலித்தனம் கொண்டவர்கள், {மற்போர்} களத்தில் விளையாடவல்லவர்கள் என்பதையும் அவன் கேட்டிருக்கிறான்.(88) நல்ல பலமான கரங்களைக் கொண்ட என்னுடைய மற்போர்வீரர்கள் இருவர் அவர்களுடன் போரிட மகிழ்ச்சியுடன் விரும்புகிறார்கள். போரில் நிபுணர்களான இவர்கள் அவர்களுக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள்.(89) தேவர்களைப் போலச் சிறந்த போர் வீரர்களும், விரஜத்தின் காடுகளில் திரிபவர்களுமான அவ்விரு சிறுவர்களும் என் தமக்கையின் மகன்களுமாவர், எனவே நான் அவர்களைக் காண விரும்புகிறேன்.(90) மன்னன் {கம்ஸன்} தன் விருப்பப்படி வில் விழாவைக் கொண்டாடப் போகிறான் என விரஜவாசிகளிடம் சொல்வீராக.(91) எனவே அவர்கள், இங்கே அழைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உணவிடத் தேவையான பால், தயிர் மற்றும் நெய் முதலியவற்றை அவர்களது இதயம் விரும்பும் அளவுக்கு எடுத்து வந்து, நகருடன் இணைந்திருக்கும் காட்டில் சுகமாக வாழட்டும்[6].(92,93)

[6] சித்திரசாலை பதிப்பில், "அவர்கள் அருகிலுள்ள காட்டில் வசதியாகத் தங்கட்டும். அழைக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எக்குறையுமின்றி அனைத்தும் வழங்கப்படட்டும். அவர்களுக்குப் பாலும், நெய்யும், தயிரும், மோரும் கொடுக்கப்படட்டும். அவர்கள் விரும்புவதெல்லாம் உணவுக்கான பொருட்களுடன் சேர்த்துக் கொடுக்கப்படும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அவர்கள் விரஜத்திலிருந்து இங்கே வந்து அருகில் அவர்கள் விரும்பிய இடத்தில் வசிக்கட்டும். அழைக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக அனைத்தும் வழங்கப்படும். பாயஸம், நெய், தயிர் மற்றும் பிற பால் பொருட்கள் கொடுக்கப்படட்டும். அவர்கள் விரும்பியபடி உணவுகள் அனைத்தும் கொடுக்கப்படட்டும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "பக்கத்திலுள்ள வனத்தில் அவர்கள் ஸுகமாக வஸிக்கட்டும். அங்கு அழைக்கப்பட்டவருக்குக் குறைவுற எல்லாம் இருக்கும். பால், நெய், தயிர், மோர் முதலியவை இஷ்டப்படி கொடுப்பதற்கும், உண்பொருள் சமைப்பதற்கும் குறைவற இருக்கும்" என்றிருக்கிறது.

ஓ! அக்ரூரரே, கிருஷ்ணனையும், ஸங்கர்ஷணனையும் காணும் ஆவலில் நான் நிறைந்திருக்கிறேன். விரைந்து சென்று அவர்களை இங்கே கொண்டு வந்து என் ஆணையை நீர் நிறைவேற்றுவீராக.(94) அவர்கள் இங்கே வந்துவிட்டால் நான் பரம மகிழ்ச்சியை அடைவேன். உயர்ந்த சக்தியைக் கொண்ட அந்த இரு சிறுவர்களையும் கண்டு, எனக்கு நன்மையை உண்டாக்கும் பணியில் நான் ஈடுபடுவேன்.(95) என் ஆணையின் பேரில் அவர்கள் இங்கே வரவில்லையென்றால் காலத்தில் நான் அவர்களை அடக்குவேன்.(96) ஓ! அக்ரூரரே, முதலில் அந்தச் சிறுவர்களிடம் இணக்கமான {சமரச} சொற்களைப் பயன்படுத்தவதே சிறந்தது. நீர் இனிய சொற்களுடன் அவர்களை இங்கே விரைவில் கொண்டு வருவீராக.(97) ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவரே, வஸுதேவனின் மூலம் நீர் என்னிடம் அந்நியமாகாமல் இருந்தால், எனக்கு இன்பத்தை உண்டாக்கும் இந்தப் பெரும்பணியை நிறைவேற்றுவீராக.(98) எதைச் செய்தால் அவர்கள் இங்கே வருவார்களோ அதைச் செய்வீராக" என்றான் {கம்ஸன்}.

வஸுவுக்கு ஒப்பான வஸுதேவன், இவ்வாறு நிந்திக்கப்பட்டாலும், பொறுமையுடன் ஒரு பெருங்கடலைப் போல அசைவற்றவனாக நின்றான்.(99) மூடனான கம்ஸனின் கணை போன்ற சொற்களால் தாக்கப்பட்டாலும், பொறுமையுடன் கூடிய அவன் மறுமொழியேதும் சொன்னானில்லை.(100) அந்த நேரத்தில் அவன் அவமதிக்கப்படுவதைக் கண்டவர்கள் அனைவரும் தங்கள் தலையைத் தொங்கச் செய்து, "ஓ! சீ, சீ" என்றனர்.(101) தயாளனான அக்ரூரன் தன் தெய்வீகப் பார்வையால் அனைத்தையும் அறிந்தான். எனவே அவன் தாகம் கொண்ட ஒருவன் தண்ணீரைக் கண்டதைப் போலப் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தான். மேலும் தாமரைக் கண்ணனான கிருஷ்ணனைக் காண்பதற்காக அவன் அந்தக் கணமே மதுராவை விட்டுப் புறப்பட்டான்" என்றார் {வைசம்பாயனர்}.(102,103)

விஷ்ணு பர்வம் பகுதி – 77 – 022ல் உள்ள சுலோகங்கள் : 103
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English