Friday, 26 June 2020

ராஸ நடனம் | விஷ்ணு பர்வம் பகுதி – 75 – 020

(ஹல்லீஸகக்ரீடனம்)

Rasa Dance | Vishnu-Parva-Chapter-74-019 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஆயர்களால் போற்றப்பட்ட கிருஷ்ணன்; ராஸக்ரீடை என்றும், கிருஷ்ண தாண்டவம் என்றும், ராஸ லீலை என்றுமழைக்கப்படும் ராஸ நடனம்...

Rasa Dance, Rajalila, Krishna Thandava, Rajaleela

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சக்ரன் {இந்திரன்} சென்ற பிறகு, கோவர்த்தன கிரிதரனான அழகிய கிருஷ்ணன், கிராமவாசிகளால் கௌரவப்படுத்தப்பட்டவனாக விரஜத்திற்குள் நுழைந்தான்.(1) முதிய கோபர்களும், அவனுடைய உற்றாரும், தோழர்களும் ஒன்றாகக் கூடி அவனை வரவேற்று, "ஓ! கோவிந்தா, உன் நடத்தையாலும், அந்தச் சிறந்த மலையாலும் ஆதரிக்கப்பட்டு, மதிக்கப்பட்டோம்.(2) உண்மையில் நீ தேவர்களைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனாக இருக்கிறாய். உன் ஆதரவால் பசுக்கள் பெரும் மழையின் மீதான அச்சத்தில் இருந்து விடுபட்டிருக்கின்றன, நாங்கள் பேரச்சத்தில் இருந்து விடுபட்டுள்ளோம்.(3) ஓ! கிருஷ்ணா, ஓ! பசுக்களின் தலைவா, மலையைத் தூக்கிய உன் மீமானிடச் செயலைக் கண்டு உன்னை நாங்கள் தெய்வமாகக் கருதுகிறோம்.(4) ஓ! பெரும்பலம் கொண்டவனே, நீ ருத்ரர்களில் ஒருவனா? மருத்துக்களில் ஒருவனா? வசுக்களில் ஒருவனா? நீ ஏன் வஸுதேவனின் மகனாகப் பிறந்திருக்கிறாய்?[1](5)

[1] கிருஷ்ணன் நந்தகோபனின் மகன் என்றுதான் கோகுலம் அறியும். கிருஷ்ணனுக்கும், இந்திரனுக்கும் நடந்த பேச்சை அவர்கள் கேட்டார்கள் என்ற குறிப்பும் இல்லை. சித்திரசாலை பதிப்பில், "நீ யார்? ருத்திரர்கள், மருத்துகள் மற்றும் வஸுக்களில் அளவற்ற சக்தி படைத்த ஒருவனா? எந்நோக்கத்திற்காக வஸுதேவன் உன் தந்தையானான்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீ யார், ருத்ரனா? மருத்தனா? வசுவா? வஸுதேவன் ஏன் உன் தந்தையானான்?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "(பதினொரு) ருத்திரர்களில் நீ யார், பலவானான நீ மருத்துக்களில் அஷ்ட வஸுக்களில் யார்? சனாதிபதியான (வஸுதேவன்) நந்தன் உனக்குப் பிதாவானது எதற்காக?" என்றிருக்கிறது.

எங்களுக்கு மத்தியில் இருக்கும் உன் அற்பப் பிறப்பைக் கண்டும், பிள்ளைப் பருவத்தில் நீ செய்யும் அருஞ்செயல்களையும், விளையாட்டையும், உன் ஆற்றலையும் கண்டும் எங்கள் மனங்கள் அச்சத்தில் நிறைந்திருக்கின்றன.(6) லோகபாலர்களில் ஒருவனைப் போல உன்னை நாங்கள் காண்கிறோம். ஆனால் நீ ஏன் ஆயர்களின் அற்பத் தோற்றத்தில் எங்களுடன் விளையாடி, பசுக்களைப் பாதுகாக்கிறாய்?(7) இப்போது எங்கள் நண்பனாகப் பிறந்திருக்கும் நீ தேவனா? தானவனா? அல்லது கந்தர்வனா? நீ யாராக இருந்தாலும் நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(8) நீ உன்னுடைய எந்தவொரு பணிக்காகவும் உன் விருப்பப்படி இங்கே இருந்தால், எங்களை உன்னைச் சார்ந்தவர்களாகவும், உன்னிடம் பற்றும் ஆர்வமும் கொண்டவர்களாகவும் கருதுவாயாக" என்றனர் {அந்த ஆயர்கள்}".(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், கோபர்களின் சொற்களைக் கேட்டுச் சற்றே புன்னகைத்து, அங்கே கூடியிருந்த தன் உற்றாரிடம்,(10) "நீங்கள் அனைவரும் பயங்கர ஆற்றலைக் கொண்டவன் என என்னைக் குறித்து உருவாக்கியிருக்கும் நம்பிக்கை உங்கள் இதயங்களில் வேரூன்ற வேண்டாம். நான் உங்கள் குலத்தவனும், நண்பனுமாவேன்.(11) இருந்தாலும் நீங்கள் அனைவரும் கேட்பதில் விருப்பம் கொண்டிருந்தால், விரைவில் இது (என் பிறப்பு) குறித்து நீங்கள் கேட்கவும், என் உண்மை வடிவைப் பார்க்கவும் செய்வீர்கள்.(12) நான் தேவனைப் போல உங்கள் மதிப்புக்குரிய நண்பர்களில் ஒருவனாவேன். நீங்கள் என்னிடம் அன்பு கொண்டிருந்தால் என்னைக் குறித்து மேலும் எதையும் அறிய விரும்பாதீர்கள்" என்றான்.(13)

அந்த ஆயர்கள், இவ்வாறு வஸுதேவனின் மகனால் {கிருஷ்ணனால்} வேண்டிக்கொள்ளப்பட்டு, தங்கள் முகங்களை மறைத்து {வாய்மூடி}, அமைதியடைந்து பல்வேறு திசைகளில் சென்றனர்.(14)

அதன்பிறகு, பலம்வாய்ந்தவனான கிருஷ்ணன் அந்த அழகிய கூதிர் கால இரவையும், அழகிய நிலவையும் கண்டு, விளையாட்டில் விருப்பம் கொண்டான்.(15) சில வேளைகளில் அவன் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட விரஜத்தின் வீதிகளில் மதங்கொண்ட காளைகளை ஒன்றோடொன்று மோதச் செய்தான். அதே போல ஆயர்களில் பலமிக்கோரை ஒருவரோடொருவர் மோதச் செய்தான். சில வேளைகளில் ஒரு முதலையைப் பிடிப்பது போலக் காடுகளில் மாடுகளைப் பிடித்து வந்தான்[2].(16,17) சில வேளைகளில் தன் பிள்ளைப்பருவத்தைக் கருத்தில் கொண்டு, இளங்கோபியரை இரவில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அங்கே இன்புற்றிருந்தான்[3].(18) அந்தக் கோபிகைகள், தங்கள் பார்வைகளால் அமுதத்தைப் பருகுபவர்களைப் போலவே, பூமிக்கு வந்த நிலவைப் போன்றிருந்த அவனுடைய அழகிய முகத்தைப் பருகினார்கள்.(19) கிருஷ்ணன் இயல்பாகவே அழகனாக இருந்தாலும், ஒளிரும் மஞ்சள் வண்ண பட்டாடை {பீதாம்பரம்} உடுத்தி மேலும் அழகுடன் தோன்றினான்.(20) கோவிந்தன், அங்கதங்களால் கரங்களை அலங்கரித்தும், {மார்பில்} காட்டு மலர் மாலைகளைச் சூடியும், மொத்த விரஜத்திற்கும் அழகூட்டினான்.(21) அந்தப் பலமிக்கவனின் அற்புத நடத்தையைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்த அந்த அழகிய கோபியர் அவனை "தாமோதரா" என்று பெயர் சொல்லி அழைத்தனர்.(22)

[2] சித்திரசாலை பதிப்பில், "அந்தத் தலைவன் காட்டில் பலமிக்க மாடுகளைப் பிடித்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "துணிச்சல் மிக்க அந்தத் தலைவன் காட்டில் மாடுகளைப் பிடித்து வரவும் பரிந்துரை செய்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "காட்டில் இந்த மாடுகளைப் பிடிப்பதே இதிலுள்ள பலப்போட்டியாகும்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ப்ரபுவான அவன் காட்டில் எருதுகளை (ஓடவிட்டு) முதலை போல் (கெட்டியாகப்) பிடித்தான்" என்றிருக்கிறது. இவ்விளையாட்டுத் தமிழகத்தில் நடக்கும் ஏறுதழுவலை ஒத்ததாக இருக்க வேண்டும்.

[3] சித்திரசாலை பதிப்பில், "காலம் குறித்த அறிவைக் கொண்ட கிருஷ்ணன், தன் இளமையின் தொடக்கத்தில், இரவில் இளம் கோபியரை அழைத்து அவர்களுடன் இன்புற்றிருந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "காலத்தை அறிந்த அவன் தன் இளமைக் காலத்தில் இருந்தான். இரவில் காலத்தைக் கருதி, உரிய மதிப்பைக் காட்டி இளம் கோப கன்னிகைகளை அழைத்து அவர்களோடு அவன் இன்புற்றிருந்தான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஸமயமறிந்த க்ருஷ்ணன் இரவில் (யுவதிகளான) கோப கன்னிகைகளை வரவழைத்து யௌவன ப்ரவத்தை ஆதரித்து அவர்களுடன் மகிழ்ந்தான்" என்றிருக்கிறது.

மேலும் அவர்கள் {கோபிகைகள்}, பல்வேறு சைகைகளின் துணையுடன் மீண்டும் மீண்டும் தங்களின் பார்வையைச் செலுத்தி தங்கள் நிமிர்ந்த முலைகளால் அவனை {கிருஷ்ணனைத்} தாக்கத் தொடங்கினர்.(23) இவ்வாறு சில நாட்கள் கடந்ததும், அந்தக் கோபியரின் பெற்றோர் (அவ்வாறு செயல்படுவதில் இருந்து) அவர்களைத் தடுத்தனர். எனினும் கேளிக்கைகளை விரும்பும் அந்தக் காரிகையர், இரவில் கிருஷ்ணனை வேட்டையாடத் தொடங்கினர்[4].(24) சில வேளைகளில் வரிசையாகவும், சில வேளைகளில் வட்டமாகவும் தங்களை அணிவகுத்துக் கொண்டு கிருஷ்ணனின் மகிமைகள் தொடர்பான பாடல்களைப் பாடி அவனை நிறைவடையச் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணனுடன் இணையாகத் தோன்றினர் {ஒரே நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாகக் கிருஷ்ணன் இருந்தான்}.(25) விரஜத்தின் {கோகுலத்தின்} இளம் காரிகையரான அவர்கள், கிருஷ்ணன் மீது தங்கள் காதல் பார்வையைச் செலுத்தி அவனுடைய வழியைப் பின்பற்றி அவனுடைய விளையாட்டுகள் {லீலைகள்} அனைத்தையும் தாங்களே {கிருஷ்ணன் போல} நடித்துப் பார்த்தனர்.(26) சில வேளைகளில் தங்கள் உள்ளங்கைகளைத் தட்டி அவனைப் போல நடித்தனர், சில வேளைகளில் அன்பு புன்னகையுடனும், அன்பான பார்வையுடனும் அவனைப் போலவே பாடியும், ஆடியும் மகிழ்ந்தனர்.(27,28)

[4] சித்திரசாலை பதிப்பில், "அவர்கள் பெரும் முலைகளைச் சுமக்கும் தங்கள் மார்புகளால் அவனை அழுத்தினர். அந்த அழகிய பெண்கள் கிருஷ்ணனின் முகத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். இன்பத்தை விரும்பும் கோபியர்கள், தங்கள் கணவர்கள், உடன்பிறந்தோர் மற்றும் அன்னையரால் தடுக்கப்பட்டும் இரவில் கிருஷ்ணனைத் தேடினார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவர்கள் தங்கள் பருத்த முலைகளைக் கொண்டு அவனை நசுக்கினர். அந்த அழகிய பெண்கள் தங்கள் கண்களை உருட்டி அவனது முகத்தைப் பார்த்தனர். அந்தக் கோபியர்கள் தங்கள் தந்தைமார், உடன் பிறந்தோர் மற்றும் தாய்மாரால் தடுக்கப்பட்டும் ஆசையால் செலுத்தப்பட்டவர்களாக இரவில் கிருஷ்ணனைத் தேடினார்கள்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அந்த உத்தம கோபிகள், ஸ்தனங்களால் நிமிர்ந்த மார்புகளால் அவனை மிகவும் துன்புறுத்துகின்றனர். முகத்தில் சுழல்கிற கண்கள் கொண்டு ஆரப் பருகினர். க்ருஷ்ண சேர்க்கையில் ப்ரியமுடைய அந்தக் கோப ஸ்த்ரீகள், அன்னையர்களாலும், கணவர்களாலும், உடன் பிறந்தாராலும் தடுக்கப்பட்டு இரவில் க்ருஷ்ணனைத் தேடுகிறார்கள்" என்றிருக்கிறது.

தாமோதரனிடம் அர்ப்பணிப்புள்ள இந்த அழகிய பெண்கள் கிருஷ்ணனிடம் கொண்ட அளவற்ற அன்பை விளக்கும் இனிய பாடல்களைப் பாடி இன்பமாக விரஜத்தில் திரிந்து வந்தனர்.(29) புழுதியில் மறைந்த பிடிகள் {பெண் யானைகள்}, மதங்கொண்ட ஒரு களிற்றுடன் {ஆண் யானையுடன்} இன்புற்றிருப்பதைப் போலவே அங்கம் முழுவதும் புழுதியும், சாணமும் பூசப்பட்ட அந்தக் கோபியர் கிருஷ்ணனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு அவனுடன் விளையாடினர்.(30) மான் போன்ற கண்களையும், சிரித்த முகங்களையும் கொண்ட அந்தக் கோபியர் வேறெதையும் பார்க்காமல், அமுதம் போன்ற அவனுடைய அழகை தங்கள் கண்களால் மீண்டும் மீண்டும் பருகியும் கூட, மகிழ்ச்சியின் எல்லையை அடையாமல் இருந்தனர்.(31) {இரவில் கிருஷ்ணனை அடைய விரும்பிய கோபியர் கேளிக்கையின் முடிவில் ஆசையுடன் அவனது தாமரை முகத்தைப் பருகினர்.(32)} தாமோதரன் "ஓ! ஐயோ!" என்று சொல்லும்போது ஆவல் கொண்ட காரிகைகள் அவன் சொல்லும் சொற்களைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தனர்.(33) {இன்பத்தில் இருந்த அந்தப் பெண்களின் நெற்றியில் இருந்த அடையாளங்கள் {வகிர்கள்} அழிந்தன. அவர்களின் கார்குழல்கள் வகிடு தளர்ந்து, அவர்களுடைய முலைகளில் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தன.(34)}[5] இவ்வாறு கோபியரால் சூழப்பட்ட கிருஷ்ணன், சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட கூதிர் கால இரவில் தன் விருப்பப்படி விளையாடிக் கொண்டிருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}[6].(35)

[5] 32 மற்றும் 34ம் ஸ்லோகங்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் விடுபட்டிருக்கின்றன. எனவே சித்திரசாலை பதிப்பில் உள்ளவற்றை இங்கே அடைப்புக்குறிக்குள் இட்டு நிரப்பியிருக்கிறேன். பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆசையெனும் தாகம் கொண்ட அந்தக் கோபக் கன்னியர் அவனது முகத்தைப் பார்த்தனர். இரவில் கலவி முடிந்த போதும் கூட ஆசையால் உந்தப்பட்ட அவர்கள் தொடர்ந்து அவனைப் பருகத் தொடங்கினர். அந்தப் பெண்கள் மகிழ்ச்சியாகச் சிரித்தனர். தாமோதரன் சில சொற்களைப் பேசும்போது அவர்கள் நிறைவடைந்தனர். கலவியை நினைக்கும்போது அவர்களது குழல்களின் வகிர் கலைந்தது. குழல்கள் தளர்ந்து அந்தக் கோபியரின் மார்பில் தொங்கின" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "காம தாகம் கொண்ட ஆயர் பெண்களை, இரவில் அனுபவத்துள் ஆழ்ந்தவர்களாய் இந்த க்ருஷ்ணனின் தாமரை போன்ற முகத்தைப் போக ரஸத்தில் மூழ்கிப் பருகினர். ஹா ஹா என்று பெயர் கூவியழைக்கும் அந்தக் கிருஷ்ணனிடம் அந்த உத்தம பெண்டிர் மகிழ்ந்து தாமோதரனால் சொல்லப்பட்ட வெளிவந்த வார்த்தையை ஏற்றுக் கொண்டனர். போகத்தில் இழுக்கப்பட்டுக் கலைக்கப்பட்ட அந்தக் கோபிகளின் குழல்கள் வகிர் கலைந்து அவிழ்ந்து ஸ்தனங்களின் நுனியில் பரவின" என்றிருக்கிறது.

[6] "இந்தியாவின் எண்ணற்ற கவிஞர்கள், கிருஷ்ணனுடைய வாழ்வின் முக்கிய நிகழ்வில் ஒன்றான இதில் {இந்த ராஸலீலையில்} தங்கள் திறமையையும், புத்திக் கூர்மையையும் செலவிட்டுள்ளனர். இந்த நிகழ்வு பல்வேறு புராணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பகை முரண் கொண்ட சில விமர்சகர்கள் இந்த ராஸ நடனத்தைக் கிருஷ்ணனின் குணத்தில் உள்ள கறைகளில் ஒன்றாக விளக்கி, அவன் உடலின்ப வேட்கையின் அடையாளம் என்று நிரூபிக்க முயல்கின்றனர். அவர்கள் தங்கள் வாதத்திற்கு ஆதரவாகச் சில குறிப்பிட்ட இந்திய அறிஞர்களையும் அழைக்கின்றனர். எனவே, ஸ்ரீ கிருஷ்ணனைச் சரியாகப் புரிந்து கொள்ளச் சில பரிந்துரைகளை நம் வாசகர்களின் முன் வைப்பது அவசியம்.

இந்த ராஸ நடனம் ஹரிவம்சத்தில் சில சொற்களிலும், விஷ்ணு புராணத்தில் இன்னும் அதிகமாகவும், ஸ்ரீமத் பாகவதத்தில் மிக விரிவாகவும் விளக்கப்படுகிறது. எனினும், மஹாபாரதத்தில் இந்நிகழ்வு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. விஷ்ணு புராணத்தில், பல இளம்பெண்களின் இளந்தோழனுக்கான மென்மையான காதலின் வெளிப்பாடாக இது விளக்கப்படுகிறது. ஹரிவம்சத்தில் இஃது ஓர் அழகிய இளைஞனுக்காக இளம் காரிகையரின் காதலாக இருக்கிறது. பாகவதத்தில் ஓர் இளைஞனிடம் சில பெண்கள் கொள்ளும் ஆசையுடன் கூடிய காதலாக இருக்கிறது. எவ்வாறாயினும், இந்தப் புத்தகங்கள் அனைத்திலும் காதலின் வெவ்வேறு பரிமாணங்கள் எளிதிற் புரியாத மறைபொருளுடன் விளக்கப்படுகின்றன.

இந்த ராஸம் என்பது, இளங்காரிகையரும், பெண்களும் பங்குபெறுவதும், கிருஷ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டதுமான ஒரு "பந்து" நடனமாகும். இஃது ஆரியர்களுக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்காகும். இந்த நடனத்தைப் பற்றிய குறிப்புகள் மஹாபாரதம் மற்றும் குறிப்பிடத்தகுந்த தொல்சீர் படைப்புகள் {புராணங்கள்} பிறவற்றிலும் காணப்படுகின்றன. இஃது உடலின்பத்தின் அனைத்துக் கூறுகளில் இருந்து விடுபட்டதும், முற்றிலும் கள்ளங்கபடமற்றதுமான ஒரு கேளிக்கையாகும் என்பது ஐயங்களுக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணனின் வாழ்வைச் சொல்லும் ஹரிவம்சம், விஷ்ணுபுராணம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் என்ற மூன்று பெரும் படைப்புகளில் உள்ள அகச் சான்றுகளில் இருந்து, கிருஷ்ணன் அந்தக் காலத்தில் பத்து வயது மதிக்கத்தக்க வெறும் சிறுவன் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவன் {கிருஷ்ணன்} சித்தரிக்கப்படுவதைப் போல இவ்வளவு இளம் வயதைக் கொண்ட ஒரு சிறுவன் உடலின்ப வேட்கை கொண்டவனாக இருப்பது சாத்தியமற்றதாகும். விரஜத்தின் இளம் கன்னிகைகளும், பெண்கள் அனைவரும் கிருஷ்ணனை விரும்பினர். அவன் அவர்களிடம் மட்டும் தன் அற்புத ஆதிக்கத்தைப் பயன்படுத்தவில்லை, முதியோரிடமும் பயன்படுத்தினான். இந்திர யஜ்ஞத்தைத் தடுப்பதில் அவன் வென்ற நிகழ்வில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. கிருஷ்ணன் தன் தோழர்களான சிறுவர், சிறுமியருக்கு பல்வேறு வகை விளையாட்டுகளைக் கண்டுபிடித்து ஒழுங்கமைத்தான். முந்தைய அத்தியாயத்தில் அவனது ஆண்தோழர்கள் மற்றும் முதியோரிடம் அவன் கொண்ட ஆதிக்கம் விவரிக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் பெண்கள் மீதும் அவன் இணையான அற்புத ஆதிக்கம் கொண்டிருந்தான் என்பது கவிஞரால் அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனது மீமானிடப் பிறப்பை நிரூபிக்க ஏற்பட்டிருக்கின்றன. ராதையிடம் அவன் வளர்த்துக் கொண்ட சிறப்பார்வம் போல எவளை ராதை என அவன் சிறப்பார்வம் கொண்டிருந்தானோ அந்தக் குறிப்பிட்ட பெண்ணின் பெயரைப் பற்றிய எந்தக் குறிப்பும் இந்த மூன்று படைப்புகளிலும் இல்லை. இந்தச் சொல் அவ்வப்போது பாகவதத்தில் குறிப்பிடப்படுகிறது, ஹரிவம்சத்தில் ஒரே ஒரு முறை மட்டும் வழிபாட்டாளர் {பக்தர்} என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணன் பல்வேறு துணைவிகளிடம் கொண்ட காமத்தைச் சொல்லும் இந்தக் கதை, போலியான படைப்பு என்று கருதப்படுவதும், அவனது வாழ்க்கையைச் சொல்லும் நம்பத்தகுந்த பதிவாகக் கருதப்படாததுமான பிரம்ம வைவர்த்த புராணத்தில் விரிவாக விளக்கப்படுகிறது.

இந்நிகழ்வின் அடிப்படையான, எளிதில் புரியாத ஆழ்ந்த மறை பொருள், மனித ஆன்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையில் நடக்கும் ஐக்கியமாகும். கிருஷ்ணன் என்பவன் பரமாத்மாவின் உருவகமாவான், ராதை அல்லது பக்தை என்பது மனித ஆன்மாவின் சின்னமாகும். வழிபடுபவர் {பக்தர்} ஆழ்ந்த அன்பு மற்றும் ஆழ்ந்த பக்தியால் பரமாத்மாவுடன் ஐக்கியமடையமுடியும். இந்தக் காதல், இந்தப் பக்தியே பல்வேறு கவிஞர்களால், பல்வேறு வடிவங்களில் விளக்கப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விஷ்ணு பர்வம் பகுதி – 75 – 020ல் உள்ள சுலோகங்கள் : 35
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English