Sunday, 17 May 2020

தானவர்களின் உற்சாகம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 47

(காலநேமி பராக்ரமம்)

The encouragement of Danavas | Harivamsha-Parva-Chapter-47 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : காலநேமியைக் கண்டு மீண்டும் போரிட வந்த தானவர்கள்; அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்; பயங்கர நிலையை எட்டிய போர்; காலநேமியின் ஆற்றல்; லோகபாலர்களை வீழ்த்தி அவர்களின் நிலையை அடைந்த காலநேமி...

War between devas and asuras

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெருஞ்சக்திமிக்கப் பேரசுரன் காலநேமி, தானவர்களை வரவேற்கும் வகையில், கோடை கால இறுதியில் வரும் மேகங்களைப் போன்ற விகிதங்களை ஏற்றான்.(1) மூவுலகங்களின் இடைவெளியில் வாழும் காலநேமியைக் கண்ட முன்னணி தானவர்கள், மிகச் சிறந்த அமுதத்தை அடைவதால் தங்கள் களைப்பில் இருந்து விடுபடும் மக்களைப் போலவும், ஒருபோதும் களைப்படையாதவர்களைப் போலவும் எழுந்து வந்தனர்.(2) அப்போது மயன் மற்றும் தாரனின் தலைமையிலானவர்களும், அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தவர்களும், போரில் தடுக்கப்படமுடியாதவர்களும், தாரகனின் போரில் எப்போதும் வெற்றியை விரும்பியவர்களுமான தானவர்கள் அந்தப் போர்க்களத்தில் பிராகசித்துக் கொண்டிருந்தனர்.(3) காலநேமியைக் கண்ட அந்தத் தானவர்கள் அனைவரும், ஆயுதங்களை வீசியும், வியூகங்களில் புகுந்தும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(4) அவர்களில் நல்ல போர்த் திறம்பெற்றவர்களான மயனின் முக்கியப் படைவீரர்கள், தங்கள் அச்சத்தைக் கைவிட்டுப் போரில் மகிழ்ச்சியாகத் தோன்றினர்.(5)

ஆயுதப் பயன்பாட்டில் திறம்பெற்றவர்களும், தவப்பயிற்சிக்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமான மயன், தாரன், வராஹன், பெருஞ்சக்திமிக்க ஹயக்ரீவன், விப்ரசித்தியின் மகனான ஸ்வேதன், கரன், லம்பன், பலியின் மகனான அரிஷ்டன், கிஸோரன், உஷ்ட்ரன், இறப்பற்றவன் போன்ற ஸ்வர்பானு {ராகு}, பேரசுரன் வக்ரயோதீ ஆகியோர் அனைவரும் அவர்களில் முதன்மயான காலநேமியின் முன்பு தோன்றினர்.(6-8) பெரும் தண்டங்கள், {சக்கரங்கள்}, கோடரிகள், காலனைப் போன்ற கதாயுதங்கள், க்ஷேபணீயங்கள், பெரும்பாறைகள், கற்கள், பட்டிஸங்கள், பிண்டிபாலங்கள், மிகச்சிறந்த எஃகாலான பரிகங்கள், பயங்கரமான காதனிபங்கள், சதக்னிகள், யுகைகள், யந்த்ரங்கள், அர்க்கலங்கள், பராசங்கள், பாசக்கயிறுகள், பாம்புகள், வாள்கள், வஜ்ரங்கள், சுடர்மிக்கத் தோமரங்கள், உறையில் இருந்து உருவப்பட்ட குத்துவாள்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, உற்சாக மனம் கொண்டவர்களாகத் தங்கள் முன் காலநேமியைக் கொண்டு போர்க்களத்தின் முன்னணியில் நின்றனர்.(9-14) ஒளிரும் மிகச் சிறந்த ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தைத்தியப் படை, விண்மீன்களுடன் மின்னும் மேகம் நிறைந்த வானம் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(15)

சந்திரன் மற்றும் சூரியனின் குளிர்ந்த மற்றும் வெம்மையான கதிர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததும், தேவர்களின் மன்னனால் வளர்க்கப்பட்டதுமான தேவர்களின் படையும் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(16) பயங்கர யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொண்டதும், காற்று போன்று வேகமானதும், விண்மீன்களையே துகிற்கொடிகளாக, மேகங்களையே உடையாகக் கொண்டதும், புன்னகைக்கும் விண்மீன்கள் மற்றும் கோள்களைக் கொண்டதும், இந்திரன், வருணன், வளங்களின் மன்னனான நுண்ணறிவுமிக்கக் குபேரன் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டதும், நெருப்பு {அக்னி} மற்றும் காற்றின் {வாயுவின்} துணையைக் கொண்டதும், நாராயணனிடம் அர்ப்பணிப்புக் கொண்டதும், பெருங்கடலின் திசைவேகம் கொண்டதும், தெய்வீக ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தேவர்களின் பெரும்படை அங்கே அழகாகத் தோன்றியது.(17-19) யுகங்களின் சுழற்சி, சொர்க்கம் மற்றும் பூமி ஒன்றுகலந்ததைப் போலவே, தேவாசுரப் படைகள் ஒன்றையொன்று சந்தித்தன.(20)

தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் பணிவு மற்றும் செருக்கு, பொறுமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்திய அந்தப் போர், மிகப் பயங்கர நிலையை அடைந்தது.(21) பெருகியோடும் ஆறுகளில் இருந்து வெளிவருவதைப் போலப் பயங்கரம் நிறைந்த தேவர்களும் அசுரர்களும் தங்கள் படைகளில் இருந்து வெளியே வந்தனர்.(22) மலர்களால் மறைக்கப்பட்ட மலைசார்ந்த காடுகள் இரண்டில் இருந்து வெளிவரும் யானைகளைப் போலத் தேவர்கள் மற்றும் அசுரர்களின் கூட்டம் இரு படைகளிலும் இருந்து வெளியே வந்து அங்கே மகிழ்ச்சியாகத் திரியத் தொடங்கினர்.(23) அவர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டு, தங்கள் சங்குகளையும், ஊதுகுழல்களையும் மீண்டும் மீண்டும் முழங்கினர். அந்த ஒலி, சொர்க்கம், பூமி மற்றும் அனைத்துத் திசைகளையும் நிறைத்தது.(24) உள்ளங்கைகளில் மோதும் வில்லின் நாண்கயிறுகள் உண்டாக்கும் ஒலி, விற்களின் நாணொலி, ஊதுகுழல்களின் ஒலிகள் ஆகியன தைத்தியர்களின் ஒலிக்கு மேலாக எழுந்தன.(25) தேவர்களும், அசுரர்களும் ஒருவரையொருவர் எதிர்கொண்டு ஒருவரையொருவர் வீழ்த்தினர். சிலர் {ஒற்றைக்கு ஒற்றையாக மோதும்) இரட்டையர் மோதலை விரும்பினர். சிலர் தங்கள் கரங்களால் மற்றவர் கரங்களை முறித்தனர்.(26) போரில் தேவர்கள், பயங்கர வஜ்ரங்களையும், சிறந்த ஆயஸாங்களையும், பரிகங்களையும் வீசத் தொடங்கினர், தானவர்கள், குர்வீகள், கதாயுதங்கள் மற்றும் நிஸ்திரிங்ஸங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர்.(27) தண்டங்களின் வீச்சுகளால் சிலர் தங்கள் அங்கங்கள் சிதைவடைந்து, உடல் வளைந்தவர்களாகக் கீழே விழுந்தனர்.(28)

அதன் பிறகு கோபமடைந்தவர்களாகச் சிலர் தேர்களிலும், வேறு சிலர் குதிரைகளிலும், இன்னும் சிலர் வேகமாகச் செல்லும் தேர்களிலும் {விமானங்களிலும்} அந்தப் போரில் ஒருவரையொருவர் நோக்கி விரைந்து சென்றனர்.(29) சிலர் போர்க்களத்தில் நின்றனர், வேறு சிலர் தப்பி ஓடினர். தேர்வீரர்கள் தேர்களால் தடுக்கப்பட்டனர், காலாட்படையானது காலாட்படை வீரர்களால் தடுக்கப்பட்டது.(30) அந்தத் தேர்களின் சக்கர ஒலி வானத்தில் மேகங்கள் முழங்குவதைப் போலப் பயங்கரமாக வளர்ந்தது.(31) சிலர் தேர்களை நொறுக்கினர், வேறு சிலர் தேர்களை நொறுக்கி வேறு தேர்களின் மீது வீசினர், மேலும் சிலரால் அந்தத் தேர்களின் திரளில் ஒன்றாகச் செல்ல முடியவில்லை.(32) போர்வீரர்கள், தங்கள் கரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், முழக்கங்களை வெளியிட்டும், வாள்களையும், தோற்கவசங்களையும் தரித்துக் கொண்டும், செருக்கில் பெருகியபடியும் போரில் முன்னேறிச் சென்றனர்.(33) போரில் ஆயுதங்களால் காயமடைந்த மற்றும் சிதைவடைந்த சிலர் மழையென நீரைப் பொழியும் மேகங்களைப் போலக் குருதியைக் கக்கத் தொடங்கினர்.(34) மேலும், கீழும் தூக்கி வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தண்டங்களால் நிறைந்திருந்ததும், தேவாசுரர்களுக்கிடையில் நடந்ததுமான அந்தப் போரானது பெரும்பயங்கரமாகத் தெரிந்தது.(35) மின்னல்களையும், கணை மழைகளையும் கொண்ட தேவர்களின் ஆயுதங்களும், பெரும் மேகங்களாலான தானவர்களின் ஆயுதங்களும் நியாயமற்ற நாளான அன்று அங்கே தோன்றின.(36)

அதேவேளையில், பேரசுரனான காலநேமி, கோபமடைந்து, கடலின் அலைகளின் மூலம் நீரால் நிறையும் மேகங்களைப் போலத் தன் உடலைப் பெருக்கத் தொடங்கினான்.(37) மின்னல்களைப் போன்ற மின்னும் தீப்பிழம்புகளைக் கொண்டவையும், மலைகளைப் போன்று பெரியவையுமான பலாஹகங்கள், அவனது உடலில் விழுந்ததும் நொறுங்கின.(38) அவன் கோபத்துடன் பெருமூச்சுவிட்டு, தன்னுடைய கண்புருவங்களைச் சுருக்கி வியர்த்திருந்தபோது, அவனது வாயில் இருந்து மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய தீப்பொறிகள் வெளிவந்தன.(39) அவனது கைகள் மேல்நோக்கி நேராகவும், கோணல்மாணலாகவும் வானத்தை நோக்கி வளர்ந்தன. ஐந்து தலை கரும்பாம்புகள், மீண்டும் மீண்டும் தங்கள் உடலை நாவால் நனைப்பதைப் போல அது தோன்றியது.(40) அந்தத் தானவன், பல்வேறு ஆயுதங்கள், விற்கள் மற்றும் மலைகளைப் போல உயர்ந்த பரிகங்கள் ஆகியவற்றால் வானை மறைத்தான்.(41) காற்றால் அசைக்கப்படும் உடையை அணிந்திருந்த காலநேமி, தீப்பிழம்புகளால் நிறைந்ததும், மறையும் சூரியனின் கதிர்களால் மறைக்கப்பட்டதுமான இரண்டாம் சுமேரு மலையைப் போலப் போர்க்களத்தின் முன்பு நின்று கொண்டிருந்தான்.(42)

தேவர்களின் மன்னன் {இந்திரன்} தன் வஜ்ரத்தைக் கொண்டு பெரும் மலைகளை வீழ்த்துவதைப் போலவே அவன் மலைச் சிகரங்களைக் கொண்டும், தன் தொடைகளின் வீச்சால் வேரோடு சாய்க்கப்பட்ட பெரும் மரங்களைக் கொண்டும் தேவர்களை வீழ்த்தினான்.(43) போரில் காலநேமியால் காயம்பட்டு, பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வாள்களின் மூலம் தங்கள் தலைகளும், மார்புகளும் சிதைக்கப்பட்ட தேவர்களால் அசைய முடியவில்லை.(44) சிலர், அவனது காலின் உதையால் கொல்லப்பட்டனர், வேறு சிலர் அவனால் கலங்கடிக்கப்பட்டு, வியூகங்களில் அணிவகுத்து நின்ற முன்னணி யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் பெரும் உரகர்களுடன் சேர்ந்து கீழே விழுந்தனர்.(45) இவ்வாறு காலநேமியால் போரில் அச்சுறுத்தப்பட்ட தேவர்கள், தங்கள் செயல்களைச் செய்ய முடிந்தவர்களாக இருந்தாலும், நினைவிழந்தவர்களாக அவற்றைச் செய்யாமல் இருந்தனர்.(46)

தன் யானையான ஐராவதத்தில் அமர்ந்திருந்த ஆயிரங்கணன் சக்ரன் {இந்திரன்}, கணைகளின் மூலம் அவனால் {காலநேமியால்} கட்டப்பட்டு, அசையமுடியாதவனாகச் செய்யப்பட்டான்.(47) காலநேமி என்ற அந்த அசுரன், நீர்தரும் மேகத்திற்கு ஒப்பானவனும், நீரற்ற பெருங்கடலைப் போலப் பிரகாசமாவனுமான வருணனை, அந்தப் போரில் எந்தச் செயலையும் செய்ய விடாமல் தடுத்து, அவனது பாசக்கயிற்றை இழக்கச் செய்தான்.(48) வளங்களின் மன்னனும், போர்க்களத்தில் அழுது கொண்டிருந்தவனும், குடிமுதல்வனுமான வைஸ்ரவணன் {குபேரன்}, மாய ஆயுதங்களின் மூலம் அவனால் {காலநேமியால்} போர்க்களத்தில் செயலற்றவனாக்கப்பட்டான். (49) மரணத்தைப் பரப்பி, அனைத்தையும் அழிக்கும் யமன், காலநேமியால் நனவிழக்கச் செய்யப்பட்டுத் தன் உலகத்திற்குத் தப்பி ஓடினான்.(50)

இவ்வாறு காலநேமி, குடிமுதல்வர்களைத் தாக்கி அவர்களுக்குரிய பகுதிகளைப் பாதுகாத்தபடியே தன் உடலை நான்காகப் பகுத்துக் கொண்டான்.(51) அதன்பிறகு அந்த அசுரன் {காலநேமி}, ஸ்வர்பானுவால் சுட்டப்பட்ட விண்மீன்களின் தேவ வீதிக்குச் சென்று, சந்திரனின் அருளையும் அவனது பெரும்பொருளையும் பலவந்தமாக எடுத்துக் கொண்டான்.(52) தேவலோகத்திற்குச் சென்ற அவன், எரியும் கதிர்களுடன் கூடிய சூரியனை இயக்கத் தொடங்கி, அவனது ஸாயனப் பொருளையும்[1], அவனது தினசரி கடமைகளையும் கைப்பற்றினான்.(53) காலநேமி, தேவர்களின் வாயில் நெருப்பைக் கண்டு, அதைத் தன் வாயில் வைத்து, தன் பலத்தால் காற்றை {வாயுவை} வீழ்த்தி, அவனைத் தன் ஆளுகைக்குள் வைத்தான்.(54)

[1] "ஒரு கிரகத்தின் தீர்க்கரேகை "சா {Sa}" என்ற சமநிலைப் புள்ளியில் இருந்தும் கணக்கிடப்படுகிறது, அயனமே சமநிலைப் புள்ளியாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அந்த அசுரன், தன் பலத்தால் கடலில் இருந்து ஆறுகளைக் கொண்டு வந்து, தன் கட்டுப்பாட்டுக்கள் அவற்றை வைத்துக் கொண்டான், கடல்கள் அனைத்தும் அவனது உடலைப் போல எஞ்சி இருந்தன.(55) காலநேமி, சொர்க்கம் மற்றும் பூமியில் பிறந்த ஆறுகள் அனைத்தையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்து, மலைகளால் நன்கு பாதுகாக்கப்பட்ட உலகை நிறுவினான்.(56) அனைத்து உலகங்களுடன் அடையாளங்காணப்படுபவனும், அனைத்து உயிரினங்களுக்கும் பயங்கரனுமான அந்தத் தைத்தியன், முக்கியத் தேவர்கள் அனைவரின் தலைவனான சுயம்புத் தேவனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(57) லோகபாலர்கள்[2] அனைவரின் ஒரே உடலாக இருந்தவனும், சூரியன், சந்திரன், கோள்களுடன் அடையாளங்காணப்படுபவனும், நெருப்புக்கும் {அக்னிக்கும்}, காற்றுக்கும் {வாயுவுக்கும்} ஒப்பானவனுமான அந்தத் தானவன் {காலநேமி}, அந்தப் போர்க்களத்தில் திரியத் தொடங்கினான்.(58) அந்தத் தைத்தியன், தோற்றத்தின் பிறப்பிடமும், உலகங்கள் அனைத்தின் அழிவுமான பரமேஷ்டியின் நிலையை அடைந்த போது, தேவர்கள் பெரும்பாட்டனின் (பிரம்மனின்) மகிமைகளைப் பாடுவதைப் போல அசுரர்கள் அவனது மகிமைகளைப் பாடத் தொடங்கினர்" என்றார் {வைசம்பாயனர்}.(59)

[2] "அவன் லோகபாலர்களை வீழ்த்தி, தான் ஒருவனே திசைகள் அனைத்தின் தலைவன் ஆனான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 47ல் உள்ள சுலோகங்கள் : 59
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English