Wednesday 2 March 2022

ஹரிவம்சம் பொருளடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 109

(ஹரிவம்ஷவ்ருத்தாந்தஸங்க்ரஹம்)

Contents of Harivamsha | Bhavishya-Parva-Chapter-109 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : ஹரிவம்சத்தின் பொருளடக்கம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது...

Harivamsam

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இனி, நாம் விவாதித்த ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தைச் சுருக்கமாக நினைவுகூர்கிறேன்.

{1. ஹரிவம்சபர்வம்}

தொடக்கத்தில் வரும் ஹரிவம்ச பர்வத்தில் அண்டத்தின் அடிப்படை படைப்பு விளக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பூதங்களின் படைப்பும் விளக்கப்பட்டது.(1) வேனனின் மகன் பிருதுவின் கதை சொல்லப்பட்டது. அதன்பின் வைவஸ்வத மனுவின் குலத்தில் வந்த மனுக்கள் விளக்கப்பட்டனர். துந்துமாரன் கதையும் விளக்கப்பட்டது.(2) காலவரின் தோற்றம், இக்ஷ்வாகு குல விளக்கம், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி காணிக்கைகளின் விளக்கம், சோமன் கதை, புதன் கதை ஆகியனவும் சொல்லப்பட்டன.(3)

அடுத்ததாக அமாவசுவின் குலம் விளக்கப்பட்டது, கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் கிடைக்கும் நன்மை விளக்கப்பட்டது. இந்திரன் தன் நிலையில் இருந்து விழுந்து மீண்டும் தன் நிலையை அடைந்தது சொல்லப்பட்டது. அதன்பிறகு க்ஷத்ரவிருத்தனின் வழித்தோன்றல்கள் குறித்து விளக்கப்பட்டது.(4) அடுத்ததாகத் திவோதாசன், திரிசங்கு, யயாதி ஆகிய மன்னர்களைக் குறித்தும், பூரு குலம் குறித்தும் விளக்கப்பட்டது.(5) பிறகு, கிருஷ்ணனின் தோற்றம், சியமந்தக மணியின் கதை, விஷ்ணுவின் அவதாரங்கள் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.(6)

அடுத்ததாகத் தாரக வதம் விளக்கப்படும் தேவாசுரப் பெரும்போர் விளக்கப்பட்டது. அதன்பிறகு பிரம்ம லோகம் குறித்த விளக்கம், யோக நித்திரையில் இருந்து விஷ்ணு விழித்தெழுதல், பிரம்மனுக்கும் பூமாதேவிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல், தேவர்களின் அவதாரங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

{2. விஷ்ணு பர்வம்}

அடுத்தப் பர்வம் விஷ்ணு பர்வமாகும். நாரத முனிவர் கம்சனுக்கு அளித்த ஆலோசனை, அசுரன் ஸ்வப்னகர்ப்பனின் தொண்டர்களை நித்ராதேவியிடம் விஷ்ணு ஒப்படைப்பது, ஆரியா தேவி துதி, கிருஷ்ணன் பிறப்பு, கோகுலத்திற்கு அவன் மாறுதல், அவன் வண்டியை உதைத்து நொறுக்குதல், பூதனை படுகொலை, யமலார்ஜுன மரங்களை வேரோடு பிடுங்கியது, இடையர்கள் நரிகளைக் கண்டது, கோபர்களும், கோபிகைகளும் பிருந்தாவனத்தில் வசிப்பது ஆகியவை விளக்கப்பட்டன.(7-10)

பிருந்தாவனத்தில் மழைக்காலம், யமுனையாற்றில் கிருஷ்ணன் காளியனைத் தண்டித்தல், தேனுகாசுரன், பிரலம்பாசுரன் ஆகியோரை பலராமன் கொல்வது, கூதிர் காலம், கோவர்த்தன பூஜை தொடக்கம், கோவர்த்தன மலையைக் கிருஷ்ணன் உயர்த்துவது, கோவிந்த பட்டாபிஷேகம், கோபியருடன் இன்புற்றிருப்பது, அரிஷ்டாசுரன் வதம், அக்ரூரரைக் கம்சன் பிருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தது ஆகியவை அடுத்தடுத்து விளக்கப்பட்டன.(11-13)

பிறகு, அந்தகன் கம்சனுக்குச் சொன்ன அறிவுரை, கேசி வதம், அக்ரூரர் பிருந்தாவனத்திற்குச் சென்றது, அக்ரூரர் திரும்பிச் சென்றபோது நாகலோகத்தைக் கண்டது, கிருஷ்ணன் கம்சனின் வில்லை முறிப்பது, சாணூரனுக்கும், முஷ்டிகனுக்கும் கம்சன் இட்ட கட்டளை, குவலயபீடம், சாணூரன், முஷ்டிகன், ஆந்திரதேசன் வதம், கிருஷ்ணன் கம்சனைக் கொன்றது, கம்சன் மனைவியரின் ஒப்பாரி, உக்கிரசேனன் மன்னனாக நிறுவப்பட்டது, யாதவர்களைக் கிருஷ்ணன் தேற்றியது ஆகியவையனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்கப்பட்டன.(14-16)

பின்னர், கிருஷ்ணனின் குருகுல வாசமும், இல்லந்திரும்பிய நிகழ்வும், ஜராசந்தன் மதுரா நகரைத் தாக்கியது, அடுத்தடுத்து ஜராசந்தன் அடைந்த தோல்வி, விகத்ருவின் உரை, கிருஷ்ணனும், பலராமனும் பரசுராமரைச் சந்தித்தது, அவர்கள் கோமந்த மலையில் ஏறியது, ஜராசந்தனின் தாக்குதல், கோமந்த மலை எரிந்தது, கிருஷ்ணனும், பலராமனும் கரவீரபுரம் சென்று சிருகால வாசுதேவனைக் கொன்றது, கிருஷ்ணனும் பலராமனும் மதுரா நகர் திரும்பியது ஆகியன விளக்கப்பட்டன.(17-19)

அதற்கடுத்து, பலராமன் யமுனையாற்றின் போக்கை மாற்றியது, மதுராவில் இருந்து யாதவர்கள் புறப்பட்டது, காலயவனன் வதம் ஆகியன விளக்கப்பட்டன.(20) அதன்பிறகு, துவாராகபுரி நிர்மாணம், ருக்மிணியைக் கடத்தியது, கிருஷ்ணன் ருக்மிணி திருமணம், பலராமன் ருக்மியைக் கொன்றது, பலராமனின் மகிமை, ஆஹ்னிகம் செய்வது குறித்துப் பிரத்யும்னனுக்குப் பலராமன் விளக்கிச் சொல்வது, நரகாசுரன் வதம், பாரிஜாத மரத்தை அபகரித்தது, துவாரகை மீண்டும் கட்டப்பட்டது, அரச சபையைக் கட்டி துவாரகையின் அரியணையில் கிருஷ்ணன் அமர்வது, நாரதர் சொன்ன செய்திகள், விருஷ்ணி குல மகிமை, சத்புரன் வதம், அந்தகாசுரன் வதம், கிருஷ்ணன் பெருங்கடலை அடைந்து இன்புற்றிருந்தது, பீம குல வீரன் மது பானம் அருந்தியது, கிருஷ்ணனின் விருப்பத்தின் பேரில் சாலிக்ய கந்தர்வன் பூமிக்கு வந்தது, பானுவின் மகள் பானுமதி கடத்தப்பட்டது, சம்பராசுர வதம், தன்யனின் கதை, வாசுதேவனின் மகிமை, பானுசுரனுடன் போர் ஆகியன விஷ்ணு பர்வத்தில் விளக்கப்பட்டன.(20-27)

{3. பவிஷ்ய பர்வம்}

அடுத்து வரும் பவிஷ்ய பர்வத்தில், எதிர்கால அரச குலங்கள், கலியுகத்தின் எதிர்கால நிலை, புஷ்கரையின் தோற்றம் ஆகியனவும், பரமாத்மாவின் வராஹ, நரசிம்ம, வாமன அவதாரங்களும் விளக்கப்பட்டன.(28) கிருஷ்ணன் கைலாச மலைக்குச் சென்றது, பௌண்டரக வதம், ஹம்சடிம்பகர்களைக் கொன்றது ஆகியன விளக்கப்பட்டன.(29) அந்தப் பர்வத்தின் இறுதியில் மஹாதேவன் செய்த திரிபுர வதம் விளக்கப்பட்டது. இவ்வாறே ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இவற்றைக் கேட்பதன் மூலம் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(30) குருகுலத்தின் தலைவா, ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ஹரிவம்சத்தைக் கவனமாகக் கேட்கும் எவனும் தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி இறுதியில் வைகுண்டத்தை அடைகிறான். இந்த விவரிப்பு ஒருவனுக்குச் செல்வத்தையும், புகழையும், நீண்ட ஆயுளையும், உலகஞ்சார்ந்த இன்பத்தையும், இறுதியில் முக்தியையும் அருளும்" என்றார் {வைசம்பாயனர்}.(31) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 109ல் உள்ள சுலோகங்கள் : 31

மூலம் - Source