Wednesday, 2 March 2022

ஹரிவம்சப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 110

(ஹரிவம்ஷ²ஷ்²ரவணப²லம் மபா⁴ராதஸமாப்திஷ்²ச)

The fruits of the recitation of Harivamsha| Bhavishya-Parva-Chapter-110 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹரிவம்சம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; ஹரிவம்சம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்...

Vyasa and Vishampayana in Janamejaya's sacrice

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்களையும், அவன் கொடுக்க வேண்டிய கொடைகளையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.{1}

வைசம்பாயனர், "ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஒரு மனிதன் ஹரிவம்ச புராணத்தைக் கேட்டால், உடல், சொற்கள், எண்ணம் ஆகியவற்றால் அவன் இழைத்த பாவங்கள் அனைத்தும் உதய சூரியனைக் கண்ட பனி போல மறையும்.{2,3} உண்மையில் ஒரு வைஷ்ணவன், ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் பதினெட்டு புராணங்களையும் கேட்ட பலன்களை அடைகிறான்.{4} ஒரு பாதியையோ, ஹரிவம்சத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தின் ஒரு பகுதியையோ மதிப்புடன் கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைகிறார்கள். கலியுகத்தில் ஜம்பூத்வீபத்தில் இதைக் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கும்.{5} 

மகன்களைப் பெற விரும்பும் பெண்கள் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களைக் கேட்க வேண்டும்.{6} அதைக் கேட்ட பிறகு, பலன்களை அடைய விரும்பும் மனிதன் அதை உரைப்பவனுக்குத் தன் சக்திக்குத் தகுந்த வகையில் மூன்று நிஷ்கங்கள் {நாற்பத்தெட்டு கிராம்} நிறை கொண்ட பொன்னை அளிக்க வேண்டும்.{7} அவன் அதை ஓதுபவருக்கு தன் நலத்திற்காக கன்று, ஆடை மற்றும் பொன்கொம்புகளுடன் கூடிய ஒரு கபிலப் பசுவைக் கொடுக்க வேண்டும்.{8} ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, காதுகளுக்கும், கைகளுக்குமான ஆபரணங்களை அளித்தால், {குறிப்பாக வாகனங்களை அளித்தால்} அது சிறப்புப் பலன்களைக் கொடுக்கும்.{9} ஓ! மன்னா, நீ பிராமணர்களுக்கு நிலங்களை அளிக்க வேண்டும். அதைப் போன்ற வேறு கொடையேதும் கிடையாது; இருக்கவும் முடியாது.{10}

ஹரிவம்சத்தைக் கேட்பவனோ, உரைப்பவனோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, வைஷ்ணவ லோகத்தை {வைகுண்டத்தை} அடைகிறான்.(11) பாரதர்களில் சிறந்தவனே, அத்தகைய மனிதன் தன் குலத்தில் பதினோரு தலைமுறையினரையும் விடுவித்துத் தன் மனைவியையும், பிள்ளைகளையும் விடுவித்துக் கொள்கிறான்.(12) மனிதர்களில் முதன்மையானவனே, ஹரிவம்சத்தைக் கேட்கும்போது, கேட்பவன் தான் கேட்ட சுலோகங்களின் மொத்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு {எண்ணிக்கையில்} வேள்விகளைச் செய்ய வேண்டும்.(13)

இந்த போதனைகளை நினைவில் கொள்வதால் மட்டுமே கூட ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம். மகனில்லாத மனிதன், இதைக் கேட்பதன் மூலம் மகனையும், வறியவன் செல்வத்தையும் அடைகிறார்கள்.(14) நரமேதம், அஷ்வமேதம் ஆகிய வேள்விகளைச் செய்வதன் மூலம் கிட்டும் பலனை ஒருவன் ஹரிவம்சம் சொல்வதைக் கேட்பதன் மூலமே அடைந்துவிடலாம். ஏனெனில் ஹரிவம்சம் ஹரியின் மகிமைகள் நிறைந்ததாகும்.(15) ஒருவன் பிராமணனைக் கொன்றிருந்தாலும், கருக்கலைப்பு செய்திருந்தாலும், பசுவைக் கொன்றிருந்தாலும், மதுபானம் அருந்தியிருந்தாலும், குருவின் மனைவியுடன் கலவியில் ஈடுபட்டிருந்தாலும்கூட அவன் என்னால் பரிந்துரைக்கப்பட்டபடி ஹரிவம்சத்தைக் கேட்டால் தூய்மையடைவான். இதில் ஐயங்கொள்ள வேண்டியதில்லை.(16) எல்லையற்றதும், அற்புதமானதுமான கிருஷ்ணனின் மகிமைகளை நான் இவ்வாறே உனக்கு விளக்கிச் சொன்னேன். அவற்றைக் கேட்கும் எவரும், படிக்கும் எவரும், உலகில் கிடைப்பதற்கரிய உயர்ந்த நன்மையை விரைவில் அடைவார்கள்" என்றார் {வைசம்பாயனர்}.(17)

********* பவிஷ்ய பர்வம் முற்றும் *********

********* ஹரிவம்சம் முற்றும் ********* 

பவிஷ்ய பர்வம் பகுதி – 110ல் உள்ள சுலோகங்கள் : 17

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English