Saturday, 4 April 2020

பித்ருக்களின் பேறு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 17

(பித்ரு கல்பம் - 1)

Beatification of manes | Harivamsa-Parva-Chapter-17 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பித்ருக்கள் தொடர்பாக மார்க்கண்டேயருக்கும், சனத்குமாரருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "என் தந்தையிடம் {சந்தனுவிடம்} ஏற்கனவே நான் கேட்ட அதே கேள்வியை, என் தந்தை சொன்ன சொற்களுக்கு இணங்க மார்க்கண்டேயரிடமும் கேட்டேன். அறம் சார்ந்த உயரான்மாவான மார்க்கண்டேய முனிவரும் என்னிடம், "ஓ! பாவமற்றவனே, நான் அனைத்தையும் சொல்கிறேன் கவனமாகக் கேட்பாயாக" என்றார்.(1,2)


மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "என் தந்தையின் அருளால் நான் நீண்ட வாழ்நாளை {ஆயுளை} அடைந்திருக்கிறேன். பழங்காலத்தில் என் தந்தையிடம் கொண்டிருந்த அர்ப்பணிப்பின் காரணமாக இவ்வுலகில் நான் பெரும்புகழ் பெற்றிருந்தேன்.(3) பல்லாயிரம் வருடங்கள் நீடித்த யுகம் முடியும் நேரத்தில் நான் சுமேரு மலையில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தேன்.(4) ஒரு நாள் மலையில் வடக்குப் பகுதியில் இருந்து ஒரு பெருந்தேர் {விமானம்} வருவதை நான் கண்டேன். அது தன் காந்தியால் சொர்க்கத்திற்கு {வானத்திற்கு} ஒளியூட்டிக் கொண்டிருந்தது.(5) நெருப்பின் நடுவில் இருந்த அந்த வாகனத்தில் கட்டை விரல் அளவுள்ளவரும், நெருப்பு அல்லது சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவருமான ஒரு மனிதரை நான் கண்டேன். அந்த வாகனத்தில் கிடக்கும் தலைவனை என் தலை தரையைத் தீண்ட வணங்கி, அவருக்கு அர்க்கியமும், காலைக் கழுவிக் கொள்ள நீரும் கொடுத்து வழிபட்டேன்.

அந்தச் சிந்தனைக்கப்பாற்பட்டவரிடம், "ஓ! தலைவா, நான் உம்மை எவ்வாறு அறிய வேண்டும்?(6-8) நாராயணனின் குணங்களுடன் கூடிய தவசக்தியில் பிறந்தவரென நான் உம்மை நினைக்கிறேன். நீர் தேவர்களுக்குத் தேவராகத் தெரிகிறீர்" என்று கேட்டேன்.(9)

ஓ! பாவமற்றவனே, அந்த அற ஆன்மா {ஸனத்குமாரர்} ஆச்சரியமடைந்தவராக, "நீ கடுந்தவங்களை நன்கு பயிலவில்லை என்பதால் உன்னால் என்னை அடையாளம் காண முடியவில்லை" என்றார்.(10)

பிறகு ஒரு கணத்திற்குள் இதற்கு முன்பு நான் காணாத மற்றுமொரு சிறந்த வடிவை ஏற்றார்.(11)

ஸனத்குமாரர், "எல்லாம்வல்ல பிரம்மனின் மனத்தில் பிறந்த முதல் முகனாக என்னை அறிவாயாக. தவசக்தியில் இருந்து, நாராயணனின் முக்கி குணங்களுடன் நான் பிறந்திருக்கிறேன்.(12) பழங்காலத்தில் வேதங்களால் கொண்டாடப்படும் ஸனத்குமாரர் நானே. ஓ! பார்க்கவா {மார்க்கண்டேயா}, உனக்கு நன்மை நேரட்டும், உன்னுடைய எந்த விருப்பங்களை நான் நிறைவேற்ற வேண்டும்?(13) தடுக்கப்பட முடியாதவர்களான பிரம்மனின் மற்ற ஏழு மகன்களும் என் தம்பிமாராவார். அவர்களுடைய குடும்பங்கள் இந்தப் பூமியில் நிறுவப்பட்டுள்ளன.(14) அவர்கள், தேவர்களாலும் கந்தர்வர்களாலும் கூட வழிபடப்படும், கிரது, வசிஷ்டர், புலஹர், புலஸ்தியர், அத்ரி, அங்கீரஸ், மற்றும் கல்விமானான மரீசி ஆகியோராவார். தேவர்கள் மற்றும் தானவர்களால் வழிபடப்படும் அந்தத் தவசிகளே மூவலகங்களையும் தாங்குகின்றனர்.(15) நான் யதிகளின்[1] வாழ்வைப் பின்பற்றுகிறேன். ஓ! பெரும் முனியே, நான் பிறந்தது முதல் என்னையும், என் ஆசைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு இன்று வரை வாழ்ந்து வருகிறேன். நான் திருமணமாகாதவன் என்பதை அறிவாயாக. எனவே, நான் ஸனத்குமாரன் என்ற பட்டப்பெயரைப் பெற்றேன்.(16,17) என்னிடம் கொண்ட அர்ப்பணிப்பின் காரணமாகவும், என்னைக் காண்பதற்காகவும் நீ இந்தக் கடுந்தவத்தைச் செய்தாய். எனவே, நான் உன்னிடம் வந்தேன். நான் நிறைவேற்றக்கூடிய உன் விருப்பங்களை எனக்குச் சொல்வாயாக" என்றார் {ஸனத்குமாரர்}.(18)

[1] "இவர்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வகை முனிவர்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! பரதனின் வழித்தோன்றலே, என்னிடம் நிறைவடைந்திருந்தவரும், எல்லாம் வல்லவருமான அந்தத் தேவன் இவ்வாறு சொன்னதும், அவரது கட்டளையின் படியே அந்த நித்திய தேவனிடம் நான் மறுமொழி கூறினேன்.(19) ஓ! பாவமற்றவனே, அதன்பிறகு, எப்போதும் இருப்பவரான அவரிடம் (அந்தத் தேவனிடம்) பித்ருக்களின் தோற்றம் மற்றும் சிராத்தங்களின் பலன்கள் குறித்துக் கேட்டேன்.(20) ஓ! பீஷ்மா, தேவர்களில் முதன்மையான அவர் என் ஐயங்கள் அனைத்தையும் விலக்கினார்.

என்னுடன் பல வருடங்கள் உரையாடிய அந்த அறம் சார்ந்த தேவன், என்னிடம், "ஓ! பிராமண முனிவா {மார்க்கண்டேயா}, நான் உன்னிடம் (உன் கேள்வியால்) நிறைவடைந்தேன், அனைத்தையும் முறையான வரிசையில் கேட்பாயாக.(21) ஓ! பிருகுவின் வழித்தோன்றலே, தேவர்கள் தனக்குக் காணிக்கைகளை அர்ப்பணிப்பார்கள் என்று நினைத்து பிரம்மன் அவர்கள் அனைவரையும் படைத்தான். ஆனால் அவர்கள் அதைவிட்டு விட்டுப் பலன்களை எதிர்பார்த்து வேள்விகளைச் செய்யத் தொடங்கினர்.(22) பின்னர்ப் பிரம்மனால் சபிக்கப்பட்ட சொர்க்கவாசிகள் அனைவரும் தங்கள் உணர்வுகளையும் நனவையும் இழந்தனர். அவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை, மொத்த உலகமும் கலக்கமடைந்தது.(23) பிறகு பெரும்பாட்டனின் (பிரம்மனின்) முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, உலகின் நன்மைக்காக அவர்கள் மீண்டும் வேண்டினர்.

அப்போது அவன் (பிரம்மன்) அவர்களிடம்,(24) "நீங்கள் செய்த அத்துமீறலுக்காகத் தவம் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் மகன்களை வேண்டிக் கொண்டால் உண்மை ஞானத்தை அடைவீர்கள்" என்றான்.(25)

(அதன்பேரில்) பேரிடரில் இருந்த அவர்கள் தவம் செய்வதற்காகத் தற்கட்டுப்பாடுடைய தங்கள் மகன்களைக் கேட்கவும், அவர்களுக்கு அவர்கள் (உண்மையைச்) சொன்னார்கள்.(26) அவர்கள், "அற நடைமுறைகளை அறிந்தவர்கள், சொற்கள், செயல்கள் மற்றும் எண்ணங்களால் இழைக்கப்பட்ட பாவங்களுக்குத் தவங்களையே விதித்திருக்கிறார்கள், அவர்கள் அவற்றை நாள்தோறும் நிறைவேற்றவும் செய்கிறார்கள்" என்றனர்.(27)

தவங்கள் குறித்த உண்மையை அறிந்த தேவர்கள் தங்கள் நினைவு மீண்டதும், தங்கள் மகன்களால், "செல்வீர் மகன்களே" என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.(28) இவ்வாறு சபிக்கப்பட்டு, மகன்களின் சொற்களின் மூலம் சாபத்தில் இருந்து மீண்ட தேவர்கள், தங்கள் ஐயங்களை[2] விலக்கிக் கொள்வதற்காகப் பெரும்பாட்டனை (பிரம்மனை) அணுகினர்.(29)

[2] "இங்கே குறிப்பிடப்படும் ஐயம் என்பது, தங்கள் மகன்கள் ஏன் தங்களை அவர்களுடைய மகன்கள் என்று சொன்னார்கள் என்பதாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அப்போது அந்தத் தேவன் {பிரம்மன்} அவர்களிடம், "நீங்கள் அனைவரும் பிரம்மவாதிகளாவீர் {காரணக் காரியங்களை அறிந்தவராவீர்}[3]. எனவே, அவர்கள் {உங்கள் மகன்கள்} சொன்னது நிச்சயம் நடக்கும். நடக்காமல் போகாது.(30) ஓ! தேவர்களே நீங்கள் அவர்களுக்கு உடலைக் கொடுத்தீர்கள். அவர்கள் உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தார்கள், எனவே அவர்கள் உங்கள் தந்தைமார் என்பதில் ஐயமில்லை.(31) நீங்கள் தேவர்கள், அவர்கள் பித்ருக்கள், மேலும் நீங்கள் அவர்கள் தந்தைமார் என்பதிலும், அவர்கள் உங்கள் தந்தைமார் என்பதிலும் ஐயமில்லை" என்றான்.(32)

[3] "பிரம்மவாதிகள் என்றால் பிரம்மஞானத்தை அறிந்தவர்கள் என்பது பொருளாகும். அஃதாவது இங்கே சொல்லப்படுவது என்னவென்றால், நீங்கள் பிரம்ம ஞானத்தை அறிந்திருந்தாலும் உங்களுக்கு யோக சக்திகள் அருளப்படவில்லை என்பதாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அதன்பிறகு திரும்பிச் சென்ற சொர்க்கவாசிகள், தங்கள் மகன்களிடம், "எங்கள் ஐயங்கள் பிரம்மனால் விலக்கப்பட்டன. எனவே, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம்.(33) அறத் தகுதியை அறிந்து எங்களுக்கு ஞானத்தை அளித்ததால் நீங்கள் எங்கள் தந்தைமாராவீர். நீங்கள் நாடுவதென்ன என்பதையும், நாங்கள் உங்களுக்கு அளிக்க வேண்டிய வரங்களையும் எங்களுக்குச் சொல்வீராக.(34) நீங்கள் சொன்னது நிச்சயம் மெய்யாகவே செய்யும் பொய்யாகாது. நீங்கள் எங்களை மகன்கள் என்று அழைத்ததால் நிச்சயம் நீங்கள் எங்கள் தந்தைமாரே ஆவீர்.(35) எந்த மனிதன் சிராத்தங்கள் செய்து பித்ருக்களை நிறைவடையச் செய்யாமல் இருக்கிறானோ, அவனுடைய செயல்களின் பலன்களுக்கு ராட்சசர்கள், தானவர்கள், மற்றும் நாகர்கள் ஆகியோரே உரிமையுள்ளவர்களாவர்.(36) சிராத்தங்களின் மூலம் நிறைவடைந்த பித்ருக்கள் நித்தியமான சந்திரனை நிறைவடையச் செய்வார்கள். உங்களால் நிறைவடைந்த அவர்கள் தொடர்ந்து நாள்தோறும் செழித்திருப்பார்கள்.(37) சிராத்தத்தில் நிறைவடையும் சந்திரனானவன், பெருங்கடல்கள், மலைகள், காடுகள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் ஆகியவை உள்ளடங்கிய உலகங்கள் அனைத்திற்கும் மகிழ்ச்சியை அளிப்பான்.(38) ஊட்டம் விரும்பி சிராத்தங்களைச்[4] செய்யும் மனிதர்களுக்குப் பித்ருக்கள் எப்போதும் ஊட்டத்தையும், சந்ததியையும் அளிப்பார்கள்.(39) எல்லாம் வல்ல பெரும்பாட்டனுடன் {பிரம்மனுடன்} கூடிய பித்ருக்கள், சிராத்தங்களில் அளிக்கப்படும் பலியுணவுகளில் நிறைவடைந்து, சிராத்த நேரத்தில் தங்கள் பெயர்களையும், கோத்ரங்களையும் சொல்லி மூன்று பிண்டங்களை அளித்தவர்களின் செழிப்பை பெருக்குவார்கள்.(40) இந்த ஆணையானது முற்காலத்தில் பரமேஷ்டியான பிரம்மனால் அறிவிக்கப்பட்டது. இன்று அவனது சொற்கள் உண்மையென மெய்ப்பிக்கப்படட்டும். தேவர்களும், நாமும் முறையே இப்போது தந்தைமாரும், மகன்களுமாவோம்" {என்றனர் தேவர்கள்}".(41)

[4] "இதன் காரணமாகவே எப்போதும் ஒரு விழா தொடங்குவதற்கு முன்னர்த் தங்கள் முன்னோருக்குச் சிராத்தம் செய்வதை இந்துக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஸனத்குமாரர் சொன்னார், "அந்தப் பித்ருக்கள் தேவர்களாவர், அந்தத் தேவர்களும் தேவர்களாவர், முறையே அவர்கள் ஒருவருக்கொருவர் தந்தைமாருமாவர்".(42)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 42
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English