Monday 31 January 2022

பிரம்மதத்தன் மித்ரஸஹர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 79

(ஹம்ஸடிம்பகோத்பத்தி)

Hamsa and Dimbhaka | Bhavishya-Parva-Chapter-79 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: மன்னன் பிரம்மதத்தனுக்கும், பிராமணர் மித்ரஸஹருக்கும் இடையில் இருந்த நட்பு; ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் பிறப்பு...


Brahmadatta and his wives

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, சால்வதேசத்தைத் தன் ராஜ்ஜியமாகவும், பிரம்மதத்தன் என்ற பெயரையும் கொண்ட ஓர் உத்தம மன்னன் இருந்தான். மன்னா, அவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட தூய இதயம் படைத்தவனாகவும் இருந்தான்.(1) அவன் எப்போதும் தன் மனத்தையும், புலன்களையும் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்து வந்தான். வேதங்களில் சொல்லப்படும் பிரம்மத்தைக் குறித்த அறிவியலை நன்கறிந்தவனாகவும் அவன் இருந்தான். எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவனாக இருந்ததால் அவனது இருப்பே உயிரினங்கள் அனைத்திற்கும் மங்கலகரமானதாக இருந்தது.(2)

பூமியின் தலைவா {ஜனமேஜயா}, அவனுக்கு உன்னத மனங்கொண்ட அழகிய மனைவியர் இருவர் இருந்தனர். அவர்கள் நல்ல குணங்களைக் கொண்டவர்களாக இருப்பினும் பிள்ளைகள் இல்லாதவர்களாக இருந்தனர்.(3) தேவலோகத்தில் இந்திரன் சசியுடன் இன்புற்றிருந்ததைப் போலவே, பிரம்மதத்தனும் தன் மனைவியர் இருவருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தான். அவன், பெரும் யோகியும், தொடர்ந்து வேத வேதாங்க கல்வியில் ஈடுபட்டவரும், மித்ரஸஹன் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணரைத் தன் நண்பராகக் கொண்டிருந்தான். பிராமணர்களில் மகுட ரத்தினமாகத் திகழ்ந்த அவரும் அந்த மன்னனைப் போலவே பிள்ளையற்றவராக இருந்தார்.(4,5)

ஒரு மகனை அடைய விரும்பிய மன்னன், தன் மனைவியர் இருவரின் துணையுடன் கூடியவனாகப் பத்து வருட காலம் திரிசூலபாணியான சிவனை வழிபட்டான்.(6) மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, பிராமணரான மித்ரஸஹரும் ஒரு மகனை அடையும் நோக்கத்திற்காக வைஷ்ணவ வேள்வி ஒன்றை {வைஷ்ணவ ஸத்ரத்தைச்} செய்தார்.

மன்னன் பிரம்மதத்தனால் வழிபடப்பட்ட செந்நீல வண்ணனான சிவன், அவனது கனவில் தோன்றி, "மன்னா, மங்கலங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். ஒரு வரம் வேண்டுவாயாக" என்று கேட்டான்.(7,8) அந்த மன்னனும் {பிரம்மதத்தனும்} மகிழ்ச்சியாக, "என் அன்புக்குரிய தலைவா, நான் இரண்டு மகன்களை அடைய விரும்புகிறேன்" என்று கேட்டான். காளைச் சின்னக் கொடியைக் கொண்ட சிவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி மறைந்தவுடனேயே மன்னன் தன் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.

நுண்ணறிவுமிக்க மித்ரஸஹர், கலப்படமற்ற அர்ப்பணிப்புடன் ஐந்தாண்டு காலம் கேசவனை வழிபட்டார். தேவர்களின் தலைவனான அந்த ஜனார்த்தனன், அவரது வழிபாட்டில் நிறைவடைந்து, அவரைப் போலவே நல்லவனாக ஒரு மகனை அருளினான். மன்னா, உரிய காலத்தில் ராணிகள் இருவரும் கருவுற்ற அதே வேளையில் விஷ்ணு அந்தப் பிராமணருடைய மனைவியின் கருவறையில் தன் வீரியத்தை வைத்தான். சிவனின் அருளால் ராணிகள் இருவரும் வலிமைமிக்க இரண்டு மகன்களைப் பெற்றனர்.

மன்னன் பிரம்மதத்தன், தன் இரு மகன்களுக்கும், ஜாதகர்மம் {பெயர்ச்சூட்டுவிழா} முதலிய பரிந்துரைக்கப்பட்ட சடங்குகள் அனைத்தையும் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளுடனும், விதிமுறைகளுடனும் செய்து வைத்து, பிராமணர்களுக்கு ஈகையாகப் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்தான்.

மன்னா {ஜனமேஜயா}, மித்ரஸஹரும், ஜகந்நாதனே பிள்ளையாகப் பிறந்திருக்கிறானென அனைவருக்கும் தோன்றுவண்ணம் ஒரு மகனைப் பெற்றார். அந்தப் பிராமணர் {மித்ரஸஹர்}, தன் மகனுக்கான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் விதிப்படி கடமையுணர்வுடன் செய்தார்.(9-16)

இளவரசர்கள் இருவரும், அந்தப் பிராமணப் பிள்ளையும் ஒரே வயதினராக இருந்தனர். அவர்கள் அனைவரும் வேத கல்வி கற்று, வேதாந்தங்களில் தேர்ச்சியடைந்து, வில்லைப் பயன்படுத்தும் முறையையும், படைக்கலைகள் பிறவற்றையும் கற்றுக் கொண்டனர். இளவரசர்களில் மூத்தவன் பெயர் ஹம்சன் என்பதும், இளையவன் பெயர் டிம்பகன் என்பதும் ஆகும். அந்தப் பிராமணரின் {மித்ரஸஹரின்} மகன் பெயர் ஜனார்த்தனன் ஆகும். அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(17-19)

பவிஷ்ய பர்வம் பகுதி – 79ல் உள்ள சுலோகங்கள் : 19

மூலம் - Source