Thursday, 25 June 2020

கிருஷ்ணனைத் துதித்த இந்திரன் | விஷ்ணு பர்வம் பகுதி – 74 – 019

(கோவிந்தாபிஷேகம்)

Indra comes and eulogises Krishna | Vishnu-Parva-Chapter-74-019 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனைத் துதித்த இந்திரன்; கிருஷ்ணனுக்கு கோவிந்தப் பட்டம் கொடுத்தது; அர்ஜுனனை அருகில் இருந்து காக்குமாறு கிருஷ்ணனை வேண்டிக்கொண்ட இந்திரன்; கிருஷ்ணன் அளித்த உறுதிமொழி...

<
Indra worships Lord Krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களின் மன்னனான புரந்தரன் {இந்திரன்}, இவ்வாறு கோவர்த்தன மலை உயர்த்தப்பட்டதையும், பசுக்கள் காப்பாற்றப்பட்டதையும் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்து கிருஷ்ணனைக் காண விரும்பினான்.(1) அவன், பெருகி வழியும் மதநீருடன் கூடியதும், நீரற்ற ஒரு மேகத்திற்கு ஒப்பானதுமான தன் யானை ஐராவதத்தின் மேல் அமர்ந்து கொண்டு பூமிக்கு வந்தான்.(2) களைப்பில்லாமல் செயல்புரிபவனான கிருஷ்ணன் கோவர்த்தன மலையின் அடியில் அமர்ந்திருப்பதைப் புரந்தரன் கண்டான்.(3) அழிவற்றவனான விஷ்ணு, ஓர் இடையனின் வடிவை ஏற்றுப் பெரும் பிரகாசத்துடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.(4) பல கண்களைக் கொண்டவனான சக்ரன் {இந்திரன்}, ஸ்ரீவத்ஸமெனும் மாயக்குறியையும், நீலோத்பலத்திற்கு ஒப்பான வண்ணத்தையும் கொண்ட கிருஷ்ணனைத் தன் கண்கள் அனைத்தாலும் கண்டான்.(5) சக்ரன், அழகைக் கொடையாகக் கொண்டவனும், மனிதர்களின் நிலத்தில் {உலகத்தில்} தேவனைப் போன்றவனுமான அவன் மலையின் அடிவாரத்தில் மகிழ்ச்சியாக அமர்ந்திருப்பதைக் கண்டு நாணமடைந்தான்[1].(6)

[1] சித்திரசாலை பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கோவர்த்தன மலையின் பாறை மீது அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில், "பாறை மீது சுகமாக அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கோவர்த்தனத்தின் அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில், "பாறையின் மீது அமர்ந்திருந்த கிருஷ்ணனைக் கண்டான்" என்றும் இருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், 3ம் ஸ்லோகத்தில், "கிருஷ்ணன் கோவர்த்தன மலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்" என்றும், 6ம் ஸ்லோகத்தில் "மலை முதுகில் பூமியின் தேவன் போன்று பெருமையுடன் வீற்றிருக்கும் கிருஷ்ணனைப் பார்த்தான்" என்றும் இருக்கிறது.

காட்சியில் இருந்து மறைந்திருந்தவனும், பாம்புகளை உண்பவனுமான பறவைகளில் முதன்மையானவன் (கருடன்), சுகமாக அமர்ந்திருக்கும் அவனை {கிருஷ்ணனைத்} தன் சிறகுகளைக் கொண்டு சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருந்தான்.(7) பலனைக் கொன்றவனான இந்திரன், தன் யானையை விட்டுவிட்டு, மனிதச் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தவனான கிருஷ்ணனை அணுகினான்.(8) சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், மின்னலைப் போன்று மின்னுவதுமான மகுடத்தாலும், தெய்வீகமான இரண்டு காது குண்டலங்களாலும் அவனுடைய முகம் பளபளத்தது.(9) உடல் ஆபரணமான பத்மகாந்தத்தின் ஐந்து அடுக்குகளைக் கொண்ட ஆரத்தால் அவனது மார்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. சக்திவாய்ந்தவனும், வஜ்ரபாணியுமான வாசவன் {இந்திரன்}, தன் ஆயிரம் கண்களாலும் வாசுதேவனைக் கண்டு, அந்த உபேந்திரனை {கிருஷ்ணனை} அணுகி தெய்வீக மாலைகளாலும், குழம்புகளாலும் பேரழகுடன் தெரிந்தான்.(10,11)

அவன் {இந்திரன்}, மேக முழக்கம் போல ஆழமானதும், தேவர்களுக்கு எப்போதும் ஆணையிடுவதுமான தன் இனிய குரலில்,(12) "ஓ! கிருஷ்ணா, ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவனே, ஓ! உற்றாரின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, உன் பசுக்களிடம் நிறைவடைந்தவனாக நீ செய்த செயல்கள் தேவர்களின் சக்திக்கும் அப்பாற்பட்டவையாகும்.(13) உலகிற்கு அழிவைக் கொண்டு வர என்னால் உண்டாக்கப்பட்ட மேகங்களிடம் இருந்து நீ பசுக்களைப் பாதுகாத்ததில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.(14) வானில் உள்ள வீட்டைப் போல உன் யோக சக்தியால் இந்தச் சிறந்த மலையை நீ உயர்த்தியதைக் கண்டு யாருடைய மனம்தான் ஆச்சரியமடையாது?(15) ஓ! கிருஷ்ணா, என் வேள்வியை நிறுத்தியதால் நான் கோபமடைந்தேன். எனவேதான் ஏழு இரவுகளுக்கு நீண்டதும், பசுக்களுக்கு அழிவை ஏற்படுத்துவதும், தேவர்கள் மற்றும் தானவர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாததுமான இந்தப் பெரிய மழையைப் பொழியச் செய்தேன். ஆனால் என் முன்னிலையிலேயே இந்தப் பயங்கர மழையை உன் சக்தியால் நீ தடுத்துவிட்டாய்.(16,17) ஓ! கிருஷ்ணா, கோபமடைந்த நீ உன் மனித வடிவத்திற்குள் முழு வைஷ்ணவ சக்தியையும் குடியேற்றியதில் நான் பெரிதும் நிறைவடைந்திருக்கிறேன்.(18)

மனித வடிவில் இருந்தாலும் நீ உன் சக்தியுடன் கூடியவனாகவே இருப்பதால் தேவர்களின் பணி நல்லபடியாக முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது.(19) ஓ! வீரா, தேவர்களின் பணிகளுக்குத் தலைவனாகவும், அவர்களின் வழிகாட்டியாகவும் நீ இருப்பதால், அனைத்தும் நிறைவடையும், செய்யப்படாமல் எதுவும் விடுபடாது.(20) தேவர்களிலும், பிற உலகங்கள் அனைத்திலும் நீயே நித்தியமானாவன். உன்னால் தாங்கப்படும் கனத்தைச் சுமக்கவல்ல இரண்டாமவன் எவனையும் நான் காணவில்லை.(21) ஓ! பறவையை வாகனமாகக் கொண்டவனே, சிறந்த சக்கரமானது ஒரு துருவத்தின் முன் வைக்கப்படுவதைப் போலவே துன்பக் கடலில் மூழ்கியிருக்கும் தேவர்களைத் துயரில் இருந்து விடுவிப்பதில் நீ ஈடுபடுகிறாய்[2].(22) ஓ! கிருஷ்ணா, உலோகங்களில் பொன்னைப் போலவே, பெரும்பாட்டனால் (பிரம்மனால்) படைக்கப்பட்ட இந்த அண்டமும் உன் உடலில் இருக்கிறது.(23) வேகமாக ஓடுபவனை ஒரு முடவனால் பின்தொடர முடியாததைப் போலவே, சுயம்புவான தலைவனாலும் (பிரம்மனாலும்) புத்தியினாலோ, வயதினாலோ உன்னைப் பின்தொடர {புரிந்து கொள்ள} முடியாது.(24)

[2] சித்திரசாலை பதிப்பில், "கனமான சுமைகளை இழுக்க அவற்றின் முன்னே காளைகளைப் பூட்டுவதைப் போல, துயரில் இருக்கும் தேவர்கள் (தங்களைக் காப்பதற்காக) பறவையை (கருடனை) வாகனமாகக் கொண்ட உன்னை அவர்களின் முன் நிறுத்திக் கொள்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கடுஞ்சுமை இருக்கும்போது, சிறந்த காளைகள் பூட்டப்படுகின்றன. ஓ! பறவையை வாகனமாகக் கொண்டவனே, அதே போலவே தேவர்களும் உன்னைத் தங்கள் புகலிடமாகக் கொள்கின்றனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உயர்ந்த காளை பொறுப்பேற்பதில் முதல் ஸ்தானத்தில் செலுத்தப்படுகிறது. அது போல் கருட வாகனனாகிய நீர் துன்பத்தில் மூழ்கிய தேவர்களுக்கு இருக்கிறீர்" என்றிருக்கிறது.

மலைகளில் இமயத்தைப் போலவும், நீர்ப்பரப்புகளில் பெருங்கடலைப் போலவும், பறவைகளில் கருடனைப் போலவும் தேவர்களில் நீ முதன்மையானவனாக இருக்கிறாய்.(25) ஓ! கிருஷ்ணா, இதற்கெல்லாம் அடியில் நீருலகம் இருக்கிறது; அதற்குமேலே பூமியின் தூண்கள் {மலைகள்} மிதக்கின்றன; அவற்றுக்கும் மேலே மனிதர்களின் உலகம் இருக்கிறது;(26) அதற்கும் மேலே வானுலகம் இருக்கிறது; அதற்கும் மேலே சொர்க்கத்தின் வாயிலாக அமைந்திருக்கும் பிரகாசமான சூரியலோகம் இருக்கிறது;(27) அதற்கும் மேலே தேவர்களின் வசிப்பிடமாக அமைந்திருக்கும் தேவர்களின் பேருலகம் இருக்கிறது. அங்கே நான் தேவர்களின் மன்னன் என்ற நிலையை அடைந்திருக்கிறேன்;(28) அதற்கும் மேலே பிரம்மவாதிகள் வாழ்வதும், உயரான்ம சோமனும் (சந்திரனும்), கோள்கள் பிறவும் திரிவதுமான பிரம்மலோகம் இருக்கிறது.(29) அதற்கும் மேலே உள்ள பேராகாயப் பகுதியில் கோலோகம் அமைந்திருக்கிறது. ஓ! கிருஷ்ணா, உலகங்கள் அனைத்திலும் முதன்மையான கோலோகம் சாத்யர்களால் பாதுகாக்கப்படுகிறது.(30) பெரும்பாட்டனிடம் கேட்டும் எங்களால் அறிய முடியாத தவத்தைச் செய்து கொண்டு நீ அங்கே வாழ்ந்து வருகிறாய்.(31)

இந்தப் பூமியானது, செயல்களில் ஈடுபடுவோருக்கான செயலுலகம் ஆகும். அதன் அடியில் கொடியவர்களுக்கான பயங்கர உலகம் இருக்கிறது.(32) வானுலகம் காற்று போன்ற அசையும் பொருட்களின் புகலிடமாக இருக்கிறது. சொர்க்கமானது, தற்கட்டுப்பாடு, பொறுமை என்ற குணங்களுடன் கூடிய நல்லோரின் சிறந்த புகலிடமாக இருக்கிறது.(33) பிரம்மனை வழிபடுபவர்கள் பிரம்மலோகத்தில் வாழ்கின்றனர். பசுக்கள் மட்டுமே கோலோகத்தை அடைகின்றன; கடுந்தவங்களைச் செய்தாலும் கூட எவராலும் அதை {கோலோகத்தை} அடைய முடியாது.(34) ஓ! வீரனும், நுண்ணறிவுமிக்கவனுமான கிருஷ்ணா, இந்தப் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவே நீ கோவர்த்தன மலையைத் தூக்கி என்னால் அனுப்பப்பட்ட பேரிடர்களைத் தடுத்தாய்.(35) எனவே, பெரும்பாட்டன் மற்றும் பசுகளின் வேண்டுகோளின்படியும், உன்னிடம் கொண்ட மதிப்பினாலும் நான் இங்கே வந்தேன்.(36) ஓ! கிருஷ்ணா, நான் பூதங்கள்[3] மற்றும் தேவர்களின் தலைவனாவேன், நான் புரந்தரனாவேன் {இந்திரனாவேன்}. நான் {முற்காலத்தில்} அதிதிக்குப் பிறந்த உன் அண்ணனாவேன்.(37) உன் சக்தியின் விளைவான மேகங்களின் வடிவில் என் சக்தியை நான் வெளிக்காட்டியதற்கு என்னை நீ மன்னிப்பாயாக.(38)

[3] "ஒரு குறிப்பிட்ட வகையைச் சார்ந்த சிறுதெய்வங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "நான் உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், தேவர்களின் மன்னனுமான புரந்தரன் ஆவேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் உயிரினங்கள் அனைத்தின் தலைவன். நான் தேவர்களின் மன்னனான புரந்தரன்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "நான் ஜீவராசிக்குத் தலைவன், தேவர்க்குத் தலைவன் இந்திரன்" என்றிருக்கிறது.

ஓ! யானையின் நடையைக் கொண்ட கிருஷ்ணா, இப்போது உன் மென்மையான சக்தியில் மகிழ்ந்திருந்து {பொறுமையுடன்}, பிரம்மன் மற்றும் பசுக்கள் சொல்லி அனுப்பிய சொற்களைக் கேட்பாயாக.(39) உன்னுடைய தெய்வீகச் செயல்களிலும், தங்கள் மகிமைகளைப் பாடுவதிலும், {உன்னுடைய} பாதுகாப்புப் பணியிலும் நிறைவடைந்திருக்கும் தலைவன் பிரம்மனும், வானத்தின் {தெய்வீகப்} பசுக்களும் இதை உனக்குச் சொல்லி அனுப்பியிருக்கின்றனர்.(40) {அவர்கள் சொன்னது}, "பெரும் கோலோகமும், பசுக்கள் அனைத்தும் உன்னால் பாதுகாக்கப்பட்டதால், காளைகளின் மூலம் எங்கள் குலம் தன்னாலேயே பெருகும்.(41) விரும்பியபடி திரியும் நாங்கள் அனைவரும் சுமை விலங்குகளான காளைகளால் உழவர்களையும், ஹவிஸ் படையல்களால் தேவர்களையும், ஏராளமான பெரும் தானியங்களால் ஸ்ரீயையும் {லட்சுமியையும்} நிறைவடைச் செய்கிறோம்.(42) ஓ! தலைவா, ஓ! பெரும்பலம் கொண்டவனே, நீயே எங்களின் ஆசானும், மீட்பனுமாவாய்" {என்றனர்}.(43) நீயே எங்களின் மன்னனும் தலைவனுமாகி, என்னால் கொண்டுவரப்பட்டிருக்கும் பொற்குடுவை நிறைந்த தெய்வீக நீரைக் கொண்டு இன்றே என் கைகளால் தெளித்துக் கொள்வாயாக {அபிஷேகம் செய்து கொள்வாயாக}.(44)

நான் தேவர்களின் மன்னனாவேன், நீ நித்தியமானவனாக இருந்தாலும் இப்போது பசுக்களின் மன்னனாக இருக்கிறாய். எனவே, இவ்வுலகின் மக்கள் உன்னைக் கோவிந்தன் எனப் பாடுவார்கள்.(45) இந்திரன் என்ற உயர்நிலை எனக்கு அளிக்கப்பட்டதால், நீ பசுக்களின் மன்னன் {என்ற உயர்ந்த நிலையில்} இருக்கிறாய். ஓ! கிருஷ்ணா, தேவர்கள் உன்னை உபேந்திரன் என்ற பெயரில் கொண்டாடுவார்கள்[4].(46) நான்கு மாதங்களைக் கொண்ட என் மழைக்காலத்தில், கூதிர் {சரத்} காலமாக அமையும் பிற்பாதியை {இரண்டு மாதங்களை} நான் உனக்கு அளிக்கிறேன்.(47) இன்றிலிருந்து மக்கள் முதல் இரண்டு மாதங்களை என்னுடையவையாகக் கருதுவார்கள். மழை நின்ற பிறகு, அவர்கள் என் கொடியை அகற்றுவார்கள், நீ துதிகளை ஏற்பாய். உற்சாகமிழந்து, எப்போதாவது அகவும் மயில்கள், என் மேகங்களின் மூலம் அடைந்த செருக்கைக் கைவிடும். என் காலத்தில், மேகங்களைக் கண்டு இனிய ஒலிகளை வெளியிடும் பிற விலங்குகள் அனைத்தும் அமைதியடையும்.(48,49)

[4] சித்திரசாலை பதிப்பில், "நான் தேவர்களின் இந்திரனாக இருக்கிறேன். நீ பசுக்களின் மன்னனாக இருப்பாயாக. பூமியின் பரப்பில் உள்ள மொத்த மக்களும் இன்றிலிருந்து நித்தியமாக உன்னை கோவிந்தனாகத் துதிப்பார்கள்.(45) கிருஷ்ணா, பசுக்கள் எனக்கும் மேல் உன்னையே தங்கள் இந்திரனாக நிறுவியுள்ளன. சொற்க்கத்தில் தேவர்கள் உன்னை உபேந்திரனாகத் துதித்துப் பாடுவார்கள்.(46)" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "44. நான் தேவர்களுக்கு இந்த்ரன் அல்லவா, நீர் பசுக்களுக்கு இந்த்ரனாயிருக்கும் தன்மையை அடைந்துள்ளீர். உலகில் ஜனங்கள் உம்மை கோவிந்தன் என்று என்றென்றும் துதிப்பார்கள். 45. அடியேனுக்கு மேல் இந்த்ரனாக நீர் பசுக்களால் தலைவராக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆக ஸ்வர்க்கத்தில் தேவதைகள் உம்மை உபேந்த்ரன் என்று கானம் செய்வார்கள்" என்றிருக்கிறது. மேற்கண்ட இந்த உரைகளே கிருஷ்ணனின் பரத்துவத்தை விளக்கிக் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

கனோபசு {அகஸ்திய நட்சத்திரம்} என்ற நட்சத்திரத்தின் ஆட்சியாளரான அகஸ்தியர், தென் பகுதியில் ஒரு பறவையைப் போலத் திரிவார், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் தன் பிரகாசத்தால் அனைவரையும் சங்கடப்படுத்துவான்.(50) இவ்வாறு கூதிர் காலம் தொடங்கியதும், மயில்கள் அமைதியடையும், பறவைகள் நீரைத் தேடிச் செல்லும், தவளைகள் குதிப்பதை நிறுத்தும்,(51) ஆறுகளின் விளிம்புகள் இனிய ஒலிகளை வெளியிடும் அன்னங்கள், ஸாரஸங்கள் மற்றும் கிரௌஞ்சங்களால் நிறைந்திருக்கும், காளைகள் உற்சாகமாகும்,(52) பசுக்கள் நிறைவடைந்து ஏராளமான பாலைத் தரும், மேகங்கள் பூமியை நீரால் நிறைத்த பிறகு மறையும்,(53) கொக்குகள் கரிய வானில் திரியும், காட்சிக்கு இனிய தடாகங்கள், குளங்கள், ஆறுகள் ஆகியன தெளிந்த நீராலும், புதிதாய் முளைத்த தாமரைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும், கருநீல வயல்கள் தானியங்களால் நிறைந்திருக்கும், ஆறுகள் தங்களுக்கு நடுவில்[5] நீர்ப்பாய்ச்சலைக் கொண்டிருக்கும், முனிவர்களின் ஆசிரமங்கள் தானியங்களால் நிறைந்து அழகாக இருக்கும், பல மாகாணங்கள் நிறைந்த பூமி, மழைக்குப் பிறகு பேரெழிலுடன் திகழ்வாள், மரங்கள் கனிகளால் மறைக்கப்பட்டிருக்கும், வீதிகள் அழகாக இருக்கும், நாடு கரும்புகளால் நிறைந்திருக்கும், வாஜபேயமும், பிற வேள்விகளும் நடைபெறும். அப்போது நீ உன் படுக்கையில் இருந்து எழுவாய். இவ்வுலகின் மனிதர்களும், தேவலோகத்தின் தேவர்களும் பூமியின் கொடிக்கம்பங்களில் என்னை மஹேந்திரனாகவும், உன்னை உபேந்திரனாகவும் வழிபடுவார்கள்.(54-59) மஹேந்திரன் மற்றும் உபேந்திரன் என்ற மகத்தான, நித்தியமான கருப்பொருளை ஓதி நம்மை வணங்கும் மனிதன் எந்தத் துயரத்திற்கும் ஆளாகமாட்டான்" என்றான் {இந்திரன்}.(60)

[5] "அதாவது நீரானது மழைக்காலத்தில் நேர்வதைப் போலக் கரைகளைக் கடந்து பாயாது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அதன்பிறகு யோகத்தை அறிந்தவனான தேவர்களின் மன்னன் {இந்திரன்}, தெய்வீக நீர் நிறைந்த அந்தக் குடுவையை எடுத்து {அதிலிருந்த நீரைக் கொண்டு} கோவிந்தன் மீது தெளித்தான் {அவனுக்கு அபிஷேகம் செய்து வைத்தான்}.(61) தேவலோகத்தில் இருந்தவையும், காளைகளுடன் கூடியவையுமான பசுக்கள், இவ்வாறு கிருஷ்ணன் நீராட்டப்படுவதை {கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதைக்} கண்டு, மேகங்களின் மூலமாகத் தங்கள் பாலைப் பொழிந்தன.(62) வானில் இருந்த தெளிந்த மேகங்கள் அவன் மீது அந்த அமுத மழையைப் பொழிந்தன. வானில் இருந்து உரக்க முழங்கிய தேவர்கள் மலர் மாரியைப் பொழிந்து எக்காளம் இசைத்தனர்.(63,64) எப்போதும் மந்திரங்களையே பின்தொடரும் {பாடும்} மஹரிஷிகள், நலம்பயக்கும் ஸ்லோகங்களில் அவனது மகிமைகளைப் பாடினர், பூமியின் உடலானது பரந்து விரிந்திருக்கும் பெருங்கடலில் இருந்து பிரிக்கப்பட்டது[6].(65) உலகிற்கு நன்மை நேர்வதால் கடல்கள் மகிழ்ச்சியடைந்தன, காற்று வீசத் தொடங்கியது. விண்மீன்களுடன் கூடிய சூரியனும் சந்திரனும் தங்களுக்குரிய வீதிகளில் நின்றன.(66) மன்னர்கள் தங்கள் பகைவரிடம் இருந்து விடுபட்டனர், பெருமழையினால் ஏற்பட்ட துன்பம் தணிக்கப்பட்டது. மரங்கள் இலைகளுடனும், பல்வேறு வண்ணங்களின் சக்தியுடனும் பளபளத்தன. காட்டில் மான்கள் இன்புற்றன, யானைகள் மதம்பெருக்கின, மலைகள் தங்களில் முளைத்த மரங்கள் மற்றும் உலோகங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(67,68)

[6] சித்திரசாலை பதிப்பில், "பூமியானது, ஏகார்ணவக் கடலில் இருந்து வெளிப்பட்டுத் தன் வடிவத்தை அடைந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பூமியானது, ஒரே பெருங்கடல் என்ற வடிவில் இருந்து விடுபட்டு தன் வடிவை ஏற்றது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "பூமி ப்ரளய ஸமுத்ரங்கள் தெளிந்திருந்தன" என்றிருக்கிறது.

தேவலோகத்தைப் போலவே மனிதர்களின் உலகமும், அமுதம் போன்ற சாற்றால் நிறைவடைந்தது. தேவலோகத்தில் இருந்து பொழிந்த அமுத மழையின் துணையுடன் தலைவன் கிருஷ்ணனின் அரச நீராட்டு விழா நிறைவடைந்த போது,(69) தெய்வீக மலர்மாலைகளைச் சூடியவனும், பசுக்களின் அரசுரிமையில் நிறுவப்பட்டவனும், நித்தியனுமான கோவிந்தனிடம் தேவர்களின் மன்னனான புரந்தரன் {இந்திரன்},(70) "ஓ! கிருஷ்ணா, பசுக்களின் மன்னனாக {கோவிந்தனாக} உன்னை நிறுவியதில் இப்போது என் முதல் பணி நிறைவடைந்தது. நான் இங்கே வந்ததற்கான அடுத்த நோக்கத்தை இப்போது கேட்பாயாக.(71) கம்ஸன், குதிரைகளில் இழிந்த கேசி, எப்போதும் மதங்கொண்டவனான அரிஷ்டன் ஆகியோரை விரைவாகக் கொன்று உன் அரசை ஆள்வதில் நீ ஈடுபடுவாயாக.(72) என் சக்தியின் ஒரு பகுதியானவன், அர்ஜுனன் என்ற பெயரில் உன் அத்தையின் {உன் தந்தை வஸுதேவனின் அக்காளான குந்தியின்} மகனாகப் பிறந்திருக்கிறான்.(73) நீ அவனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அவனும் உன்னுடைய ஆலோசனையின் பேரில் செயல்பட்டு, உன்னைப் பின்பற்றிப் பெரும்புகழை அடைவான்.(74) பரதனின் வழித்தோன்றல்களில் அவன் முதன்மையான வில்லாளியாகவும், உன்னைப் பின்தொடர்பவனாகவும் இருப்பான். உன் உதவி இல்லாமல் தனியாக அவன் ஒருபோதும் தன் பணியில் நிறைவடைய மாட்டான்.(75) எதிர்காலத்தில் நேரப்போகும் பாரதப் போர்[6] அவனையும், மனிதர்களில் முதன்மையான உன்னையும் சார்ந்தே இருக்கிறது. நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் மன்னர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்.(76)

[7] "உலகின் மன்னர்கள் அனைவரும் பங்கேற்ற குருக்ஷேத்திரப் போரை இது குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! கிருஷ்ணா, குந்தியிடம் நான் பெற்ற மகன் {அர்ஜுனன்} ஆயுதப் பயன்பாட்டில் திறன்பெற்றவனாகவும், வில்லாளிகளில் முதன்மையானவனாகவும், குருக்களில் பெரியவனாகவும் இருக்க வேண்டுமென நான் தேவர்களிடமும், ரிஷிகளிடமும் சொல்லியிருக்கிறேன். போர்வீரர்களான மன்னர்கள் அனைவரும் அவனுடைய கல்வியைக் குறித்துப் பேசுவார்கள்.(77,78) எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றும் அவன் {அர்ஜுனன்} மட்டுமே போரில் திறன் பெற்ற மன்னர்களின் ஓர் அக்ஷௌஹிணியைக் கொல்லவல்லவனாக இருப்பான்.(79) ஓ! தலைவா, உன்னைத் தவிர வேறு மன்னர்களாலோ, தேவர்களாலோ அவனது வில்லின் சக்தியை பலவீனப்படுத்தவும், அவனது ஆயுதங்களின் பாதையைப் பின்பற்றவும் முடியாது.(80) ஓ! கோவிந்தா, அவன் உனக்கு நண்பனாக இருந்து போரில் துணை புரிவான். எனவே, என் வேண்டுகோளின்படி அவனுக்கு ஆன்ம அறிவைப் போதிப்பாயாக.(81) நீ அர்ஜுனனையும், உலகங்கள் அனைத்தையும் நன்கறிவாய். எனவே, நீ எப்போதும் என்னைப் போலவே அவனைக் கருதி கவனித்துக் கொள்வாயாக.(82) பெரும்போரில் நீ அவனைப் பாதுகாத்தால் மரணத்தால் {மிருத்யுவால்} அவனிடம் ஆதிக்கம் செலுத்த இயலாது.(83) ஓ! கிருஷ்ணா, அர்ஜுனனை நானாகவும், என்னை நீயாகவும் அறிவாயாக. நான் உன்னோடு ஒன்றாயிருப்பதைப் போலவே அர்ஜுனனும் ஒன்றாயிருப்பான்.(84)

நான் உன் அண்ணன் என்பதால், பழங்காலத்தில் உன் மூன்று காலடிகளைக் கொண்டு பலியிடமிருந்து மூவுலகங்களையும் அடைந்து தேவர்களின் அரசுரிமையில் என்னை நீ நிறுவினாய்.(85) வாய்மையை விரும்புபவனாகவும், வாய்மையையே ஆற்றலாகக் கொண்டவனாகவும், வாய்மையே ஆகவும் உன்னை நான் அறிவேன். தேவர்களுக்களித்த ஓர் உறுதிமொழியில் நீ அவர்களுக்குக் கட்டுப்பட்டிருப்பதால், தங்கள் பகைவரை அழிக்கும் இந்தப் பணியில் அவர்கள் {தேவர்கள்} உன்னை ஈடுபடுத்தியுள்ளனர்.(86) ஓ! கிருஷ்ணா, உன் அத்தையின் மகனான அர்ஜுனன் என் மகனாவான். பழங்காலத்தில் அவன் உன் தோழனாக இருந்ததைப் போலவே[8], இப்போதும் உன்னுடன் நட்பு கொள்வான்.(87) ஓ! மாதவா, அவன் தன் வீட்டிலோ, உன் வீட்டிலோ, பகைவரிடம் போரிடும் போர்க்களத்திலோ இருக்கும்போது நீ சுமையைச் சுமக்கும் ஒரு காளையைப் போலவே எப்போதும் அவனைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.(88) காரியங்களின் உண்மை நோக்கத்தை எப்போதும் நோற்கும் உன்னால் கம்ஸன் கொல்லப்படும்போது, மன்னர்களுக்கிடையே ஒரு பெரும்போர் நடைபெறும்.(89) அர்ஜுனன், மீமானிடச் செயல்களைச் செய்பவர்களான வீர மனிதர்களை வெல்வான், நீ மகிமையால் அவனை அலங்கரிப்பாய்.(90) ஓ! கேசவா, வாய்மையையும், என்னையும், தேவர்களையும் உனக்குப் பிடித்திருந்தால், நான் சொன்னவை அனைத்தையும் நீ செய்ய வேண்டும்" என்றான் {இந்திரன்}.(91)

[8] "விஷ்ணு நாராயணனின் வடிவை ஏற்றபோது, அர்ஜுனன் அவனுடைய தோழனான நரனாக இருந்தான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

கோபாலனாக இருந்த கிருஷ்ணன், சக்ரனின் {இந்திரனின்} இந்தச் சொற்களைக் கேட்டு, மனத்தில் மகிழ்ச்சியுடன், "ஓ! சச்சியின் தலைவா, உன்னைக் கண்டதில் நான் மகிழ்கிறேன். நீ சொன்னவற்றில் எதுவும் விடுபடாது.(93) ஓ! சக்ரா, நான் உன் இதயத்தை அறிவேன். என் அத்தை {என் தந்தையின் தமக்கை} உயர் ஆன்மப் பாண்டுவுக்கு {திருமணம் செய்து} கொடுக்கப்பட்டாள் என்பதும், அவள் அர்ஜுனனைப் பெற்றிருக்கிறாள் என்பதும் நான் அறியாதவையல்ல.(94) தர்மனால் {யமனால்} பெறப்பட்ட இளவரசர் யுதிஷ்டிரரையும் நான் அறிவேன். வாயுவின் குலத்தைப் பெருக்கவல்ல பீமசேனரையும் நான் அறிவேன். மாத்ரியிடம் அஸ்வினி இரெட்டையர்களால் பெறப்பட்ட நகுலனையும், சகாதேவனையும் நான் அறிவேன்[9].(95,96) என் அத்தையின் {குந்தியின்} கன்னிப் பருவத்தில் சூரியனால் பெறப்பட்டவனும், தேரோட்டியின் மகனாக இப்போது அறியப்படுபவனுமான கர்ணனையும் நான் அறிவேன்[10].(97)

[9] "இந்த மகன்கள் அனைவரும் பிறந்த விரிவான கதையை அறிய மஹாபாரதம் ஆதிபர்வம் அத்யாயம் 123-ஐ காணவும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

[10] "குந்தி, கன்னிப்பெண்ணாக இருந்த போது, அவள் எவனைத் துணைவனாக விரும்பினாலும் அவன் உடனே அவளிடம் வருவான் என்ற வரத்தை துர்வாச முனிவரிடம் இருந்து பெற்றாள். இதைச் சோதித்துப் பார்க்க அவள் சூரியனை இருப்புக்கு அழைத்தாள், அவனுடனான கலவியால் கர்ணன் பிறந்தான். அவனுடைய பிறப்பு மஹாபாரதம் ஆதிபர்வம் அத்யாயம் 111ல் இருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

பாண்டு, இடிபோன்ற சாபத்தால் மரணம் அடைந்தார்[11] என்பதையும், திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் விருப்பமுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்.(98) ஓ! தேவர்களின் மன்னா, இப்போது நீ தேவர்களின் தலைநகருக்குத் திரும்பிச் சென்று அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பாயாக. அர்ஜுனன் என் முன்பு இருக்கும் வரை எந்த எதிரியாலும் அவனுக்குத் தொல்லைக் கொடுக்க முடியாது.(99) பாரதப் பெரும்போர் முடிவடையும்போது, அர்ஜுனனுக்காக நான் பாண்டுவின் மகன்கள் அனைவரையும் சிறு தீங்கும் அற்றவர்களாகக் குந்தியிடம் அனுப்புவேன்.(100) ஓ! தேவர்களின் மன்னா, நான் அன்பில் கட்டப்பட்டிருப்பதால், உன் மகனான அர்ஜுனன் எனக்கு ஆணையிடும் எதையும் ஒரு பணியாளைப் போல நிறைவேற்றுவேன்" என்றான் {கிருஷ்ணன்}.(101) தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வாய்மை நிறைந்த கிருஷ்ணனின் இந்தச் சொற்களைக் கேட்டு தேவர்களின் தலைநகருக்குத் திரும்பினான்" என்றார் {வைசம்பாயனர்}.(102)

[11] "ஒரு காலத்தில் பாண்டு வேட்டையாடுவதற்காகக் காட்டுச் சென்றான். மானின் வடிவில் தன் இணையுடன் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு முனிவரின் மகனை அவன் தாக்கினான். அவன் பாண்டுவிடம், "ஓ! மூடா, மானின் வடிவில் நான் ஆசை நிறைந்திருக்கும்போது நீ என்னைக் கொன்றதால், எனக்கு நேர்ந்த இதே விதியை நீயும் நிச்சயம் சந்திப்பாய். என்னைப் போலவே நீயும் உன் அன்புக்குரியவளிடம் செல்லும் வேளையில் நிச்சயம் இறந்தோரின் உலகத்திற்குச் நீ செல்வாய். உன் மனைவியும் உன்னைப் பின்தொடர்வாள்" என்று சொல்லி அவனைச் சபித்தான். மஹாபாரதம் ஆதிபர்வம், சம்பவ பர்வம் அத்யாயம் 118ல் உள்ள 30 மற்றும் 31ம் ஸ்லோகங்களைப் பார்க்கவும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். 

விஷ்ணு பர்வம் பகுதி – 74 – 019ல் உள்ள சுலோகங்கள் : 102
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English