Saturday, 27 June 2020

அரிஷ்டனின் மரணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 76 – 021

(விருஷபாஸுரவதம்)

Death of Aristha | Vishnu-Parva-Chapter-74-019 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  மாட்டுத் தொழுவங்களில் இருந்தோரை அச்சுறுத்திய அசுரக் காளை; அரிஷ்டனின் அட்டகாசங்கள்; அரிஷ்டனைக் கொன்ற கிருஷ்ணன்...

Krishna killing Aristhasura

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஒரு நாள் இரவின் முதல் பகுதியில் கிருஷ்ணன் விளையாடிக் கொண்டிருந்தபோது {ராஸக்ரீடையில் ஈடுபட்டிருந்தபோது}, கரிய நிறம் கொண்டவனும், அரிஷ்டன் என்ற பெயரைக் கொண்டவனுமான தானவன் ஒருவன், காலனுக்கு ஒப்பான ஒரு மதங்கொண்ட காளையின் வடிவை ஏற்று, மாட்டுத் தொழுவங்களில் இருந்தோர் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தான்.(1) அவனது உடலானது அணைந்த தணலையும், மேகத்தையும் போன்றிருந்தது, அவனது கொம்புகள் கூர்மையாக இருந்தன, அவனது கண்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தன, அவனது கால்கள் கூரிய குளம்புகளுடன் கூடியவையாக இருந்தன, அவனது திமில் மிகக் கடினமானதாக இருந்தது.(2) அவன் மீண்டும் மீண்டும் தன் உதடுகளைத் தன் நாவால் நனைப்பவனாகவும், செருக்குடன் தன் வாலை அசைப்பவனாகவும் இருந்தான். பல அரண்மனைகளை நொறுக்கித் தள்ளும் அளவுக்கு அவனுடைய திமில் மிகக் கடினமானதாக இருந்தது.(3)

பேருடலைக் கொண்டதன் காரணமாக விரட்டி அடிக்கப்பட முடியாதவனாகவும், சாணம் மற்றும் சிறுநீரால் மறைக்கப்பட்ட உடலைக் கொண்டவனாகவும் இருந்த அந்தத் தானவன் {அரிஷ்டன்}, பருத்த இடுப்பையும், சதைப்பற்றுள்ள வாயையும், கடினமான முழங்கால்களையும், நீண்ட வயிற்றையும் கொண்டவனாக, கொம்புகள் மற்றும் தோல் தொங்கும் கழுத்துடன் கூடியவனாகப் பசுக்கள் அனைத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தான்.(4,5)

பேருடல் படைத்தவனும், பகை கொண்ட காளைகளைக் கொல்பவனும், பசுக்களுக்குத் தீங்கிழைப்பவனுமான அந்தத் தைத்தியன் அரிஷ்டன், பசுத் தொழுவங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் ஓடிக் கொண்டிருந்தான். அவனுடைய முகம் மரங்களில் தேய்த்த அடையாளங்களுடனும், அவனுடைய கொம்புகள் போருக்காக அலங்கரிக்கப்பட்டவையாகவும் இருந்தன.(6,7) {வயிற்றில்} கன்றுகளுடன் கனத்திருக்கும் பசுக்களை அணுகி, கருக்கலைப்பை ஏற்படுத்தியும், ஈன்ற பிறகு உடனே அவற்றை அறிந்தும் {புணர்ந்தும்} வந்தான்.(8) பயங்கரனும், அடக்கப்பட முடியாத காளைகளையும், பசுக்களையும் தன் கொம்புகளால் எப்போதும் தாக்கும் எண்ணம் கொண்டவனுமான அந்தத் தைத்தியனால் {அரிஷ்டனால்} போரிடாமல் மேய்ச்சல் நிலங்களில் இன்பமடைய முடியவில்லை.(9)

ஒரு நாள் வைவஸ்வானின் {யமனின்} ஆதிக்கத்தில் இருந்த அந்தச் செருக்குமிக்கக் காளையானவன் தற்செயலாகக் கேசவனின் {கிருஷ்ணனின்} முன்பு வந்தான்.(10) செருக்குமிகுந்தவனான அவன் {காளையான அரிஷ்டன்}, காளைகள், கன்றுகள் மற்றும் இளங்காளைகளின் தொழுவங்களை அழித்து, பசுக்களைத் தாக்கிக் கொண்டிருந்தான்.(11) அந்த நேரத்தில், வைவஸ்வானின் ஆதிக்கத்தில் இருந்த அந்தத் தீய ஆன்மா, இந்திரனின் வஜ்ரத்துடன் கூடிய மேகத்தைப் போல முழங்கியபடி கிருஷ்ணனின் அருகில் இருந்த பசுக்களை அச்சுறுத்தினான்.(12) அப்போது கோவிந்தன் தன் உள்ளங்கைகளைத் தட்டி சிங்க முழக்கம் செய்து, காளையின் வடிவில் இருந்த அந்தத் தைத்தியனின் கோபத்தை அதிகரிக்கச் செய்து அவனை நோக்கி ஓடினான். அந்தக் காளையானவன் {அரிஷ்டன்}, கிருஷ்ணனைக் கண்டும், அவன் உள்ளங்கையால் தன் தோள்களில் தட்டி எழுப்பிய ஒலியைக் கேட்டும் சினமடைந்தவனாகத் தன் வாலை அசைத்துக் கொண்டும், மகிழ்ச்சியுடன் தன் விழிகளை விரித்தும், போரிடும் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் எக்காளமிட்டான்.(13,14)

காளையின் வடிவில் இருந்த அந்தத் தீய அசுரன் ஓடி வருவதைக் கண்ட கிருஷ்ணன் தான் நின்ற இடத்தில் இருந்து அசையாமல் மலையென உறுதியாக நின்றான்.(15) அந்தக் காளையானவனும், கிருஷ்ணனைக் கொல்லும் நோக்கில் தன் முகத்தை உயர்த்தி, அவனுடைய வயிற்றை இலக்காக வைத்து அங்கே விரைந்து வந்தான்.(16) காளைக்கு ஒப்பான வாஸுதேவன், தடுக்கப்பட முடியாதவனும், அஞ்சனம் போன்றவனும், தன் முன் நிற்பவனுமான அந்தக் காளையனை எதிர்த்தான்.(17) ஒரு காளை மற்றொரு பெரிய காளையை எதிர்ப்பதைப் போலவே அரிஷ்டன் கிருஷ்ணனைச் சந்தித்தான், அவனது மூக்கிலிருந்து ஒலியோடு கூடிய நுரை வெளியே வந்தது.(18)

அதன்பிறகு, மழைக்காலத்தில் ஒன்றையொன்று தீண்டிக் கொண்டிருக்கும் இரு மேகங்களைப் போலக் கிருஷ்ணனும், அந்தக் காளையனும் ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(19) கிருஷ்ணன், தன் காலை கொம்புகளுக்கிடையில் வைத்து அவனது செருக்கை அடக்கி, வானத்துக்கு ஒப்பான அவனது கழுத்தைத் தாக்கினான்.(20) பிறகு அவன் {கிருஷ்ணன்}, யமதண்டத்திற்கு ஒப்பான அவனது இடது கொம்பைப் பிடுங்கி, அதைக் கொண்டே அவனது முகத்தைத் தாக்கினான்; அதன்பேரில் காளைகளில் முதன்மையான அவன் {அரிஷ்டன்} தன் இறுதி மூச்சை சுவாசித்தான்.(21) அந்தத் தைத்தியன் தன் கொம்புகள், தலை மற்றும் தோள்கள் சிதறி, மழையைப் பொழியும் மேகத்தைப் போலக் குருதியைக் கக்கிக் கீழே விழுந்தான்.(22)

அதன்பிறகு, காளையின் வடிவில் இருந்த அந்தச் செருக்குமிக்கத் தானவன் {அரிஷ்டன்}, கோவிந்தனால் கொல்லப்பட்டதைக் கண்ட மக்கள், "நன்று செய்தாய், நன்று செய்தாய்" என்று சொல்லி அவனைத் துதிக்கத் தொடங்கினர்.(23) தாமரைக் கண்ணனான உபேந்திரன் {கிருஷ்ணன்}, அந்த நிலவொளியில் அந்த அசுரக்காளையைக் கொன்று, மீண்டும் விளையாட்டில் {ராஸக்ரீடையில்} ஈடுபட்டான்.(24) தேவலோகத்தில் தங்கள் மன்னனை {இந்திரனைத்} துதிக்கும் தேவர்களைப் போலவே கோபர்களும் தாமரைக் கண்ணனான கிருஷ்ணனை மகிழ்ச்சியுடன் வழிபடத் தொடங்கினர்" என்றார் {வைசம்பாயனர்}.(25) 

விஷ்ணு பர்வம் பகுதி – 76 – 021ல் உள்ள சுலோகங்கள் : 25
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English