Tuesday 26 October 2021

விஷ்ணு தரிசனம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 56

(கண்டாகர்ணஸ்ய விஷ்ணுஸாக்ஷாத்காரலாபம்)

Vision of Vishnu | Bhavishya-Parva-Chapter-56 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கண்டாகர்ணனுக்குத் தரிசனம் தந்த விஷ்ணு; கண்டாகர்ணனின் சிந்தனை...

Vision of Vishnu seen by Dhruva

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   "பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, தன்னையே ஆன்மாவாகவும், உயிராகவும் தூய புத்தியில் கருதி, தன்னையே தியானித்துக் கொண்டிருந்த அந்தப் பிசாசைக் கண்டான்.(1) ஹரியின் புனிதப் பெயர்களின் முன் பிரணவத்தை {ஓம் எனும் மந்திரத்தை} இட்டு ஒவ்வொரு பெயராக அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் தன் விருப்பம் நிறைவேற தன் இதயத்தில் பிரார்த்தித்தான். இறுதியில் கண்டாகர்ணன் தன் தியானத்தில் ஹரியைக் கண்டான்.(2)

ஜகந்நாதன் {கிருஷ்ணன்}, "இந்தப் பிசாசானவன் எவ்வாறு இவ்வளவு நல்லவானக இருக்கிறான்" என்று சிந்தித்தான். நீண்ட காலம் இவ்வாறு சிந்தித்துப் பின்வரும் தீர்மானத்தை அடைந்தான்.(3) ‘தனதஸ்யனுடைய {குபேரனுடைய} உபதேசத்தின் பேரில் இவன் என் பெயர்களை, "வாசுதேவா, கிருஷ்ணா, மாதவா,(4) ஜனார்த்தனா, ஹரியே, விஷ்ணுவே, பூதபாவனபாவனா, நராகாரா, ஜகந்நாதா, நாராயாணா, பராயணா" என்ற என்னுடைய பெயர்கள் பலவற்றைச் சொல்லி வருகிறான்.(5) மேலும் இவன் நித்தம் இரவும் பகலும் என் பெயர்களைச் சொல்லிவருகிறான். உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும், நிற்கும்போதும், உண்ணும்போதும், பருகும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும் இவன் இந்தப் பெயர்களையே தொடர்ந்து சொல்லிவருகிறான்.(6) மாமிசம் உண்ணும்போதும், குருதி பருகும்போதும் இவன் என் பெயர்களையே சொல்கிறான். எண்ணற்ற உயிரினங்களைக் கொல்லும்போதும், இடையறாமல் மான்களைக் கொல்லும்போதும்,(7) கொலை செய்வது, உண்பது, உறங்குவது என எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் இவன் என்னையே கர்த்தனாக ஏற்கிறான்.(8) இதன்காரணமாக இவனது பாவச்செயல்கள் செல்லாதவை ஆகின்றன" என்று சிந்தித்தான் அந்த ஜகந்நாதன்.

ஓ! மன்னா, இந்தத் தீர்மானத்தை அடைந்த அந்த ஜகத்பதி, தன் பக்தனான அந்தப் பிசாசிடம் மகிழ்ந்து, அவனுடைய தூய்மையான இதயத்திற்குள் வெளிப்பட்டான்.(9,10) இவ்வாறே அந்தக் கோர பிசாசானவன், பாவங்கள் அனைத்தையும் அழிப்பவனான கேசவனை, பீதாம்பரம் உடுத்தியவனாகத் தன் இதயத்திற்குள் கண்டான். அந்த ஹரியின் நிறம் கருப்பாக இருந்தது, அவனது கண்கள் மலரும் தாமரை மலர்களைப் போல இருந்தன.(11) அந்த விஷ்ணுவின் கரங்கள் சங்கு, சக்கர, கதாயுதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காட்டு மலர் மாலை அவனது கழுத்தைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் கிரீடத்துடனும், மார்பில் கௌஸ்துப மணியுடனும், ஸ்ரீவத்சக் குறிகளுடனும் அவன் இருந்தான்.(12)

அவனுடைய நிறம் நீல மேகம் போலக் கருப்பாக மயக்கும் வகையில் இருந்தது. அவன் பிரபஞ்சத்தில் உள்ள அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவனாகக் கருடனின் முதுகில் அமர்ந்திருந்தான். அவன் நான்கு கைகளைக் கொண்டிருந்தான். அவனது ஒலி மங்கலமானதாக இருந்தது. நீக்கமற நிறைந்த அந்த மங்கலத் தலைவன் அசைவின்றி இருந்தான்.(13) அவன் ஆதியும், அந்தமும் அற்றவனாக இருந்தான். அவன் நிதானனாகவும், நித்தியனாகவும் இருந்தான். முற்றான சத்தியனாகவும், எப்போதும் தூயனாகவும், தூய புத்தியால் புரிந்து கொள்ளப்படக் கூடியவனாகவும், மலத்திலிருந்து {களங்கங்களிலிருந்து} எப்போதும் விடுபட்டவனாகவும் இருந்தான்.(14) இவ்வாறே அவன் {கண்டாகர்ணன்}, தன் இதயத்திற்குள் வெளிப்பட்ட விஷ்ணுவைத் தரிசித்தான். மூடிய கண்களுடன் அமர்ந்திருந்த அவன், தன்னை நற்பேறு பெற்றவனாகக் கருதினான்.(15)

{கண்டாகர்ணன்}, "அந்த ஹரிவிஷ்ணு தன் தரிசனத்தை எனக்கு அருளினான். இவ்வாறே அவனைக் காணமுடியும். நிச்சயம் அவன் என்னிடம் நிறைவடைந்திருக்கிறான்.(16) என் வாழ்வின் இலக்குச் சித்தியடைந்தது {நான் ஜீவமுக்தனானேன் / வாழும்போதே முக்தியடைந்தவன் ஆனேன்}. இதைவிட எனக்கு முக்கியமானது வேறென்ன இருக்க முடியும்? என் அறியாமை அகன்றது. என் இந்திரியங்களும் எனக்கு வசப்பட்டன.(17) நான் என் மனத்தை வென்றதாலேயே ஹரி என்னை நினைத்திருக்கிறான். மூவகை ஆசைகளும் விலகியதால் நான் முழுமையாக நிறைவடைந்திருக்கிறேன்.(18) எனக்குப் பிசாசுகளுடனான உறவு இப்போது முடிந்தது. என் தம்பியும் ஹரி பக்தன் என்பதால், அவனும் உரிய காலத்தில் ஸாயுஜ்ய முக்தியை அடைவான் {இறையுடன் இரண்டறக்கலப்பான்}" {என்று நினைத்தான்}.

இவ்வாறு சிந்தித்த அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்} தன் உடலில் இருந்து குடல்கயிறுகளை அறுத்துப் பேரின்பக்கடலில் மூழ்குவதற்காகத் தன் உயிர் காற்றை {பிராணனை} விடுவித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(19-21) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 56ல் உள்ள சுலோகங்கள் : 21

மூலம் - Source