Wednesday 2 March 2022

திரிபுரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 108

(திரிபுரவதவ்ருத்தாந்தம்)

Tripura annihilated | Bhavishya-Parva-Chapter-108 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : திரிபுரமெனும் அசுரர்களின் ஆகாய நகரங்கள் மூன்றும் சிவனால் அழிக்கப்பட்டது...

Shiva in chariot and vishnu as bull

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பிராமணரே, முக்கண்ணனான மஹாதேவன் மூன்று நகரங்களுக்கு ஒப்பான விமானங்களில் வானில் பயணித்த அசுரர்களின் மகன்களை எவ்வாறு கொன்றான்? இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)

வைசம்பாயனர், "மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், உயிரினங்கள் அனைத்தின் மீதும் வஞ்சங் கொண்டவர்களுமான தைத்தியர்கள் சங்கரனால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை விரிவாகக் கேட்பாயாக. பழங்காலத்தில் உயிரினங்கள் அனைத்தையும் எப்போதும் துன்புறுத்த விரும்பும் தைத்தியர்களின் மீது அற்புதமான மூன்று சூலங்களை ஏவி சங்கரன் அவர்களைக் கொன்றான்.(2,3)

மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, ரத்தினங்கள் முதலிய பொருட்களால் உண்டான திரிபுரங்களில் {மூன்று நகரங்களில்} அந்த அசுரர்கள் வசித்து வந்தனர். இவ்வாறே அவர்கள் மேகங்களைப் போல வானில் திரிந்து வந்தனர்.(4) தங்கத்தாலான அந்த மூன்று நகரங்களும், நெடிய மாளிகைகளால் நிறைந்திருந்தன, ஒளிரும் ரத்தினங்களால் அமைக்கப்பட்ட பெரும் வாயில்களால் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. வானில் பறக்கும்போது அவை மிகப் பிரகாசமாகத் தெரிந்தன. இந்த விமானங்கள் தன்னொளி படைத்தவையாக இருந்தன. பெருந்தவத்தின் பலத்தால் உண்டான அவை ஒவ்வொன்றும் கந்தர்வர்களின் நகரத்தைப் போலத் தெரிந்தன.(5,6) அந்நகரங்கள் சக்திமிக்கவையாகவும், பிரகாசமிக்கவையாகவும் இருந்தன. சிறகுகள் படைத்த குதிரைகளால் இழுக்கப்பட்ட அவை, மனத்தின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் செல்லக்கூடியவையாக இருந்தன.(7) அந்தக் குதிரைகள் முழுவேகத்துடன் சென்று கனைத்தபோது, அவற்றின் குளம்புகளின் அழுத்தத்தால் வானம் துன்புறுவதைப் போலத் தெரிந்தது.(8)

நெருப்பு போன்ற சக்திமிக்கவர்களும், தவத்தின் பலத்தால் பாவங்களைச் சாம்பலாக எரித்தவர்களும், தம்மை உணர்ந்தவர்களுமான முனிவர்களால் மட்டுமே அந்த அசுரர்களின் இருப்பை உணர முடிந்தது. காற்றைப் போல வேகமாக அவ்வசுரர்கள் பயணித்தபோது, மொத்த அண்டத்தையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.

கந்தர்வர்களின் நகரங்களைப் போலவே அந்த ஆகாய நகரங்கள் மூன்றிலும் பாடுவதும், இசைப்பதும் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நகரங்கள் உருகிய தங்கத்தின் நிறத்தில் இருந்தன. அவற்றில் அனைத்து வகை ஆயுதங்களும் சேமிக்கப்பட்டிருந்தன. நன்றாக அலங்கரிக்கப்பட்டவையும், அழகில் இந்திரனின் மாளிகைக்கு நிகரானவையுமான உயர்ந்த கட்டடங்கள் பலவும் அந்நகரங்களின் அழகை அதிகரித்துக் கொண்டிருந்தன. கைலாச மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்த கோபுரங்களைக் கொண்ட மகத்தான மாளிகைகள் பலவற்றால் நிறைந்த அந்த அசுர நகரங்கள், சூரியர்கள் பலரைப் போல வானுக்கு ஒளியூட்டிக் கொண்டிருந்தன.

மன்னா, அந்த அசுர நகரங்கங்களில் எப்போதும் துரிதமான செயல்பாடுகள் இருந்தன. அங்கே வீரமிக்கப் போர்வீரர்கள் சீற்றமிக்கச் சிங்கங்களைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தனர். அழகிய பெண்களும், ஆண்களும் அங்கே வசித்திருந்ததால் அவை சைத்ரரதமெனும் தெய்வீக வனத்திற்கு ஒப்பானவையாகத் திகழ்ந்தன. மன்னா, திரிபுரம் என்று அறியப்பட்ட இந்த ஆகாய நகரங்கள் நெடிய கொடிகள் பலவற்றாலும், ஒளிரும் பதாகைகள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு, வானில் மின்னலைப் போலத் தோன்றிக் கொண்டிருந்தன.

பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்நகரங்களில் சூரியநாபன், சந்திரநாபன் போன்ற தைத்தியேந்திரர்கள் வாழ்ந்து வந்தனர். போலிச் செருக்கில் மயங்கியிருந்த அவர்கள், தேவர்களுக்காகவும், பித்ருக்களுக்காகவும் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பாதையை மறித்துக் கொண்டிருந்தனர். கைகளில் விற்களையும், கணைகளையும் கொண்ட அசுரர்கள், தேவர்களாலும், பித்ருக்களாலும் பயன்படுத்தப்பட்ட நெருப்புப் பாதையைக் கைப்பற்றியபோது, சொர்க்கவாசிகள் விரைந்து சென்று பிரம்மனிடம் சரணடைந்தனர். தங்கள் பயணம் அசுரர்களால் தடுக்கப்படுவதால் துன்புற்ற தேவர்களின் வாய்கள் வறண்டிருந்தன.(9-20)

தேவர்கள் பிரம்மனை அணுகி, பரிதாபமான குரலில், "வேள்வி ஆகுதிகளைக் கொடுப்பவரே, எங்கள் பகைவர்கள், வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பாகங்களை நாங்கள் ஏற்பதைத் தடுத்து எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.{21) நயமாகப் பேசுபவர்களில் முதன்மையானவரே, நாங்கள் அசுரர்களைக் கொல்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவீராக. உமது கருணையால் போரில் பகைவரை எங்களால் வீழ்த்த இயலும் என நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.(22)

வரங்களை அளிக்க விரும்பும் பிரம்மன், தேவர்கள் தணிவடையும் வகையில், "சொர்க்கவாசிகளே, உங்கள் பகைவரை பழிதீர்க்கும் வழிமுறையை நான் சொல்கிறேன் கேட்பீராக. சங்கரனைத் தவிர வேறு எவராலும் இந்த அசுரர்களைக் கொல்ல இயலாது" என்றான்.

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பிரம்மனின் சொற்களைக் கேட்ட தேவர்கள் அனைவரும், கவலையெனும் தங்கள் சுமை பெருமளவு குறைந்ததை உணர்ந்தனர். விடைபெற்றுக் கொள்ளும் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பூமியில் இறங்கி, விந்தியத்திற்கும், சுமேரு மலைகளுக்கும் இடையில் ஓர் இடத்தில் மாய யோகியரைப் போலக் கடுந்தவம் செய்தனர். அவர்கள் சிவனை வழிபட்டபோது பிரம்மசம்ஹிதையின் முக்கிய வரிகளை ஓதினர்.(23-26) அவர்கள், பெண்களின் நினைவேதுமின்றிக் கடுமையான பிரம்மச்சரியம் பயின்றனர். இரவில் அவர்கள் குசப்புல்லாலான விரிப்பில் படுத்தனர். அவர்களின் ஆபரணங்கள் தாமிரத்தாலும், இரும்பாலும் ஆனவையாக இருந்தன.(27)

குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தத் தேவர்கள், காடுகளில் இயற்கையாக இறந்த விலங்குகளைத் திரட்டி, மெல்லிய மான் தோல்களையும், அழகிய புலித்தோல்களையும் உடுத்திக் கொண்டனர். இவ்வாறான உடை உடுத்திக் கொண்ட தேவர்கள், தங்கள் மாய சக்தியின் மூலம் தங்களை மறைத்துக் கொண்டு சிவனின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.

அங்கே அவர்கள் சிவனை வணங்கி அவனிடம், "பிரபுவே, சாம்பலில் ஊற்றப்பட்ட நெய்யைப் போல நாங்கள் உன்னிடம் பெற்ற வரங்கள் பயனற்றுப் போகும் வகையில் நீ எங்களுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பிக் கொண்டாய். தேவர்களின் ஆசானான பிரம்மனுடைய அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் உன்னிடம் உறைவிடம் நாடி வந்திருக்கிறோம். காலம், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றைக் {காலதேசவர்த்தமானங்களைக்} கருத்தில் கொண்டு எங்கள் சொற்களைக் கேட்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம்" என்றனர்.

தேவர்களின் சொற்களை ஏற்றுக் கொண்டு, எதிர்காலச் செயல்பாட்டைச் சிந்தித்த மஹாதேவன், இந்திரனின் தலைமையிலான தேவர்களுடன் சேர்ந்து அசுரர்களுடன் போரிடுவதற்காகக் கவசம் தரித்துக் கொண்டான். தேவர்கள் அனைவரும் பளபளக்கும் தங்கள் ஆபரணங்களை அகற்றிவிட்டுக் கவசங்களைப் பூண்டனர். அவர்கள் சூரியனின் பாதையில் சென்ற போது, சுடர்மிகும் நெருப்பைப் போலப் பிரகாசித்தனர். போர் தொடங்கியபோது, நெடுமலைகளைப் போலத் தெரியும் போர்வீரர்களான ருத்திரர்கள் அனைவரும், மேலான ஆற்றல் படைத்த தங்கள் பகைவரை சாம்பலாக எரிக்கத் தொடங்கினர். அசுரர்களை அழிக்க விரும்பிய சொர்க்கவாசிகள் அனைவரும், ஒப்பற்ற சக்தி கொண்டவர்களாகவும், விரும்பிய வடிவம் எதனையும் ஏற்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருந்தனர். அசுரர்களுடன் போரிடத் தயாராக அவர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திரண்டனர்.

குபேரனின் தலைமையிலான தேவர்கள் பலரால் சூழப்பட்ட மஹாதேவன், திரிபுர வாசிகளுடன் போரிடத் தொடங்கினான். போர் தொடர்ந்தபோது, திரிபுரத்தின் அசுரர்கள், சிவனின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், உடல்கள் துளைக்கப்பட்டும், இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்டுச் சிறகுகள் அறுந்து விழும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்தனர். தேவர்களின் சூலங்கள், சக்தி ஆயுதங்கள், சக்கரங்கள், பராசங்கள், கணைகள் ஆகியவற்றால் அசுரர்கள் பலரின் இதயங்கள் துளைக்கப்பட்டன.(28-41) தேவர்களின் தாக்குதலில் பெருகும் நெருப்பால் எரிக்கப்பட்ட அசுரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் பீதியடையத் தொடங்கினர். போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, இருதரப்பிலும் பேரிழப்புகள் இருந்தன. தேவர்கள் தங்கள் மாய சக்திகளை அடிக்கடி பயன்படுத்தியதால், தானவர்களால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. எனினும், மாலையில் சூரியன் மறைந்ததும் அசுரர்கள் தங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, தேவர்களுடன் பெருஞ்சீற்றத்துடன் போரிட்டு, அவர்களில் பலர் தரையில் விழுமளவுக்குக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர்.(42,43) இரவில் இடையறாத கணைமாரியைப் பொழிந்த அசுரர்கள், தேவர்களை வீழ்த்திவிட்டு, வானில் முழங்கும் மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தனர்.(44)

போரில் தாங்கள் அடையும் வெற்றியால் உயிர்பெற்ற அசுரர்கள், தங்களுக்குள், "நாம் சக்திமிக்கவர்கள், இந்தப் போரில் வெற்றியடைய நினைத்த தேவர்களை, நாம் ஒற்றுமையுடன் முறியடித்திருக்கிறோம். நமது தடிகள், சூலங்கள், பரிகங்கள் ஆகியவற்றின் தாக்குதலை எவ்வளவு காலம்தான் அவர்களால் தாக்குப்பிடிக்க இயலும்?" என்று பேசிக் கொண்டனர்.

அசுரர்களில் முதன்மையானோரான அவர்கள், தங்கள் ஆன்ம ஆசானான சுக்ராச்சாரியரின் கருணையின் சக்தியாலும், பொறைத்திறத்தாலும் நிறைந்திருந்தனர். வெற்றியடைந்த அசுரர்கள், தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் போர்க்களத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர்.

அப்போது சிவனும், தேவர்கள் பிறரும் தங்கள் தேர்களில் அமர்ந்தபடியே உரக்க முழங்கினர். மேனியின் பிரகாசத்தால் செருக்கடைந்த அசுரர்களை அவர்கள் எரிக்கத் தொடங்கினர். அண்ட அழிவின்போது பெருஞ்சக்திவாய்ந்த சூரியன், கோள்கள் அனைத்தையும் சாம்பலாக எரிப்பதைப் போலவும், பிரளயத்தின் போது அசைவனவற்றையும், அசையாதனவற்றையும் உயிரினங்களின் தலைவனான ருத்திரன் அழிப்பதைப் போலவும் சிவனின் தலைமையிலான தேவர்கள் அசுரர்களை எரித்தனர். வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட சிவனின் தேரானது, மின்னலால் சூழப்பட்ட மேகத்தைப் போல வானத்தில் தெரிந்தது.

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளா, அந்தத் தேரில் இருந்த கொடியானது, காளைச் சின்னத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மேகத்தைப் போல அது தெரிந்தது. அப்போது, சிவனின் பரம மங்கல குணத்தைப் புகழ்ந்து சித்தர்கள் அவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். சத்தியத்தில் நிலைத்திருக்கும் அமைதிநிறைந்த முனிவர்களும், அமுதம் பருகும் தேவர்களும், கந்தர்வர்களுடனும், அப்சரஸ்களுடனும் சேர்ந்து தங்கள் இனிய குரலால் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.

மன்னா, அருகில் அழகாக நின்று கொண்டிருந்த பித்ருக்கள் அந்நேரத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர். அப்போது அவர்களின் பகைவர்களான திதியின் மகன்களும் {தைத்தியர்களும்}, தனுவின் மகன்களும் {தானவர்களும்} அனைத்துத் திக்குகளில் இருந்தும் திடீரென எண்ணற்ற கணைகளைப் பொழிந்தனர். உயர்ந்த மாளிகைகளாலும், ஆயிரக்கணக்கான மடுக்களாலும் நிறைந்தவையும், உயிரினங்கள் அனைத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்த ஆகாய நகரங்களில் நிலைத்திருந்த அசுரர்கள், தேவர்களின் மீது கணைமாரியைப் பொழிந்து கொண்டிருந்தனர்.

பாரதா {ஜனமேஜயா}, திறம் மிக்கப் போர்வீரர்களான அசுரர்கள், அந்தப் போரில் ஈட்டிகளையும், சூலங்களையும், வாள்களையும் வீசி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள், பகைவரின் கதாயுதங்களை நொறுக்கத் தங்கள் கதாயுதங்களையும், ஈட்டிகளை நொறுக்கத் தங்கள் ஈட்டிகளையும் பயன்படுத்தினர். அவர்கள் தங்கள் ஆயுதங்களால், பகைவரின் ஆயுதங்களை அழித்தனர், தங்கள் மாயையால் பகைவரின் மாயையை அகற்றினர். ஆயிரக்கணக்கான அசுரர்கள் ஆயிரக்கணக்கான கணைகளையும், சக்திகளையும், கோடரிகளையும், வஜ்ரங்களையும் எடுத்துக் கொண்டு தேவர்கள் மீது அவற்றை ஏவினர். மாயசூலங்களாலும், கணைமாரியாலும் காயமடைந்த தேவர்கள், காலனுடைய கோரப்பற்களின் அருகில் நிற்பவர்களைப் போல அப்போது நம்பிக்கையிழந்தனர். கந்தர்வர்களின் நகரத்திற்கு ஒப்பான மஹாதேவனின் பெரிய தேரும் கூட, பெருஞ்சக்திவாய்ந்த அந்த அசுரர்களுடன் மோதப் போதுமானதல்ல என்று தெரிந்தது.(45-60) சூலங்கள், கணைகள், இரும்புத் தடிகள், பரிகங்கள் உள்ளிட்ட அசுரர்களின் பலவகை ஆயுதங்களால் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து தாக்கப்பட்டவனும், சசியின் கணவனுமான இந்திரன், துயரத்தில் மூழ்கி அசையாமல் நின்று கொண்டிருந்தான்.(61)

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பூமியின் தலைவா, பெரும் முனிவர்களான பிரம்மனின் மகன்களின் குரல் பின்வரும் அறிவிப்பை வானில் இருந்து அறிவித்தது.(62) "மஹாதேவனின் தேர் தடுக்கப்பட முடியாதது, வெல்லப்படமுடியாதது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைக் கொண்டு அந்தப் பிரபு அசுரர்களை வீழ்த்துவான்" என்றது.(63)

மன்னா, அதே வேளையில் மஹாதேவனின் சிறந்த தேர் வானில் இருந்து, அனைத்து வகை உயிரினங்களும் திரியும் பூமியில் விழுந்தது.(64) அந்த அற்புதத் தேர் பூமியைத் தீண்டியபோது, மலைகள் நடுங்கத் தொடங்கின, மரங்கள் இங்கும் அங்கும் ஆடின, சமுத்திரம் கலங்கியது, பத்துத் திக்குகளிலும் ஒளி குன்றியது.(65) கல்விமான்களான பிராமணர்கள் மங்கல மந்திரங்களை ஓதத் தொடங்கினர். இம்மையில் வெற்றியையும், மறுமையில் முக்தியையும் அடைய விரும்புவோரால் நாடப்படும் பரமனின் விருப்பத்தின் பேரில் அந்நேரத்தில் உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் அமைதி நிலவியது.

பாரதா {ஜனமேஜயா}, மாய யோகியரின் தலைவனான விஷ்ணு அக்காட்சியை ஆய்வு செய்து, தன் ஆற்றலால் மனத்தில் தீர்மானத்தை அடைந்து, ஒரு காளையின் வடிவை ஏற்று[1] மஹாதேவனின் தேரை பூமியில் இருந்து மெதுவாக உயர்த்தினான். அந்நேரத்தில் அவன் {ஹரி} பேரொளி கொண்ட பெரும் பிரகாசத்துடன் இருந்தான். அந்த ஒளி மஹாதேவனின் பிரகாசத்துடனும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான தேவர்களின் பிரகாசத்துடனும், தனிமையான காடுகளில் வசித்தபடியே கடுந்தவம் செய்து பெருஞ்சக்தியடைந்த பெரும் முனிவர்களின் பிரகாசத்துடனும் கலந்தது.(66-70)

[1] மஹாபாரதத்திலும் திரிபுரவதம் சொல்லப்பட்டிருக்கிறது. திரிபுர வதத்தில் பிரம்மன் சிவனுக்குச் சாரதியானதாக முழுமஹாபாரதம், கர்ண பர்வம் 34ம் பகுதியில் துரியோதனன் சல்லியனிடம் சொல்கிறான். இங்கே விஷ்ணு காளையாகத் தோன்றி சிவனுக்கு உதவி புரிகிறான்.

காளையின் வடிவில் இருந்த ஹரி, தேவர்களின் தலைவன் {இந்திரன்} நின்றிருந்த அற்புதத் தேரைத் தன்னிரு கொம்புகளாலும் எடுத்து பெருங்கடல் கடையப்படுவது போல உரக்க முழங்கினான்.(71) இரு கொம்புகளுடன் கூடிய காளையின் வடிவில் இருந்த விஷ்ணு, பௌர்ணமி நாள் கடலைப் போல உரக்க முழங்கியபடியே வானில் உயர எழுந்தான்.(72) போரிடும் ஆவல் கொண்டவர்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான அசுரர்கள், இதைக் கண்டு பேரச்சம் அடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்கள் கவசங்களைப் பூண்டு போரிட வந்தனர்.(73) அந்த அசுரர்கள் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவர்களாகவும், தங்கள் பலத்தில் வெடித்துவிடுபவர்களைப் போலவும் இருந்தனர். அவர்கள், தேவர்களின் மீது கணைமாரியைப் பொழிந்து மீண்டும் போரிடத் தொடங்கினர்.(74)

அப்போது சிவன், ஒரு நெருப்புக் கணையில் பிரம்மாஸ்திரத்தை ஈர்த்து, திரிபுரம் என்றறியப்பட்ட அந்த மூன்று ஆகாய நகரங்களின் மீதும் அதை ஏவத் தயாரானான்.(75) பரதனின் வழித்தோன்றலே, சிவன் அதை ஏவும் முன், தன் மனத்தால் அதை மூன்று வடிவங்களாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிலும் சக்தியையும், வாய்மையையும், பிரம்ம யோகத்தையும் ஈர்த்தான். இதைச் செய்தபிறகு, அந்தக் கணை அசுரர்களின் உயிரை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அதை ஏவினான். அந்தக் கணை காற்றில் சென்ற போது, தங்கம் போல ஒளிர்ந்து பெருஞ்சக்தியை வெளிப்படுத்தியது.(76,77) மூன்றாகத் தன்னைப் பிரித்துக் கொண்டதும், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி வாய்ந்ததுமான அந்தக் கணையை ஏவியதன் மூலம் மஹாதேவன் அசுரர்களின் மூன்று நகரங்களையும் சிதறடித்தான்.(78)

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளா, அந்த மூன்று கணைகளும் அந்த மூன்று நகரங்களைத் தாக்கியபோது, அவை எரியத்தொடங்கி விந்திய மலையின் சிகரங்களைப் போலக் கீழே விழுந்தன.(79) பூமியின் தலைவா, மஹாதேவனின் நெருப்புக் கணைகளால் எரிக்கப்பட்ட அந்த ஆகாய நகரங்கள் மூன்றும் பூமியில் எரிந்து விழுந்தன.(80) இவ்வாறே வைடூரியத்தின் நிறத்தில் இருந்தவையும், மலைச்சிகரங்களைப் போன்று உயர்ந்தவையுமான அந்த நகரங்கள் மூன்றும், மஹாதேவனின் பிரம்மாஸ்திரத்தால் எரிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(81)

திரிபுரம் அழிக்கப்பட்ட போது, தேவர்கள் அனைவரும் மஹாதேவனிடம், "அனைத்திலும் பெரியவனே, செருக்கில் மிதக்கும் அசுரர்கள் அனைவரையும் அழிப்பாயாக" என்று வேண்டினர்.(82) அந்த முறையீட்டிற்குப் பதில் அளிக்கும் வகையில், சிவனும், பிரம்மனின் தலைமையிலான பெருஞ்சக்திவாய்ந்த தேவர்கள் பிறரும் சேர்ந்து, மாய யோகியரின் தலைவனும், மாய சக்திகள் அனைத்தின் பிறப்பிடமும், அந்நேரத்தில் சிரித்துக் கொண்டிருந்தவனுமான விஷ்ணுவை வேண்டினர்" என்றார் {வைசம்பாயனர்}.(83) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 108ல் உள்ள சுலோகங்கள் : 83

மூலம் - Source