Tuesday, 9 June 2020

கிருஷ்ணன் மற்றும் பலதேவனின் பிறப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 59 – 004

(விஷ்ணவவதாரவர்ணம்)

Birth of Krishna and Baladeva | Vishnu-Parva-Chapter-59-004 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவகியின் ஆறு குழந்தைகளைக் கொன்ற கம்ஸன்; ஏழாவது கருவை ரோஹிணியின் கருவறைக்கு மாற்றிய நித்ராதேவி; கிருஷ்ணன் பிறப்பு; யசோதை மற்றும் தேவகியின் குழந்தைகள் மாற்றம்; கம்ஸன் அடைந்த ஏமாற்றம்...

Lord Krishna's birth

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவியைப் போன்றவளான தேவகி, இந்த ஏற்பாடுகளின் கீழ், ஏற்கனவே சொன்னது போல ஏழு முறை கருவுற்றாள்.(1) கம்ஸன், ஸரகர்ப்பர்கள் {ஷட்கர்ப்பர்கள்} வெளியே வந்த உடனேயே அவர்களைக் கல்லில் மோதச் செய்து கொன்றான். ஏழாவது கருத்தரிப்பின் கருவானது {நித்ராதேவியால்} ரோஹிணிக்கு மாற்றப்பட்டது.(2) நள்ளிரவில் ஒரு சமயம், ரோஹிணி உரக்க உறங்கிக் கொண்டிருந்தபோது, குருதி வெளியேறி, அதைத் தொடர்ந்து கருவும் கலைந்தது.(3) ரோஹிணி, கரு நழுவி விழுவதைக் கனவில் கண்டாள், சிறிது நேரம் கழித்து அவள் விழித்தெழுந்தபோது, அதைக் கண்டு அவள் பெரிதும் துன்புற்றாள்.(4) நடு இரவில், வஸுதேவனின் மனைவியும், சந்திரனுக்கு ஒப்பானவளுமான ரோஹிணி பெருங்கவலையடைந்தபோது, உறக்கத்தின் தேவி {நித்ராதேவி}, அவளிடம்,(5) "ஓ! அழகியே, நான் தேவகியின் கருவறையில் இருந்து கருவை எடுத்து உன்னுடைய கருவறையில் வைத்தேன். எனவே உன்னுடைய மகனான இவன் ஸங்கர்ஷணன் என்ற பெயரில் கொண்டாடப்படுவான்" என்றாள்.(6) அவள் {ரோஹிணி} அந்த மகனை {பலராமனை} அடைந்ததில் நிறைவடைந்து, சந்திரனின் அழகிய மனைவியைப் போலத் தலை கவிழ்ந்தவாறு தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.(7)

தேவகியின் ஏழாம் கருத்தரிப்பைக் குறித்த செய்திகளை அறிந்து மக்கள் கவலை அடைந்தபோது, எவன் பொருட்டுக் கம்ஸன் அவளுடைய ஏழு குழந்தைகளைக் கொன்றானோ அவனை {கிருஷ்ணனை} எட்டாம் முறையில் அவள் கருவில் கொண்டாள்.(8) எதில் தலைவன் ஹரி தன் விருப்பத்தின் பேரில் வாழ்ந்து வந்தானோ அதை {அந்தக் கருவைக்} கம்ஸனின் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கத் தொடங்கினர்.(9) விஷ்ணுவின் சக்திக் கூறில் பிறந்தவளும், அவனது ஆணையைச் செய்யும் நோக்கம் கொண்டவளுமான உறக்கத்தின் தேவியை {நித்ரா தேவியை} யசோதையும், தன் கருவில் கொண்டாள்.(10) கருத்தரிப்புக் காலம் நிறைவடையும் முன்பே தேவகியும், யசோதையும் எட்டாம் மாதத்தில் ஒரே நேரத்தில் தங்கள் குழந்தைகளை ஈன்றனர்.(11) விருஷ்ணிகளின் குலத்தில் கிருஷ்ணன் பிறந்த அதே இரவில், யசோதையும் தன் மகளைப் பெற்றெடுத்தாள்.(12) வஸுதேவனின் மனைவியான தேவகி, நந்தனின் மனைவியான யசோதை ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கருவுற்றிருந்தனர்.(13) மங்கலமான அந்த நடு இரவில், அபிஜித் முஹூர்த்தத்தில், தேவகி விஷ்ணுவையும், யசோதை தன் மகளையும் {நித்ராதேவியையும்} பெற்றெடுத்தனர்.(14)

ஜனார்த்தனன் பிறந்தபோது, கடல்கள் கலக்கமடைந்தன, பூமியின் தூண்கள் {மலைகள் / தரணீதரன்} நடுங்கின, அணைந்த நெருப்புகள் எரியத் தொடங்கின,(15) மங்கலக் காற்று வீசத் தொடங்கியது, புழுதி அகன்றது, ஜோதிகள் {நட்சத்திரங்கள்} தங்களை வெளிப்படுத்திக் கொண்டன.(16) புலப்படாதவனும், நித்தியமானவனும், பலம்நிறைந்தவனும், நுட்பமான ஆன்மாவைக் கொண்டவனும், உலகிற்கு நன்மையை விளைவிப்பவனுமான தலைவன் ஹரி பிறந்தபோது, இரவு ஜயந்தியாகவும், {அஷ்டமி திதியுடன் கூடிய ரோஹிணி} நட்சத்திரம் அபிஜித்தாகவும்[1], முஹூர்த்தம் விஜயமாகவும் இருந்தது.(17) அவன் பிறந்த உடனேயே தன் பார்வைகளால் உலகங்கள் அனைத்தையும் மயங்கச் செய்தான். தேவ துந்துபிகள் முழக்கப்படாமலேயே முழங்கின, தேவர்களின் மன்னன் {இந்திரன்} ஆகாயத்தில் இருந்து மலர்களைப் பொழிந்தான்.(18) கந்தர்வர்கள் மற்றும் அப்ஸரஸ்களுடன் கூடிய பெரும் முனிவர்கள், மங்கலத் துதிகளுடன் மதுசூதனனின் மகிமைகளைப் பாடினர்.(19) ரிஷிகேசன் பிறந்தபோது மொத்த அண்டமும் இன்பப் பரவசத்தில் இருந்தது. தேவர்களுடன் சேர்ந்து இந்திரனும் மதுசூதனின் மகிமைகளைத் துதித்தான்.(20) மாயக் குறியான ஸ்ரீவத்ஸத்தையும், வேறு தெய்வீக அடையாளங்களையும் தாங்கியவனான விஷ்ணுவே[2] அந்த இரவில் தன் மகனாகப் பிறந்ததைக் கண்ட வஸுதேவன் அவனிடம் {கிருஷ்ணனிடம்},(21) "ஓ! தலைவா, உன்னுடைய இந்த வடிவை விலக்குவாயாக. ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவனே, உன் தமையன்களான என் மகன்கள் கம்ஸனால் கொல்லப்பட்டதில் பேரச்சம் கொண்டிருப்பதால் நான் இவ்வாறு பேசுகிறேன்" என்றான்".(22,23)

[1] ஹரிவம்சம் விஷ்ணு பர்வம் 2ம் அத்தியாயத்தின் [2]ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டதைப் போல இங்கே சொல்லப்படும் அபிஜித் என்பது யோகமாகவே இருக்க வேண்டும். அஃதாவது அஷ்டமி திதியுடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் அபிஜித்தாக இங்குச் சொல்லப்படுகிறது. சித்திரசாலை பதிப்பில், "ஜனார்த்தனன் பிறந்தபோது, (எட்டாவது நாளில் {அஷ்டமியில்} ரோஹிணி நட்சத்திரம் கலந்த காரணத்தால்) அபிஜித் மங்கல நட்சத்திரமாக இருந்தது, ஜயந்தி இரவாகவும், விஜயம் முகூர்த்தமாகவும் இருந்தன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இது சரியாக அபிஜித் நட்சத்திரம் எழுந்து கொண்டிருந்தபோது நள்ளிரவில் நிகழ்ந்தது" என்றிருக்கிறது. விஜய முஹூர்த்தம், ஜயந்தி இரவு என்ற குறிப்புகள் இங்கில்லை. அடிக்குறிப்புகளும் ஏதும் இல்லை. உ.வே.எஸ்.இராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஜனார்த்தனன் பிறக்கும் ஸமயம் (ரோகிணி) அபிஜித் என்னும் நக்ஷத்ரம்; ஜயந்தி என்னும் இரவு விஜயம் என்கிற முஹுர்த்தம்" என்றிருக்கிறது.

[2] "உரையில் இருக்கும் சொல் விஷ்ணுவின் பெயரான அதோக்ஷஜன் என்பதாகும். ஆசைகளைக் கைவிட்ட, அல்லது அடக்கியவர்களால் உண்டானவன் அல்லது அவர்களுக்காக உண்டானவன் என்பது இதன் உண்மைப் பொருளாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவனின் சொற்களைக் கேட்ட தலைவன் {விஷ்ணு}, நான்கு கரங்களைக் கொண்ட தன் வடிவை விலக்கிக் கொண்டு, தந்தையே என அவனை {வசுதேவனை} அழைத்து, நந்தகோபனின் வீட்டுக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான்.(24) தன் மகன்களிடம் அன்பு கொண்டவனான வஸுதேவன் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு, யசோதையின் வீட்டுக்கு மிக விரைவாகச் சென்றான்.(25) அவள் அறியாதவாறு அவளது வீட்டில் தன் மகனை வைத்துவிட்டு, அவளது மகளை எடுத்துக் கொண்டு வந்து தேவகியின் படுக்கையில் வைத்தான்.(26) குழந்தைகள் பரிமாற்றம் நடந்த பிறகு, தன் பணியை நிறைவேற்றிய ஆனகதுந்துபி வஸுதேவன், தன் மனத்தில் அச்சம் நிறைந்தவனாகத் தன் வீட்டை விட்டு வெளிப்பட்டு, உக்ரஸேனனின் மகனான கம்ஸனிடம் ஓர் அழகிய மகள் பிறந்தாளெனத் தெரிவித்தான்.(27,28) பலம் நிறைந்தவனான கம்ஸன், அதைக் கேட்டு, வஸுதேவனின் வாயிலை விரைவில் அடைந்து, என்ன பிறந்தது என்பதைக் குறித்து அவனிடம் விசாரித்தான். பிறகு அவன் {கம்ஸன்}, புதிதாகப் பிறந்த குழந்தையைத் தன் கையில் ஒப்படைக்குமாறு ஆணையிட்டு, கடுமையுடன் அவனை {வஸுதேவனை} அதட்டினான்.(29,30)

இவையனைத்தையும் கேட்ட தேவகியின் குடும்பப் பெண்கள் கதறி அழுதனர். அவள் {தேவகி}, கண்ணீர் சிந்தியபடி, அவனிடம் பணிவுடன் வேண்டும் வகையில்,(31) "ஓ! தலைவா, என்னுடைய அழகிய மகன்கள் எழுவரை நீ ஏற்கனவே கொன்றுவிட்டாய். புதிதாகப் பிறந்த மகளான இவள்(32) ஏற்கனவே கொல்லப்பட்டதாக நான் கருதுகிறேன். எதை முறையென நீ நினைக்கிறாயோ அதைச் செய்வாயாக" என்றாள்.

தீயமனம் கொண்ட கம்ஸன், அந்தப் பெண்ணைக் கண்டு, அவளை இழுத்து, "ஒரு மகள் பிறக்கும்போதே அவள் கொல்லப்பட்டவளாகிறாள்" என்று சொன்னான்.(33,34)

பூமிக்கு நிகரானவளும், கருவறையில் வாழ்ந்ததால் களைத்திருந்தவளும், அதனால் தலைமுடி நனைந்திருந்தவளுமான அந்தப் பெண் அவனுக்கு முன்னால் நிலத்தில் வைக்கப்பட்டாள். கம்ஸன், அவளது கால்களைப் பிடித்து இழுத்துச் சுழற்றி ஒரு கல்லில் மோதச் செய்தான். ஏளனமாகப் பாறை மீது வீசப்பட்டாலும், தேவர்களால் நாள்தோறும் வழிபடப்படும் அந்தப் பெண் சிதைவடையவில்லை. மறுபுறம் அவள், தன் மனித வடிவைக் கைவிட்டு, தெய்வீக மலர்மாலைகள் மற்றும் {சந்தனக்} குளம்புகளாலும், ஒளிரும் மகுடத்தாலும் அலங்கரிக்கப்பட்டவளாக, தலைமயிர் விரிந்து கலைந்தவளாகக் கம்ஸனை அதட்டிக் கொண்டே வானத்தில் எழுந்தாள்.(35-38) அவள் கருநீல ஆடை அணிந்திருந்தாள், அவள் நிமிர்ந்த மார்புகளையும், தேர் போன்ற இடையையும், நான்கு கரங்களையும் கொண்டிருந்தாள். அவளது நிறம் மின்னலைப் போன்று ஒளிர்வதாகவும், அவளது கண்கள் உதயச் சூரியனைப் போன்றவையாகவும் இருந்தன, அவள் மேகத்தால் மறைக்கப்பட்ட மாலைப்பொழுதைப் போல இருந்தாள். நிலவைப் போன்ற முகத்தோற்றம் கொண்டவளும், மேகத்தைப் போன்று முழங்குபவளுமான அந்தப் பயங்கரப் பெண் {நித்ராதேவி}, பூதகணங்களால் சூழப்பட்டவளாக இருந்தாள். அந்த நள்ளிரவில் அவள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வானத்தில் எழுந்தாள். மிகச் சிறந்த மதுவைப் பருகி, உரக்கச் சிரித்த அவள், கம்ஸனிடம்,(39-42) "ஓ! கம்ஸா, உன் அழிவுக்காகவே என்னைச் சுழற்றிக் கல்லில் மோதச் செய்தாய். எனவே, உன் மரணக் காலத்தில், உன்னை உன் பகைவன் தாக்கும்போது, நான் உன் உடலை என் கைகளால் கிழித்து உன் வெங்குருதியைப் பருகுவேன்" என்றாள்.(43,44)

அந்தத் தேவி இந்தப் பயங்கரம் நிறைந்த சொற்களைச் சொல்லிவிட்டு, தன் தொண்டர்களால் சூழப்பட்டவளாக, தான் விரும்பிய வழியில் வானத்தில் எழுந்து, அவ்வடிவிலேயே அவள் தேவலோகத்தில் திரியத் தொடங்கினாள்.(45) விருஷ்ணிகளால் வழிபடப்படும் அந்தப் பெண் அங்கேயே வளர்ந்தாள். தேவர்கள், தங்கள் மன்னனின் ஆணையின் பேரில் அவளை ஒரு குழந்தையைப் போல வளர்த்தனர்.(46) யோகத்தின் மூலம் பிரம்மனால் முன்பு படைக்கப்பட்ட அந்த மகள், கேசவனை {கிருஷ்ணனைப்} பாதுகாப்பதற்காக அந்தத் தலைவனுடன் பிறந்தாள்.(47) தெய்வீக வடிவில் இருந்து கொண்டு கேசவனைப் பாதுகாத்த அவளை நாள்தோறும் யாதவர்கள் வழிபட்டனர்[3].(48) அவள் சென்றதும், கம்ஸன் அவளைத் தன் மரணத்திற்கான கருவியாக {மிருத்யுவாகக்} கருதினான். வெட்கமடைந்த அவன் தனிமையில் தேவகியிடம் பேசினான்.(49)

[3] உ.வே.எஸ்.இராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "காப்பாற்றப்பட்ட அந்தக் கன்யை வஸுதேவர் ஆஜ்ஞையால் புத்ரனைப் போல் வ்ருஷ்ணி கூட்டத்தாரால் நன்கு பூஜிக்கப்பட்டு அங்கே (ஸ்வர்க்க லோகத்தில்) வளர்ந்தாள்.(46) ஜனமேஜயா, விஷ்ணுவின் அம்சத்திலிருந்து உண்டானவளாகவும், தனக்கென அம்சமில்லாதவளான யோக கன்யையாகவும், கேசவனின் மெய்காவலுக்காக அவதரித்தவளாகவும் இவளை நீ அறிந்து கொள்.(47)" என்றிருக்கிறது.

கம்ஸன் {தேவகியிடம்}, "ஓ! தமக்கையே {அக்கா}, மரணத்தின் கைகளில் இருந்து தப்பிக்க எல்லையற்ற முயற்சிகளைச் செய்து, உன் குழந்தைகள் பலரை நான் அழித்தேன். ஓ! தேவி, இப்போது என் மரணம் வேறொரு பகுதியில் இருந்து வந்திருக்கிறது.(50) ஐயோ, இரக்கமற்றவனாகவும், கவனமாகவும் என் உறவினர்களையே கொன்றாலும் என் ஆண்மையைக் கொண்டு என்னால் விதியை வெல்ல முடியவில்லை.(51) கெட்ட நேரத்தின் ஆதிக்கத்தில் இருந்த நான் அவர்களின் மரணத்திற்கான கருவியாக இருந்தேன். எனவே, உன் கருக்கள் அழிந்த கவலையையும், உன் மகன்கள் இறந்த துயரத்தையும் கைவிடுவாயாக.(52) காலமே அனைவரின் பகைவனாக இருந்து அவர்களுக்கு அழிவைக் கொண்டு வருகிறது. காலமே அனைத்தையும் இயக்குகிறது, என்னைப் போன்றவர்கள் வெறும் கருவிகளாகவே இருக்கிறோம்.(53) ஓ! பெண்ணே, ஒருவன் செய்யும் செயல்களின் தவிர்க்கமுடியாத விளைவுகளான பேரிடர்கள் உரிய நேரத்தில் வந்தடைகின்றன. நானே செய்கிறேன் என்பது பரிதாபத்திற்குரியது (என்று நினைப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்).(54) உன் மகன்களுக்காக அழாதே, உன் துயரைத் துறப்பாயாக. மனிதர்களின் போக்கு இத்தகையதாகவே இருக்கிறது, யாராலும் காலத்தின் பணியை நிறுத்த முடியாது.(55) நான் உனக்கு இழைத்த துன்பங்கள் அனைத்தும் என் மனத்தில் இருக்கின்றன. நான் ஒரு மகனைப் போல என்னை உன் பாதங்களில் கிடத்திக் கொள்கிறேன். என்னிடம் கோபங்கொள்ளாதே" என்றான் {கம்ஸன்}.(56)

கம்ஸன் இதைச் சொன்னதும், கண்ணீரால் குளித்த முகத்துடன் இருந்த பரிதாபத்திற்குரிய தேவகி, தன் கணவனின் மீது பார்வையைச் செலுத்தியவாறே, "எழுவாய் தம்பி எழுவாயாக" என்றாள். அதன் பிறகு அவள் பின்வருமாறு அவனிடம் பேசினாள்.(57) தேவகி, "மெய்நிகர் காலனைப் போலவே என் கண்களுக்கு முன்பாகவே என் குழந்தைகள் அனைவரையும் நீ கொன்றாய். இதற்கு உன் மீது பழி சுமத்த முடியாது. இங்கே காலனே கருவியாக இருக்கிறான்.(58) உன் தீச்செயல்களுக்காக வருந்தி உன் தலையால் என் பாதங்களைத் தீண்டுகிறாய். எனவே, என் குழுந்தைகளை அழித்ததன் மூலம் நீ இழைத்த பாவத்தை நான் மன்னித்தேன்.(59) முதுமையென்றாலும், கருவறையில் என்றாலும் மரணம் தவிர்க்கப்பட முடியாதது. குழந்தைப் பருவத்திலும், இளமையிலும் கூட அதன் கரங்களில் இருந்து தப்புவது சிரமமே.(60) இவை யாவும் காலத்தின் பணியாகும்; நீ வெறும் கருவியாகவே இருக்கிறாய். பிறக்காத ஒருவன் காற்றைப் போலக் காணப்படுவதில்லை.(61) பிறந்த ஒருவன் பிறக்காத ஒருவனின் நிலையை அடைவதும் அவ்வாறே கருதப்படுகிறது[4]. இவை அனைத்தும் காலத்தினால் நேர்ந்தவையாகும். முதலில் காலன் அனைத்தையும் சுமந்து செல்கிறான், அடுத்ததாகத்தான் கருவி குறிப்பிடப்படுகிறது.(62) எனவே, என் குழந்தாய், என் குழந்தைகளின் மரணத்திற்கு நீ காரணமல்ல. பல்வேறு சடங்குகள்,[5] மாசற்ற செயல்கள், படைப்பின் காலம், பெற்றோரின் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடும்போதும் மக்கள் மரணத்தைச் சந்திக்கிறார்கள்" என்றாள் {தேவகி}.(63)

[4] "பிறக்காத மகனிடம் அன்பு கொள்ள முடியாததைப் போலவே, பிறந்தவுடன் இறந்தவனிடமும் பற்றுக் கொள்ளக்கூடாது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[5] "ஒரு குழந்தை பிறக்கும்போது செய்யப்படும் சடங்கு முதலான பல்வேறு சடங்குகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

தேவகியின் சொற்களைக் கேட்ட கம்ஸன், கோபமடைந்தவனாகவும், இதயம் எரிபவனாகவும் தன் வீட்டுக்குள் நுழைந்தான். நோக்கம் கலங்கடிக்கப்பட்ட அவன், மனந்தளர்ந்தவனாகவும், கவனமற்றவனாகவும் அங்கே சென்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(64-65)

விஷ்ணு பர்வம் பகுதி – 59 – 004ல் உள்ள சுலோகங்கள் : 65
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English