Friday, 3 April 2020

பித்ருக்களின் தோற்றமும் சிராத்தப் பலன்களும் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 16

(சிராத்தகல்பப்ரஸங்கம்)

The origin of Pitris and fruits of Sraddhas | Harivamsa-Parva-Chapter-16 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பித்ருக்கள் மற்றும் சிராத்தங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குப் பீஷ்மர் சொன்னதை ஜனமேஜனிடம் சொன்ன வைசம்பாயனர்; தம்பிக்குச் சிராத்தம் செய்த பீஷ்மர்; பிண்டத்தை வேண்டிய சந்தனு; சந்தனுவிடம் பித்ருக்கள் மற்றும் சிராத்தங்கள் குறித்துக் கேட்ட பீஷ்மர்...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "சிறப்புமிக்க ஆதித்யன், சிராத்தங்களின் (தலைமை) தேவனானது எவ்வாறு? அவற்றைச் செய்வதற்கான மிகச்சிறந்த முறை எது? ஓ! விப்ரரே, இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) பித்ருக்களின் தோற்றம் எது? அவர்கள் யார்? பிராமணர்களின் உரையாடல்களில், சொர்க்கத்தில் இருக்கும் பித்ருக்கள் (மூதாதையரின் ஆவிகள்) தேவர்களுக்கும் தேவர்களாவர் என்று நாம் கேள்விப்படுகிறோம். வேதங்களை நன்கு கற்றோரோராலும் இதுவே சொல்லப்படுகிறது. எனவே, நான் இதை அறிய விரும்புகிறேன்.(2,3) பித்ருக்களின் மிகச் சிறந்த படைப்பு, அவர்களது பல்வேறு வகைகள், அவர்களது பெரும்பலம், நாம் செய்யும் சிராத்தங்களால் அவர்கள் நிறைவடைவது எவ்வாறு? மகிழ்ச்சியடையும் அவர்கள் நம் மீது ஆசிகளைப் பொழிவது எவ்வாறு என்பன குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.(4,5)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பித்ருக்களின் மிகச்சிறந்த படைப்பு, நாம் செய்யும் சிராத்தங்களின் மூலம் அவர்கள் அடையும் நிறைவு, மகிழ்வடையும் அவர்கள் நம் மீது பொழியும் ஆசிகள் ஆகியவற்றை நான் இப்போது உனக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன். பீஷ்மரால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்ட போது மார்க்கண்டேயர் இந்த விளக்கத்தைச் சொன்னார். (முன்பு பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது) அற மன்னன் (யுதிஷ்டிரன்), நீ என்னிடம் கேட்ட கேள்வியையே பீஷ்மரிடம் கேட்டான்.(5-8)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! அறமறிந்தவரே, ஊட்டம் வேண்டுவோர் அதைப் பெறுவது எவ்வாறு? எதைச் செய்வதன் மூலம் அவர்கள் வருந்தாமல் இருப்பார்கள்? நான் இதைக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(9)

பீஷ்மர், "ஓ! யுதிஷ்டிரா, விரும்பப்படும் அனைத்துப் பொருட்களையும் அளிக்கவல்ல சிராத்தங்களைச் செய்வதன் மூலம் பித்ருக்களை நிறைவடையச் செய்பவனும், அவற்றை எப்போதும் குவிந்த மனத்துடன் செய்பவனுமான ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைவான். அறம் வேண்டுவோருக்கு அதையும், குழந்தைகளை வேண்டுவோருக்கு அவர்களையும், ஊட்டம் வேண்டுவோருக்கு அதையும் பித்ருக்கள் வழங்குவார்கள்" என்றார்.(10,11)

யுதிஷ்டிரன், "சிலரின் பித்ருக்கள் சொர்க்கத்தில் வாழ்கின்றனர், வேறு சிலரின் பித்ருக்கள் நரகில் வாழ்கின்றனர். கர்மத்தின் பலன்கள் மக்களோடு எப்போதும் நீடித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மக்கள், பலன்களைப் பெறும் எதிர்பார்ப்புடன் தங்கள் தந்தை, பாட்டான், பூட்டன் ஆகியோருக்குச் சிராத்தங்களைச் செய்கின்றனர். அந்தக் காணிக்கைகள் பித்ருக்களை அடைவது எவ்வாறு?(12-14) அவர்களே நரகில் வாழும்போது (அங்கிருந்து) அவர்களால் எவ்வாறு பலங்களை அருள முடியும்? அந்தப் பித்ருக்கள் யாவர்? மற்றவர்களும் யாவர்? நாம் யாருக்கு நமது காணிக்கைகளை அளிக்கிறோம்.(15) தேவலோகத்தில் உள்ள தேவர்களும், பித்ருக்களுக்குக் காணிக்கைகளை அர்ப்பணிக்கின்றனர் என நாம் கேள்விப்படுகிறோம். ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, இவை யாவற்றையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(16) அளவற்ற நுண்ணறிவைக் கொண்டவரான நீர், பித்ருக்களுக்குக் கொடையளிப்பதன் மூலம் நாம் எவ்வாறு விடுபடுகிறோம் என்பதை எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்றான்.(17)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பகைவரைக் கொல்பவனே, பித்ருக்கள் யாவர், நாம் நமது காணிக்கைகளை அர்ப்பணிக்கக்கூடிய பிறர் யாவர் என்பது குறித்து இறந்து போது என் தந்தையிடம் {சந்தனுவிடம்} இருந்து நான் கேட்டதை உனக்கு விளக்கிச் சொல்கிறேன்.(18) என் தம்பிக்கான சிராத்தத்தின் போது, அவனுக்கான பிண்டத்தை[1] நான் காணிக்கையளிக்க இருந்த போது, பூமியைப் பிளந்து கொண்டு வந்த என் தந்தை அதை என் கையில் இருந்து இரந்து பெற்றார்.(19) அவரது கைகள் கங்கணங்களாலும், விரல்கள் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன, நான் முன்பு பார்த்தைப் போலவே அவரது உள்ளங்கை சிவப்பாக இருந்தது.(20) கல்பத்தில் {கல்ப சூத்திரத்தில்} இத்தகைய நடைமுறை ஏதும் இல்லை என்று கருதிய நான் (எதையும் கருத்தில் கொள்ளாமல்) குசப்புல்லில் பிண்டத்தைக் காணிக்கையளித்தேன்[2].(21)

[1] "பந்து போல உருட்டப்பட்ட இறைச்சி அல்லது தயிர், மலர்கள் முதலியவை கலந்த அரிசி இறந்த போன மூதாதையர்களுக்குப் பலியுணவாக வழங்கப்படுகிறது. மேலும், உயிரோடு உள்ள நெருங்கிய உறவினர்களால் பல்வேறு சிராத்தங்களில் இது பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்கப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "குசப்புல் அல்லது தர்ப்பை என்று அழைக்கப்படும் புற்களே ஏன் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன? ஏனெனில், இந்தப் புற்கள் மட்டுமே இந்த உலகத்தில் அமுதத்தைத் தீண்டியிருக்கின்றன. கருடன் தன் தாய்க்காக இந்திரனின் வசிப்பிடத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டு வந்த போது, தரையில் வைத்து அமுதத்தை அவமிக்கக்கூடாது என்று குசப்புல்லாலான விரிப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்தான். அந்தப் பாத்திரத்தை அடைவதற்காகப் போட்டியில் அமுதத்தின் சில துளிகள் பாத்திரத்தினடியில் இருந்த தர்ப்பையிலும் விழுந்தன. எனவே மொத்த குசப் புல் வகையும் அந்த அமுதத்தால் புனிதமடைந்தன. உலகம் சார்ந்த வேறு எந்தப் பொருளும் அமுதத்தைத் தீண்டியது கிடையாது. எனவே அவை மட்டுமே புனிதமானவையாகும்" என்றிருக்கிறது.

ஓ! பாவமற்றவனே, அப்போது என் தந்தை {சந்தனு} மகிழ்ச்சியுடனும், இனிய சொற்களுடனும் என்னிடம், "ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, உன்னைப் போன்ற பக்தி மானும், கல்விமானுமான ஒரு நல்ல மகனைப் பெற்றிருப்பதாலேயே நான் இம்மையில் மறுமையிலும் அருளப்பட்டிருக்கிறேன்.(22,23) ஓ! பாவமற்றவனே, நீ நோன்புகளிலும் உறுதிமிக்கவனாக இருக்கிறாய். மக்களுக்கான அற மரபுகளை வகுக்கவே நான் இந்தக் கட்டளையை இட்டேன்.(24) அற நடைமுறைகளை நோற்கும் {தர்ம காரியங்களைச் செய்யும்} மனிதன் அந்த அறத்தில் {தர்மத்தில்} நான்கில் ஒரு பகுதிக்கு உரிமை உள்ளவன் ஆவதைப் போலவே அவற்றை மீறும் மூடனும் (அதன் விளைவாக உண்டாகும்) பாவத்தில் நான்கில் ஒரு பகுதியைப் பெறுவான்.(25) அறமரபுகளில் மன்னனால் நிறுவப்படும் எடுத்துக்காட்டையே மக்கள் பின்பற்றுவார்கள் {மன்னன் செய்யும் தர்ம காரியங்களையே மக்களும் பின்பற்றுவார்கள்}.(26) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, {பிண்டத்தைத் தர்ப்பையில் வைத்ததில்} நித்திய வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளையே நீ பின்பற்றியிருப்பதால் ஒப்பற்ற நிறைவை நான் அடைகிறேன்.(27) உன்னிடம் பெரும் நிறைவை அடைந்திருக்கும் நான், மூவுலகங்களிலும் பெறுவதற்கு மிக அரிதானதும், மிகச்சிறப்பானதுமான ஒரு வரத்தை நீ வேண்டினாலும் அதைக் கொடுப்பேன்.(28) நீ வாழ விரும்பும் வரை, மரணத்தால் {மிருத்யுவால்} உன்னிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது. நீ அவனை அனுமதிக்கும்போதே அவனால் உன்னை வெல்ல முடியும்.(29) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வேறேதும் வரத்தை நீ வேண்ட விரும்பினால் அதை என்னிடம் சொல்வயாக, நான் உனக்கு அதை அருள்வேன்" என்றார் {சந்தனு}.(30)

(என் தந்தை) இதைச் சொன்னதும், கூப்பிய கரங்களுடன் அவரை வணங்கிய நான், "ஓ! பெரும் மகிமை கொண்டவரே, நீர் நிறைவடைந்ததன் மூலம் நான் என் நோக்கங்கள் அனைத்தையும் அடைந்தேன்.(31) ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, மேலும் ஓர் உதவியைப் பெற எனக்கு உரிமையிருந்தால், நீர் பதில் சொல்வதற்குரிய ஒரு கேள்வியை நான் உம்மிடம் முன்வைக்க விரும்புகிறேன்" என்றேன்.(32)

அற ஆன்மா கொண்ட என் தந்தை {சந்தனு} என்னிடம், "ஓ! பீஷ்மா, நீ விரும்பிய எதையும் என்னிடம் கேட்பாயாக. ஓ! பாரதா, நீ என்னிடம் கேட்கும் ஐயத்தை நான் விலக்குவேன்" என்றார்.(33)

பேராவல் நிறைந்திருந்த நான், நற்செயல்களைச் செய்தோரின் உலகங்களுக்குச் சென்றவரும், இந்த இடத்தில் இருந்து மறைந்து போனவருமான என் தந்தையிடம் கேட்கத் தொடங்கினேன்" என்றார் {பீஷ்மர்}.(34)

பீஷ்மர் {தன் தந்தை சந்தனுவிடம்}, "பித்ருகள் தேவர்களின் தேவர்களாவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தேவர்களா? அல்லது நாம் துதிக்கத் தகுந்த வேறு பிறரா?(35) சிராத்தங்களில் காணிக்கையளிக்கப்படும் பிண்டங்கள், மறு உலகம் சென்று விட்ட பித்ருக்களை நிறைவடையச் செய்வது எவ்வாறு? சிராத்தத்தின் பலன்கள் என்னென்ன?(36) தேவர்கள், தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும் பாம்புகளுடன் கூடிய மக்கள் யாருக்குத் தங்கள் காணிக்கைகளை அர்ப்பணிக்க வேண்டும்?(37) ஓ! அறம் அறிந்தவரே, அனைத்துமறிந்தவராக நான் உம்மைக் கருதுகிறேன். இதில் எனக்குப் பெரும் ஐயம் இருக்கிறது. என் ஆவலும் பெரிதாக இருக்கிறது. எனவே இதை எனக்கு விளக்குவீராக" என்று கேட்டார். பீஷ்மரின் இந்தச் சொற்களைக் கேட்ட அவரது தந்தை சொல்லத் தொடங்கினார்.(38)

சந்தனு {பீஷ்மரிடம்}, "ஓ! பாவமற்ற பரதனின் வழித்தோன்றலே, பித்ருக்களின் தோற்றத்தையும், சிராத்தங்களின் பலன்களையும் நான் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன். பித்ருக்களுக்காகச் சிராத்தங்கள் செய்வதற்கான நோக்கத்தைக் குவிந்த மனத்துடன் கேட்பாயாக. பரமனின் மகன்களே சொர்க்கத்தில் பித்ருக்களாக அறியப்படுகின்றனர்.(39,40) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், கின்னர்கள் மற்றும் பெரும்பாம்புகள் ஆகியோரும் அவர்களுக்குக் காணிக்கைகளை அர்ப்பணிக்கின்றனர்.(41) சிராத்தங்களினால் நிறைவடையும் அவர்கள், தேவர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் கூடியவர்களாக இந்த உலகத்தை நிறைவடையச் செய்வார்கள் என்பது பிரம்மனின் ஆணையாகும்.(42) எனவே, ஓ! பெருமைமிக்கவனே, நீ அவர்களைச் சிறந்த சிராத்தங்களால் வழிபடுவாயாக. விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அவர்கள் அருள்வார்கள், மேலும் உனக்கான நன்மையையும் அவர்கள் செய்வார்கள்.(43) ஓ! பாரதா, அவர்களது பெயர்கள் மற்றும் குடும்பப் பெயர்களை {கோத்திரங்களைச்} சொல்லி நீ அவர்களை வழிபடும்போது, சொர்க்கத்தில் நாங்களும் அவர்களால் வரவேற்கப்படுவோம்.(44) ஓ! பரதனின் வழித்தோன்றலே, எஞ்சிய பகுதியை மார்க்கண்டேயர் உனக்கு விளக்கிச் சொல்வார். தந்தையிடம் அர்ப்பணிப்பு கொண்டவரும், ஆத்மஞானம் கொண்டவனுமான இந்தத் தவசி {மார்க்கண்டேயர்}, எனக்குத் தமது உதவியை அளிப்பதற்காக இன்றைய சிராத்தத்தில் இருக்கிறார். ஓ! பெருமைமிக்கவனே, இதைக் குறித்து அவரிடம் கேட்பாயாக" என்றார் {சந்தனு}. இதைச் சொல்லிவிட்டு அவர் மறைந்துவிட்டார்" {என்றார் பீஷ்மர்}.(45,46)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 46
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English