Tuesday, 19 May 2020

விஷ்ணுவிடம் சென்ற காலநேமி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 48

(காலநேமி வதம்)

Kalanemi goes to Vishnu | Harivamsha-Parva-Chapter-48 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நாராயணனிடம் சென்ற காலநேமி; காலநேமிக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம்; கருடனைத் தலையில் தாக்கி வீழ்த்திய காலநேமி; காலநேமியின் கரங்களையும், தலைகளையும் கொய்த நாராயணன்; காலநேமியைத் தன் மார்பால் தாக்கி கீழே வீழ்த்திய கருடன்; விஷ்ணுவைப் புகழ்ந்த பிரம்மன்; தேவர்களுக்கு உறுதியளித்த விஷ்ணு...

Kalnemi Garuda and Vishnu

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அவனது {காலநேமியின்} அறமற்ற செயல்களினால் நாராயணனின் வேதங்கள், அறம், பொறுமை, வாய்மை, செழிப்பு என்ற இந்த ஐந்தும் அவனை (காலநேமியைப்) பின்தொடரவில்லை.(1) வேதமும், பிறவும் இல்லாத காரணத்தால் தானவர்களின் மன்னன், தன் கண்ணியத்தை அடைவதற்காக நாராயணனை அணுகினான்.(2) அங்கே அவன், கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதங்களுடன் சுபர்ணனில் அமர்ந்திருப்பதைக் கண்டான். தானவர்களின் அழிவுக்காக அவன் அழகிய கதாயுதத்தைச் சுழற்றினான்.(3) அதிக நீர் கொண்ட மேகத்தின் வண்ணம் கொண்டவனும் {கருப்பானவனும்}, மின்னலுக்கு ஒப்பான ஆடை அணிந்தவனுமான அந்தத் தேவன், கசியபரின் மகனான அந்தப் பறவையின் {கருடனின்} மீது சுகமாக அமர்ந்திருந்தான்.(4)

தடுக்கப்படமுடியாதவனான விஷ்ணு, அசுரர்களை அழிப்பதற்காகப் போரில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட காலநேமி, கனத்த இதயத்துடன்,(5) "இவனே நமது மிகப் பயங்கர எதிரியாவான். இவனை எவ்வழிமுறையினாலும் வீழ்த்தமுடியாது என்று சொல்கிறார்கள். நமது மூதாதையரான தானவர்கள், மற்றும் பெருங்கடலில் வாழ்ந்த மதுகைடபர்களின் பகைவன் இவனே. காட்டில் பிறந்த நமது தைத்தியர்கள் பலரைக் கொன்றவன் இவனே. போரில் சிறிதும் இரக்கமற்றவனும், சிறுவனைப் போல வெட்கமேயில்லாதவனும் இந்த ஆயுததாரியே. நம் தானவப் பெண்களின் மயிரை மழிக்கச் செய்தவன் {தானவப் பெண்களை விதவையாக்கியவன்} இவனே.(6-8)

தேவர்களின் விஷ்ணுவும், சொர்க்கத்தின் வைகுண்டமும், நீரில் வாழும் பாம்புகளின் அனந்தனும், படைப்பாளர்களைப் படைப்பவனும் இவனே.(9) தேவர்களால் வழிபடப்படுபவனும், நமக்கு எப்போதும் தீங்கிழைத்து வருபவனும் இவனே. இவனது கோபத்தைத் தூண்டியதால் {என் தந்தையான} ஹிரண்யகசிபு கொல்லப்பட்டார்.(10) தேவர்கள், அவனைப் பின்பற்றுவதன் மூலம் வேள்விக்காணிக்கைகளில் சிறந்த பங்கையும், பெரும் முனிவர்களால் நெருப்பில் காணிக்கையளிக்கப்படும் மூவகைப் பலியுணவுகளையும் {ஆகுதிகளையும் / திருப்படையல்களையும்} பெறும் உரிமையைப் பெறுகின்றனர்.(11) தேவர்களிடம் பகைமை பாராட்டுவோர் அனைவரின் மரணத்திற்கான கருவியானவன் இவனே. நம் குலத்தில் பிறந்த தானவர்கள் அனைவரும் போரில் இவனது சக்கரத்தாலே கொல்லப்பட்டனர்.(12)

தேவர்களுக்காகத் தன் உயிரையும் பணயம் வைத்து, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தன் சக்கரத்தைப் போரில் பகைவரின் மீது ஏவுபவன் இவனே.(13) தீயமனம் கொண்ட இவனே, தைத்தியர்களுக்குக் காலனைப் போன்றவன். காலனுக்கே ஒப்பான நான் இருக்கும்போது, தவிர்க்க முடியாத மரணத்தை இவன் விரைவில் சந்திப்பான்.(14) இன்று இந்த விஷ்ணு தற்செயலாக என் முன் தோன்றியிருக்கிறான். போரில் என்னால் கலங்கடிக்கப்படும் இவன் என் முன்னே அவமானத்தை அடைவான்.(15) தானவர்களுடைய அச்சத்தின் பிறப்பிடமாக இருக்கும் இந்த நாராயணனைப் போரில் கொன்று என் மூதாதையரை நான் வழிபடப்போகிறேன்.(16) நான் நாராயணனின் தொண்டர்களையும் கொல்வேன். இவன் மீண்டும் பிறந்தாலும் தானவர்களை ஒடுக்கவே செய்வான்[1].(17)

[1] தேசிராஜு ஹனுந்தராவ் பதிப்பில், "இந்த விஷ்ணு தேவன், தற்செயலாக என் முன் வந்திருக்கிறான். இப்போது இவன் என் வீரத்தின் மூலம் என்னிடம் வீழ்வான். அல்லது, என் கண்களால் இவன் அடிபடுவான். எதை அவன் விரும்புவானோ அதையே அவன் அடைவான். இப்போது அசுரர்களுக்கு அச்சமேற்படுத்தும் இந்த நாராயணனைப் போரில் கொல்வதன் மூலம் என் மூதாதையரின் கொலைகளுக்கு நான் பழிதீர்த்து, அதன் மூலம் கணப்பொழுதில் இவனது தொண்டர்களைப் போரில் ஒழிப்பேன். இந்தத் தேவன், சகோதரப் பகைக்கான எந்த முகாந்தரமும் அற்ற அசுரப் பிறப்பில் பிறந்திருந்தாலும், எப்போதும் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொடுமை செய்யும் கொடூரன் என்பதால் இவன் ஈடு செய்யப்பட வேண்டும் {இவனைக் கொல்ல வேண்டும்}" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "நற்பேற்றின் காரணமாக இந்த விஷ்ணு இப்போது என் முன் தோன்றியிருக்கிறான். இவன் என் முன் வணங்க வில்லையெனில், இப்போதே இவனை என் கணைகளால் நொறுக்குவேன். முன்னர்ப் போர்களில் நமக்குத் தீங்கிழைத்த இவனை நற்பேற்றின் காரணமாகவே நான் எதிர்கொள்கிறேன். இந்த நாராயணனே தானவர்களைக் கொல்பவனும், அவர்களை அச்சத்தில் பீடித்தவனுமாவான். இந்தப் போரில் நாராயணனைக் கொல்ல வேகமான கணைகளை நான் பயன்படுத்தப் போகிறேன். இவன் நம் உற்றானாக இருப்பினும் போர்களில் தானவர்களைத் தடுக்கிறான்" என்றிருக்கிறது. உற்றான் என்பதன் அடிக்குறிப்பில், "தேவர்களுக்கும், அசுரர்களும் தந்தை ஒருவரே {கசியபரே} என்பதால் அவர்கள் சகோதரர்களாவர்" என்றிருக்கிறது.


பழங்காலத்தில் இந்த அனந்தனே, (தாமரை உந்தி கொண்ட) பத்மநாபனாக மீண்டும் கொண்டாடப்பட்டான். மொத்த அண்டமும் ஒரே நீர்ப்பரப்பாக மாறியபோது, இவன், மது மற்றும் கைடபர் என்ற இரு தானவர்களைத் தன் கால் மூட்டுகளுக்கிடையை வைத்துக் கொன்றான்.(18) இவன், தன்னையே இரண்டாகப் பகுத்துப் பழங்காலத்தில் சிங்கமனிதனின் {நரசிம்ம} வடிவை ஏற்று என் தந்தையான ஹிரண்யகசிபுவைக் கொன்றான்.(19) தேவர்களின் தாயான அதிதி, குள்ளனின் வடிவை ஏற்று, மூன்று காலடிகளால் மூவுலகங்களையும் கைப்பற்றி, மன்னன் பலியின் வேள்வியில் அவனையே {அந்த பலியையே} கொன்றவனை நல்ல முறையில் கருவில் கொண்டாள்.(20) இப்போது இந்தத் தாரகப் போரில் இவன் என்னுடன் மோதி, தேவர்களுடன் சேர்ந்து மரணத்தைச் சந்திக்கப் போகிறான்" என்றான் {காலநேமி}.(21)

இவ்வாறு அந்தப் போர்க்களத்தில் இனிமையற்ற சொற்களால் நாராயணனை நிந்தித்த காலநேமி போருக்கான தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான்.(22) அசுரர்களின் மன்னனால் இவ்வாறு நிந்திக்கப்பட்டாலும் அந்தக் கதாதரன் (விஷ்ணு) இயல்புக்கு மீறிய பொறுமை கொண்டவனாகக் கோபமடையாதிருந்தான்.(23) மாறாகப் புன்னகைத்தவாறே அவன் {விஷ்ணு}, "ஓ! தைத்தியா, வரம்புக்குட்பட்ட பலத்தைக் கொண்டிருந்தாலும் நீ கோபத்தால் என்னை நிந்திக்கிறாய். நீ பொறுமையை மீறிவிட்ட உன் குற்றத்தின் காரணமாகக் கொல்லப்படுவாய்.(24) உண்மையில் நீ இழிந்தவன், உன் வீண் பேச்சுகளுக்கு ஐயோ. பெண்கள் முழங்கும் இடத்தில் ஆண்கள் இருப்பதில்லை.(25) ஓ! தைத்தியா, நீ உன் மூதாதையரின் கால்தடங்களைப் பின்பற்றிச் செல்லப் போவதை நான் காண்கிறேன். பிரஜாபதியால் அமைக்கப்பட்ட விதிகளை அலட்சியம் செய்துவிட்டு எவனால் சுகமாக இருக்க முடியும்?(26) தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் உன்னை இன்று நான் கொல்லப் போகிறேன். நான் மீண்டும் தேவர்களை அவர்களுக்கு உரிய நிலைகளில் நிறுவப் போகிறேன்" என்றான் {விஷ்ணு}.(27)

ஸ்ரீவத்ஸம் எனும் மாயச் சின்னத்தைத் தன் மார்பில் கொண்ட நாராயணன், போர்க்களத்தில் இதைச் சொன்னதும், கோபத்தில் தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அந்தத் தானவன் சிரிக்கத் தொடங்கினான்.(28) அனைத்து ஆயுதங்களையும் ஏந்தவல்ல நூறு கரங்களை உயர்த்திய அவன், கோபத்தால் சிவந்த கண்களுடன் விஷ்ணுவின் மார்பைத் தாக்கினான்.(29) மயன் மற்றும் தாரனின் தலைமையிலான பிற தானவர்களும் விஷ்ணுவை நோக்கி விரைந்து சென்றனர்.(30) பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த பெரும்பலமிக்கத் தைத்தியர்களால் இவ்வாறு தாக்கப்பட்டாலும், தலைவன் நாராயணன், ஒரு மலையைப் போல அந்தப் போரில் அசையாதிருந்தான்.(31) சுபர்ணனுடன் போரில் ஈடுபட்டு, பெரும் கோபம் கொண்டிருந்த அந்தப் பேரசுரன் காலநேமி, தன் பலம் அனைத்தையும் திரட்டிக் கரங்களின் அதிர்வில் எரிந்து கொண்டிருந்த பயங்கரமான பெரும் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கருடன் மீது அதை வீசினான். அந்தத் தைத்தியனின் அருஞ்செயலைக் கண்டு விஷ்ணுவே ஆச்சரியத்தில் நிறைந்தான்.(32) பறவைகளின் மன்னனான சுபர்ணனின் தலை மீது அந்தக் கதாயுதம் விழுந்தபோது, காயமடைந்த உடலுடன் அவன் பூமியில் விழுந்தான்.(33)

பிறகு அந்தப் பெரும்போரில், மண்ணாங்கட்டிகளையும், கற்களையும், வஜ்ரங்களைக் கொண்டு விஷ்ணுவையும், கருடனையும் அந்தத் தானவர்கள் தாக்கத் தொடங்கினர். நாராயணன் அந்தப் போர்க்களத்தில் திரிந்த போது, தேவர்கள் அவனது மகிமைகளைத் துதித்தனர். {அவர்கள்}, "ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுவையும், கைடபனையும் கொண்டவனே, உனக்கு மகிமை உண்டாகட்டும். நகங்களால் ஹிரண்யகசிபுவைக் கிழிந்தெறிந்தவன் நீ" {என்று துதித்தனர்}. தேவர்களால் இவ்வாறு துதிக்கப்பட்ட நாராயணன் போர்க்களத்தில் இருந்து எழுந்தான். விஷ்ணு கொல்லப்பட்டதாகக் கருதிய தானவர்களின் மன்னன் {காலநேமி} தன் சங்கை முழங்கினான். பெரும் அசுரர்கள் மூன்று வகை மிருதங்கங்களை இசைத்து அந்த இசையின் துணையுடன் நடனம் ஆடினர். அந்நேரத்தில் பெரும் விழா நடப்பது போன்ற தோற்றத்தை அஃது ஏற்படுத்தியது. சுபர்ணன் காயமடைந்திருப்பதையும், தன்னுடலுக்குச் சிறிதும் தீங்கு நேராததையும் கண்ட வைகுண்டன், கோபத்தால் கண்கள் சிவக்கத் தன் சக்கரத்தை எடுத்தான்.(34,35) அப்போது அந்தத் தலைவன், சுபர்ணனுடன் சேர்ந்து பெரும் உற்சாகம் அடைந்தான். அவனுடைய கரங்கள் பத்துத் திக்குகளையும் மறைக்கும் வகையில் பெருகின.(36) திக்குகள் அனைத்தையும், வானுலகையும், பூமியையும் நிறைத்த அவன், உலகங்கள் அனைத்தையும் மீண்டும் தாக்கும் விருப்பத்தில் தன் சக்தியைப் பெருக்கினான்.(37) முனிவர்களும், கந்தர்வர்களும், தேவர்களின் வெற்றிக்காக வானத்தில் பெரும் வடிவை ஏற்றிருந்த மதுசூதனனின் மகிமைகளைப் பாடத் தொடங்கினர்.(38)

அந்தத் தலைவன் {விஷ்ணு}, தன் கிரீடத்தால் தேவலோகத்தையும், தன் ஆடையால் வானம் மற்றும் மேகங்களையும், தன் காலால் பூமியையும், தன் கரங்களால் திக்குகள் அனைத்தையும் மறைத்தான். பிறகு கோபமடைந்தவனான அந்தக் கதாதரன், ஒப்பற்ற அருஞ்செயல்களைச் செய்ய வல்லதும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டதுமான தன் சக்கரத்தை எடுத்து, அதன் சக்தியின் மூலம் அந்தப் போரில் தானவர்களின் பிரகாசத்தை அழித்துக் காலநேமியின் கரங்களைத் துண்டித்தான். அது {அந்தச் சக்கரம்} சூரியக் கதிர்களுக்கு ஒப்பான ஆயிரம் தழல்களுடன் எரியும் நெருப்பைப் போலப் பயங்கரமாகவும், அதே வேளையில் அழகாகவும், தங்கச்சக்கரங்களால் மறைக்கப்பட்டதாகவும் இருந்தது. அது வஜ்ரத்தைப் போன்ற வலுவுள்ளதாகவும், பயங்கரமானதாகவும், தானவர்களின் குருதி, கொழுப்பு மற்றும் எலும்புகளால் பூசப்பட்டதாகவும் இருந்தது. தாக்குவதில் தனக்கேதும் ஒப்பில்லாததும், கத்தியைப் போன்று கூர்மையுள்ளதும், விரும்பிய இடமெங்கும் செல்லவல்லதும், எந்த வடிவத்தையும் ஏற்கவல்லதுமாக அஃது இருந்தது. சுயம்புவால் அமைக்கப்பட்ட அது, பகைவர்களுக்குப் பயங்கரமானதாகவும், பெரும் முனிவர்களின் கோபத்தைக் கொண்டதாகவும், போர்க்களத்தில் உயர்ந்ததாகவும் இருந்தது. அது வீசப்பட்டபோது, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் கலக்கமடைந்தன, இறைச்சியில் வாழும் உயிரினங்கள் பெரும் நிறைவை அடைந்தன[2].(39-46) பிறகு, ஹரியானவன், நெருப்பின் அரவலைப் போன்ற காட்டுச் சிரிப்புடன் கூடிய அந்த அசுரனின் பயங்கரமான நூறு முகங்களைத் தன் பலத்தால் கலங்கடிக்கத் தொடங்கினான்.(47) அந்தத் தானவன், தனது கரங்கள் துண்டிக்கப்பட்டாலும், தன் தலைகள் அறுக்கப்பட்டாலும் போரில் கிஞ்சிற்றும் நடுங்காமல், கிளைகள் அனைத்தையும் இழந்த ஒரு மரத்தைப் போல அங்கே நின்று கொண்டிருந்தான்.(48)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் ஸ்லோகம் எண் 39 முதல் 46 வரை, இடையில் ஸ்லோக எண்கள் பிரிக்கப்படாமல் ஒரே மூச்சாகவே சொல்லப்பட்டுள்ளது. தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில் 40ம் ஸ்லோகத்தின் அடிக்குறிப்பில், "இங்கிருந்து 45ம் ஸ்லோகம் வரை ஏகன்வயம் ஆகும். அஃதாவது ஒரே மூச்சில் படிக்க வேண்டியதாகும்" என்றிருக்கிறது.


அதற்குப் பிறகு, பெருஞ்சிறகுகள் இரண்டையும் விரித்துக் காற்றின் திசைவேகத்தை ஏற்ற கருடன், தன் மார்பின் தாக்குதால் காலநேமியைக் கீழே வீழ்த்தினான். அப்போது தலைகளையும், கரங்களையும் இழந்திருந்த அவனது உடல் தேவலோகத்தை விட்டு அகன்று உருண்டு, வானத்தில் இருந்து பூமியில் விழுந்தது.(49,50) அந்தத் தைத்தியன் கொல்லப்பட்டபோது, முனிவர்களும் தேவர்களும், "நன்று செய்தாய், நன்று செய்தாய்" என்று சொல்லி வைகுண்டனைப் புகழத் தொடங்கினர்.(51) போரில் அவனது ஆற்றலைக் கண்டவர்களும் விஷ்ணுவின் கரங்களின் மூலம் பிணைக்கப்பட்டவர்களுமான தானவர்கள் பிறர் போர்க்களத்தில் அசைய முடியாதவர்களாக இருந்தனர். அந்தத் தலைவன், சில தைத்தியர்களின் மயிரையும், சிலரின் தொண்டைகளையும் பற்றி, சிலரின் முகத்தில் காயமேற்படுத்தி, சிலரின் இடுப்பையும் பற்றித் தூக்கினான்.(53) அவர்கள் தங்கள் சக்தியையும், உயிரையும் இழந்தவர்களாகக் கதாயுதம் மற்றும் சக்கரத்தால் முற்றாக அழிக்கப்பட்டு, வானத்தில் இருந்து பூமியில் விழுந்தனர்.(54) தைத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, புருஷர்களில் முதன்மையான கதாதரன் வெற்றியை அடைந்து, தேவர்களின் மன்னனுக்கு நன்மை செய்தபடி அங்கே நின்றிருந்தான்.(55) தாரகனுடனானதும், பலரைக் கலங்கச் செய்ததுமான அந்தப் பயங்கரப் போர் முடிந்தவடைந்த பிறகு, பிரம்மன், பிராமண முனிவர்களுடனும், கந்தர்வர்களுடனும், அப்சரஸ்களுடன் அங்கே விரைந்து வந்தான். தேவர்களுக்குத் தேவனான அவன் {பிரம்மன்} ஹரியை வழிபட்டவாறே பேசினான்.(56,57)

பிரம்மன், "ஓ! தலைவா, நீ பெரும்பணியைச் செய்தாய்; தேவர்களைத் தைத்திருந்த ஈட்டி வேரோடு பிடுங்கப்பட்டது. தைத்தியர்களின் அழிவில் நாங்கள் நிறைவடைந்தோம்.(58) போரில் கொல்லப்பட்ட இந்தக் காலநேமியை நீ தனியாகவே அழித்தாய். உன்னைத் தவிர வேறு யாராலும் அவனைக் கொல்ல முடியாது.(59) இந்தத் தானவன், தேவர்களையும், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் வீழ்த்தி முனிவர்களைத் துன்புறுத்திவந்தான்; என்னிடமும் முழங்கி வந்தான்.(60) காலனைப் போன்ற காலநேமியை அழித்த உன் பெருஞ்செயலால் நான் பெரும் நிறைவடைந்தேன்.(61) நீ சுகமாகச் செல்வாயாக; பிராமண முனிவர்களும், உன் சபை உறுப்பினர்களும் காத்திருக்கும் மிகச் சிறந்த தேவலோகத்துக்குச் செல்ல எங்களை அனுமதிப்பாயாக.(52) ஓ! அச்யுதா, ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, மஹாரிஷிகளுடன் சேர்ந்து தெய்வீகத் துதிகளைக் கொண்டு உன்னை நான் அங்கே வழிபடப்போகிறேன்.(63) ஓ! வரமளிப்பவர்களில் முதன்மையானவனே, நீ தேவர்களுக்கும், தைத்தியர்களுக்கு வரங்களை அளிப்பவனாக இருப்பினும், நானும் ஒன்றை உனக்களிப்பேன்.(64) ஓ! நாராயணா, இந்தப் போரில் மூவுலகங்களையும் முட்களில் இருந்து விடுவித்து விட்டாய் என்பதால், இனி மூவுலகங்களிலும் செழிப்புமிக்க அரசை உயரான்ம சக்ரனுக்கு {இந்திரனுக்கு} அளிப்பாயாக" என்றான்.(65)

தெய்வீகப் பிரம்மனால் இவ்வாறு சொல்லப்பட்ட தலைவன் ஹரி, இந்திரனிடமும், தேவர்கள் பிறரிடமும் இந்த மங்கலச் சொற்களைச் சொன்னான்.(66) {ஹரி}, "புரந்தரன் தலைமையில் இங்கே கூடியிருக்கும் தேவர்களே, கவனமாகக் கேட்பீராக.(67) இந்தப் போரில் பலமிக்கத் தானவர்கள் பலரையும், காலநேமியையும், தேவர்களின் மன்னனைவிடவும் மேன்மையான பிறரையும் நாம் கொன்றிருக்கிறோம்.(68) இந்தப் பயங்கரப் போரில் விருசனனின் மகனான பலியும், பேருடல் படைத்த ராகுவும் வெளிவந்தனர்.(69) தேவர்களின் மன்னனும், வருணனும் தாங்கள் விரும்பும் உலகங்களுக்குச் செல்லட்டும். யமன் தெற்கையும், வளங்களின் மன்னன் வடக்கையும் கைப்பற்றிப் பாதுகாக்கட்டும்.(70) முன்பைப் போலவே, சந்திரன் உரிய காலத்தில் விண்மீன்களுடன் கூடி இருக்கட்டும். சூரியன், நிலநடுப் புள்ளிகளுடன் கூடி, வருடம் முழுவதும் பருவகாலங்களைப் பகிரட்டும். தவசிகளால் கௌரவிக்கப்படும் வேள்விகள் முறையாக நடைபெறட்டும், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி விப்ரர்கள் நெருப்பில் பலியுணவுகளை {ஆகுதிகளை} காணிக்கை அளிக்கட்டும்.(72) தேவர்கள் திருப்படையல் பலிகளாலும், மஹாரிஷிகள் வேதங்கள் ஓதுவதிலும், பித்ருக்கள் செய்யப்படும் சிராத்தங்களாலும் முன்பைப் போலவே நிறைவை அடையட்டும்.(73) காற்று {வாயு} தன் போக்கில் வீசட்டும், நெருப்பு {அக்னி}, மூன்று வகை வடிவங்களில் மூளட்டும், மூன்று வர்ணங்களும் தங்கள் இயல்பான குணங்களின் மூலம் உலகத்திற்கு நிறைவைக் கொண்டு வரட்டும்.(74)

தொடக்கச் சடங்குகளை {தீக்ஷைகளைச்} செய்யத் தகுந்த பிராமணர்களால் வேள்விகள் செய்யப்படட்டும். உரிய வேள்விக் கொடைகள் அனைத்தும் பகிரப்படட்டும்.(75) சூரியன், கண்கள் அனைத்திற்கும் நிறைவை அளிக்கட்டும், சந்திரன், சாறுகள் அனைத்தையும் திளைக்கச் செய்யட்டும், காற்று {வாயு}, உயிரினங்கள் அனைத்தின் உயிர் மூச்சுகளைத் திளைக்கச் செய்யட்டும், இவர்கள் அனைவரும் மங்கலமான நல்ல பணிகளைச் செய்யட்டும்.(76) மூவுலகங்களின் அன்னைகளும், பெரும் மலைகளில் இருந்து நீரைக் கொண்டு வருபவையுமான ஆறுகள், உரிய வகையில் படிப்படியாகப் பெருங்கடலுக்குச் செல்லட்டும்.(77) தானவர்களிடம் கொண்ட அச்சங்கள் அனைத்தையும் களைந்து தேவர்கள் அமைதியை அனுபவிக்கட்டும். ஓ! தேவர்களே, சுகமாகச் செல்வீராக, நான் பிரம்மனின் நித்திய உலகிற்குச் செல்லப் போகிறேன்.(78) அசுரர்கள் பெரும் வஞ்சகம் நிறைந்தவர்கள் என்பதால் நீங்கள் உங்கள் தேவலோகத்தில், அதிலும் குறிப்பாகப் போர்க்களத்தில் எப்போதும் நம்பிக்கையுடன் வாழாதீர்கள்.(79) வலுவற்ற ஒரு புள்ளியைக் கண்டாலும் உடனே அவர்கள் மக்களைத் தாக்குவார்கள். உலகின் இந்த ஒழுங்கு நிரந்தரமானதல்ல. நீங்கள் மென்மையானவர்களாகவும், எளிமையானவர்களாகவும் இருக்கிறீர்கள், உங்கள் மனம் எப்போதும் எளிய காரியங்களிலேயே உலவுகிறது.(80) ஓ! தேவர்களே, உங்களுக்குத் தீங்கிழைக்கும் விருப்பத்தை வளர்க்கும் இந்தத் தீய அசுரர்கள் அனைவருக்கும் நான் கலக்கத்தைக் கொண்டுவருவேன்.(81) நீங்கள் தானவர்களிடம் பேரச்சத்தை வளர்த்துக் கொள்ளும்போதெல்லாம், நான் உடனே வந்து பாதுகாப்பை உங்களுக்கு உறுதி செய்வேன்" என்றான் {விஷ்ணு}.(82)

பெருஞ்சிறப்புமிக்கவனும், வாய்மையைத் தன் ஆற்றலாகக் கொண்டவனுமான நாராயணன், இவ்வாறு தேவர்களிடம் சொல்லிவிட்டு, பிரம்மனுடன் சேர்ந்து தன்னுலகிற்குச் சென்றான்.(83) இதுவே நீ கேட்டதும், தாரகனை வேராகக் கொண்டதுமான நாராயணன் மற்றும் தானவர்களுக்கிடையில் நடந்த அற்புதம் நிறைந்த போராகும்" என்றார் {வைசம்பாயனர்}.(84)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 48ல் உள்ள சுலோகங்கள் : 84
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English