Friday 17 February 2023

சுவடுகளைத் தேடி - பவிஷ்ய பர்வம்

Lord Krishna

ஹரிவம்சத்தின் இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வம் வரை பல்வேறு பதிப்புகளை ஒப்புநோக்க முடிந்தது. ஆனால் பவிஷ்ய பர்வம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் ஹரிவம்ச பதிப்பு விஷ்ணு பர்வத்தை மட்டுமே கொண்டிருப்பதாலும், பிபேக்திப்ராயின் பதிப்பு செம்பதிப்பாகையால் பவிஷ்ய பர்வத்தின் பெரும்பகுதி தவிர்க்கப்பட்டிருப்பதாலும், பவிஷ்ய பர்வத்திற்கான நமது மொழிபெயர்ப்பின் ஒப்புநோக்குதலுக்கு அப்பதிப்புகளைப் பயன்படுத்த முடியவில்லை. சித்திரசாலை பதிப்பை ஒட்டி தேசிராஜு ஹனுமந்தராவ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தில் கிடைக்கும் பதிப்பில் பவிஷ்ய பர்வத்தில் நான்கு அத்தியாயங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பவிஷ்ய பர்வத்தின் 135 அத்தியாயங்களுக்கான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அங்கே முழுமையாகக் கிடைக்கின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பில் பவிஷ்ய பர்வத்தில் மொத்தம் 48 அத்தியாயங்கள் மட்டுமே இருக்கின்றன. இங்கே நாம் மொழிபெயர்த்திருக்கும் பவிஷ்ய பர்வத்தின் 110 அத்தியாயங்களில், முதல் 46 அத்தியாயங்களும், இறுதியில் 2 அத்தியாயங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பைக் கொண்டு செய்யப்பட்டன. எஞ்சிய 62 அத்தியாயங்கள் சுவாமி ஏ.ஜி.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் International Society for Krishna Consiousness வெளியீட்டில் வந்த திரு.பூமிபதி தாசரின் ஆங்கில மொழிபெயர்ப்பின் துணை கொண்டு செய்யப்பட்டது. 

Bhavishya Parva wrapper

பவிஷ்ய பர்வத்தின் 37ம் அத்தியாயத்தில் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாத மற்றொரு அத்தியாயம் 37அ என்ற தலைப்பிட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. அதே போல 38ம் அத்தியாயத்தில் 38அ, 38ஆ, 38இ என்ற மூன்று அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே, நம் பதிப்பின் பவிஷ்ய பர்வ பொருளடக்கத்தை வெளிப்படையாகப் பார்க்க 110 அத்தியாயங்களைக் கொண்டதாகத் தெரிந்தாலும், உண்மையில் 114 அத்தியாயங்களும், 3866 சுலோகங்களும் இருக்கின்றன. சித்திரசாலை பதிப்பில் பவிஷ்ய பர்வம் 135 அத்தியாயங்களைக் கொண்டதாகும். அவற்றில் 21 அத்தியாயங்கள் நம் பதிப்பில் விடுபட்டிருக்கும். முதல் 46 அத்தியாயங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பை ஒட்டி செய்தபோது, இந்த 21 அத்தியாயங்கள் விடுபட்டன. 37ம் அத்தியாயத்தில் இருந்து தொடங்கும் நரசிம்ம அவதாரம் முதல் 44ம் அத்தியாயம் வரையுள்ள பகுதிகளுக்கிடையிலேயே இந்த அத்தியாயங்கள் அனைத்தும் விடுபட்டிருக்கின்றன. அந்த அத்தியாயங்கள் முழுவதும் தேவாசுரப் போரை வர்ணிப்பனவாக உள்ளன. மன்மதநாததத்தர் இதற்கடுத்து வரும் வாமனாவதாரத்தையும் மொழிபெயர்த்திருக்கிறார். நரசிம்மாவதாரத்தில் வரும் அந்தக் குறிப்பிட்ட 21 அத்தியாயங்களையும் அவர் தவிர்த்திருப்பதால், இங்கும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 47ம் அத்தியாயத்தில் பிறகு வருவனவற்றில் இறுதியான 2 அத்தியாயங்களைத் தவிர மற்ற அனைத்தையும் மன்மதநாததத்தர் தவிர்த்திருந்தாலும் இங்கே சேர்க்கப்பட்டிருப்பது ஏனென்றால், மஹாபாரத நாயகர்களுக்குத் தலைவனான கிருஷ்ணனைக் குறித்த செய்திகளாக அவை இருப்பதனால்தான். 

பவிஷ்ய பர்வத்தின் தொடக்கத்தில், பிரபஞ்சப் படைப்பின் கதை வேறு கோணத்தில் சொல்லப்படுகிறது. பிராணாயாமச் செயல்முறை, பிருதுவின் கதை, தக்ஷன் வேள்வி, வராஹ அவதாரம், வேதங்களின் படைப்பு ஆகியவையும்,  நரசிம்ம அவதாரம் முற்றிலும் வேறு வகையிலும் சொல்லப்படுகின்றன. அடுத்ததாக வாமன அவதாரம் குறித்துச் சொல்லப்படுகிறது. பவிஷ்ய பர்வத்தின் 48ம் அத்தியாயம் முதல் துவாரகையில் கிருஷ்ணனின் இளமைக் காலம் விவரிக்கப்படுகிறது. அதில் புத்திரப்பேறுக்காக கைலாசத்தில் கிருஷ்ணன் தவமிருந்தது, கண்டாகர்ணன் என்ற பிசாசு முக்தியடைந்தது, விஷ்ணுவின் சிவத்துதி, சிவனின் விஷ்ணு துதி ஆகியவை இருக்கின்றன. மேலும் விஷ்ணுபுராணம், பாகவதம் போன்றவற்றில் வரும் பௌண்டரகன், ஹம்சன், டிம்பகன், விசக்ரன் ஆகியோரைக் குறித்தும், மிக முக்கியமாக ஏகலவ்யனின் மறைவு குறித்தும் குறிப்புகள் இருக்கின்றன.

2021ம் ஆண்டு பங்குனி உத்திரத்தன்று (28.3.2021) அன்று தொடங்கப்பட்ட பவிஷ்ய பர்வ மொழிபெயர்ப்பு ஜூலை 9, 2021 அன்று மன்மதநாததத்தரின் 48 அத்தியாயங்களோடு முடிவடைந்தது. அடுத்ததாக ஜூலை 19, 2021 அன்று இராமாயண மறு ஆக்கமும் தொடங்கப்பட்டது. இருப்பினும் பவிஷ்ய பர்வம் நிறைவடையாததைப் போன்ற உணர்வே ஆதிக்கம் செலுத்தி வந்தத்தால், ராமாயணத்தின் முதல் காண்டமான பால காண்டம் நிறைவடையும் முன்பே, மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாத பவிஷ்ய பர்வப் பகுதிகளையும் மீண்டும் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அக்டோபர் 6, 2021 முதல் ஒருநாள் ராமாயணத்தின் ஒரு சர்க்கத்தை மறு ஆக்கம் செய்தால், அடுத்த நாள் பவிஷ்ய பர்வத்தில் ஓர் அத்தியாயத்தை மொழிபெயர்ப்பதெனத் தீர்மானித்து மெல்ல மெல்ல பவிஷ்ய பர்வத்தையும் மொழிபெயர்த்து வந்தேன். டிசம்பர் 5, 2021ல் ராமாயணத்தின் பாலகாண்டம் நிறைவடைந்ததும், ராமாயண மறு ஆக்கத்தை சற்றே நிறுத்தி வைத்துவிட்டு, ஹரிவம்ச பவிஷ்ய பர்வத்தை முழுமூச்சாக மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அவ்வாறே தொடர்ந்து செயல்பட்டு பவிஷ்ய பர்வத்தின் இறுதி அத்தியாயத்தை மார்ச் 2, 2022 அன்று மொழிபெயர்த்து நிறைவடைந்தேன். பிப்ரவரி 8, 2020ல் தொடங்கப்பட்ட ஹரிவம்ச மொழிபெயர்ப்பு இவ்வாறே நிறைவடைந்தது.

ஹரிவம்சம் முதல் பர்வத்தில் 55 அத்தியாயங்களும், 3,119 சுலோகங்களும் இருக்கின்றன. இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வத்தில் 132 அத்தியாயங்களும், 7,787 சுலோகங்களும் இருக்கின்றன. மூன்றாம் பர்வமான பவிஷ்ய பர்வத்தில் 110 அத்தியாயங்களும் {சரியாகச் சொன்னால் 114 அத்தியாயங்களும்}, 3,866 சுலோகங்களும் இருக்கின்றன. ஆக மொத்தம் ஹரிவம்சம் முழுமையாக 297 அத்தியாயங்களும் {சரியாகச் சொன்னால் 301 அத்தியாயங்களும்}, 14,772 சுலோகங்களும் கொண்ட பதிப்பாக அமைந்திருக்கிறது. 


பவிஷ்ய பர்வத்தின் இறுதி அத்தியாயமான ஹரிவம்ச பலன்களில் 110:5, "கலியுகத்தில் ஜம்பூத்வீபத்தில் ஹரிவம்சத்தை அறிபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கும்" என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அரிதினும் அரிதான படைப்பை தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். ஐயம் எழும் இடங்கள் அனைத்திலும் எனக்குப் பேருதவியாக இருந்த பதிப்புகளைச் செய்த மன்மதநாததத்தர், தேசிராஜு ஹனுமந்த ராவ், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்கார், பிபேக்திப்ராய், பூமிபதி தாசர் ஆகியோரை என் குருக்களாக பாவித்துத் தொழுகிறேன். பதிவுகளை இட்ட உடனுக்குடன் திருத்தம் செய்து உதவிய நண்பர் உ.ஜெயவேலன் அவர்களுக்கும், தள்ளாத வயதிலும் சொல் சொல்லாக, வரி வரியாகப் படித்து, சொற்பிழைகளையும், சொற்றொடர் பிழைகளையும் சுட்டிக் காட்டிய என் சித்தி திருமதி.நா.பிரபா அவர்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்த பரமனை உளமாறப் போற்றித் துதிக்கிறேன்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
202302171232