Saturday 23 October 2021

கண்டாகர்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 55

(கண்டாகர்ணக்ருதா விஷ்ணுஸ்தவப்ரார்தநா தஸ்ய ஸமாதிலாபம்)

Ghantakarna | Bhavishya-Parva-Chapter-55 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: பிசாசுகளிடம் பேசிய கிருஷ்ணன்; தன் வரலாற்றைச் சொன்ன பிசாசு; பிசாசான கண்டாகர்ணனின் விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை...

Ghantakarna Pisaca - Kerala Theyyam

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},  "பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, இறைச்சி உண்பவர்களும், மஹாகோரமானவர்களும், கைகளில் தீப்பந்தங்களுடன் தன் முன் வந்தவர்களுமான அந்தப் பிசாசுகளைக் கண்டான்.(1) ஆசனத்தில் சுகமாக அமர்ந்திருந்த தேவகியின் மகனை {கிருஷ்ணனை} அந்தப் பிசாசுகள் இருவரும் கண்டனர். அவர்கள் கேசவனிடம் மெல்லச் சென்று பின்வருமாறு பேசினர்:(2,3) "சாதாரண மனிதனைப் போல் தோற்றமளிக்கும் நீ யார்? உன்னுடைய தந்தை யார்? நீ எங்கிருந்து வருகிறாய்? கோர மிருகங்கள் உலவும் இந்த வனத்திற்கு ஏன் வந்தாய்?(4) மனிதர்களற்றதும், சிறுத்தைகள் நிறைந்ததுமான இந்தக் காடு, பிசாசுகள், புலிகள் மற்றும் சீற்றமிக்கப் பிற விலங்குகளின் விளையாட்டுக் களமாகும்.(5) நீ இளைஞனாகத் தெரிகிறாய். உன் அங்கங்கள் யாவும் மிக அழகாக இருக்கின்றன. உண்மையில் நீ இரண்டாம் விஷ்ணுவைப் போலத் தோற்றமளிக்கிறாய். உன் நீண்டவிழிகள் தாமரை மலரைப் போல அழகாக இருக்கின்றன. உன் மேனி நிறம் கருப்பாக இருப்பதால் நீலோத்பல மலரைப் போலவும், ஸ்ரீபதியை {லட்சுமியின் கணவனைப்} போலவும் தெரிகிறாய்.(6) விஷ்ணுவே எங்கள் மீது கருணையுடன் இந்த வடிவில் வந்திருப்பதைப் போலத் தெரிகிறது. இந்த அடர்வனத்தில் தனியாக அமர்ந்து தியானம் பயின்று கொண்டிருக்கும் நீ தேவனா? யக்ஷனா, கந்தர்வனா? கின்னரனா? இந்திரனா? குபேரனா? யமனா? வருணனா?(7,8) ஓ! மதிப்புக்குரியவனே, மனிதனைப் போன்று தோற்றமளிப்பவனே, நாங்கள் உன்னை அறிய விரும்புவதால் எங்களிடம் உண்மையைச் சொல்வாயாக" {என்று கேட்டனர்}.

விஷ்ணு {கிருஷ்ணன்}, அந்தப் பிசாசுகளுக்கு மறுமொழி கூறும் வகையில்: "நான் யதுகுலத்தில் பிறந்த க்ஷத்திரியன். இவ்வுலகின் மக்கள் என்னை இவ்வாறே அறிகின்றனர்.(9,10) எனினும், உண்மையில் மூவுலகங்களையும் காப்பவன் நான். துஷ்டர்கள் அனைவரையும் வதம் செய்வதே என் பணி. இப்போது உமையின் கணவனான மஹாதேவனைக் காணக் கைலாச மலைக்குச் செல்ல விரும்புகிறேன்.(11) இதுவே என் விருத்தாந்தம். இனி நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்லுங்கள். பிராமணர்களுக்கான இந்த ஆசிரமத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.(12) இது பதரிகாசிரமம் என்று அறியப்படும் மிகப் புனிதமான தலமாகும். இங்கே பிராமணர்கள் பலர் வசிக்கின்றனர். தீயவர்களுக்கு இங்கே அனுமதியில்லை. இங்கே சித்தர்கள் எப்போதும் வசித்துத் தவம் பயின்று வருகின்றனர். இன்று காண்பது போல இங்கே நாய்க்கூட்டங்களையோ, ஊனுண்ணும் பிசாசுகளையோ நான் என்றும் கண்டதில்லை.(13,14)

இங்கே வேட்டை அனுமதிக்கப்படவில்லை என்பதால் மான்களைக் கொல்லக்கூடாது. முரட்டுக் குணம் கொண்ட நன்றிகெட்டவர்களும், நாத்திகர்களும் இந்தப் புனிதத்தலத்திற்குள் நுழைவதை நினைக்கவும் கூடாது.(15) இந்தப் புனிதத்தலத்தைக் காப்பவன் நான். இதில் ஐயமேதும் இல்லை. என் ஆணையை மீறத் துணிபவர்களை நான் தண்டிப்பேன்.(16) நீங்கள் யார்? எங்கே வாழ்கிறீர்கள்? இவர்கள் யாருடைய படைவீரர்கள்? இந்த நாய்க்கூட்டம் யாருடையது?(17) இங்கே தவம் செய்து வரும் பல முனிவர்களுக்கு இடைஞ்சல் விளைவிப்பீர்கள் என்பதால் உங்களை இந்த வனத்திற்குள் இதற்கு மேலும் அனுமதிக்க முடியாது.(18) என் வாக்கியத்தை மதித்து என் கேள்விகளுக்குப் பதிலளிப்பீராக; மாறாக நடந்தால் என்னுடைய பேராற்றலால் உங்களை நான் தடுப்பேன்" என்றான் {கிருஷ்ணன்}".

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வாறு கேட்கப்பட்ட பிசாசுகள் தங்கள் கதையைச் சொல்லத் தொடங்கின.(19) மஹாகோரமான இரண்டு பிசாசுகளில் ஒருவன் வலிமைமிக்கவனாகவும், ஒப்பற்ற கர வலிமை கொண்டவனாகவும் இருந்தான். அவனே தன் மனத்தில் இருந்ததை வெளிப்படுத்தத் தொடங்கினான்.(20)

அந்தப் பிசாசானவன், "நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. ஜகந்நாதனும், பிறப்பற்றவனும், உயர்ந்தவனும், பாவமற்றவனும், தூயவனும், பாவங்களை அழிப்பவனும், ஆதிதேவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனும், நித்தியனும், அறிவாலும், அருளாலும் நிறைந்தவனும் ஜகத்பதியுமான விஷ்ணுவை நான் வணங்குகிறேன். எங்களைக் குறித்து நீ அறிய விரும்பினால் என் கதையைக் கேட்பாயாக.(21,22)

நான் கண்டாகர்ணன் என்ற பெயருடைய பிசாசு ஆவேன். என்னைப் பார்ப்பதே மங்கலமற்ற நிலையைக் கொடுக்கும். நான் சிதைந்த முகத்துடன் கூடியவனாகவும், மாமிசம் உண்பவனாகவும் இருக்கிறேன். எனவே இரண்டாம் மிருத்யுவைப் போலக் காணப் பயங்கரனாக இருக்கிறேன்.(23) நான் ருத்ரனின் அன்புக்குரிய நண்பரான தனஸ்யரின் {குபேரனின்} தொண்டனாவேன்[1]. அந்தகனைப் போலத் தெரியும் இவன் என் தம்பியாவான்.(24) நாங்கள் விஷ்ணுவை வழிபடும் நோக்கத்துடன் வேட்டையாடியபடியே இங்கே வந்தோம். இந்தப் படை என்னுடையதே, இந்த நாய்களும் என்னுடையவையே.(25) மஹாசைலமும், பல பூதங்களால் தொண்டாற்றப்படுவதுமான கைலாச மலையில் இருந்து நான் இங்கே வந்தேன். நான் பிசாசு உடலுக்குள் இருக்கும் பெரும்பாவி ஆவேன்.(26)

[1] மஹாபாரதம் சல்லிய பர்வம் 48:24ல் ஸ்கந்தனின் துணைவர்களாக நந்திசேனன், லோஹிதாக்ஷன், கண்டாகர்ணன், குமுதமாலி என்று நான்கு பேர் சொல்லப்படுகின்றனர். மஹாபாரதத்தில் கண்டாகர்ணன் கந்தனின் தொண்டனாகவும், ஹரிவம்சத்தில் அவனே குபேரனின் தொண்டனாகவும் சொல்லப்படுகிறான். அல்லது அங்கே சொல்லப்பட்டவனும், இங்கே சொல்லப்பட்டவனும் வெவ்வேறானவர்களாகவும் இருக்கலாம்.

முற்காலத்தில் விஷ்ணுவை அவதூறு செய்யும் வழக்கத்தை நான் கொண்டிருந்தேன். உண்மையில் விஷ்ணுவின் புனிதப்பெயர் காதுகளில் நுழைந்துவிடாதபடிக்கு பெரிய மணிகளை {கண்டங்களை} என் காதுகளில் {கர்ணங்களில்} அணிந்திருந்தேன். இதில் நான் எவ்வளவு தீவிரமாக இருந்தேன் என்பதை இதன்மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.(27)

ஒரு நாள் நான் கைலாச மலைக்குச் சென்று ரிஷபத்வஜனான சிவனை வழிபட்டேன். அப்போதிலிருந்து அந்த மஹாதேவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.(28) என்னுடைய வழிபாட்டில் நிறைவடைந்த ஹரன் {சிவன்} என்னிடம், "நீ ஒரு வரத்தை என்னிடம் கேட்பாயாக" என்றான். நான் அவனிடம் முக்தியை வேண்டினேன்.(29)

என் வேண்டுகோளைக் கேட்ட அந்தத் திரிலோசனன் {முக்கண்ணன் சிவன்}, "உயிரினங்கள் அனைத்திற்கும் முக்தியை அளிக்கவல்லவன் விஷ்ணுவே என்பதில் ஐயமில்லை.(30) எனவே நீ பதரிகாசிரமத்திற்குச் செல்வாயாக. நரநாராயண ரிஷிகளின் ஆசிரமத்தில் கோவிந்தன் என்று அறியப்படும் அந்த ஜனார்த்தனனை நீ வழிபட்டால், நிச்சயம் அவன் உனக்கு முக்தியை அளிப்பான்" என்றான்.(31)

சூலதாரியான அந்தத் தேவதேவன் {சிவன்} இவ்வாறு சொன்னதும், கருடத்வஜனான கோவிந்தனின் பரம மகிமையை நான் அறிந்து கொண்டேன்.(32) அவனிடம் முக்தியை வேண்டும் விருப்பத்திலேயே நான் இங்கே வந்திருக்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால் என் கதையைத் தொடர்கிறேன் கேட்பாயாக.(33)

யது விருஷ்ணி குலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் மேற்குக் கடற்கரையில் துவாராவதி என்ற புகழ்பெற்ற நகரம் இருக்கிறது. அந்த நகரம் அனைத்துப் பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. தற்போது ஹரி அங்கேயே வசித்து வருகிறான்.(34) ஓ! தலைவா, உலகின் நன்மைக்காகத் துவாரகையில் வசித்து வருபவனும், ஹரியும், விஷ்ணுவுமான அந்தப் புருஷோத்தமனைச் சந்திக்கவே எங்கள் தொண்டர்களுடன் நாங்கள் வந்திருக்கிறோம். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான {சர்வேஸ்வரனான} விஷ்ணுவை இன்று முகத்திற்கு நேராகச் சந்திப்போம் என நாங்கள் நம்புகிறோம்.(35,36) அனைத்தும் வெளிப்பட்டதன் உண்மைக் காரணன் அந்த ஹரியே. அண்டத்தைப் படைத்தவனும், காப்பவனும், அழிப்பவனுமான அவனே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறான். ஜகத்பதியான அவனே உண்மையில் உயர்ந்த தேவனாவான்.(37)

மொத்த அண்டத்தின் உரிமையாளனும், ஆதி தேவனும், புராதனனும், தூய நல்லியல்பின் வடிவமும், வரங்களை அருள்பவனும், வழிபடத்தகுந்தவனுமான அந்த ஹரியை தரிசிக்கும் நம்பிக்கையுடனே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.(38) எவனுடைய அருளால் பல்வேறு உயிரினங்களும், கந்தர்வர்களும், பாம்புகளும் வசித்திருக்கும் இவ்வுலகம் இருப்புக்குள் வந்ததோ அந்த ஜனார்த்தனனைக் காணவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். படைப்பின் உண்மைக் காரணனாக இருப்பினும் அவன் காரணமேதும் இல்லாதவனாகவும், பிறப்பற்றவனாகவும் இருக்கிறான்.(39)

ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்திலும் இந்த அண்டம், முந்தைய கல்பத்தின் முடிவில் கலந்த புருஷோத்தமனின் குடலுக்குள் இருந்து வெளிப்படுகிறது. அண்டம் வெளிப்பட்டதும், நாம் இப்போது காண விரும்பும் பிரபுவால் காக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது.(40) அவனே அண்டம் வெளிப்பட உண்மைக் காரணனும், அண்டத்தைக் காத்து அழிப்பவனும், நித்தியமானவனும், அழிவற்ற ஆதி தேவனும், அண்டத்தின் தலைவனும் ஆவான்.(41)

சுயம்புவான பிரம்மனைப் படைத்தவன் தலைவன் ஹரியே, விஷ்ணு வடிவாக இருக்கும் அண்டத்தைப் பாதுகாப்பவனும் அவனே. யோக ஆசானும், தன் பக்தர்களுக்குத் தூய புத்தியை அருள்பவனுமான அந்த ஹரியை நாங்கள் சந்திப்போம் என நம்புகிறோம். எங்கள் மனங்கள் இப்போது அவனிடமே நிலைத்திருக்கின்றன.(42) அழிவேற்படும் காலத்தில் மூவுலகங்களின் உறைவிடமாகத் திகழும் ஹரி மொத்த அண்ட வெளிப்பாட்டையும் தன் உடலுக்குள் இழுத்துக் கொள்கிறான். பிறகு அவன் ஒரு குழந்தையைப் போலக் கைகளையும், கால்களையும் அசைத்துக் கொண்டு ஆலிலையில் வெளிப்படுகிறான்.(43)

புராதன முனிவரான மார்க்கண்டேயர் அந்தத் தலைவனின் வயிற்றுக்குள் நுழைந்து அவனுடைய அருளால் மொத்த படைப்பையும் அங்கே கண்டார். அவர் மொத்த அண்டத்தையும் வெளியே கண்டதுபோலவே, அந்தத் தலைவனின் வயிற்றுக்குள்ளும் கண்டார்.(44) பழங்காலத்தில் அந்தப் பரமாத்மா மொத்த அண்டத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, அந்த அழிவில் உண்டான நீரில் கிடந்திருந்தான். அந்நேரத்தில் ஸ்ரீதேவி கையில் சாமரத்துடன் அவனுக்குத் தொண்டாற்றினாள்.(45)

படைப்பின் தொடக்கத்தில் தலைவனின் நாபியில் இருந்து ஒரு பொற்தாமரை மலர் உதித்தது. அழகிய இதழ்களைக் கொண்ட அந்த அண்டத் தாமரையே அண்டத்தின் ஆன்ம குருவான பிரம்மனின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது.(46) பழங்காலத்தில் பன்றியின் வடிவை ஏற்ற அந்தப் பரமனைக் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். பெரும் முனிவர்களால் துதிக்கப்பட்ட அவன், புயல் மேகங்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டு நீருக்குள் இருந்த பூமியைத் தன் தந்தங்களால் காத்தான். பிரபுவும், புராதனனும், புருஷோத்தமனுமான அந்த ஹரியே சாட்சியாகவும், வேள்வியின் வடிவமாகவும், படைப்பைக் காக்கும் வேள்வியின் தலைவனாகவும் இருக்கிறான்.(47,48)

சில பக்தர்கள், இந்திரனின் தலைமையிலான தேவர்களின் பல்வேறு வடிவங்களிலும் விஷ்ணுவைக் கண்டு அந்தப் புறவடிவத்தையே வழிபடுகின்றனர். வேதாந்தத்தால் உறுதிசெய்யப்படும் அத்வைதப் பொருளாலான உடலைக் கொண்ட அந்தத் தேவனைக் காணவே நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.(49) பல்வேறு வகைகளில் விளக்கப்படுபவனும், ஸ்ருதிகள், ஸ்மிருதிகள், தர்க்கம் தொடர்புடைய கல்விமான்கள் பலரால் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாகச் சொல்லப்படுபவனும், புராணங்களை அறிந்தவர்களால் அகத்தில் வசிக்கும் பரமாத்மாவாக அறியப்படுபவனுமான அந்தத் தலைவனைக் காண நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.(50) வழிபாட்டின் முக்கியப் பொருளாகவும், வரங்களை அளிப்பவர்களில் சிறந்தவனாகவும், அதிகம் நாடப்படுபவனாகவும், பிறப்பற்றவனாகவும், நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், முற்றான உண்மையாகவுமான அந்த ஜனார்த்தனனை புராதன முனிவர்கள்  துதிக்கின்றனர்.(51)

சரத்தில் கோர்க்கப்படும் முத்துகளைப் போலவே அண்டங்கள் அனைத்தும் அவனையே சார்ந்திருக்கின்றன. அந்த விஷ்ணுவைக் காண நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். வேறென்ன சொல்ல?(52) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இப்போது நாங்கள் செல்கிறோம், நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(53) இப்போது நடு இரவாகிவிட்டது. நான் என் அறச்சடங்குகளைச் செய்யும் நேரமாகிவிட்டது. இன்னும் சொல்வதற்கு வேறேதும் இல்லை" {என்றான் கண்டகர்ணன்}.

சிதைந்த முகத்தைக் கொண்டவனும், அச்சுறுத்தும் தோற்றம் கொண்டவனுமான அந்தப் பிசாசானவன் இவ்வாறு சொல்லிவிட்டு அவனது {கிருஷ்ணனின்} முன்னிலையிலேயே குருதி பருகி, இறைச்சியுமுண்டான்.(54,55) பிறகு அவன், தன் கைகளைக் கழுவிக் கொண்டு, குடல்களால் அமைந்த பெருங்கயிற்றை அருகில் வைத்துக் கொண்டு தான் செய்யும் சாதனைக்குத் தேவையான பொருட்களை எடுத்தான். அவன் குசப்புல்லாலான பாயைத் தரையில் வைத்து, நீர் தெளித்து அதைத் தூய்மை செய்தான். பிறகு அவன் நாய்கள் அனைத்தையும் விரட்டிவிட்டு அமைதியாக அமர்ந்து சமாதியில் தன் மனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். பக்தர்களிடம் எப்போதும் அன்புடன் இருக்கும் கேசவனை அவன் முதலில் வணங்கினான். பிறகு பல்வேறு மந்திரங்களை உள்ளடக்கிய பின் வரும் {விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை என்ற} துதியைக் குவிந்த மனத்துடன் ஓதினான்.(56-58)

சக்கரபாணியான வாசுதேவா, நான் உன்னைப் பணிந்து வணங்குகிறேன். ஓ! கதாதரா, உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிக்கும் உன்னை நான் வணங்குகிறேன்.(59) ஓம். பேராற்றல்வாய்ந்தவனும், நீக்கமற நிறைந்தவனும், நித்தியமானவனும், ஞானமும் அருளும் நிறைந்தவனுமான நாராயணா நான் உன்னை வணங்குகிறேன். ஓ! கேசவா, என் மனம் உன் மகிமையால் தூய்மையடையட்டும்.(60) ஓ! புலன்களின் தலைவா, நாராயணா, இந்தத் துன்ப நிலையில் இருந்து என்னைக் காப்பாயாக. உன் அருளால் நான் தேவர்களின் தொண்டனாவேனாக.(61) {புலன்நுகர்} பொருள் பற்றில் மீண்டும் நான் சிக்காமல் இருக்க உன் சக்கரத்தால் என்னுடல் துண்டு துண்டாக வெட்டப்படப் பிரார்த்திக்கிறேன்.(62) பொருளற்றவனுக்குக் கற்பக மரம் {கல்பவிருக்ஷம்} நீயே. ஓ! தேவர்களின் தலைவா, தயாளன் நீயே. நான் எங்குப் பிறந்தாலும் என் இதயத்தில் நீ இருக்கப் பிரார்த்திக்கிறேன். ஓ! உயர்ந்த தேவா, நான் உன்னை வணங்குகிறேன். நான் எப்போதும் உன்னைத் துதித்திருப்பேனாக. நான் இறக்கும்போது என் மனம் {புலன்நுகர்} பொருள் பற்றில் மயங்காதிருக்கட்டும். ஓ தேவா, ஒவ்வொரு கணத்திலும் என் மனம் உன்னிலேயே நிலைத்திருக்கட்டும். என் இதயத்தை இவ்வாறே எப்போதும் தூண்டுவாயாக. "இவன் கொடூரன், இவன் பிசாசு, எனவே என் கருணைக்குத் தகாதவன்" என்று ஒருபோதும் நினையாதே. "வீழ்ந்த ஆத்மாவான இவன் என் சேவகன்" என்றே என்னைக் கருதுவாயாக. ஓ! பிரபுவே, பகவானே, நான் உன்னை வணங்குகிறேன். நான் பிறருக்குத் துன்பம் இழைக்காத வகையிலும், என் புலன்கள் வெறும் பொருளில் திருப்தியடையும் இழிநிலையில் ஒருபோதும் வீழாத வகையிலும் என்னிடம் கருணை கொள்வாயாக.(63-68) கேசவா, மரணக் காலத்தில் உன் கருணையால் என் மனம் உன்னில் நிலைத்திருக்கட்டும். பூமி என் மூக்கை ஏற்கட்டும், நீர் என் நாவை ஏற்கட்டும், சூரியன் என் கண்களை ஏற்கட்டும், காற்று என் தோலை ஏற்கட்டும், வானம் என் காதுகளை ஏற்கட்டும், சந்திரன் என் உயிர்க் காற்றையும் {மூச்சையும்}, மனத்தையும் ஏற்கட்டும்.(69,70) ஓ! ஹரியே, தண்ணீர் எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும், பூமி எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும், சூரியன் எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும். விஷ்ணுவே, நீ சூரியனைப் போல வலிமைமிக்கவன். நான் உன்னை வணங்குகிறேன்.(71) ஓ! ஜனார்த்தனா, காற்றும், ஆகாயமும் என்னைத் துன்பத்தில் இருந்து காக்கட்டும். நானாக இருக்கும் என் மனம், {புலன்நுகர்} பொருள் இன்ப நினைவுகளில் திரும்பாமல் பரமாத்மாவில் நிலைத்திருக்கட்டும்.(72) புலன்நுகர் பொருட்களின் இன்ப நினைவுகளில் மனம் சிக்கினால் அஃது ஒருவனின் புண்ணியங்களை மட்டும் அழிக்காமல், பிறருக்கு துன்பத்தையும் விளைவிக்கும்.(73) ஓ! ஜனார்த்தனா, எப்போதும் என் மனத்தைப் பாதுகாப்பாயாக. எப்போதும் என் மனம் களங்கமடையாமல் தூய்மையாக இருக்கட்டும்.(74)

தூய்மையற்ற மனம் ஒருவனை நரகத்திற்கு இட்டுச் செல்லும். மனம் தூய்மையாக இருக்கும்போது, புறப்புலன்கள் தாமாகத் தூய்மையடைகின்றன, மனம் களங்கமடையும்போதோ, புலன்களும் தூய்மையற்ற பணிகளில் ஈடுபடுகின்றன. ஓ! கேசவா, மனக்களங்கத்தைத் தூய்மைப்படுத்தாமல், புறவுடலை மட்டும் கழுவுவதால் எவனும் அடையப்போவதென்ன? தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ளும் அவனது முயற்சி அற்பமானதே.(75,77) எனவே, ஓ! ஜனார்த்தனா, என் மனத்தைப் பாதுகாப்பாயாக. புலன்கள் வலிமைமிக்கவை என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் எனக்கு உதவி செய்வாயாக.(78) ஓ! ஜகந்நாதா, பிறரை விமர்சிக்க என் சொற்களை அனுமதியாதே. பிறரின் செல்வத்திலும், மனைவிகளிடமும் பற்றுக் கொள்ள என் மனத்தை அனுமதியாதே. ஓ! கேசவா, அனைத்து உயிரினங்களிடமும் என் மனத்தில் கருணை உண்டாக அருள் செய்வாயாக.(79) உன்னிடம் ஓயாத பற்றையும், உயிரினங்கள் அனைத்திடமும் கருணையையும் வளர்ப்பேனாக. இதற்கு மேலும் சொல்லி என்ன பயன்? என் வேண்டுதலைக் கேட்பாயாக.(80) ஓ! தேவேசா, ஜனார்த்தனா, இன்பத்திலும், துன்பத்திலும், கோபத்திலும், உண்ணும்போதும், நடக்கும்போதும், விழித்திருக்கும்போதும், கனவிலும் என் மனம் எப்போதும் உன்னில் இன்புற்றிருக்கட்டும். நான் உன்னை வணங்குகிறேன்" {என்றான் கண்டாகர்ணன்}[2].

[2] இந்தத் துதி கண்டாகர்ணனின் "விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை" என்று அழைக்கப்படுகிறது. இதை ஸம்ஸ்கிருத மூலத்தில் படிக்க https://harivamsam.arasan.info/2021/10/Harivamsa-Bhavishya-Parva-Adhyaya-55.html என்ற சுட்டிக்குச் சென்று 59 முதல் 81ம் ஸ்லோகம் வரை பார்க்கவும்.

முன்னர்த் தாழ்ந்த குலத்தில் பிறந்த அந்தப் பயங்கரப் பிசாசானவன் இவ்வாறு சொன்னபடியே சமாதியில் ஆழ்ந்தான். உண்மையில் அவன் தேவனின் பரம பக்தனாகி அவனைச் சரணமடைந்தான். மாமிசமுண்ணும் அந்தப் பிசாசானவன், குடல்களாலான கயிறுகளில் தன் உடலைக் கட்டி, மனத்தைக் கவனமாகக் கட்டுப்படுத்தி அமர்ந்தவாறே, பீதாம்பரம் உடுத்துபவனும், அண்ட வெளிப்பாட்டின் பிறப்பிடமும் {ஜகத்யோனியும்} மங்கலனுமான விஷ்ணுவைத் தியானிக்கத் தொடங்கினான்.(81-84)

ஆதிபுருஷனும், தன்னைப் போல் வேறொருவன் இல்லாதவனும், தூய்மையின் கொள்ளிடமும், அறிவை விளைவிக்கும் பொருளும், அனைத்து உயிரினங்களின் குருவுமான முகுந்தனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(85) அவன் தன் மூக்கின் நுனியில் தன் கண்களை நிலைநிறுத்தி, ஓம் எனும் புனித அக்ஷரத்தை ஓதி, காற்றில்லாத இடத்தில் உள்ள விளக்கைப் போல மனத்தில் உறுதியடைந்தான்.(86) ஓம் எனும் பிரணவ வசனத்தையே பிரம்மமாகக் கருதி முழுமையாக விஷ்ணுவில் மனத்தைக் குவித்தான். தியானம் பயின்றதன் மூலம் அவன் தன் அலைபாயாத மனத்தைத் தாமரை போன்ற தன் இதயத்தில் நிலைநிறுத்தினான். பெரும் யோகியும், மாமிசம் உண்பவனுமான அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்}, தாமரை போன்ற தன் இதயத்தில் அண்டத்தின் தலைவனை நிலைநிறுத்தியபிறகு அமைதியாக அமர்ந்து விஷ்ணுவைத் தியானிக்கத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(87-89) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 89

மூலம் - Source